‘பாத்திரம் தேய்க்கிற பத்மாவுக்கு இன்னைக்கு சம்பளம் தருணும்..!’ என்றாள் மனைவி.
‘சரி அதுக்கென்ன?’ என்றேன்.
‘என்ன அதுக்கென்னங்கறீங்க? மத்தவங்களுக்குன்னா ஜீபே பண்ணலாம். அவள் பாவம் அதெல்லாம் தெரியாத அப்பாவி. கேஷா எடுத்து வச்சுக்கோங்கன்னு நினைவு படுத்தத்தான்.’ என்றாள்
‘சரி வச்சுக்கறேன்.’
‘எவ்வளவு கொடுக்கப்ப் போறீங்க?’ என்றாள் அடுத்து.
‘நீ எவ்வளவு பேசினே?!’
‘ஆறாயிரம்…!’
‘அதைக் கொடுத்துட வேண்டியதுதானே? இடையில எதாவது லீவு எடுத்தாளா? பிடிச்சுட்டுக் கொடுக்கணுமா?’ என்றேன்.
‘ஓவ்வொரு முறை அவள் பாத்திரம் தேய்க்க வரும்போதும் தனியா வருபவள் இன்னைக்குத் தன் பிள்ளையைக் கூட்டிட்டு வந்திருக்காளே… என்ன புரிஞ்ச்சுது?’ என்றாள்
‘அவளுக்கொரு பிள்ளை இருக்குன்னு புரிஞ்சது!’ என்றேன்.
‘ணங்க்’குனு மண்டையில் குட்டி, ‘மரமண்டை, மரமண்டை!’ என்றாள்.
‘காய்கிற வெயில்ல.. கைப்பிள்ளையையும் கூட்டிட்டு வராளே.? ஒரு நூறு ரூபா கூட்டிக் கொடுத்தா என்ன?’ என்றாள்.
‘இங்க என்ன கொட்டியா கெடக்கு? கூட்டிக் கொடுக்க!’ என்றேன்.
இத பாருங்க.. ஆறாயிரம் தந்தாலும் சம்பளம்தான் ஒரு நூறு ரூபாயைக் கூட்டிக் கொடுத்து ‘இந்தாம்மா… உன் பிள்ளைக்கு எதாவது பிஸ்கட் கிஸ்கட் வாங்க்கிக் கொடுன்னு!’ கொடுத்தாலும் சம்பளம்தான். கொஞ்சம் முன்னாடி கேட்டீங்களே ஒரு கேள்வி, ‘இடைல எதாவது லீவு எடுத்தாளா? சம்பளம் பிடிக்கணுமான்னு?’ அப்படி லீவு எடுத்தால் பிடிச்சுட்டுக் கொடுத்தாலும் சம்பளம்தான். ஆனா, அது சந்தோஷம் தராது! அதுக்கு பதிலா நூறு ரூபாயை அவள் பிள்ளைக்கு எதாவது வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொல்லுன்னு சொன்னாலும் அது சம்பளம்தான். அவளுக்குப் பேசின சம்பளம் ஆறாயிரம் தந்தா தராத சந்தோஷம் கூடுதலாத் தரும் நூறு ரூபாய்லதான் கிடைக்கும் ஆறிலும் வாழ்வாள்! கூடுதலாத்தரும் நூறிலும் வாழ்வாள்! ஆனா, அடுத்த முறை லீவு எடுக்க யோசிப்பாள்! நம்மையும் சங்கடப்படுத்தாம வாழ வைப்பாள். வேலைக்கு ஆள் வைக்கறது பெரிசில்ல, அவங்களை சந்தோஷமா வேலை வாங்கறது ரொம்ப பெரிசு!’ என்றாள்.
‘ஆறாயிரத்தில் அவள் வாழ்வாள் நூறு ரூபாயில் நாம் வாழ்வோம்!’ என்றாள்.
‘எப்பா.. இவ எங்கயோ இருக்க வேண்டியவ’ன்னு நெனைச்சுட்டே ஒரு நூறு ரூபாயை, ஆறாயிரத்தோடு சேர்த்து நீட்டி, அவள் சொன்னதைச் சொன்னேன்.