ஆலமரம் பஸ் ஸ்டாண்ட்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 1,341 
 
 

சுட்டெரிக்கும் வெயிலில் கனத்த பையோடு களைப்புடன் அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றான் முரளி. நகரத்திலேயே படித்து அங்கேயே வேலை பார்த்து முதல் முறையாக கிராமத்திற்கு, பணி மாறுதலாகி வரும், முரளிக்கு இந்த மாற்றத்தில் சுத்தமாக ஈடுபாடில்லை..

செல்போன் சிக்னல் கூட கிடைக்காத பட்டிக்காடுல குப்பைக் கொட்டுறது,.. என் தலைவிதி என்று சலித்த முரளி மரத்தடியில் கும்பலாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தவர்களிடம் ஆந்தகுடிக்கு பஸ் எப்போது வரும் என்று கேட்டான். யாரும் அவனை பொருட்படுத்தவேயில்லை. கால்கள் துவண்டு இளைப்பாற கெஞ்ச, உட்கார கூட இடமில்லை. கொண்டு வந்த குடிநீர் பாட்டிலும் காலி. நாக்கு வரண்டு போனது. அந்த கும்பலின் கூச்சல் வேறு கடுப்பேற்ற சரியான காட்டானுங்களா இருக்கானுங்க எருமை மாட்டு ஜென்மங்க, காது செவிடு போலிருக்கு சே… என்று எரிச்சலின் உச்சத்தில் சத்தமாக கத்தினான் முரளி அதைக் கேட்டு முறைத்துக் கொண்டு ஆவேசமாக எழுந்த ஒருவனை டேய் முனி உட்காருடா,,, என்று சமாதானபடுத்தினான் அருகிலிருந்தவன்.

புழுதியை கிளப்பியபடி வந்த பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது பரபரவென்று மரத்தடியிலிருந்தவர்கள் முரளியை பின் தள்ளி ஓடிச் சென்று ஏற,. காட்டுமிராண்டி கும்பல் என்று எரிச்சலின் உச்சத்தில் கத்தினான் முரளி. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த முனி… சார் இங்க வண்டி எப்ப வரும் போகும்னு யாருக்கும் தெரியாது. வாங்க.. இல்லேன்னா நின்னிட்டே இருக்க வேண்டியதுதான் என்று கையை நீட்டி அழைக்க, அதிர்ந்தான் முரளி

கூட்டம் விலகி வழி விட்டு நிற்க. பஸ் ஏறிய முரளியிடம் உங்களுக்காக ஓடியாந்து சீட் பிடிச்சு வெச்சுருக்கேன், ஒக்காருங்க, என்று முனி புன்னகைக்க, அருகே இருந்த பெண் இந்தாங்க தண்ணி குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை நீட்ட இருந்த களைப்பு, கடுப்பெல்லாம் நொடியில் மாறி இன்ப அதிர்ச்சிக்குள்ளான முரளி வெள்ளந்தியான மனிதர்களுடன் பழகும் நாட்களை எதிர் நோக்கி நிம்மதியாக உட்கார்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *