கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 4,275 
 
 

அது வீரயுகம்.

வீரயுகத்தில் இறப்புக்கள் வீர விளை நிலத்தின் வித்துக்கள் அல்லவா…

அதனால்…

ஆண் அழுவது அவன் வீரத்துக்கு இழிவு…

அவன் அரசன்… அவன் அழுவது அவனது உயர்வுக்கு இழிவாகாதா…?

ஆனாலும் அவன் அழுதான்…

வீரயுகத்தில் தன் தன் தந்தையை… தன் சகோதரனை, தன் மைந்தனை தன் கணவனை பெண் இழந்து தானே ஆக வேண்டும்… வீர நிலத்துக்கு வித்தாக்கித்தானே ஆகவேண்டும்…

ஆனாலும்… கணவனை இழந்தால்… பிரிவுத்துயரால் மட்டும் அவள் உலன்றுவிடுவதில்லை…

அவளை இந்தச் சமூகம் தண்டிக்கவும் செய்யும்…

விதவையான பெண் சானகத்தால் மெழுகிய வெறும் நிலத்தில் ஆம்பல் இலையில் கைப் பிடியளவு புல்லரிசிச் சோற்றைத்தான் உண்ண வேண்டும்.

அதுவும் பொழுது புலரும் முன்னர் நாளுக்கு ஒரே ஒரு முறை மட்டும்…

சிறு பரற்கற்களைப் பரப்பி அதன் மேல் படுத்துறங்க வேண்டும்…

உள்ளத்தால் போற்ற வேண்டிய பெண்ணின் கற்பை சிறைவைத்தாவது காத்துவிட வேண்டும் என்று எண்ணி, இத்தகைய ஏற்பாட்டைச் சமூகம் ஏற்படுத்தியது போலும்.

கணவனைப் பிரிந்த துன்பத்தோடு இத்தகைய கொடுமையான நோன்பைக் கடைப்பிடித்து வாழும் வாழ்க்கையைவிட கணவனோடு இறந்துபோவது மேல் என பெருங்கோபெண்டு எண்ணுகிறாள்.

கணவனின் பிணத்தைப் புதைப்பதற்காக செய்யும் ஈமத்தாழியில் தனக்கும் இடமிருக்குமாறு பெரிதாகச் செய்யுமாறு கலம் செய்யும் கோவிடம் வேண்டுகிறாள் ஒரு பாவப்பட்ட பெண்.

ஆனால் ஆணுக்கு இந்தகைய எந்தத் தண்டனையையும் இச் சமூகம் வரையறுக்கவில்லை.

கற்பென்ற… கண்ணுக்குத் தெரியாத தழைகொண்டு பெண்ணைக் கட்டிப்போட்டது போல ஆணை இச்சமூகம் கட்டிவைக்கவும் இல்லை.

காதல் மனைவியரும் காமக் கிழத்தியரும் காதல் பரத்தையருமாய் அவன் வாழ்விலோ பல பெண்கள் அவனை அரவணைக்கக் கூடும்..

ஆனாலும்…

அவன்… சேரமான் மாக்கோதை…

தன் மனைவியின் இறப்பைத் தாங்கமுடியாது அழுதான்.

கள்ளி மண்டிய களரி நிலப் பரந்த வெளி….

அங்கு விளைந்த விறகடுக்கின்மேல் மனைவியைக் கிடத்திக் கொளுந்துவிட்டு எரியக்கூடிய ஈமத் தீயை மூட்டினான் மாக்கோதை.

சடசட என்ற சத்தத்துடன் அக்கினி சுவாலைவிட்டெரிகிறது. அந்த தீயில் அவன் காதல் மனைவியின் உடல் வெந்து கருகிறது…

அவன் உள்ளமோ கதறுகிறது..

“அவளின் c பாய்ந்து இறக்கும் வல்லமையில்லாது நீ மட்டும் வாழ்கிறாயே“. என அவன் மனமே அவனைக் குத்துகிறது.

சாகவும்முடியாமலும் மனைவியைப் பிரிந்த துன்பத்தைத் தாங்கவும் முடியாமலும் அவன் படும் பாடு சொல்லில் வடிக்க முடியாததாய் உள்ளது.

ஆணினை மையப்படுத்தி அவன் நன்மைகளை முதன்மைப் படுத்திய சமூகத்தில் அவன் வித்தியாசமானவன்…

அவன் வெறும் ஆண் மட்டுமல்லன்…

அவன்தான் மனிதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *