அவளா சொன்னாள் இருக்காது…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 2,568 
 
 

அபர்ணா எதற்கு அப்படிச் சொன்னாள்?! அவளா சொன்னாள்?! இருக்காது…! இருக்கவும் கூடாது! என்று நினைத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் பரந்தாமன்,

‘எதோ டாக்டர் சொன்னார்னு அந்த வார்த்தையைச் சொன்னாள். அது டாக்டர் சொன்னதா?, இல்லை, டாக்டர்னு போலியா ஒருத்தர் பேர்ல தன் உள்ளக்கிடக்கையை அபர்ணா சொன்னாளா? புரியவில்லை!

எத்தனையோ அவளுக்காக வாழ்க்கையில் சந்திச்சாச்சு! சகிச்சாச்சு! இனியும் என்ன இருக்கு?! பகவான் அழைப்புக்குத்தானே காத்திருக்கோம்?! அதென்னவோ.. எவனாவது செத்துட்டா நல்லவன்லாம் டக்குனு போய்ச் சேர்ந்துடறானுகன்னு நையாண்டியா இருப்பவனை இறக்க வைக்கற கேலி பேச்சு இருக்கே?! அது நம்மைக் காலிபண்ணும் நவீனகாலத்து கலம்பகம்.

‘அறுபது வயசாச்சு இனி போய்ச் சேர வேண்டியதுதான்னு எவனெல்லாம் அலுத்துக்கறானோ அவந்தான் தொன்னூறு வயதுவரை தொல்லை கொடுத்துட்டுப் போய்ச் சேராம இருப்பானாம்!’ இப்படி எந்த டாக்டராவது சொல்வாரா?! சொன்னதாச் சொல்றாளே!? இவளுக்காக எதையெல்லாம் சகிச்சோம்?!

பாத்திரத்தில் சட்டினியை அரைத்துக் கொண்டு வரமாட்டாள்…! மிக்ஸி ஜார்லயே சட்னி அரைத்து அதில் உள்ளே நுழைய மறுக்கும் ஸ்பூனையும் போட்டு ஜாரோடு சட்னி வைக்கலை இட்லிக்கு!? அதைப் பொறுத்துட்டுத் திங்கலை நான்!? பாத்திரத்தில் போட்டா என்னன்னு கேட்டா… உங்க நன்மைக்குத்தான் மிக்ஸி ஜார்லயே சட்னிவைத்துக் கொண்டு வரேங்கறா?! ஏன்னு கேட்டா.? பாத்திரத்தில் போட்டுக் கொண்டுவந்தா பாத்திரமும் கழுவணுமாம். மிக்ஸியும் தேய்க்க்கணுமாம்! எதுக்கு ரெண்டு வேலைனு ஒன்னைக் கொறைச்சுட்டேங்கறா?!

வாயைத் திறங்க.. மிளகாய் தேங்க்காய் பொட்டுக்கடலை உப்பைக் கலக்கிக் கொட்டீடறேன். மிக்ஸி தேய்க்கிற வேலை உங்களுக்கு மிச்சம். சட்னி அரைக்கிற வேலை எனக்கு மிச்சம்னு இன்னும் சொல்லலை!!

அப்படியும் அறுபது தாண்டி அத்துக்காம இந்த வயசுவண்டி ஓடிட்டிருக்கு! சிம்பாலிக்கா… ‘நீதான் நூறுவயசுவரை இருந்து கழுத்தறுக்கப்போறேன்னு!’… டாக்டர் சொன்னதா என்னைச் சொன்னாளோ அபர்ணா…? தெரியலை!

அபர்ணா… ஆயுசு கூடறதும் அறுபதுலயே போய்ச்சேர்றதும் ஆத்துக்காரன் கைல இல்லை! ஆண்டவன் கைல இருக்கு! வாழ்க்கையை இப்ப பாரு, என்னை மாதிரி எல்லாத்தையும் சந்தோஷமா ‘ஹாஸ்ய்மா’ பார்க்கத் தெரிந்தால்.. தொன்னூறென்ன நூறே அடிக்கலாம்! என்று விட்டம் பார்த்தபடி பாசக்கயிறோடு காத்திருந்த எமனிடம் சொல்லிச்சிரிக்க, எமன் பாசக்கயிறை ஒளிக்க., சித்ரகுபதன் கணக்கில் பத்தைக் கூட்டி எழுதினான்.

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *