போன் செய்து அவரிடம் பேசினான் நவீன்.’சார், நான் நவீன் பேசறேன். உங்களைப் பார்க்க வரணும்., எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு., வரலாமா? லொகேஷன் அனுப்ப முடியுமா?!’ என்றான்.
மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த பத்மநாபனுக்கு அதிர்ச்சியாயிருந்தது நவீன் கேட்டது. ‘‘நம்மைத்தான் பெரும்பாலான மாணவர்கட்டுப் பிடிக்காதே?! இவன் யாருன்னு தெரியலையே? சும்மா கலாய்க்கிறானா? இல்லை அடிவாங்கியதற்கு பதிலாக வந்து தாக்கிவிட்டுப் போகச் சித்தமா?‘ யோசிக்கலானார்.
இப்படி பத்மநாபன் யோசிப்பதில் நியாயமிருந்தது. அவர் பணியாற்றிய காலத்தில் கொஞ்சம் மாணவர்களிடம் கெடுபிடியாய் இருந்தவர் அவர். தப்புப் பண்ணினால் மாணவர்களை யார் என்னன்னெல்லாம் பார்க்க மாட்டார் அடி பின்னி எடுத்துவிடுவார். கொஞ்சம் முன்கோபி.
‘சரிவரச் சொல்லுவோம்.., கல்யாணம் பத்திரிக்கை தரணும்கறானே? பார்ப்போம்.,’ என்று சொல்லி லொக்கேஷன் அனுப்பி அன்று காத்திருந்தார். நவீன் வந்தான் வரும்போதே.. தன் தாயையும் உடன் அழைத்து வந்திருந்தான். கையில் பத்திரிக்கை கட்டு.. வரவேற்று அமரச் செய்ததும்.
வெளியே மழை… சொத சொதவென தூறிக் கொண்டிருந்தது. (கன மழை பெய்யும்னு வானிலை அறிவிப்பு வந்த அன்று லேசாக த் தூறிக் கொண்டிருந்தது.
‘சார், நான் டென்த் படிக்கும்போது, நீங்க எனக்கொரு பைவ் ஸ்டார் சாக்லெட் கொடுத்தீங்க, நான் கிரவுண்டிலிருந்து கண்டெடுத்துக் கொடுத்த பத்து ரூபாயுக்குப் பரிசாக. அந்த சாக்லெட் கவரைக் கூட பத்திரமா வச்சிருக்கேன்’ என்று தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பரவசமாய்ப் பேசினான்.
‘கண்டிப்பாக கல்யாணத்துக்கு வரணும்’னு சொல்லிக் கால்களில் விழுந்து ‘ஆசீர்வாதம் பண்ணுங்க!’ என்று சொல்ல, பத்மநாபன் நெகிழ்ந்தே போனார்.
அவர் பணியாற்றிய காலத்தில் கிரவுண்டில் கிடைக்கும் பொருளை பணத்தை ஆபீசில் ஒப்படைக்கும் நல்ல குணமுள்ள மாணவரைப் பாராட்ட கவுரவிக்க அவர் அப்படி பரிசளிப்பதுண்டு. அது அவனைக் கவர்ந்திருக்கிறது.
‘நம்மை யாருக்குமே பிடிக்காதே?!’ என்று அவராக கணித்துவிட்ட மாணவ சமூகத்தில்கூட நம்மிடம் பாராட்டும் ஒருகுணம் ஒருத்தருக்குப் பிடித்திருக்கிறதென்றால், நாம்தான் தப்பாக மற்றவரை எடை போட்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டார்.
‘பொண்ணு என்ன பண்றா?’ என்றார்.
‘சார், பிஜி முடிச்சிருக்கா.. ‘லவ்’ மேரேஜ்’ என்றான் தலை கவிந்தபடி.
‘லவ் மேரேஜ் என்பதற்கு ஏன் தலைகவிழ்கிறாய்? தைரியமாச் சொல்லு!’ என்றதும்.
‘இல்லை நீங்க, தப்ப்பா நெனைக்ககூடாதே? உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ’ என்று இழுத்தான்.
‘இதோ பாரு நவீன், லவ் பண்ணீட்டு, அப்பா அம்மாவுக்குத் தெரியாம வீட்டைவிட்டு ஓடிப் போயிடறதைவிட, அம்மாவையே கூட்டிட்டு வந்து கல்யாண விசயத்தைச் சொல்றயே அந்த ஓண்ணுக்கே உன்னைப் பாராட்டலாம்!’ என்றார்.
இடையமறித்து நவீன் அம்மா அப்போதுதான் பேசினார், ‘சார் லவ் பண்றான்னு தெரிஞ்ச்சதும் நாங்களே பொண்ணுவீட்டுல பேசி கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணீட்டோம்!’ என்றார்.
‘நல்ல காரக்டரை நாம்தான் பிள்ளைகளிடம் உருவக்குகிறோம்’னு தன்னைப் பெருமையாக நினைத்துக் கொண்டவருக்கு, நவீன் அம்மா நவீன் விருப்பத்துக்கு ‘லவ்’ மேரேஜை அரேஞ்சிடு மாரேஜா நடத்தி, முன் மாதிரியாய் இருப்பது தன்னைவிட அவர் எத்தனை உயர்ந்திருக்கிறார்னு நினைக்க வைத்தது. அதுனாலதான் அம்மாதான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர் என்கிறார்களோ என்று பட்டது!
அதுவொரு பொன்மாலைப் பொழுதாய்த் தோன்றியது. வானமகள் நாண விவாக பத்திரிக்கையை தன் ஆசான் கைகளில் தந்து விடைபெற்றான் நவீன்.