கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 1,876 
 
 

கலா மீனாவோட பெரியப்பா பெண். கலாவுக்கு இன்னும் நாலு மாசத்தில் கடலூரில் கல்யாணம். மீனாவுக்கு இருப்பு கொள்ளவில்லை… கல்யாணத்துக்கு இந்தியா போக தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கணும். 

“மீனா, நீ பாஸ்போர்ட் போட்டோ எடுக்கறதுக்கு முன்னாலே அருமையா ஒரு ஃபேசியல் பண்ணிக்கோ. புருவம் வில்லுமாதிரி பளிச்சுனு தெரியணும். ஐ லாஷ் அடர்த்தியா இருக்கட்டும். மேக் அப் ஜம்முனு பண்ணிகிட்டா கலர் போட்டோ தூக்கும்…” என்ற அம்மாவின் அட்வைஸ், அம்மாவுக்கே மேக் அப் போட்டுக்கொள்ள ரொம்பப் பிடிக்கும் என்பதை வலுப்படுத்தியது. தாயைப்போல பெண். மீனாவுக்கு ஒரே குஷி. 

சந்தேகமில்லை. அவளுடைய பாஸ்போர்ட் படம் மிக நேர்த்தியாகத்தான் அமைந்தது. கோவைப்பழ கலரில் லிப்ஸ்டிக் போட்டதால் அவள் உதடுகள் படத்தில் செம கெத்து! உடனே டிக்டாக் மூலமாக தன்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அந்த போட்டோவை தட்டிவிட்டாள். ‘வைரல்’ ஆன அந்த படம் அவளுக்கு பெரிய தலைவலியாகும் என்று தெரியவில்லையே.

நியூ யார்க் ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில் மீனா. டி.எஸ்.ஏ. – அதாவது ட்ரான்ஸ்போட்டேஷன் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் – செக்யூரிட்டி ஆபீசரிடம் சிரித்த முகத்துடன் பாஸ்போர்ட்டை நீட்டினாள். 

சில நிமிடங்கள் மீனாவையும் அவள் பாஸ்போர்ட்டிலிருந்த போட்டோவையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு, “நீங்க அங்கே போய் நில்லுங்க” என்றார்.  மீனவின் சிரிப்பு பறந்தது.

“என் பாஸ்போர்ட்…?”  மீனாவின் குரலே எழும்பவில்லை. சற்றுமுன் பெருமிதம் தாண்டவமாடிய அவள் முகம் சுருங்கியது.

“என் சூப்பர்வைசர் பார்த்துட்டு தருவார்”

மீனா வரிசையைவிட்டு நகர்ந்து ஓரமாக நின்றாள். ஸீனியர் செக்யூரிட்டி ஆபீசர் அவளுடைய பாஸ்போர்ட்டுடன் வந்தார். 

“மிஸ் மீனா…உங்க பெரிய ஐ லாஷ் எங்கெ?  போட்டோவுல நீங்க தானா? நேரில பாக்கிற உங்க முகத்துக்கும் பாஸ்போர்ட் இருக்கிற முகத்துக்கும் எந்த ஒத்துமையும் காணோமே?” 

“ஐயோ…போட்டோவுல நானேதான் சார்…ரீசென்ட்டா எடுத்தது.”

“உங்க டிரைவர் லைசென்ஸ் காட்டுங்க…” மீனாவுக்கு நம்பிக்கை வந்தது. உடனே அதை எடுத்துக் கொடுத்தாள்.

“ஐ அம் நாட் கன்வின்ஸ்ட் அட் ஆல்…ஸாரி… உங்க லைசென்ஸ் போட்டோவும் உங்கள மாதிரி இல்லையே. ஆமா, உங்க பெர்த் செர்டிபிகேட் காட்டுங்க…”

“என்ன சார் இது? பெர்த் செர்டிபிகேட் எடுத்துகிட்டா டிராவல் பண்ணுவாங்க?”

“பண்ணமாட்டாங்கதான்…ஆனா, உங்க ஐடென்டிடி பெரிய பிரச்னையா இருக்கே… இன்னொரு முக்கிய விஷயம். ஒருவிதத்துல எங்களுக்கு நீங்க நன்றி சொல்லணும். நீங்க லண்டன் ஹீத்ரோவுல ஃப்ளைட் மாத்தணுமே.அங்கேயும் பாஸ்போர்ட் செக் பண்ணும்போது, போட்டோவை வைச்சு உங்களை நிறுத்திட்டா என்ன செய்வீங்க?  இப்ப நீங்க இந்த ஃப்ளைட்டுல போக முடியாது” பெரிய ஆபிசர் தீர்மானமாக சொல்லிவிட்டார்.

சிறிது மௌனம். 

 “இப்ப என்ன செய்யறது? அப்டின்னு யோசனையா?” ஆபீசரின் குரல் கேட்டபோது மீனாவின் கண்கள் குளமாகின.  துடைத்துக்கொண்டாள்.

“முதல் காரியமா மேக் அப் நிறைய அப்பிக்காம – இ மீன் – போடாம – புது டிரைவர் லைசென்ஸ், புது பாஸ்போர்ட் வாங்குங்க…பிறகு இந்தியா போகலாம்.”  அவளிடம் பாஸ்போர்ட்டை நீட்டினார்.

வீடு திரும்பி விவரத்தை சொன்ன மீனாவுக்கு வந்த அப்பாவின் பிராக்டிகலான பதில் –

“போட்டோவுல உன் மேக் அப் சூப்பரா இருக்கு. அந்த செக்யூரிட்டி ஆபீசருக்குதான் தெரியலே…முன்னூறு டாலர் சிலவு பண்ணியிருக்கே…அதுக்குகூட மதிப்பில்லையே…ம்..ம்..தூக்கமில்லாம, நாள் முழுக்க ஃப்ளைட்டுல போய் இறங்கும்போது முகம் எப்படி பேய் அறைஞ்சாப்போல இருக்குமோ அப்படி கசா பிசான்னு இருக்கணும் பாஸ்போர்ட் போட்டோ.  அப்பதான் செக்யூரிட்டி நம்புவாங்க… பளபளன்னு பாலிஷ் போட்டமாதிரி இருக்கிற பாஸ்போர்ட் போட்டோ நிறைய ஏர்போர்ட்டுல ரிஜெக்ட் ஆகுது…இது உனக்கு சரியான பாடம்…”

பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *