(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘யான் மோட்சம் அளிக்கும் சமர்த்தன். நீ மோட்சத்தைப் பற்றிக் நீ கவலைப் படாதே.. நீ சாதனையைப் பற்றிச் சிந்தித்தால் போதும்’
அநேக பாவங்களை இயற்றிக்கொண்டிருந்த ஒருவன் ஏசுநாத சுவாமிகளிடம் வந்தான். ‘சுவாமி, தங்கள் வாழ்க்கை சிறிதும் சிக்கலற்றதாய், பாவமற்றதாய் இருக்கிறதே!…. தாங்கள் ஒருவரையும் கோபிப்பதில்லை; தங்களுக்கு எவரு டனும் சண்டை சச்சரவுகளும், விரோதம்-வழக்குகளும் இல்லை. தங்கள் சுபரவம் எவ்வளவு அமைதியும் அன்பும் பொருந்தியதாய், எவ்வளவு புனிதமாக இருக்கிறது!’ என வியந்தான்,
‘இப்பொழுது என் விஷயம் இருக்கட்டும். உன்னைப் பற்றி எனக்கொரு விஷயம் தெரியவந்திருக்கிறதே. இன்றைக்கு ஏழாம் நாள் நீ இறந்துபோவாய்’ என்றார் ஏசுநாதர்.
‘ஏழு நாளில் சாவு! ஏ, கடவுளே! இதென்ன ஆபத்து!” என அரண்டு, அவன் அவசரமாக வீட்டிற்கு ஓடிச் சென்றான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இறுதிக காலம் கருதி எல்லாவற்றையும் முடித்துக் கொள்வதாகப் பேசிக் கொண் டிருந்தான். அவனுக்கு நோய் உண்டானது. படுத்த படுக்கை யானான். ஆறு நாட்கள் கழிந்தன. ஏழாம் நாள் ஏசுநாதர் அவனைப் பார்க்க வந்து, ‘எப்படி இருக்கிறாய்?’ எனக் கேட்டார்.
‘எல்லாம் ஆயிற்று; இனிப்போக வேண்டியதுதான்’ என்றான்.
‘இந்த ஆறு நாட்களில் எவ்வளவு பாவம் செய்தாய்? எத்தனை தீய எண்ணங்கள் மனத்தில் உதித்தன?’ என ஏசுநாதர் கேட்டார்.
‘நாதரே! தீய விஷயங்களைக் குறித்து எண்ணுவதற்கு நேரம் ஏது? மரணம் சதா கண்முன் நின்றுகொண்டிருக் கிறதே!’ என்றான்.
‘என் வாழ்க்கை சிறிதும் பாவமற்றதாய் இருப்பதற்கான காரணம் இப்பொழுது புரிந்துவிட்டதல்லவா?…. சாவைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருத்தல் பாவத்தினின் றும் தப்புவதற்கு ஓர் உபாயமாகும்!’
‘புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி’ என்ற முச்சரணத்தை நீங்கள் போதித்திருப் பதற்கு காரணம் என்ன?’ என ஒருவன் புத்த பகவானைக் கேட்டான்.
‘முதலில் தனி மனிதனிடத்தில் உறுதி. இந்த உறுதி உடனடியாக தத்துவ உறுதியாக முதிர்வது அபூர்வம். ஒரு மனிதனிடம் இருந்து வந்த மரியாதையும் மதிப்பும் பத்தும் பதினைந்து பேரிடத்திலாவது வளரவேண்டும். ஆகவே சங்க நிஷ்டை. முதலில் தனி நபரிடம் பற்று, பிறகு சங்கப்பற்று இவ்விரு பற்றுகளும் வலுவில்லாதவையே. ஆனால். இறுதி யில் தத்துவப் பற்றுத் தோன்றும் பொழுது தான் ஸ்தாபனம் நிலைத்துப் பயன் அளிப்பதாகும்…‘ என புத்தபிரான் விளக்கினார்.
‘கீதை போதனைக்குச் சிறந்த பாஷ்யம் எது? யார்?’ என்ற ஐயம் உள்ளத்தில் சுழன்றது.
என் போதனைக்கு நானே பாஷ்யம் என்பது போலக் கண்ணன் பார்த்தனன்.
‘வாழ்க்கை என்னும் ரதம். கர்மயோகம் ராஜயோகம் -பக்தியோகம் ஞானயோகம் என்ற நான்கு குதிரைகள் அந்த ரதத்திலே பூட்டப்பட்டிருக்கின்றன. சாத்துவிக இயல்பையும், தூய்மையும் புலப்படுத்துவது போல அவை வெண் புரவிகளாகவும் இருக்கின்றன. ஸாரதியாக அமர்ந் திருப்பவன் கண்ணன்!’–காட்சியின் முழுத் தரிசனம்.
மறுகணம், ‘மோட்சம் சிடைக்குமா?’ என்ற வினா உள்ளத்தில் முளைவிடுகிறது.
‘யான் மோட்சம் அளிக்கும் சமர்த்தன். நீ மோட்சத்தைப் பற்றிக் கவலைப்படாதே. நீ கடமையைப் பற்றிச் சிந்தித்தால் போதும்’ என்பது போலக் கண்ணன் முறுவலிக்கின்றான்.
ரதம் ஓடத்தொடங்கியது; அன்றிலிருந்து மனித வாழ்க்கை ‘செப்ப மாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.