அச்சர அப்பியாசமும், அணிலின் சகவாசமும்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 3,249 
 
 

‘சூ!’ ‘சூ!’ வென்று எதையோ வானம் பார்த்துத் துரத்திக்கொண்டிருந்தாள் வசந்தா. அவள் பேருதான் வசந்தா ஆனா, மே மாசம் வந்தா அவள் ரொம்ப பிசிதான்! கோடைக்குப் பிறகுதானே வசந்தம் வரும்?!

‘என்னத்தைத் துரத்தறே?” கேட்டான் கேசவன்.

‘இந்த அணிலைப் பாருங்க…!’ அவள் காட்டிய இடம் ஒரு தென்னை மரம். மண்ணில் ‘கற்பக தரு!’அதுதான். ‘பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!, தென்னையைப் பெத்தா இளநீராச்சே?!’ அந்த மரத்தில் உச்சியில் உட்கார்ந்திருந்தது ஒரு அணில்.

தென்னங் குரும்பைகளைக் கொறித்துத் தின்று கொண்டிருந்தது. மாடியில், வடாம் போட்டுக்கொண்டிருந்த வசந்தா வெறுங்கையால் அணில் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

வழக்கமாய் வடாம் போடும்-போதெல்லாம் காக்காதான் ஓட்டுவாள்.

வெறுங்கையால் காக்கா ஓட்டாத மக்கள் மத்தியில் வசந்தா கொஞ்சம் வித்யாசம்., அணிலை ஓட்டுவதைப் பார்த்து இப்போது, ‘அப்சட்’ ஆனான் கேசவன்.

‘வெயில்ல வடாம் போடுவானேன்?!. வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்காத வெயில் காலத்தில் பிழிஞ்சு போட்ட வடாத்தைத் தூக்க வரும் காகத்தைத் துரத்துவானேன்?!. அதாவது பரவாயில்லை., அணில் உன்னை என்ன பண்ணிச்சு.? அதையேன் இப்போ துரத்தறே?!’ கோபித்தான் கேசவன்.

என்ன அப்படிக் கேக்கறீங்க? குரும்பை பருத்தாத்தானே இளநீராகும்? பிறகு தேங்காய் கிடைக்கும்? அணில் குரும்பைகளைக் கொறித்துத் தின்று கொண்டிருக்கே? என்றாள்.

‘அதுசரி, அதுக்கு பசிக்கு எதுவும் கிடைக்கலை., அதான் குரும்பையைக் கொறிக்குது. உனக்குத் தெரியாத அச்சர அப்பியாசத்துல ‘அணில், ஆடு இலை ஈக்கள்னு ஏன் படிச்சோம்னு?!’ கேட்டான் கேசவன்.

‘ஏனாம்..?!’

‘ரமாயணத்துல சேது பாலம் கட்டும்போது, அணில் செய்த கர சேவை மண்ணில் புரண்டு மண் ஒற்றி எடுத்து பாலத்துக்கு உதவிச்சாம். அணில் முதுகில் ராமரே கோடுபோட்டுத்தான் அச்சர அப்பியாசத்தில் அணிலை அகர வரிசையில் முதலாக்கினார்.. நீ என்னடான்னா குரும்பை கொறித்ததற்காகத் துரத்தறயே?!

அணில் தின்னாமல் விட்டா, குரும்பை உனக்கு பதினைஞ்சு ரூபா தேங்காயோ, நாற்பது ரூபா இளநீரோதான் தென்னை கொடுக்கும்.

அணில் சகவாசத்தை நேசித்தால், அச்சர அப்பியாசமும் அணில் சகவாசமும் ஜென்மத்துக்கும் புண்ணியம் சேர்க்குமே!’ என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *