ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 10,150 
 

ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் அந்தப் பூச்சிக்கு அப்பேற்பட்ட விவேகம் வந்து வாய்த்திருந்தது.. ‘சிலந்திக் கூட்டுக் கோவிலில் சிவன் வாசிப்பாரா?’ என்று ஆச்சர்யப்படத் தேவையில்லை.

பரந்து விரிந்த விஸ்வமே சரீரமாகக் கொண்ட விஸ்வேஸ்வரன், நாம் கட்டிய கோவிலில் வசிக்கிறாரல்லவா? அணுவை விடச் சிறியவன், பெரியவற்றிற்கெல்லாம் பெரியவன் – ‘அணோரணீயான் மஹதோ மஹீயான்’ ஆகிய அந்த பரமதத்துவம், பக்தன் எங்கு எந்த உருவில் பூஜித்தாலும் அங்கு அந்த உருவில் நிலை கொள்கிறான். அதானால் தான் சிலந்திக் கூட்டைக் கூடக் கோவிலாக ஏற்றுக் கொண்டான்

எதிர்பாராத விதமாக ஒருமுறை அந்த சிலந்தி நூற் கோவிலுக்கு சேதமேற்பட்டபோது , அதனைத் தாங்காமல் பக்தனான அந்தப் பூச்சி உயிரை விடவும் துணிந்து விட்டது. உடனே பக்த வத்சலனான பவானீபதி, அச் சிலந்திக்கு கைவல்யத்தை அனுக்ரஹித்தார்.

அதே போல் ஒரு பாம்பும், ஒரு யானையும் கூட சிவனின் அர்ச்சனையில் போட்டி போட்டுக் கொண்டு தம்மை அர்ப்பணித்துக் கொண்டன. அவற்றுக்கும் சிவ சாயூஜ்யம் கிடைத்தது.

அன்று முதல் அங்கிருந்த சிவன், “ஸ்ரீ காளஹஸ்தீச்வரன்’ என்று பெயர் பெற்றார். அதற்கு முன்பு அந்த பிரதேசதிற்கு ‘கஜகானனம்’ என்ற பெயர் இருந்தது. அங்கு வசிஷ்ட முனிவருக்கு பிரம்ம ஞானத்தை அனுக்ரகித்து, யோக லிங்கமாக விளங்கினார் சிவபெருமான். அதே பரமசிவன் ஒரு பூச்சியாலும் மற்ற ஜந்துக்களாலும் புதிய பெயரை ஏற்றுக்கொண்டார். எந்த உருவமும் இல்லாத லிங்கத்தில் இம்மூன்றின் அடையாளங்களே உருவமாக விளங்குகின்றன. “ஸ்ரீ’ என்றால் ‘சிலந்தி’ என்று ஒரு பொருள் உள்ளது. “காளம்” என்றால் ‘சர்ப்பம்’ , “ஹஸ்தி” என்றால் ‘யானை’. இம்மூன்றின் மேலும் தன் கருணையைப் பொழிந்ததோடல்லாமல், அக்காருண்ய லீலையை தன் மேல் சின்னங்களாக தரித்து தரிசனமளிக்கிறார் பரமேஸ்வரன். பக்தர்களின் பெயரே தன் பெயராக, பக்தர்களின் உருவமே தன உருவமாக வெளிப்படுத்திக் கொள்ளும் பக்த வத்சல குணத்திற்கு இந்த க்ஷேத்திரம் ஒரு எடுத்துக் காட்டு.

அது மட்டுமின்றி, திண்ணன் என்னும் வேட்டைக் காரன் அந்த முக்கண் மூர்த்திக்கு தன கண்ணைச் சமர்பித்து, சிவனுடன் ஐக்கியத்தைப் பெற்றான். அவனுடைய பிரதிபலன் எதிர்பாராத உயர்ந்த பக்தியால் பரவசமடைந்து, யாருக்கும் எளிதில் கிடைக்காத ‘சாயூஜ்ய பதவி’ யை அனுக்ரகித்து அருளினார் சதாசிவன். தன் சந்நிநிதியிலேயே கண்ணப்ப விக்ரகத்திற்கு அர்ச்சனை நடக்கும்படி நியமித்து, பக்தனான கண்ணப்பனையே தினம் கண் மூடாமல் பார்த்தபடி உள்ளார் ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர். இந்த பக்தர்களின் பக்தியில் பிரேமையோடு கூடிய அர்ப்பணத்தைத் தவிர கோரிக்கைகளின் பேரம் எதுவுமில்லை. பூரண பக்திக்குப் பட்டம் கட்டிய திவ்விய க்ஷேத்திரம் இது.

‘வேதங்கள், வாதங்கள், தர்க்கங்கள், மீமாம்சங்கள், பாண்டித்தியம், சர்ச்சை, வேஷம், வஞ்சனை இவை எதுவுமற்ற தூய பக்திக்கே சிவனின் அனுக்ரகம் பிராப்திக்கும்’ என்ற போதனை இந்த க்ஷேத்திரத்தின் மூலம் தெளிவாகிறது.

இக்கதைகளும், இத்தலமும் நமக்கு அனேக செய்திகளை தெரிவிக்கின்றன. கற்பனை வலையைப் பின்னிக் கொள்ளும் நம் அறிவே சிலந்திப் பூச்சி. சிலந்திக்கு தன் பெருமையே அதிகம். நமக்கு நம் பெருமை!

ஆனால் பரமேஸ்வரனுக்கு இரண்டும் சமமே!

ஆனால், சிலந்தி, தன் பெருமையையும், திறமையையும் பரமேஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்தது. நம் அறிவும் சிவார்ப்பணம் ஆக வேண்டும் என்பதே சிலந்தியின் பூஜை காட்டும் உட்பொருள்.

அடுத்து, நம்மில் படமெடுக்கும் அகம்பாவமே ‘சர்ப்பம்’.

‘தேகமே நான்’ என்ற உணர்வோடு கூடிய நடத்தையே ‘கஜம்’.

இந்த அகம்பாவம், உடலால் செய்யும் செயல்கள்- இவை கூட சிவனின் கைங்கர்யத்திற்கே விநியோகிக்ககப்பட வேண்டும். அதற்குத் தேவையான தகுதியே ‘திண்ணன்’.

கண்ணை அர்ப்பித்து , ‘கண்ணப்பன்’ ஆனான். இது பக்தனின் பெயரல்ல. பக்திக்குக் கிடைத்த பெயர்.

திண்ணனின் கதையை சமஸ்கிருதத்தில் எழுதிய உபமன்யு முனிவர், ‘தீரன்’ என்றே குறிப்பிடுகிறார். ‘திண்ணன்- தீரன்- கண்ணப்பன்’ இம்மூன்று பெயர்களுமே பக்தியின் லட்சணங்களே!

அங்கும் இங்கும் வளையாத ஏகாக்ர சித்தமே ‘திண்ணனனாக’ உருவெடுத்தது. சிதறாத விடாமுயற்சியே ‘தீரனின்’ குணம். மனக் கண்ணை சிதற விடாமல் அனைத்தையும் சிவ மயமாக தரிசித்தலே கண்ணை (பார்வையை) அர்பணித்தல். அதுவே ‘கண்ணப்பனின் லக்ஷணம்’.

புத்தி, அகங்காரம், சரீர செய்கை இவற்றை ஒரு முனைப்போடு, சிரத்தையுடன், சர்வ சமர்ப்பண உணர்வுடன் சிவனுக்கு அர்ப்பிப்பவன், லௌகீக வாழ்வில் எப்படிப்பட்ட அல்ப ஜீவியாக காணப்பட்டாலும், சிவனின் பார்வையில் அவனே மகாபக்தன்.

ஆதிசங்கரர், ‘சிவானந்த லஹரி’யில் கண்ணப்பனை மட்டுமே மகாபக்தனாக புகழ்ந்து, ‘வனசரோ பக்தாவதம் ஸாயதே’ என்று பாடியுள்ளார்.

ஸ்ரீகாளஹஸ்தி, அசலான தூய பக்தி தத்துவத்தை போதிக்கும் அற்புத தலம். சிரத்தையோடு கூடிய பக்தியை அரவணைத்துக் கொள்ளும் கருணாகரன் ஸ்ரீகாளஹஸ்தீச்வரன்.
சுபம்
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மார்ச், 2013ல் வெளிவந்தது.

தெலுங்கிலிருந்து தமிழாக்கம்.- திருமதி.ராஜி ரகுநாதன்.

(“ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா!”- தெலுங்கில் எழுதியவர் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.)

– 2013, மார்ச் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *