மழை கொட்டிய அந்த இரவில் வெறிச்சோடியிருந்த சாலையில் பைக்கில் பறந்த வருணின் மனம் கலங்கியிருத்து.. கவனம் எங்கோ இருக்க, எதிரே எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று ஓடி வர, வருண் தடுமாற நொடிகளில் பைக் மோதிய வேகத்தில் அது எட்டிப் போய் சுருண்டு விழுந்தது. அதிர்ந்த வருண் பைக்கை நிறுத்தி திரும்பிப் பார்த்தான். உடம்பை விலுக் விலுக் என்று உதறியபடி வலியில் துடித்துக் கொண்டிருந்தது நாய்.
சே சனியனே. அடிபட்டு சாகறதுக்கு உனக்கு என் வண்டிதான் கிடைச்சுதா, குப்பைமேட்டுல கிடக்க வேண்டியதெல்லாம் ரோட்டுல வந்து நம்ம உயிர எடுக்குது. இருக்குற டென்சன்ல இது வேற என்று ஆத்திரத்துடன் நாயைப் பார்த்து கத்தி விட்டு கிளம்ப எத்தனித்தவனை, அதன் கண்கள் தன்னை காப்பாற்ற கெஞ்ச, கடவுளே… அடி பலமாக இருக்கும் போலிருக்கே என்று வருந்தியபடி, மூச்சிரைத்த அதனை தூக்கி, ரோட்டோரம் வைத்தான்.. சுற்றும்முற்றும் யாருமில்லை.. ப்ளுக்ராசை அழைத்து உதவி கேட்டு, நிமிடங்கள் கரைய மழையும் வலுக்க தன் ரெயின் கோட்டை கழற்றி மழையில் நனைந்த நாயின் மீது போற்றி விட்டான் வாட்சை பார்த்தபடி படபடப்புடன் காத்திருந்தான்.
செல்போனின் அவனது மாமா அழைக்க, மறுமுனையில் என்ன சேதி இருக்குமோ, என்று பதட்டமானான் வருண். அழைப்பை ஏற்று சீக்கிரம் வந்துடுவேன் என்று குரல் நடுங்க சொன்னான். டென்ஷன் ஆகாம. பொறுமையா வா வருண். கடவுள் நம்ம பக்கம் இருக்காருப்பா. நான் உன்னை வர சொல்லும் போது, உன் அம்மாவுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போயிருந்தது. இப்ப, சில நிமிஷங்கள் முன்னாடி திடிர்னு மாற்றம். ஆபத்து கட்டத்தை கடந்து நார்மலாகிட்டு வர்றாங்க. டாக்டர்களாலயே நம்ப முடியல. என்று குரலில் மகிழ்ச்சியுடன் மாமா சொல்ல கேட்ட அடுத்த கணம் நிம்மதியானான் வருண். கலங்கிய கண்களை துடைத்த வருண், அவதியுடன் தவித்த நாயை ஆற்றுப்படுத்த வருடிக் கொடுத்தபடி மருத்துவ உதவிக்கு காத்திருக்க ஆரம்பித்தான். அவன் கால்களை சுற்றி வந்தன அதன் குட்டிகள்.