ஹனுமன் பிரம்மச்சாரியா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 18,953 
 
 

“ஹனுமன் பிரம்மச்சாரிதானே! பிறகு ஏன் சுவர்ச்சலா தேவியை அவருடைய மனைவி என்று கூறுகிறார்கள்? இது ராமாயணத்தில் உள்ளதா? சூரியனின் பெண்ணான சுவர்ச்சலாவை அனுமன் திருமணம் புரிந்தாரல்லவா? குரு புத்திரியை திருமணம் செய்வது தகுமா? அனுமனுக்கு அநேக ரூபங்கள் உள்ளனவே, எதனால்?”. இது போன்ற பல சந்தேகங்கள் பக்தர்களுக்கு எழுகின்றன.

ராமாயணத்தில் அனுமனின் மனைவி பெயர்கள் இல்லை. சுவர்ச்சலா பற்றிய கதையும் ராமாயணத்தில் கிடையாது. இராமாயண சம்பந்தமில்லாதது என்பதற்காக அதை தள்ளிவிடக் கூடாது. சுவர்ச்சலா தேவி என்பது உபாஸனை சம்பந்தப்பட்ட விஷயம். மந்திரங்களின் வழியாக தேவதைகள் வர்ணிக்கப்படுகிறார்கள்.

மந்திர சாஸ்திரத்தில் மந்திரங்களின் அதி தேவதைகள் இருக்கிறார்கள். அதே போல் மந்திர சாஸ்திரங்களில் ஹநுமனுக்கு அநேக ரூபங்களும் அதோடு தொடர்புடைய மந்திரங்களும் நிறைய உள்ளன. அதில் ஒன்று ‘சுவர்ச்சலா ஆஞ்சநேயம்’ என்பது.

மந்திரத்தின் அதி தேவதையை சக்தியோடு சேர்த்து உபாசனை செய்ய வேண்டும். இது, லௌகீகமான விஷயம் அல்ல. மந்திர சக்தியோடு தொடர்புடைய மந்திரம். ஹனுமன் சூரியனின் சீடன் என்பது புராணம் கூறும் கதை. மந்திரங்களின் படி, ஹனுமனின் சக்தியை ‘சுவர்ச்சஸ்’ என்பர். தவத்தினால் கிடைக்கும் தேஜஸ் ‘வர்ச்சஸ்’ எனப்படும். அப்படிப்பட்ட சிறப்பான பிரகாசமே ஹனுமனின் சக்தியான ‘சுவர்ச்சஸ்’. இதனையே ‘சுவர்ச்சலா’ வாக உபாசனை செய்கிறோம்.

இது ‘சௌர’ சக்தி. சூரிய சக்தியால் பிரகாசிக்கும் தெய்வ சைதன்யமே ஆஞ்சநேயர். இந்த சக்தியோடு கூட பகவானை பூஜிப்பவருக்கு இந்த ‘வர்ச்சஸ்’ மூலம் அனைத்து பலன்களும் கிடைக்கின்றன. சூரியனின் சக்தி சிறந்த வர்ச்சஸ்ஸோடு கூடியது என்பதால் அதனை ‘சூரியனின் புத்திரி’ என்று வர்ணித்தார்கள். அவ்வளவு தானே தவிர, அது தந்தை, பெண் உறவு அல்ல.

சுவர்ச்சலாவும் ஆஞ்சநேயரும் லௌகீகமான கணவன் மனைவி அல்லர். இது சக்தியோடு கூடிய தேவதா உபாசனை சம்பந்தப்பட்டது. சக்தியோடு கூட சேர்த்து பார்ப்பதே கல்யாணத்தின் பரமார்த்தம். அவ்வளவே தவிர, இது சீதா ராமர், சிவ பார்வதி இவர்களின் கல்யாணம் போன்றதல்ல.

ஒரே தேவதைக்கு பல ரூபங்கள் இருப்பதில் உள்ள உட்பொருள் என்னவென்றால் – அந்த தேவதையோடு தொடர்புடைய அநேக மந்திரங்களால் அநேக ரூபங்கள் ஏற்படுகின்றன. மந்திர சப்தங்களின் சேர்க்கையைக் கொண்டு தேவதைகளுக்கு ரூபங்கள் ஏற்படுகின்றன. ‘மந்திரம்-தேவதை’ இவற்றின் தொடர்பு பற்றி புரிதல் இருந்தால் இது புரிய வரும். எத்தனை மந்திரங்கள் உள்ளனவோ அத்தனை தேவதைகள் இருப்பார்கள். அத்தனை ரூபங்களும் இருக்கும். அவ்வளவுதானே தவிர, அத்தனை தேவதைகளின் ரூபங்களுக்கும் புராண கதைகள் இருக்காது. ஒரு வேளை இருந்தாலும் அவை மந்திரக் குறியீடுகளாக இருக்குமே தவிர நடந்து முடிந்த இதிகாசங்களாக இருக்காது.

அதே போல் பஞ்ச முக ஆஞ்சநேயர் கூட மந்திர உபாசனா மூர்த்தி. ராம கதையில் வரும் ஹனுமான் அந்த மந்திர மூர்த்தி எடுத்த ஒரு அவதாரம். ராமாயணத்தில் சுவர்ச்சலா பற்றிய விவரம் இல்லாவிட்டாலும் உபாசனைப்படி அது சிறந்த பிரமாணத்தோடு கூடியதே.

ரூபம் என்பது மந்திரச் சக்தியை வெளிப்படுத்தும் ஒரு சாதனம் மாத்திரமே. அந்த சக்தியை சப்த வடிவில் உச்சரிக்கும் போது அது ‘மந்திரம்’. காட்சியாக தரிசிக்கும் போது ‘ரூபம்’.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
(‘சமாதானம்’ என்ற நூலிலிருந்து, ருஷீபீடம் வெளியீடு)
தமிழில் – ராஜி ரகுநாதன்.
-தீபம், மார்ச் 5, 2017ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email
​'கணையாழி களஞ்சியம் பாகம் 3' ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி, செப்டம்பர் 1989ல் வெளிவந்த 'வேப்பமரத்தை வெட்டிய போது...' சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார். கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் வாழ்ந்து வரும் பி.ஏ.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *