நடப்பதையெல்லாம் நங்கு கவனித்துக் கொண்டிருந்த நடேசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ‘சே! என்ன பெண் இவள்?! குழந்தை இரவெல்லாம் தன் தூக்கத்தைக் கெடுக்கிறது., இரவெல்லாம் தூங்குவதில்லை என்பதற்காக பகலில் அது தூங்கும் நேரத்தில் தூங்கவிடாமல் செய்துவிட்டால், இரவில் அந்த அசதியில் தூங்கிவிடுமாம்! தன் தூக்கத்துக்காக குழந்தையின் தூக்கத்தைக் கெடுப்பார்களா யாராவது?!’ கெடுக்கிறார்களே இங்கே!
பாவம் அந்தப் பிஞ்சு! சொருகும் கண்கள் கெஞ்ச, தூக்க விடுங்கடா பிளீஸ்னு சொல்லாம சொல்லி வாடிய பூவாய் வதங்கி நிற்கிறதே?! கேட்பாரில்லையா?
‘தெய்வமே உனக்குக் கண்ணில்லையா!? நீ கேட்கக் கூடாதா?!’ நான் கேட்க முடியாத சூழலில் இருக்கிறேன்!’. மனசுக்குள் மன்றாடினார் பாவம் அந்தப் பெரியவர்..
அஞ்சலி!… அஞ்ச்சலி…! அஞ்சலி…!னு பாட்டு காதுகளில் ரீங்காரமிட்டது. ‘எழுந்திரு! அஞ்சலி! எழுந்திரு!ன்னு சொன்னது போக தூங்காதே! அஞ்சலி தூங்காதே! ஏழரைக்கு இன்னும் ரெண்டு மணி நேரம்தான் இருக்கு..! ஏழரைக்குத் தூங்க்கினீன்னா… காலைல எழுந்திருக்கலாம்..! அம்மாவும் நல்லா இன்னைக்கு ஒரு நாளாவது தூங்குவேன்!’ என்றாள்.
அன்றைக்கு அதற்கு சிவராத்திரி பண்ணி சிந்தை குளிர்ந்த அந்த சித்புருஷர்கள் சித்தே கண்ணயர அது அன்றைக்குத்தான் பெரிதாய் அழுது தூங்காமல் துடித்தது. காரணம்… நமக்கே தூக்கம் வருகிற நேரத்தில் தூங்காமல் விட்டால் அதற்குப்பிறகு தூக்கம் எப்படி வரும்?!
காரணம் கண்டறியத் துடித்தார்கள். ஒன்றும் புலப்படவில்லை! அவர்களுக்குப் புலப்படவில்லை… தாங்கள்தான் காரணம் தூங்கவிடாமற் செய்துவிட்ட குற்றம் தங்களைச் சார்ந்ததே என்று உணராமல் எல்லாரையும் எல்லாவற்றையும் சந்தேகித்தார்கள். கண்திருஷ்டியாய் இருக்குமோ? யாராவது எதாவது செய்திருப்பார்களோ என்னவெல்லாமோ யோசனை. யோசித்தார்க்ல தீர்வுதான் கிடைக்கவில்லை!
கடைசியில் நம்பிக்கையோடு நடேசனை நாடினார்கள். பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தவர், ‘யார் கைவிட்டாலும் கடவுள் கைவிட மாட்டார்னு’ அவருக்குத் தெரியும். முட்டி மோதி தன் கிட்டே வரட்டும்னு காத்திருந்தார். வந்தார்கள். பெற்றவளை அழைத்துக் கொண்டு மணியைப் பார்த்தார் ஒருமணியாக பத்து நிமிடங்கள் இருந்தன. ‘கையில் ஒரு பாட்டிலில் தூய்மையான தண்ணீர் எடுத்துட்டுபுறப்படு!’ என்று அழைத்துக் கொண்டு அருகே இருந்த பள்ளி வாசல் போனார்.
அவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் இறைவன் மெல்லிய குரலில் அவர் காதுகளில் ஒரு பாடல் வரிகளை ஓட விட்டார்.
‘பள்ளிகள் பலவிருந்தும் ஃபாங்கோசை கேட்ட பின்னும்
பள்ளி செல்ல மனமில்லையோ?!
படைத்தவன் நினைவில்லையோ?’
‘இங்கே எதுக்குப்பா கூட்டி வந்திருக்கே…?!’ மகள் கேட்டாள்.
‘இத பாரு! நமக்குத்தான் பேதம்…! மதம்! எல்லாம். இறைவனுக்கு இல்லை! எங்க போனா என்ன?! எல்லா இடத்திலும் கடவுள்தான் இருக்கார்!. வேற வேற வடிவத்துல இருக்கார்!’ என்றார் நடேசன்.
பள்ளி வாசலில் காத்திருந்தார்கள் குழந்தையோடு..! தொழுகை முடிந்து வருகிறவர்கள். ‘உக்கருங்க! வந்திருவார்!’ என்று அன்புடன் அருகே இருந்த திண்ணையைக் காட்ட, உட்கார்ந்தார்கள்.
‘ஹஸ்ரத்’ வந்தார். ‘உக்காருங்க! என்ன பிரச்சனை’ என்று கேட்டார்… இவர்களா உண்மையைச் சொல்வார்கள்?! ‘தூங்க்குவதில்லை!’ என்று ஒற்றை வரியில் முடிக்க ஆடவனை ஐந்துமுறை தொழுபவர்களுக்கா தெரியாது?!
பாட்டில் தண்ணீரை வாங்க்கி, தண்ணீரில் ஓதி…! குழந்தைக்குக் குடிக்க மூன்று வேளை கொடுங்க..! என்று சொல்லி கைகளில் கொடுத்துவிட்டு பள்ளிவாசலுக்குள் போய்விட்டார். பணம் காசு எதுவும் வாங்கவில்லை! டாக்டர்ட்ட போயிருந்தா பணம் போயிருக்கும் தூக்க மருந்து உள்ளே போயிருக்கும் துன்பம் போயிருக்குமா தெரியாவில்லை!
இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லை என்று சொல்லுவதில்லை! இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்! அல்லல் பட்டு அழும் குரலைக் கேட்கின்றவன்.. அமுத நோக்கு தந்து நம்மைக் காக்கின்றவன்,
அன்றிரவு இவர் நல்லா தூங்கிப்போனார். குழந்தையும் நன்றாகத் தூங்கிப்போனது. நமக்கு அருள எல்லா வடிவிலும் இறைவன் எங்குமிருக்கிறான். நாம்தான் உணராமலிருக்கிறோம்!
இனிமேலாவது தூக்கம் வரும் போது குழந்தைகளைத் தூங்கவிடுங்கள். அது அட்டவணைக்கு(டைம்டேபிளுக்கு) தூங்காது! அன்புக்குத் தூங்கும்!.