கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 1,999 
 
 

பால்காரர் பால் அளந்து ஊற்றினார். வழக்கம்போல், “கொசுறு?” என்றபடி கிண்ணத்தை நீட்டிக்கொண்டு நின்றார், தேவநாதன்.

பால்காரர் கொஞ்சம் கொசுறுப்பால் ஊற்றியதும், வீட்டுக்குள் செல்வ தற்குள், “அய்யா…” என்று எதிரில் வந்து நின்றான், ஒரு பிச்சைக்காரன். அவனை அலட்சியமாகப் பார்த்தபடி, “கை கால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு? இப்படிப் பிச்சையெடுக்க வெட்கமா இல்ல?” என்றபடி வீட்டுக்குள் சென்றார்.

அடுத்த நிமிடம் சட்டை போட்டுக்கொண்டு திரும்பி வந்த தேவநாதன், கடைத்தெருவிற்குக் கிளம்பினார்… போகிற வழியில் செருப்புக் கடையில், அறுபட்ட செருப்பைத் தைத்துக் கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டுக் காய்கறிக் கடைக்குச் சென்றார். அதன்பிறகு, காப்பி பொடி அரைக்கும் கடை. அந்தக் கடையில் இருந்த நாளிதழை எடுத்து வாசித்தார். திரும்பும்போது, கோவில் வாசலில் ஒரு பூக்கடை முன் செருப்பை விட்டுவிட்டுக் கோவிலுக்குள் போய்விட்டு வந்தார்.

தன்னைப் பிச்சைக்காரன் பின் தொடர்வதைப் பார்த்தார். “பிச்சை எடுக்கிறது கேவலமா தெரியல?” என்று மீண்டும் முகம் சுழித்துப் பேசினார்.

இப்போது பிச்சைக்காரன் வாய் திறந்தான்- “ஐயா… பால்காரர்கிட்ட பால் கொசுறு கேட்டு வாங்குனீங்க. செருப்புக் கடைக்காரர் கேட்ட கூலியைக் குறைச்சிக் கொடுத்தீங்க. காய்கறிக் கடையில் ஓசியில கருவேப்பிலைக் கேட்டு வாங்குனீங்க. செருப்பைப் பாதுகாப்பகத்தில் விடாமல், பூக்கார அம்மாகிட்ட விட்டுட்டுக் கோவிலுக்குப் போனீங்க. காபித்தூள் கடையில் ஓசி பேப்பர் படிச்சீங்க… இதெல்லாம் உங்களுக்குப் பிச்சையாத் தெரியலையா சாமி?’ சொல்லிவிட்டு, ‘விறுவிறு’வென்று போய்விட்டான்.

‘ஈ என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று!’ என்று எப்போதோ படித்த புறநாநூற்றுப் பாடல் வரிகளுக்கு இப்போது பொருள் புரிந்தது, தேவநாதனுக்கு!

– ஏப்ரல், 2024, அனிச்சம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *