காமாட்சி கிடத்தப் பட்டிருக்கிறாள் சடலமாக. சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டு மகன் ராகுலின் வருகைக்காக காத்திருக்கும் சமயம்..
ப்ரீத்திக்கு போன் வந்தது. அக்கா.. ஏர்போர்டுக்கு வந்துட்டேன். இன்னும் ஒன் அவர் என்று தழுதழுத்த குரலில் கூறினான்.
மின் மயானங்களின் விஞ்ஞான முன்னேற்றம். தேம்பல் ஒலிகள் ஓயு்வதற்கு முன்பே சாம்பல் கைக்கு வந்தது.
எவ்வளோ நாள் லீவு போட்டிருக்கடா? ப்ரீத்தி கேட்டாள்.
10 நாள் போட்டிருக்கேக்கா. சரி வா போகலாம் ஏர்போட்டுக்கு என்றவனை ஏறிட்டு பார்க்கிறாள். அவள் காதில் ஏதோ கூற…
விமானத்தில் அமர்ந்திருந்த ராகுல். தேம்பி தேம்பி அழுகிறான். சுடுகாட்டில் எரிக்கச் சென்ற போது கூட இவ்வளவு கலங்கவில்லை அவன்.
என்னடா ராகுல். ப்ளீஸ் பாரு என்ன. நான் சொல்றத கேளு. அம்மாவோட ஆயுள் அவ்வளவு தான். அவங்களுக்கு வந்த வியாதி அப்படி. நம்ம கையில ஒண்ணும் இல்ல.
நீ நல்ல ஹாஸ்பிடல்ல சேத்து நல்லா வைத்தியம் பார்த்த. நம்ம எல்லாருமே பூமியில குத்தகைக்கு விதைக்கப் பட்டிருக்கும் உயிர்கள். தவணைக்காலம் முடிந்ததும் போக வேண்டயவங்க தான் எல்லாரும். என்ன..சில பேரோட உயிர ஸ்டெதஸ்கோப் காப்பாத்துது பாசக் கயிறிடமிருந்து டெம்பரரியா.
அது ஓக்கேக்கா.. சாகறதுக்குள்ள என்ன ஒரு தடவையாவது ப்ளைட்ல கூட்டிட்டு போவையான்னு கேட்டுட்டே இருப்பாங்க அம்மா. அவங்களோட அந்த ஆசையக் கூட நிறைவேத்த முடியாத பாவியாகிட்டேன் என்று விம்மினான்..
அழாதடா. உனக்கு அந்த guilty யே தேவை இல்ல. அவங்க ஆசைய நீ நிறைவேத்திட்ட இப்போ என்ற ப்ரீத்தியை விநோதமாகப் பார்க்கிறான்.
புரியலையா? உன் கையில என்ன இருக்கு?
புரிந்துகொண்டு ப்ரீத்தியை ஒரு கையில் நெகிழ்ச்சியுடன் தழுவினான். மறு கையில் அஸ்தி அடைத்த குப்பியை இறுகப் பற்றியபடி.
காமாட்சி விமானத்தில் பறந்ததில்லை. அவளது அஸ்தி பறக்கிறது இன்று.
ஆனந்தமாக கரைத்தான். கங்கையில் கரைந்தாள் காமாட்சி..
நல்ல தரமான கதை