(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுந்தர காண்டம் | யுத்த காண்டம்-1 | யுத்த காண்டம்-2
38. வானர சேனையுடன் இராமர் புறப்படுதல்
அநுமான் தான் கண்டபடியே சொன்ன சொல்லை இராமர் கேட்டு, வெகு சந்தோஷமடைந்து சொல்லலானார்:-“இவ்வுலகத்தில் ஒருவராலும் மனத்தினாலும் எண்ணமுடியாத மிக்க அரும்பெருங்காரியத்தை, அநு மான் செய்து முடித்தான். கருட பகவானும் வாயுப்க வானும் அநுமானுமே யன்றி, பெருங்கடலைத் தாண்டு பவர் வேறொருவரிருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. செய்ய வேண்டிய சுக்கிரீவனுக்கு அடிமையாக இருந்து, பெருங்காரியத்தை அனுமான் செய்துமுடித்தான்” என்று சொல்லி, இராமர் அனுமானை ஆனந்தத்தால் உடம்பு சிலிர்க்கக் கட்டிக்கொண்டார். அதன் பிறகு, சிறிது ஆலோசித்துப் பார்த்து, வானரரெல்லார்க்கும் மன்னவ னாகிய சுக்கிரீவன் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே,பின் வருமாறு ரகுநந்தனர் சொல்லலானார்:-“சீதை யுள்ள விடத்தை நாடியறிதல் நன்றாகச் செய்து முடிந்தது; என்றாலும், நடுவிற் பெருங்கடலொன்றிருப்பதை ஆலோ சித்துப் பார்த்து என் மனம் கெடுகின்றது. கரையில்லாத எவ்வண்ணம் இவ் இப்பெருங்கடலின் தென்கரையை வானரர்களெல்லாரும் ஒன்றுசேர்ந்து அடைவார்கள்”? துக்கப் என்று அநுமானைப் பார்த்துச் சொல்லிவிட்டு பட்டவராகச் சிந்திக்கலானார்.
சுக்ரீவன் அப்போது அவரது துக்கத்தைப் போக்குஞ் சொற்களைப் பின்வருமாறு சொல்லலானான்:- “வீரரே! சாதாரண மநுஷ்யன் பரிதபிப்பதுபோலத் தாங்கள் ஏன் பரிதபிக்கின்றீர்கள்? தாங்கள் இவ்வாறு இருத்தல் தகுதி யன்று. செய்ந்நன்றி யறியாதவன் சிநேகத்தை விடுவது போல, தாங்கள் சோகத்தை அகற்றுங்கள். இந்த சமுத்திரத்தில் சேதுகட்டி, அதன் வழியாக நாம் ராக்ஷச ராஜ னுடைய நகரத்தை எவ்வாறு சென்று காணவேண்டுமோ அவ்வாறு தாங்கள் இப்பொழுது உபாயத்தை ஆலோசி யுங்கள். திரிகூட மலையின் உச்சியிலிருக்கும் இலங்கையை நாம் பார்த்தமாத்திரத்தாலேயே, இராவணன் போரில் வதைக்கப்பட்டானென்று உறுதிகொள்ளுங்கள். ஐயா! தாங்களோ புத்திமான்களுட் சிறந்தவர்கள் : சாஸ்திரங்க ளெல்லாவற்றையும் நன்கு கற்றறிந்தவர்கள் : ஆகையால், இப்பொழுது என்னைப்போன்ற மந்திரிகளுடன் கூடிச் சத்துருவை வெல்லுவது தங்களுக்குத் தகுதியானது.
இராமர், யுக்தியுக்தமான சுக்கிரீவன் சொல்லைக் கேட்டு, ஒப்புக்கொண்டு, அநுமானை நோக்கிச் சொல்ல லானார்:-” எனது தவத்தின் மகிமையினாலே சேதுவைக் கட்டி முடித்தாவது, வற்றச்செய்தாவது இக்கடலைக் கடக்க எப்படியும் எனக்கு வல்லமையுண்டு. அநுமானே! இலங்கையை ஒருவராலும் தகைய முடியாதென்கிறார் களே; அதில், எத்தனை கோட்டைக ளிருக்கின்றன அவற்றை எனக்குச் சொல்லுக. அரக்கர்களுடைய சேனை யின் அளவு, வாயில்களில் துர்க்கங்களின் அமைப்பு, இலங்கை பாதுகாக்கப்பட்டுவரும் விதம், அரக்கர்களின் மாளிகைகள் ஆகிய இவைகளெல்லாவற்றையும் நேரிற் கண்டதுபோல அறிய விரும்புகிறேன்” என்றார்.
அநுமான், இவ்விதமாக இராமர் சொன்னதைக் கேட்டு, பின்வருமாறு சொல்லலானார்:- “கொழுத்த யானைகளால் நிரம்பிய இலங்கை, உத்ஸாகமுள்ள ஜனங் களைக் கொண்டிருக்கிறது; பெரிய ரதங்கள் நிறைந்து, அரக்கர்களின் கூட்டங்கள் எங்கும் சஞ்சரிக்கும்படி விசால் மாக விளங்குகின்றது ; குதிரைகள் அதிகமாக நிரம்பிய அப்பட்டணத்துள் சத்துருக்கள் எளிதில் நுழையமுடி யாது. உறுதியாக அமைக்கப்பட்ட கதவுகளையுடை யனவும் உழலைமரங்களைக் கொண்டனவும் மிகப்பெரியனவும் விசாலமுமாகிய நான்கு வாயில்கள் அந்நகரத்திலிருக்கின்றன ; அவைகளில் அம்புகளைக் கக்குவனவும் கற்களை யெறிவனவாகவுமாகிய வலிய பெரிய யந்திரங்கள் அமைக் கப்பட்டுள்ளன. அந்நகரத்தின் மதில் பொன்னா லெடுக் கப்பட்டு வெகு உன்னதமாக விளங்குகின்றது. அம் மதிலைச் சூழ்ந்து,எல்லாப் பக்கங்களிலும், குளிர்ந்த ஜலம் நிரம்பி அழகாய், அளவிடமுடியாத ஆழமுடையனவாய், முதலைகளும் மீன்களும் நிரம்பியுள்ள பயங்கரமான அகழி கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அவ்வகழிகளைக் கடக்க நான்கு வாயில் வழிகளிலும் நீண்ட பாலங்கள் இருக்கின் றன். அவைகளில் அநேகவித யந்திரங்களும் வாயிற் காவலர் வாழும் பெரிய வீட்டு வரிசைகளும் இருக்கின் றன. சத்துருக்களின் சைனியங்கள் வரும்பொழுது அந்நகரத்தை அப்பாலங்கள் காக்கின்றன; அப்போது அப்பாலங்கள் யந்திரங்களால் உட்புறமாக இழுத்துக் கொள்ளப்படுகின்றன. அப்பாலங்களுக்குள் ஒரு பாலம் ஒருவராலும் அசைக்க முடியாதபடி வெகு உறுதியாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இராமரே! இராவணனோ, சூது முதலிய தீக்குணங்களின்றி அவதானமாக இருந்துக் கொண்டும் ஜாக்கிரதையாக தினந்தோறும் தனது சைனியங்களை நேரில்வந்து பார்த்துக்கொண்டும் யுத்தத் துக்குச் சித்தமாகக் காத்துக்கொண்டிருக்கிறான்.
“தங்கள் கைகளிற் சூலங்களைப் பிடித்துக்கொண்டு அரக்கவீரர்கள் பதினாயிரம் பெயர்கள் அவ்விலங்கையின் கீழைக் கோட்டை வாயிலிற் காவலிருக்கின்றார்கள். அக் கோட்டையின் தென்வாயிலில் லக்ஷம் அரக்கர்கள் காவல் காக்கின்றார்கள்; அவர்கள் நான்குவித சேனைகளுடன் தங்களுக்குமேற் போர்வீரர்களில்லை யென்னும்படி போர் புரிய வல்லவர்கள். அக்கோட்டையின் மேலை வாயிலில் பத்துலட்சம் அரக்கர்கள் இருக்கிறார்கள். வடக்குக் கோட்டை வாயிலில் ஆயிர லக்ஷம் அரக்கர்கள் இருக்கின்றார்கள். நகரத்தின் நடுவிலோ ஒருவராலும் தகைய முடியாத அரக்கர்கள் நூற்றுக்கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கோடிக்கணக்காகவும் இருக்கின்றார்கள்.
“ஆனால், நானோ அப்பாலங்களை யெல்லாம் முறித் தேன். அகழிகளைத் தூர்த்தேன். இலங்கையையே தீ யிட்டு எரித்தேன்; மதில்களையும் இடித்தேன்; பேருரு வத்தையுடைய அரக்கர்களில் ஒரு பாகத்தை நாசம் பண்ணினேன். எவ்விதமாகவாவது நாம் சமுத்திரத்தைத் தாண்டிவிடுவோமானால் வானரர்களால் இலங்கை அழிக் கப்பட்டதென்றே உறுதியாக எண்ணுங்கள். இலங் கையை யழிக்க, அங்கதன், த்விவிதன், மைந்தன், ஜாம்ப வன், பாஸன், நளன், சேனைத்தலைவனான நீலன் இவர் கள் மட்டுமே போதும்; மற்றை வானரசேனை தங்களுக்கு எதற்கு? இவர்கள் சமுத்திரத்தைக் கடந்தவர்களாய் ராவணனுடைய பெரிய பட்டணத்திற் புகுந்து, மலை காடு அகழி வாயில் பிராகாரம் மாளிகை இவைகளோடு கூடிய இலங்கையையே பிளந்து, இங்குத் தூக்கிவந்து விடுவார்கள். இவ்வண்ணம் செய்யுமாறு சீக்கிரமாக இவ்வானர சேனைகளுக்குள் ஸாரமான அங்கதன் முதலி யோர்க்கு கட்டளையிடுங்கள். நல்ல வேளையிலே பிரயா ணத்தை விரும்புங்கள்.”
அநுமான் சொன்னதைக் கேட்டு இராமர் சுக்கிரீவனை நோக்கி பின் வருமாறு சொல்லலானார்:-“பயங்கரமான அரக்கனுடைய நகரமென்று எந்த இலங்கையைப்பற்றித் தெரிவிக்கின்றீரோ, அப்பட்டணத்தை நான் சடிதியில் நாசம் பண்ணிவிடுகின்றேன் : இது உண்மை. சுக்ரீவ! இந்த முகூர்த்தத்தில் பிரயாணத்தைத் தொடங்க விரும்பு கின்றேன். சூரியபகவான் உச்சியிலிருக்கும் இம்முகூர்த் தந்தான் வெற்றிக்கு எடுத்த முகூர்த்தம். இன்று உத்தர நட்சத்திரம்: நாளைக்கோ சந்திரன் ஹஸ்த நட்சத்திரத் துடன் சேர்கின்றான். ஆகையால், சுக்கிரீவ! நாம் இப்பொழுதே வானரர்களெல்லோரும் சூழப் பிரயாணப் படுவோம். அன்றியும் இப்பொழுது தோன்றும் நிமித்தங் கள் நமது பாக்கியத்தை எடுத்துக்காட்டும். நான் இரா வணனைக் கொன்று சீதையை மீட்டுவருவேன். எனது இடக்கண்ணின் மேலிமை துடிப்பதானது என் மனோரத மாகிய வெற்றி கைகூடியதென்று வெளியிடுகின்றது போலும்”.
“வெகு பலசாலிகளான வானரர்கள் நூறாயிரவர் தன்னைச் சூழ்ந்து நடக்க நீலன், இச்சேனைக்கு முன்பாக வழியை நன்றாகச் சோதித்தலின் பொருட்டுப் போகட்டும். வானரர்களுட் சிறந்தவனான ரிஷபன் வானர சேனையின் வலப்பக்கத்தைப் பாதுகாத்துக்கொண்டு போகட்டும். அடக்கமுடியாமல் மதயானைபோல
வெகுபலத்துடன் விளங்கும் கந்தமாதனன் வானரசேனையின் இடப்பக்கத் தைப் பாதுகாத்துக்கொண்டு போகட்டும். இந்திரன் ஐரா வதத்தின்மேல் ஏறிச்செல்வதுபோல, நான் அநுமான் மேல் ஏறி வானரசேனைகளின் மனதைக் களிப்பித்துக் கொண்டு, சேனைகளின் நடுவிற் செல்வேன். யமதர்மராஜ னுக்கு ஒப்பான இலக்ஷ்மணன் அங்கதன்மேல் ஏறிக் கொண்டு செல்லட்டும். மகாபலம் பொருந்திய ருக்ஷர் களுக்கு மன்னன் ஜாம்பவன் ஸுஷேணன் வேகதர்சி யென்னும் வானரன் ஆகிய இம்மூவரும், வானரசேனை யின் வயிற்றுப்புறத்தை பாதுகாத்துக்கொண்டு வரட்டும்” என்றார்.
சுக்கிரீவன், ஸ்ரீராமரிட்ட கட்டளையைக் கேட்டதும் மஹாவீரர்களான வானரர்களுக்கு உடனே புறப்படு மாறு கட்டளையிட்டான். சுக்கிரீவனும் இலக்ஷ்மணரும் மரியாதையுடன் தொடர்ந்துவர, தர்மாத்துமாவாகிய இராமர் சைனியங்களுடன் தென்திசையை நோக்கிப் பிரயாணமானார். அப்பொழுது இராமர் நூற்றுக்கணக் காகவும் நூறாயிரக் கணக்காகவும் கோடிக்கணக்காகவும் பதினாயிரகோடிக் கணக்காகவும் யானைகளைப்போன்ற வானரர்கள் தம்மைச் சூழ்ந்துவரச் சென்றார்.
இராமர் மகேந்திரமலையைச் சேர்ந்ததும் அநேக மரங் களடர்ந்து அழகாக விளங்கிய அதன் சிகரத்தின்மேல் ஏற் லானார். அச்சிகரத்தைச் சேர்ந்து ஆமை மீன் முதலிய ஜல ஐந்துக்களால் நிரம்பிய சமுத்திரத்தைக் கண்ணுற்றார். மலையை விட்டு இறங்கி சுக்கிரீவனுடனும் இலக்ஷ்மணருட னும் அக்கடற்கரையிலிருந்த காட்டிற் புகுந்து கடற்கரை யையடைந்து இராமர் பின்வருமாறு சொல்லலானார்: “சுக்கிரீவா!நாம் எல்லோரும் இப்பொழுது இச்சமுத்தி ரம் வந்து சேர்ந்துவிட்டோம். இங்குவந்த பிறகு, சமுத் திரத்தைக் கடப்பதைப் பற்றி முன்னே நமக்கு உண்டான கலக்கம் மீண்டும் உண்டாகின்றது. இனி அக்கரை கண் ணுக்குத் தென்படாத இப்பெருங் கடலை பேருபாயத்தா லன்றி நாம் எவ்வாறு தாண்டமுடியும்? ஆகையால் நமது சேனைகளை நாம் இவ்விடத்திலேயே தங்குவிப்போம்.எவ் வாறு இக்கடலை வானரசேனை கடப்பதென்பதைப்பற்றி மந்திராலோசனை பண்ணுவோம் என்றார். இராமர் சொன்னதைக் கேட்டதும் சுக்கிரீவனும் இலக்ஷ்மண ரும் மரங்களடர்ந்த அக்கடற்கரையில் வானர சேனைகளை இறக்கினார்கள்.
சமுத்திரமானது ஆகாயத்தைப்போல் விளங்கிற்று. ஆகாயமும் சமுத்திரம்போல் விளங்கிற்று. சமுத்திரத் துக்கும் ஆகாயத்துக்கும் ஒருவகை வேறுபாடும் தோன்றா மலிருந்தது. இரத்தினங்களையுடைய கடலின் ஜலம் ஆகா யத்தோடும் நட்சத்திரங்களையுடைய ஆகாயம் கடலின் ஜலத்தோடும் வேறுபாடு தோன்றாமல் ஒரேநிறத்தனவாய் விளங்கின. மேலெழும் மேகங்களைக்கொண்ட ஆகாயம், உயரவெழுந்திரைகளையுடைய சமுத்திரம், ஆக. இரண் டுக்கும் அப்பொழுது வேறுபாடு யாதொன்றுமில்லை. யுத்தகளத்திற் பெரும்பேரிகை வாத்தியங்கள் பலவிடங்களில் இடிக்கப்படுவதுபோல சமுத்திரத்திற் கிளம்பிய பேரலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கரமாகச் சத்தித்துக்கொண்டிருந்தன. அப்போது, திரைகள் கொந் தளித்து ஒலிக்க, திக்பிரமைகொண்டவன் போலத் தோன்றுகின்ற அச்சமுத்திரத்தை வானர வீரர்கள் கண்டுகளிப்படைந்தார்கள்.
39. இராவணன் மந்திரிமார்களின் சபை கூடுதல்
ராக்ஷசராஜனான இராவணன், மகாத்துமாவான இந்திரன்போல் அநுமான் இலங்கையிற்செய்த பயங்கர மான கொடுஞ்செயல்களைப் பார்த்து, வெட்கத்தாற் சிறிது தலை தாழ்ந்து எல்லா வரக்கர்களையும் நோக்கிப் பின்வருமாறு சொல்லறுற்றான்:-” ஒரு வானரன், எவரா லும் வெல்லப்படாத இலங்கையில் தனியாகப் புகுந்து அழித்து சீதையையும் பார்த்துவிட்டுச் சென்றான்; நமது நகரத்துப் பிரதான அரண்மனையை அழித்தான்; பெயர் பெற்ற அரக்கர்கள் அநேகரை வதைத்தான் ; அநுமான் ஒருவனே இலங்கை முழுவதையும் ஒருகலக்குக் கலக்கி னான். ஆகையால் இனி எவ்விதமாகச் செய்தால் நன்றா கச் செய்ததாகுமோ, எது நமக்கு ஹிதமானதோ அதனைச் சொல்லுங்கள்; அவ்வாறே செய்வேன். உங்களுக்கு மங்களமுண்டாகுக. வெற்றி யென்பது மந்திராலோ சனையிலிருந்து உண்டாகிறதென்று பெரியோர் சொல்லு கின்றார்கள். ஆகையால், மகாபலவான்களே! இராமனை வெல்வதைப்பற்றி ஆலோசிக்க விரும்புகின்றேன். மஹா வீரர்களான வானரர்கள் ஆயிரக்கணக்காகச் சூழ இரா மன் நம்மை எதிரிடுமாறு இலங்கையைநோக்கி வந்து கொண்டிருக்கின்றான். இராமன், தனது வல்லமையால் வற்றச்செய்தாவது, வேறு உபாயஞ்செய்தாவது, இச்சமுத் திரத்தைத் தாண்டி தனது தம்பியுடனும் வானர சேனை யுடனும் இவ்விடம் வந்துவிடுவா னென்பது நிச்சயம்.”
மகாபலவான்களான அரக்கர்களைப்பார்த்து இராவ ணன் அவ்வண்ணம் சொன்னதும், அவர்களெல்லோரும் அஞ்சலிபந்தம் பண்ணிக்கொண்டு இராவணனை நோக்கி சத்துருவின் பலத்தையறியாதவர்களாய் நீதிசாஸ்திரத் திற்குமாறாக தங்களுடைய அறிவின்மையாற் சொல்ல லானார்கள்: “வேந்தே!மிகவும் பெரிய நமது சைனியம் உழ லைத்தடி, நீண்டதடி, கத்தி, சூலம், பட்டஸம் முதலிய ஆயுதங்களால் நிரம்பி நிற்கின்றதே; தங்களுக்கு ஏன் இப்பொழுது துக்கமுண்டாக வேண்டும்? தாங்கள் போக வதி யென்ற நகரத்துக்குச் சென்று அங்கிருந்த பன்னகர் களைப்போரில் வென்றவர்களாயிற்றே. யக்ஷர்கள் பல ராற் சூழப்பட்டு கைலாஸ மலையினுச்சியிலே வசித்துக் கொண்டிருந்த குபேரனோடு பெரும்போரிட்டு அவரைத் தாங்கள் வசமாக்கிக்கொண்டீர்களே.யக்ஷர்களை யெல் லாம் போர்செய்து கொன்றும், நடுநடுங்கச் செய்தும், கைலாஸமலையினுச்சியிலிருந்து தாங்கள் இந்தப் புஷ்பக விமானத்தைப் பறித்துக்கொண்டுவந்தீர்கள். யமனது சேனாசமுத்திரத்திற் புகுந்து, ராஜரே! தாங்கள் மிக்க வெற்றிகொண்டு, காலனைத் தங்களிடம் நெருங்காமலிருக் கும்படி தள்ளிவைத்தீர்கள். பெருவேந்தரே! தாங்கள் நில்லுங்கள்; தாங்கள் ஏன் சிரமப்படவேண்டும்? மிக்க தோள்வலிமையுடைய இந்த இந்திரஜித்து ஒருவரே வான ரர்களையெல்லாம் நாசஞ்செய்து விடுவார். இந்திரஜித் தொருவரைத் தாங்கள் அனுப்புங்கள்; அவர் எல்லா வானர சேனைகளுடனும் இராமரை நாசமாக்குவார். என்றார்கள்.
அவர்களையெல்லாம் தடுத்து விபீஷணர் அஞ்சலி பந்தம் பண்ணிக்கொண்டு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:-“ஐயா! எந்தக் காரியத்தை சாமம் பேதம் தானம் என்ற மூன்றுவித உபாயங்களாற்சாதிக்க முடியவில்லையோ, அப்பொழுதுதான் அக்காரியத்தைப் பராக்கிரமத்தால் முடிக்க வேண்டுமென்று புத்திமான் கள் சொல்லியிருக்கின்றார்கள். பகைவர்கள் ஜாக்கிரதை யில்லாதவர்களாகவாவது, வெறுத்தவர்களாகவாவது. பாக்கிய மற்றவர்களாகவாவது இருக்கும் பட்சத்தில், நல்ல மந்திரிகளுடன் கூடி ஆலோசித்து, நீதி முறைப்படி அப்பகைவர்களிடம் காட்டும் வல்லமை வெற்றியைச் கொடுக்கும். இராமரோ வெகு ஜாக்கிரதை யுள்ள வர்: எப்பொழுதும் வெற்றியடையும் ஆவல்கொண்டு அதற்குத்தகுந்த பலத்துடனிருப்பவர்; கோபத்தை யடக்கியிருப்பவர் ; ஒருவராலும் எளிதில் தகையக்கூடா தவர் ; அவ்வித வீரரை நீங்கள். எவ்வாறு வெல்ல விரும்பு கின்றீர்கள்? பெருநதிகளெல்லாவற்றிக்கும் அடைக்கல மாய் வெகு பயங்கரமாயிருக்கும் இந்தச்சமுத்திரராஜனை அநுமான் தாண்டி செய்வதற்கு அரிய இவ்வகைத் தொழி லைச் செய்தானே! இதையாவது கருதுங்கள். அரக்கர் களே! நமது பகைவர்களுடைய பலமும் வல்லமையும் அளவிடா முடியாமலிருக்கின்றன: ஆகையால் நீங்கள் அவர்களைத் திடீரென்று அலட்சியமாக எண்ணக்கூடாது.
நமது மன்னவருக்கு இராமர் என்ன கெடுதி செய்தார்? என்ன காரணத்துக்காக ஜனஸ்தாநத்தி லிருந்து அவ்வீரருடைய கற்புள்ள மனைவியைக் கவர, வேண்டும்? நீதிவழுவாமல் நடந்து வரும் அவ்வுத்தம புருஷருடன் வீண் பகை விளைத்துக்கொள்ளுதல் நமக்குத் தகுதியன்று. ஆதலால் சீக்கிரமாகச் சீதா தேவியை இராமருக்குக் கொடுத்துவிடுங்கள். யானைகள் குதிரைகள் நிரம்பிப் பலவகை இரத்தினங்கள் நிறைந்து விளங்கும் இவ்விலங்கையை இராமர் தமது பாணங்க ளால் நாசம்பண்ணுவதற்குமுன்னே சீதாதேவியை அவரி டம் கொடுத்துவிடுங்கள். வெகு பயங்கரமானவும் வெல்ல முடியாததுமாகிய பெருவானர சைனியம் நமது இலங் கையைத் தகையு முன்னமே சீதாதேவியைக் கொடுத்து விடுங்கள். தாங்களே இராமரிடம் அவருடைய அன் பான மனைவியைக் கொடாத பக்ஷத்தில் இவ்விலங்கை நாசமாய்விடும்; வீரர்களான எல்லா அரக்கர்களும் அடி யோடு அழிந்துபோய் விடுவார்கள். நான் தங்களுக்கு உறவுமுறையானாதலால் தங்களை வேண்டிக்கொள்ளுகின் றேன் : நான் சொல்வதைக் கேளுங்கள். என் சொல் உங்களுடைய நன்மையை நாடியதாகவும், உண்மையை எடுத்துக்காட்குவதாகவுமிருக்கின்றது; சீதையை இராம ரிடம் கொடுத்துவிடுங்கள். என்றையதினம் இவ்விடம் சீதை வந்தாளோ, அன்று முதல் நமது பட்டணத்தில் அநேக அபசகுனங்கள் காணப்படுகின்றன. நானோ கண் டதையும் கேட்டதையும் ஒன்றும் ஒளிக்காமல் எடுத்துச் சொல்லவேண்டியவன். நியாயம் இன்னதென்பதைச் சீர் தூக்கி அவ்வண்ணம் தாங்கள் நடக்கவேண்டும்.’ என்று விபீஷணர் இராவணனை நோக்கி நன்மையை நாடிச் சொல்லிமுடித்தார்.
பின்னர் கும்பகர்ணன் வெகு கோபங் கொண்டு சொல்லலானான்:-“மஹாராஜரே! இவ்வாலோசனைக் ளெல்லாம் சீதையைக் கொணர்தற்கு முன்னமே தாங்கள் எங்களுடன் ஆலோசித்திருந்தால் சரியாக இருந்திருக்கும். இராவணரே ! எவனொருவன் இராஜ காரியங்களை நியாய மாகப் பார்த்துச்செய்கிறானோ அவ்வரசனது புத்தி எல்லா ருடைய ஆலோசனையாலும் ஒரு விதமான நிச்சயத்துக்கு வந்திருக்குமாதலால் அவன் பின்னால் ஒரு வகைப் பரிதா பத்தையும் அடைய மாட்டான். எவெனொருவன் உபாயங் களை மந்திரிமார்களுடன் ஆலோசிக்காமல் அக்கிரமமாகச் செய்கிறானோ, அவனுடைய காரியங்கள் அசுசியான பாத்திரத்தில் வைக்கப்பட்ட அவிசுகள்போல் வீணாய் விடும். எவனொருவன் முன் செய்ய வேண்டிய காரியத் தைப் பின்னும் பின் செய்ய வேண்டிய காரியத்தை முன்னும் செய்கிறானோ அவன் நீதியநீதிகளை உணராதவனே. தாங்கள் ஆலோசிக்காமல் இந்தப் பெரும் பாவ காரியத்தைச் செய்து விட்டீர்கள்: விஷங் கலந்த மாமிசம் தன்னைப் புசிப்பவனை கொல்வதுபோல இராமர் இது வரையில் தங்களைக் கொல்லாமலிருப்பதே ஆச்சரியம். ஆனாலும் நான், தங்களுடைய சத்துருக்களை யெல்லாம் கொன்று, தாங்கள் எடுத்துக் கொண்ட இக்காரியத்தைச் சரியான காரியமாகப் பண்ணி வைக்கின்றேன்; தாங்கள் கவலையற்றிருங்கள். எண்டிசைகளுக்கும் அதிபதியாக விளங்கும் மன்னவரே! இந்திர சூரியர்களாயிருந்தாலும், அக்கினி வாயுக்களாயிருந்தாலும், குபேர வருணர்களா யிருந்தாலும், தங்களுடைய சத்துருக்களை நான் வதைக் கின்றேன். மலைபோன்ற எனது தேகத்தையும் கூரான கடைவாய்ப் பற்களுடன் நான் செய்யும் அட்டஹாஸத் தையும் பேருழலைத் தடியெடுத்து நான் போர் புரிவதை யும் கண்டால் இந்திரன்கூடப் பயப்படுவான்.
வெகு பலசாலியாகிய மஹாபார்சுவன் இராவணன் கோபமாயிருப்பதை யறிந்து ஒரு முகூர்த்த காலம் ஆலோ சித்து கூப்பிய கையனாய் பின் வருமாறு சொல்லலானான்:- “எவெனொருவன் பாம்புகளாலும் மற்றும் பல விலங்கு ளாலும் நிரம்பி யிருக்குங் காட்டுக்குள் தேனைப் பருக வேண்டுமென்ற விருப்பத்தோடு புகுந்து தேனைப்பெற்றும் குடிக்காமலிருக்கிறானோ அவன் மூடனேயாவன். சத்து ருக்களை யடக்கும் வேந்தே! எல்லாருக்கும் மேலாகவிருக் கும் தங்களுக்கு மேலானவர் யார் இருக்கின்றார்கள்? ஆகையால் தாங்கள் தங்களுடைய சத்துருக்கள் தலையில் காலை வைத்ததாகக் கொண்டு சீதையுடன் சுகமாக வாழுங்கள்.”
மகாபார்சுவன் இவ்வண்ணஞ் சொன்னதும் அவனை மெச்சி ராக்ஷச ராஜன் மறுமொழி சொல்லுகின்றான்:- “என் வேகமோ சமுத்திரத்தின் வேகத்துக்கு ஒப்பானது; என்னுடைய போக்கோ வாயுவுக்குச் சமானமானது. இவைகளொன்றையும் இராமன் அறியான்; ஆதலால் அவன் என்னை எதிர்க்க வந்திருக்கின்றான். தனது குகையிற் படுத்துத் தூங்குஞ் சிங்கம்போலவும் உறங்கும் யமன் போலவும் கோபித்துக் கொள்ளுதற்கு உரியவ னாகிய என்னை எவன் தான் தட்டி யெழுப்பத் துணிவான்? வச்சிராயுதத்துக்கு ஒப்பாக எனது வில்லி லிருந்து புறப்படும் நூற்றுக் கணக்கான பாணங்களால் நான் இராமனை கொள்ளிக் கட்டைகளால் யானையைக் கொளுத்துவதுபோல ஒரு நொடியிற் கொளுத்திவிடுவேன். பெருஞ் சைனியத்தால் சூழப்பட்ட நான் காலையில் உதிக் குஞ்சூரியன் நட்சத்திரங்களின் காந்தியை வாங்கிவிடுவது போல இராமனுடைய பலம் முழுவதையும் இழுத்து விடுவேன்” என்றான்.
அரக்கர் தலைவனான இராவணன் சொன்ன சொல்லை யும், கும்பகர்ணன் பேசின நிரர்த்தகமான பேச்சுக்களையும் விபீஷணர், கேட்டு, இராவணனை நோக்கி, நன்மையை நாடி, வெகு அர்த்தத்துடன் கூடிய சொற்களைப் பின் வருமாறு சொல்லலுற்றார்:-“பெருமலையின் சிகரத்துக்கு ஒப்பான சரீரமமைந்து, கோர தந்தங்களையும் நகங்களையும் ஆயுதங்களாக வுடைய வானரர்கள், நமது இலங் கையை நோக்கி ஓடி வருமுன் தாங்கள் இராமரிடம் சீதா தேவியைக் கொடுத்து விடுங்கள். வச்சிராயுதம் போன்று வாயுவுக்கு ஒப்பான வேகத்தைக் கொண்ட பாணங்கள் இராமபிரானாற் பிரயோகிக்கப்பட்டு அரக்கர்களுள் முக்கியமானவர்களுடைய தலைகளைக் கவருமுன்னமே இராமரிடம் சீதாதேவியைக் கொடுத்து விடுங்கள். கும்ப கர்ண இந்திரஜித்துக்களாவது, நமது அரசராவது, மகா பார்சுவ மகோதரர்களாவது, நிகும்ப கும்பர்களாவது, அதிகாயனாவது போர்முகத்தில் இராமருடைய எதிரில் நிற்கவல்லவரல்லர். வேந்தே! உம்மைச் சூரிய பகவானே காப்பாற்றினாலும், மருத்துக்கள் பாதுகாப்பினும், நீங்கள் இந்திரன் மடியின்மேலேறி உட்கார்ந்தாலும், யமனுடைய ஸம்ரக்ஷணையிலிருந்தாலும், ஆகாயத்திற் பறந்தாலும், பாதாளத்திற் புகுந்துக் கொண்டாலும் உம்மை இராமர் உயிருடன் பிழைத்திருக்க விடார். எவனொருவன் பகைவ ருடைய பலம் இடம் சக்தி சித்திகள் தன்னுடையவற்றோடு ஒத்திருத்தல் குறைந்திருத்தல் மிக்கிருத்தல் என்ற இவை களையெல்லாம் நன்றாக ஆலோசித்து தனது யஜமானனது நன்மைக்குக் குறைவு வராதபடி சொல்லுகின்றானோ அவன் தான் மந்திரியாவான்” என்றார்.
40. விபீஷணர் இராமரிடம் வருதல்
செவிக்கினியதும் நன்மை நாடியதுமான வார்த் தையை விபீஷணர் சொல்ல, இராவணன் காலத்தினால் ஏவப்பட்டவனாய், அவரை நோக்கிக் கடுமையாகச் சொல்லலானான் :-“சத்துருவோடும் கோபித்திருக்கின்ற பாம்போடும் வசித்தாலும் வசிக்கலாம்; நண்பன்போலத் தோன்றி சத்துருவினிடத்திற் பட்சபாதமுடையவனுடன் வசிக்கவே கூடாது. அடா அரக்கா! உலக முழுவதும் பங்காளிக் காய்ச்சலென்று சொல்லப்படுவதை நான் நன்றாக அறிவேன்.. தாயாதிகளென்பவர்கள் எப்பொழு தும் தங்களுடைய தாயாதிகளுக்கு சங்கடமுண்டாகும் பொழுது களிக்கிறார்கள். தமது குடியில் முக்கியமானவ னாயும் படித்தவனாயும் காரியங்களைத் தவறாது செய்து முடிப்பவனாயும் தருமங்களை ஆராய்பவனாயும் சூரனாயும் எவன் இருக்கிறானோ அவனை தாயாதிகள் லட்சியம் பண்ணாமல் நடக்கின்றார்கள்; சமயம் நேரும்பொழுது அவமானமும் செய்கிறார்கள். தங்கள் மனத்தில் தீமையை ஒளித்து வைத்துக்கொண்டு, வெளிக்கு மட்டும் எப்பொழு தும் நண்பர்கள்போல நடித்து வந்து, கொடிய செயல் களையே செய்யும் பங்காளிகள். சமயம் நேரிடும்பொழுது துரோகமும் பண்ணி விடுகின்றார்கள்: ஆகையால் அவர்கள் எப்பொழுதும் பயத்தைத் தோற்றுவிப்ப வர்களே. பசுக்களிடத்தில் வளத்துக்குக் காரணமும், அந்தணர்களிடத்தில் பஞ்சேந்திரிய நிக்கிரகமும், மகளி ரிடத்திற் சஞ்சலமும்போல, தாயாதிகளிடத்தில் பயத்தை யுண்டாக்குங் குணம் இயல்பாகவே யிருக்கின்றது” என்றான்.
இவ்வாறு இராவணன் கடுமையாகச் சொல்லவே விபீஷணர் கையிலெடுத்துக் தமது கதாயுதத்தைக் கொண்டு, தம்மைச் சேர்ந்த நான்கு அரக்கர்களுடன் ஆகாயத்திற் உயர கிளம்பி கோபங் கொண்டவராய் இராவணனை நோக்கிச் சொல்லலானார்:-“வேந்தே! தாங்கள் என் தமையனாராக இருக்கின் றீர்கள்; ஆகையால் உங்கள் மனத்துக்குத் தோன்றியபடி, நீங்கள் என்னைப்பற்றி என்னென்ன சொல்ல வேண்டுமோ அவைகளைச் சொல்லுக. தமையனார் மரியாதை செய்யத் தக்கவர்; தந்தைக்குச் சமானமானவர்; ஆனாலும் தாங்கள் தருமத்தின் வழியில் நிற்கவில்லை. இப்பொழுது தாங்கள் என்னை நோக்கிக் கடிந்து கூறிய சொற்கள் அவ்வளவும் பொய். அவைகள் என்னாற் சகிக்க முடியவில்லை. ஐயா! பத்து முகங்கள் பெற்றவரே! தங்கள் நன்மையை நாடி நான் நீதிகளை எடுத்துச் சொன்னேன். நல்லறிவில்லாத வர்கள் காலத்தின் கொடுமையிற் சிக்கிக் கொண்டு தங்க ளுடைய நன்மைக்காகச் சொல்லப்படுகின்ற இதங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசரே! எப்பொழுதும் இனிமையாகவே பேசுங் குணமுள்ளவர்கள் இவ்வுல கத்தில் எங்கும் கிடைப்பார்கள்; கேட்பதற்கு இனிமையா யிராத நன்மை தரக்கூடியதை எடுத்துச் சொல்பவனும் அரியன் ; அதைக் கேட்பவனுன் அரியனே. கொழுந்து விட்டெரியும் தீப்போலப் பிரகாசிக்கின்ற பொன் மாயகி கூரான இராம பாணங்களால் நீங்கள் மாண்டு போவதைப் பார்க்க மனஞ் சகியாதவனாய் நான் போகிறேன். என்னைவிட்டு எப்படியாவது சுகமடையுங்கள்” என்றார்.
விபீஷணர் இவ்வாறு இராவணனைக் கடிந்து சொல்லி ஒரு முகூர்த்த காலத்துக்குள் இராமரும் இலக்ஷ் மணரும் எவ்விடத்தில் இருந்தார்களோ அவ்விடம் நான்கு அரக்கர்களுடன் வர வானரராஜனான் சுக்கிரீவன் அவர்களைப் பார்த்து மற்றை வானரர்களுடன் ஆலோ சிக்கலானான். விபீஷணர் சுக்கிரீவனையும் வானரர்களையும் நோக்கி பெருங்குரலால் பின்வருமாறு சொல்லலுற்றார்:- “ஐயா! அரக்கர் வேந்தனாய் அரக்கனுமாய் கொடிய நடத்தையுள்ளவனுமாய் இராவணனென்று பிரசித்தி பெற்ற ஒருவன் இருக்கின்றான். அவனுக்குப் பின் பிறந்த சகோதரன் நான்; விபீஷணனென்னும் பெயருடையேன். அவ்விராவணன் ஜடாயுவென்பவரைக் கொன்று ஜன ஸ்தானத்தினின்று சீதா தேவியை யெடுத்துப் போய் அசோகவநிகையிலே மூச்சும் விடவொண்ணாதபடி சிறைப் படுத்திப் பரவசையாய் எளியவளாயிருக்குமாறு வைத் திருக்கின்றான்; அவளை ராக்ஷசிகள் பாதுகாக்கின்றார்கள். நானோ பல தடவை பல காரணங்களை எடுத்துக் காட்டி இராமரிடம் சீதாதேவியை விட்டுவிடுங்களென்று அவ் விராவணனுக்கு அறிவு மூட்டினேன். ஆயுள் முடிந்தவன் மருந்துண்பதை ஒப்புக்கொள்ளாதவாறு நான் சொன்ன நன்மையான வாக்கியங்களை தனது பொல்லாத காலத் தால் ஏவப்பட்டு அவ்விராவணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதுவுமல்லாமல் அவன் என்னை மிகவுங் கடிந்து பேசி ஓர் அடிமைபோல அவமானமுஞ் செய்தான். ஆகையால் நான் என் பெண்டு பிள்ளைகளை விட்டு இராகவரைச் சரணமாக வந்தடைந்தேன். எல்லா உலகங்களுக்கும் சரண்யராய் மகாத்துமாவாக விளங்கும் இராகவரிடம், நீங்கள் சடிதியிற் சென்று விபீஷணன் வந்திருக்கின்றா னென்று என்னைப்பற்றிச் சொல்லுங்கள்” என்றார்.
இவ்வார்த்தையைக் கேட்டதும் சுக்கிரீவன் வெகுவேகமாகச் சென்று இலக்ஷ்மணருடைய முன்பாக இராம ரிடம், வெகு பரபரப்புடன் பின்வருமாறு சொல்ல லுற்றான்:-“இராவணனுக்குப் பின் பிறந்த சகோதர னாகிய விபீஷணனென்பானொருவன் நான்கு அரக்கர்க ளுடன் வந்து தங்களைச் சரணமாக அடைந்திருக்கின்றான். இவ்வரக்கன் நல்லவனாயிருந்தாலும் சரி கெட்டவனா யிருந்தாலும் சரி நன்றியற்ற இவனால் நமக்கு என்ன பயன்? இப்படிப்பட்ட பெருஞ்சங்கடத்திலிருக்கும் தமது தமையனைக் கைவிட்டு வந்த இவ்விபீஷணனை கைவிடாம லிருக்கத் தகுந்தவன் எவன்தான்” என்றான்.
இவ்வண்ணம் சுக்கிரீவன் சொன்ன சொல்லைக் கேட்டு, காகுத்தர் எல்லாரையும் பார்த்துப் புன்னகை கொண்டு சொல்லலுற்றார்:-“நண்பன்போல் அபிநயித் துக்கொண்டு வந்தவனையும் கைவிடலாமென்ற எண்ணம் எனக்கு ஒருபொழுதுமில்லை; அவனிடம் குற்றங்கள் இருப்பினும் இருக்கட்டும்; இதுதான் பெரியோர்கட்குப் பழிப்பை யுண்டாக்காதது. ஐயா! உலகத்தில் எல்லாத் தம்பிகளும் பரதனுக்கு ஒப்பாவார்களோ? சிறந்த தந்தை யைப் பெற்றவர்களில், என்னைப் போன்ற புத்திரர் களும் இல்லை; உன்னைப் போன்ற சிநேகிதர்களும் இல்லை, சரணமாக அடைந்தவன் நொந்தவனாக இருப்பினும் சரி, கருவமுடையவனாக இருப்பினும் சரி, அவனையோக் கியமுள்ள ஒருவன் தனது உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றவேண்டும். ஒருகால் சரணம் புகப்பெற்றவன் பயத்தினாலாவது, பொருளாசையினாலாவது அறியாமை யினாலாவது உண்மையாகத் தன்னாலியன்றமட்டும் தனது பலங்கொண்டு காப்பாற்றாமற்போனால் அவனது பாதகம்’ உலகத்தாரால் நிந்திக்கப்படும். காப்பாற்றும் நிலையிலிருக்கும் ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சரணமடைந்தவன் பாதுகாக்கப்படாமல் வதைக்கப்படுவானேயானால், அச்சரணாகதன் அவ்வாறு தன்னை இரட்சியாதவனுடைய புண்ணியங்களனைத்தையும் எடுத் துக்கொண்டு புண்ணியப் பயனான உலகத்திற் போய்விடு கின்றான். சரணமென்று அடைந்தவர்களை இரட்சியா விட்டால், இதில் இவ்வாறு பெருங்குற்றம் உண்டாகின் றது. இது நரகத்தை விளைத்து இதுவரையிற் கிடைத் திருக்கின்ற புகழ் பலம் வீரியம் முதலியவைகளையும் அகற் றிவிடும். ஒருகால் மானஸிகமாகப் பிரபத்தி பண்ணின வனுக்கும், ‘நான் உனக்கு அடியவன்’ என்று ஒருகால் இரந்தவனுக்கும் எல்லாப் பிராணிகளிடத்தினின்றும் அபயம் அளிக்கின்றேன்; இதுதான் என்னுடைய நோன்பு. வானர வேந்தே! இவரை அழைத்துவருக : நான் இவர்க்கு அபயங் கொடுத்துவிட்டேன்; இவர் விபீஷணராகவாவது இருக்கட்டும்; அன்றி ஸ்வயம் இராவணனேயாகவாவது இருக்கட்டும்” என்று சொன்னார்.
இராமர் அவ்வாறு அபயங்கொடுத்ததும் மகிழ்ச்சி கொண்டவராய் மஹாபுத்திமானாகிய விபீஷணர் வணக் கத்துடன் கீழ்நோக்கிக்கொண்டே தம்மிடத்தில் அன்பு கொண்டு உடன்வந்தவர்களுடன் ஆகாயத்தைவிட்டுப் பூமியில் இறங்கி ஸ்ரீராமருடைய சரணங்களில் வணங் கினார். மேலும், விபீஷனர், அப்போது, தருமத்தோடு கூடியதாயும், அக்காலத்திற்குத் தக்கதாயும், எல்லார்க் கும் சந்தோஷத்தை விளைக்கக் கூடியதாயுமுள்ள சொற்களைச் இராவண சொல்லத்தொடங்கினார் :-“நான் னுடைய தம்பி; அவனால் அவமானம் பண்ணப்பட்டு எல் லாப்பிராணிகளுக்கும் அடைக்கலமாக விளங்கும் தங் களையே சரணமாக அடைந்திட்டேன். நான் இலங்கை யையும் அதிலிருக்கும் எனது நண்பர்களையும் பொருளை யும் விட்டிட்டு இங்கு வந்திருக்கின்றேன். என்னுடைய ராச்சியமும் உயிரும் சுகமும் தங்கள் அதீனமானவை என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதைக் கேட்டு இராமர் தமது வாக்கினால் அவரைச் சமாதானம்பண்ணி தமது கண்களால் அவரைப் பருகுகின்றவர்போலக் கடாட்சித்து “தாங்கள் என்னிடம் அரக்கர்களுடைய பலாபலங்களை உள்ளபடி சொல்லவேண்டும்” என்றார். இராமர் இவ் வண்ணம் கேட்கவே அந்த ராக்ஷசசிரேஷ்டர் இராவண னது பலம் முதலியவற்றைப்பற்றி மொழியலானார்:- “சக்கரவர்த்தித் திருமகனாரே! பிரமதேவரிடமிருந்து கிடைத்துள்ள வரத்தினால் கந்தர்வர் அரசர் அரக்கர் என்ற இவர்களில் ஒருவரும் இராவணனைக் கொல்ல முடியாது. இராவணனுக்குப் பின்னும் எனக்கு முன்னும் பிறந்த பராக்கிரமசாலியும் மஹாதேஜஸ்வியுமாகிய கும்ப கர்ணனென்ற சகோதரன் போரில் இந்திரனுக்கு ஒப் பான பலமுள்ளவன். இந்திரஜித்தோ தனது விரல்களில் உடும்புத்தோலாலாகிய விரற்சட்டைகளை மாட்டிக் கொண்டு, எவராலும் பிளக்கமுடியாத கவசமணிந்து, கையில் வில்லை யெடுத்துக்கொண்டு, போரில் தான் நிற்கு மிடத்தை ஒருவராலும் காணமுடியாதபடி நிற்பன். இராகவரே! போர்புரியும் வேளையில் அணிவகுத்த படை யின் நடுவிலிருந்துகொண்டு இந்திரஜித்தென்பவன் அக் கினிபகவானைத் திருப்திசெய்வித்து தான் ஒருவருடைய கண்ணுக்கும் புலப்படாமல் நிற்கும் சக்தியை யடைந்து தனது சத்துருக்களை வதைக்கும் வல்லமையுள்ளவன். தங்களுக்குத்தோன்றும் உருவங்களைக் கொள்ளவல்லவர் களாய், மாமிசத்தைப் புசித்து, இரத்தத்தைக் குடித்துக் கொண்டு இலங்கையில் பதினாயிரங்கோடிக் கணக்காக அரக்கர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் உதவியைக் கொண்டுதான் ராக்ஷசேந்திரனாகிய இராவணன் லோக பாலர்களுடனும் போர்புரிந்தான்” என்றார்.
வெகு உறுதியான வீரியம்பொருந்திய இராமர், விபீ ஷணர் சொன்னதைக் கேட்டு, தமது மனத்தினுள்ளேயே எல்லாவற்றையும் ஆராய்ந்தறிந்து, பின்வருமாறு சொல் லத் தொடங்கினார்:-“விபீஷணரே ! இராவணனைப் பற் றித் தாங்கள் உண்மையாகச்சொன்ன, முன்பு நடந்துள்ள அந்தச் விஷயங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். நான் பிரகஸ்தனுடனும் பந்துக்களுடனும் தசக்கிரீவனைக் கொன்று தங்களை வேந்தராகச் செய்துவைக்கின்றேன். இதனைத் தங்களிடத்திற் சத்தியமாகச் சொல்லுகிறேன். குமாரர்களுடனும் சேனைகளுடனும் பந்துக்களுடனும் இராவணனை நான் போரிற் கொல்லாமல் அயோத்திக் குத் திரும்பிப்போகின்றதில்லை; எனது மூன்று சகோதரர் கள் மேலும் ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்!” என்றார்.
எளிதாகத் தொழில் செய்யவல்ல இராமருடைய சொற்களை தருமாத்துமாவாகிய விபீஷணர் கேட்டு தமது தலையால் இராமரை வணங்கி மறுபடியும் சொல்லத் தொடங்கினார்: ”இராகவரே! என்னுடைய வலிமைக்கு இயன்றமட்டும் அரக்கர்களைக் கொல்வதில் துணைபுரிவதி லும் இலங்கையைத் தகைவதிலும் உதவிசெய்வேன்; நான் சேனையின் நடுவிலும் புகுவேன்” என்றார். இப்படிச் சொல்லும் விபீஷணரை இராமர் தழுவிக்கொண்டு வெகு சந்தேர்ஷத்துடனே இலக்ஷ்மணரைப் பார்த்து, “அடைந்தோர்க்குப் பெருமையைக் கொடுப்பவனே ! சமுத்திரத்தி லிருந்து ஜலம் கொண்டுவருக; அந்தத் தீர்த்தத்தாற் பேரறிவினராகிய இவ்விபீஷணருக்கு சீக்கிரம் ராக்ஷச ராஜாவாகப் பட்டாபிஷேகஞ் செய்துவைப்பாய். நான் அவரிடம் அநுக்கிரகங் கொண்டிருக்கிறேன்’ என்றார். இவ்விதமாக இராமர் சொன்னதும் அவர் கட்டளைப்படி இளையபெருமாளும் வானரசிரேஷ்டர்கள் நடுவில் விபீஷ ணரை அரக்கர்வேந்தராகப் பட்டாபிஷேகஞ் செய்து வைத்தார். சக்கரவர்த்தித் திருமகனார் அவ்வண்ணம் விபீஷணரிடம் ஒருநொடிப் பொழுதிற் கருணைகொண் டதை வானரர்கள் பார்த்து வெகு சந்தோஷத்துடன் கூச்சலிட்டு நன்று நன்றென்று மஹாத்மாவாகிய இரா மரைக் கொண்டாடினார்கள்.
அதன் பிறகு, அனுமானும் சுக்கிரீவனும், விபீஷண ரைப்பார்த்து, “மகாபலசாலிகளான வானரர்களடங்கிய இச்சேனையுடன் நாம் எல்லாரும் நதிகளுக்கும் நதங்களுக் கும் நாயகனாக விளங்கும் இந்தச் சமுத்திரத்தை வலிமை கொண்டு சைனியங்களுடன் யாங்களெல்லோரும் எப் படித் தாண்டுவோம்? இவ்விஷயத்தில் எங்களுக்கு உபாய மொன்றும் புலப்படவில்லை” என்கிறார்கள். இப்படி அவர் கள் தம்மைக் கேட்டவுடனே விபீஷணர் மறுமொழி சொல்லலானார்:-“வேந்தராகிய இராமர் சமுத்திரத் தைச் சரணமாக அடையவேண்டும். கரைகாணுதற்கு அரிய இந்தச்சமுத்திரம் சகரரால் வெட்டியுண்டாக்கப் பட்டது; பேரறிவினனாகிய சமுத்திரராஜன் தனது உற்பத்தியை நினைத்துக்கொண்டு இராமர் சகர குலத்திலுதித்தவராகையால் அவருடைய காரியத் தில் தவறாமல் உதவிசெய்வான்” என்றார். விபீஷ ணர் சொன்னதை சுக்கிரீவனும் இலக்ஷ்மணனும் ஆமோ திக்க, இராமர் அந்த சமுத்திரக்கரையில் தருப்பை படுக் கையில் யாக வேதிகையில் அக்கினிபோல படுத்தார்.
41. அணை கட்டுதல்
“இன்று எனக்கு மரணமாவது சம்பவிக்கவேண்டும்; அல்லது சமுத்திரத்தை கடத்தலாவது ஆகவேண்டும்” என்று நிச்சயித்து, இராமர் மனோவாக்காயங்களில் நியம முள்ளவராய், தர்ம சாஸ்திரப்பிரகாரம் சமுத்திரராஜ னைக் குறித்துப் படுக்கலானார். தருப்பை பரப்பிய வெறுந் தரையின் மேல் நோன்பு வழுவாமல் இராமர் படுத்திருக் கையில் மூன்றிர்வுகள் கழிந்தன. இராமர் தகுதிக்கு ஏற்பப் பூஜித்தபோதிலும் மூடனான சமுத்திரராஜன் அப்போது இராமருக்குத் தரிசனங் கொடுக்கவில்லை. அதன்மேல் இராமர் சமுத்திரராஜன்மீது அதிக கோபங் கொண்டவராய் தமது கடைக்கண்கள் சிவக்க தமது அருகிலிருந்த இலக்ஷ்மணரை நோக்கிப் பின்வருமாறு சொல்லலானார்:-“சமுத்திரராஜனுடைய செருக்கைப் பார்த்தாயா! நேரில் வருகின்றானில்லை. கோபமின்மை, பொறுமை, நேர்வழியாக நடத்தல், இனிமையாகப் பேசு தல் என்ற இந்த பெரியோர் குணங்கள் நற்குணமில் லாதவர்கட்கு அசாமர்த்தியமாகத் தோன்றுகின்றன. அறிவில்லாத ஜனங்கள் தற்புகழ்ச்சிசெய்தும் வஞ்சித்தும் கருணையற்றும் எல்லாரையுந்துரத்தியும் எல்லாரிடத் திலும் தண்டனை செய்தும் வருகின்ற மனிதனைக் கண்டு கௌரவிக்கிறார்கள். பலத்தினாலுண்டாகும் புகழ் சாமோ பாயத்தால் உண்டாகின்றதில்லை; பராக்கிரமத்தால் தோன்றும் யசசும் சாமோபாயத்தால் உண்டாகமாட் டாது, போர்முகத்தில் வெற்றியென்பதும், லக்ஷ்மணனே! இவ்வுலகத்தில் சாமோபாயத்தால் உண்டாகமாட்டாது. இன்று சுறாமீன்கள் நிறைந்துள்ள இச்சமுத்திரமானது தனது நீர் முழுவதும் என்பாணங்களாற் பிளக்கப்பட்டு மிதக்கின்ற சுறாமீன்களால் நிரம்புவதை நீ பார்க்கப் போகின்றாய். இச் சமுத்திரத்தை வற்றடிக்கப்போகின் றேன். வானரர்கள் தடையின்றி காலால் நடந்து செல் லட்டும்.’ என சொல்லிவிட்டு இராமர் தமது கையில் வில்லை யேந்திக் கோபத்தால் விழித்த கண்களையுடைய வராய், கற்பாந்த காலத்தில் ஜ்வலிக்கும் அக்கினிபோலத் தகையமுடியாத உக்கிரமுடையவரானார். அவர் தமது பயங்கரமான வில்லை வளைத்து நாணேற்றி, உலக முழு வதும் நடுநடுங்கும்படியாக, இந்திரன் வச்சிராயுதத்தை யெறிவதுபோலக் கொடிய பாணங்களை எய்தார். உத் தமமான அந்தப்பாணங்கள் வெகுவேகத்துடன் ஜ்வலித் துக்கொண்டு சமுத்திரத்திலிருந்த சர்ப்பங்களெல்லாம் பயப்படும்படி அதன் ஜலத்தில் வந்து விழலாயின.
அதன் பிறகு, ரகுநந்தனர், சமுத்திரத்தைப் பார்த்து. ”பெருங்கடலே! இன்றையதினம் நான் உன்னைப் பாதா ளம் வரையில் வற்றும்படி செய்கின்றேன். சாகரமே? எனது அம்புகளால் ஜலமும் வறண்டு ஊற்றுக்கண்களும் வற்றி ஜலஜந்துக்களும்மாள முன்பு உன்னிடத்து நீரிருந்த விடத்திற் பெரும்புழுதி பறக்கச் செய்கின்றேன். வானரர்கள் காலாலேயே உனது அக்கரையைச் சேர்வார்கள்.’ என்று சொல்லி இராமர் தமது சிறந்த வில்லில் பிரமதண் டத்துக்கொப்பான பாணமொன்றைத் தொடுத்து பிர மாஸ்திர மந்திரத்தை அபிமந்திரித்து நாணையிழுக்கலானார்.
அப்பொழுது கடலின் மத்தியினின்று சமுத்திர வைடூரியங்களைப் போலத் ராஜன் வழுவழுப்பான தோன்றியும், சிவந்த மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தும், தாமரையிதழ் போன்ற கண்களைப் பெற்றும், தன்னிடத்திலுண்டாகிய பலவகை இரத்தினங்களா லிழைக்கப்பட்ட உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டு ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி யழைத்துக்கொண்டே வந்து, அஞ்சலி செய்து, வில்லுங்கையுமாய் நிற்கும் இராம பிரானைப்பார்த்து பின்வருமாறு சொல்லலானான்:- இரகுபுங்கவரே! சாந்தரே ! பிருதிவி, வாயு, ஆகாசம், ஜலம், அக்கினி இவைகள் யாவும் நெடுநாளாகத் தங்கட்கு இயல்பென்று ஏற்பட்டிருக்கும் வழியில் பிறழாமலிருக் கின்றன ; ஆகவே, ஆழம் அளவிட முடியாதென்பதும், பிறரால் தாண்டமுடியா தென்பதும் எனக்கு இயற்கை. தரை காணப்படுவதென்பது எனது இவ்வியற்கைக்கு அவ்விஷயமாக நான் விரோதமாம். சொல்வதைக் கேளுங்கள்; சக்கரவர்த்தித்திருமகனாரே! நான் விருப் பங்கொண்டாவது, உலோபகுணங்கொண்டாவது, பயந் தாவது, மீன்களாலும் முதலைகளாலும் நிரம்பியிருக்கும் எனது ஜலத்தை வருந்தியும் ஸ்தம்பனஞ் செய்யக்கூடாது. ஆனால் எவ்வித உபாயத்தால் நானும் என்னைப் பொறுப்பேனோ, எவ்வாறு முதலைகள் ஒருவகைத் தீங்கும் செய்யா மலிருக்கச் சேனைகள் என்னைத் தாண்டிச் செல்லுமோ, அவ்வாறு செய்வேன் ; வானரர்கள் என்னைக் கடக்குமாறு அணைகட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம்போல நிற்கச் செய்கிறேன். சாந்தமூர்த்தியே! இவன் நளனென்ற வானரன் ; விசுவகருமாவினுடைய புதல்வன்; தந்தையினிடத்தில் வரம்பெற்ற செல்வப்புதல்வன்; விசுவகருமாவுக்கு ஒப்பானவன்; அதிக சுருசுருப்புள்ள இவ்வானரன் என்மேல் அணைகட்டட்டும்; அவ்வணையை நான் தாங்குகிறேன்.’
இவ்விதமாகச் சொல்லி சமுத்திரராஜன் மறைந் ததும் மகாபலம் பொருந்தியவனும் வானரசிரேஷ்டனு மான நளன் எழுந்து, இராமரைப்பார்த்து “விசாலமான இந்தச் சமுத்திரத்தின்மீது, நான் என் தந்தையின் வல்ல மையைக் கைப்பற்றியவனாய் அணையைக் கட்டுகின்றேன்” என்றான். இராமர் அவ்வாறே கட்டளையிட வானரவீரர் கள் நாற்புறத்திலும் நூற்றுக்கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் பெருங்காட்டிற் சென்று புகுந்தார்கள். மலைகள்போன்ற உருவத்துடன் விளங்கிய அவ்வானர கிரேஷ்டர்கள் மரங்களை வேரோடு பெயர்த்து சமுத் திரத்துக்கருகில் இழுத்து வந்தார்கள். அவர்கள் ஆச்சா அசுவகர்ணம் தவம் மூங்கில் அசோகம் என்ற மரங்களால் சமுத்திரத்தை நிரப்பினார்கள். அன்றியும் அவர்கள் யானைகள்போற் பெரியவைகளாயிருந்த பெருங்கற்களையும் மலைகளையும் வேருடன் பறித்து யந்திரங்களால் தூக்கி வந்தார்கள்.
மலைகள் ஜலத்திற் போடப்பட்ட அவ்வப்பொழுது சமுத்திரஜலம் ஆகாயம் வரையிற் கிளம்பிற்று. வானரர்கள் நான்குபக்கங்களிலே யும் இருந்துகொண்டு சமுத்திரத்தைக் கலக்கினார்கள். சிலர் நூறுயோஜனை தூரம் கயிறுகளை நீட்டிப்பிடித்து நின்றார்கள்; சிலர் அளவுகோலைத் தாங்கினார்கள்: சிலர் அவற்றைத்தேடினார்கள். நளனென்பவன் மிகப்பெரிய அணையொன்றை சமுத்திரத்தின்மேற் கட்டலானான். ஐந்து நாட்களில் அவன் அணைகட்டி முடித்தான். அந்த அணையானது ஆகாயத்தில் சுவாதிவழிகாணப்படுவது போல காணலாயிற்று.
அவ்வாயிரங்கோடி வானரர்களும் அச்சேதுவின் வழி யாக நடந்து சமுத்திரத்தின் அக்கரையைச் சேரலானார் கள். சமுத்திரத்தின் அக்கரையிலே விபீஷணர் தமது நான்கு மந்திரிகளுடனே வானரர்களை எதிர்க்கவருஞ் சத்துருக்களை வதைக்கும்பொருட்டு கதாயுதமும் கையுமாக நின்றார். அதன்பிறகு இராமரை நோக்கி சுக்கிரீவன் பின்வருமாறு கூறலானான்:-” நீங்கள் அநுமான் மீது ஏறிக்கொள்ளுங்கள். இலக்ஷ்மணர் அங்கதன்மீது ஏறிக் கொள்ளட்டும். இச்சமுத்திரம் வெகுவிசாலமுடைய தாகையால் ஆகாயமார்க்கத்தாற் செல்லும் இவ்வானர் வீரர்கள் உங்களைத் தாண்டுவிப்பார்கள்” என்றான். இப்படிச் சுக்கிரீவன் சொன்னதும், அச்சேனைக்கு முன் பாக இலக்ஷ்மணருடன் கூடிய தருமாத்துமாவும் வில்வீர ரும் சீமானுமாகிய இராமர் சுக்கிரீவனுடன் சென்றார்.
சகுனசாஸ்திரத்தை நன்றாக அறிந்த இராமர். அப் பொழுது தோன்றிய சில சகுனங்களைப் பார்த்து இல சுமணரைத் தழுவி சொல்லலுற்றார்:-” இலக்ஷ்மணா! குளிர்ந்த நீரையும் கனிகள்நிரம்பிய காட்டையும் நாம் அடைந் திருக்கின்றோ மாகையால் இவ்விடத்தில் நமது சைனியத்தைச் சற்றே நிறுத்தி அதனை அணிவகுத்து சிறிதுநேரம் இருப்போம். வெகுவீரர்களான வானரர்களும் ருக்ஷர்களும் அரக்கர்களும் தொலையக்கூடியதாக இவ்வுல கத்தையே பாழாக்கும்படியாக பயங்கரமான பெரும் போர் நெருங்கி விட்டதாகத் தோன்றுகிறது. நாம் இப் போதே சடிதியில் வெகுவேகமாக நான்கு பக்கங்களிலே யும் நமது சேனைகளாற் சூழப்பட்டவர்களாய் இதுவரை ஒருவராலுந் தகையப்படாத இராவணநகரமாகிய இலங் கையை எதிர்ப்போம்’ என்றார். போரில் எப்பொழுதும் உத்ஸாகப்படுபவரும், விற்பிடித்தவரும், மகாவீரரும்,வியா பகரும், தருமாத்துமாவு மான இராமர் இவ்வாறு சொல்லி இலங்கையை நோக்கி முன்னே புறப்பட்டார். அவர்க் குப்பின்னர் விபீஷண சுக்கிரீவருடன் கூடிய வானரசேனை தங்கள் சத்துருக்களை வதைப்பதில் உறுதிகொண்டன வாய் அட்டகாசம் பண்ணிக்கொண்டு புறப்பட்டன.
அழகான துவசங்களும் தோரணங்களும் பறந்து கொண்டிருக்கும் இலங்கையை இராமர் தனது கண் களாற் பார்த்ததும் சீதையைப்பற்றி நினைத்தார். அதன் பிறகு இராமர் நூல்களிற் கூறியவாறு தமது படையை அணிவகுப்பதைப் பற்றி கட்டளையிடலானார்.
வானர சேனையுடன் இராமர் சமுத்திரத்தைக் கடந்த தும் சீமானான இராவணன் தனது மந்திரிகளான சுகஸா ரணர்களை நோக்கிப் பின்வருமாறு சொல்லலானான்:- ஒருவராலும் தாண்டமுடியாத பெருங்கடலை வானர சேனை தாண்டிவிட்டது. முந்தி ஒருவராலும் செய்யப் படாத காரியமாகிய சமுத்திரத்தின் மீது அணைக்கட்டு தலை இராமன் செய்து முடித்தான். கடலின்மேல் சேது கட்டப்பட்டதென்பதை நான் ஒருபொழுதும் நம்பவே மாட்டேன். அது எப்படியிருந்தபோதிலும் அவ்வானர சேனை இவ்வளவென்பதை நான் இப்போது அவசியமாக அறிந்துகொள்ளவேண்டும். ஆகையால் நீங்கள் ஒருவருக் குந் தெரியாமல் வானரசைனியத்திற் புகுந்து அச்சேனை அளவையும் பலத்தையும் அதில் எவர்கள் முக்கியமான வானரர்களென்பதையும் இராமனுடைய மந்திரிகள் யாவ ரென்பதையும் சுக்கிரீவனுக்கு வேண்டியவர்கள் இன்னா ரென்பதையும் எவர்கள் சைனியத்தில் முற்பட்டு நிற்கின் றார்களென்பதையும் எவ்வானரர்கள் சூரரென்பதையும் இராமருடைய விவசாயம் பலம் ஆயுதங்கள் இவைகளை யும் இலக்ஷ்மணனுடைய பலத்தையும் உள்ளபடி அறிந்து வரவேண்டும். வெகுபலமமைந்த அவ்வானர சேனைக்கு அதிபதி யாரென்பதையும் உள்ளபடி அறிந்துகொண்டு சடிதியில் திரும்பிவந்து சேரவேண்டும் என்றான்.
வீரரான சுகஸாரண ரென்ற அரக்கர் இவ்வாறு கட்டளையிடப்பட்டதும் வானரவுருவமெடுத்துக்கொண்டு அந்த வானர சேனைக்குள் நுழைந்தார்கள். சுகஸார ணர்கள் வேற்றுருவத்துடன் வந்திருப்பதை வீபீஷணர் கண்டு அவர்களைப் பற்றிக்கொண்டு வந்து பகைவர்கள் பட்டணங்களை வெல்லும் மன்னவரே ! இவர்கள் அவ் வரக்க வேந்தருடைய மந்திரிகளாகிய சுகஸாரணர்: இலங்கையிலிருந்து ஒற்றர்களாக வந்திருக்கின்றார்கள். என்று இராமரிடம் தெரிவித்தார். அத்தூதர்கள் இரா மரைக் கண்டதும் வருந்தி தங்களுயிரின்மேல் ஆசையற்ற வர்களாய் அஞ்சலி பண்ணிக்கொண்டு, வெகுபயத்துடன் நின்றார்கள்.
எல்லாப்பிராணிகட்கும் நன்மையைச் செய்வதிற் கருத்துள்ளவரான இராமர், புன்னகையுடன் பின்வரு “எங்களுடைய சேனைமுழு மாறு மொழியலானார்:- வதையும் பார்த்து விட்டு நீங்கள் இஷ்டப்படி திரும்பிச் செல்லலாம். நீங்கள் இன்னும் பார்க்காதது ஏதாவது இருந்தால் மறுபடியும் சென்று பார்க்கலாம். வேண்டு மானால் விபீஷணர் முழுவதையும் மறுபடியும் காட்டுவார். நீங்கள் இலங்கை சேர்ந்தவுடன் குபேரனது தம்பியாகிய அரக்கர் தலைவனிடம் நான் சொன்னதாக நான் சொல்லு கிறபடி சொல்லவேண்டும். எப்படிப்பட்ட வல்லமை யின்மேல் உறுதிவைத்து எனது சீதா தேவியைக் கவர்ந் தாயோ அதனை உன்னுடைய இஷ்டப்படி உனது சேனை யுடனும் பந்துக்களுடனுங் கூடியவனாகி என் முன் காட்டுக. நாளை காலையில் பிராகாரங்களுடனும் தோரணங் களுடனும் இலங்கைமாநகரையும் அரக்கர்கள் சேனையையும் நான் என்பாணங்களால் நாசம் பண்ணுவதை நீ பார்”
இவ்வண்ணம் இராமராற் கட்டளையிடப்பட்ட சுக ஸாரணர் இராமரை தங்களுக்கு ஐயமுண்டாகட்டும்” என்று வாழ்த்துக்கூறி இலங்கைக்குத் திரும்பிச் சென்று அரக்கர் வேந்தனிடம் பின்வருமாறு சொல்லலுற்றார் : இராக்ஷசர் தலைவரே! வதைத்தற்கு உரியவரென்று விபீஷணராற் பற்றிக்கொண்டு விடப்பட்ட எங்களை ஒப்பில்லாத ஒளியோடு விளங்குகின்ற தருமாத்துவாகிய இராமர் விடுதலை செய்தார். இராமர் இலக்ஷ்மணர் விபீஷ ணர் இந்திரனுக்கு ஒப்பான வல்லமை பொருந்திய சுக்கி ரீவன் இவர்கள் இவ்விலங்காபுரியை மதில்களுடனும் கோபுரங்களுடனும் வேரோடு பிடுங்கியெறியவல்லவர்கள். மற்றை வானரர்கள் இருக்கட்டும். இராமருடைய உரு வத்தையும் ஆயுதங்களையும் பார்த்தால் அவரொருவரே இவ்விலங்காபுரியை அடியோடு நாசம் பண்ணுவாரென்று தோன்றுகின்றது; மற்றை மூவரும் இருக்கட்டும். இராம லக்ஷ்மணரும் சுக்கிரீவனும் பாதுகாத்து வருகின்ற அச்சை னியத்தை தேவாசுரர்கள் இந்திரனை முன்னிட்டுக் கொண்டுவந்தாலும் ஒருபொழுதும் வெல்ல முடியாதென்று தோன்றுகின்றது. பேருருவத்தையுடைய அவ்வானரர் களின் சேனையோ வெகு உத்ஸாஹத்துடன் எப்பொழுது போருண்டாகுமென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு நிற்கின்றது: ஆகையால் அவர்களுடன் விரோத மென்பது வேண்டாம்: சினத்தைப் போக்கிவிடுங்கள் : இராமரிடம் சீதாதேவியைக் கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
42. வானர சேனையின் வர்ணனை
அவ்வாறு வெகுநன்மையாகவும் உண்மையாகவும் பயமில்லாமலும் ஸாரணன் சொல்ல இராவணன் “சாந்தனே! நீ வானரர்களால் வெல்லப்பட்டு மிகவும் அஞ்சி னாய் ; அதனால் இப்போதே சீதையைத் திருப்பிக் கொடுப் பதே நலமென்று நினைக்கின்றாய். என்னை எப்பகைவன் தான் வெல்லவல்லவன்?” என்றான். இவ்வண்ணம் அரக்கர்களின் மன்னவனும் சீமானுமாகிய இராவணன் பேசிவிட்டு மாளிகையினுபரிகையில் ஏறினான். வானர. வீரர்களால் நிரம்பியிருந்த பூமிபாகத்தையும் பார்த்தான். கரையில்லாமலும் அளவிட முடியுமாலுமிருந்த பெரிய அந்த வானர சேனையைக் கண்டு இராவணன் ஸாரணனைக்கேட்கலானான்:- இவ்வானர முக்கியர்களுக்குள் எவர்கள் சூரர்கள்? எவர்கள் அதிக பல மமைந்தவர்கள்? எவர்கள் மஹோத்ஸாஹமுள்ளவர்களாய் நாற்புறத்தி முற்பட்டு நிற்கின்றவர்கள்? எவர்கள் சொல்லைச் சுக்கிரீ வன் கேட்கின்றான்? எவர்கள் சேனைத்தலைவர்களுக்கும் தலைவர்? எவர்கள் சேனாதிபதிகள்? ஸாரணா! எல்லாச் சங்கதிகளையும் உள்ளபடி என்னிடம் சொல்லுக” என்றான்.
இவ்விதமாக அரக்கர் தலைவன் தன்னைக் கேட்டலும் வானரர்களுள் முக்கியமானவர்களை நன்றாக அறிந்துவந்த ஸாரணன் வானரர்கட்குள். பிரதானமானவர்களைப் பற் றிச்சொல்லலானான் :-“வேந்தரே ! மதம்பிடித்தயானை கள் போலவும் கங்கைக் கரையில் முளைத்துள்ள ஆல் மரம்போலவும் இமயமலையில் முளைத்துள்ள ஆச்சா மரம் போலவும் நிற்கத் தாங்கள் காண்கின்றீர்களே இவர்கள் போரில் எவராலும் வெல்லமுடியாத வீரர்கள்; தங் களுக்கு இஷ்டமான உருவங்கொள்ளும் வல்லமையுள்ள வர்கள் ; ஒவ்வொருவரும் தேவர்கள் போலவும் அசுரர்கள் போலவும் விளங்கிக்கொண்டு போரில் தேவர்களுக்கு ஒப்பான பராக்கிரமமுள்ளவர்கள். இவர்களின் தொகை இருபத்தோராயிரங்கோடிக் கணக்காகவும் அப்படியே ஆயிரஞ் சங்கக்கணக்காகவும், நூறுபிருந்த மென்னுங் கணக்காகவும் இருக்கின்றன.
‘இங்கு அப்புறம் நிற்குஞ் சூரரைப் பாருங்கள் ; நீல நிறமுள்ளவராய்த் தாமரையிதழுக்கொப்பான கண்க ளமைந்தவராய் நிற்கின்றாரே அவர்தான் இக்ஷ்வாகு வம் சத்திற் பிறந்த அதிரதர்; இவ்வுலகத்திற் பெயர்பெற்ற பராக்கிரமமுள்ளவர். அவரிடத்தில் தருமம் சலிப்பதே யில்லை ; அவர் அதருமத்தை ஒருபோதும் அநுசரிப்பவ ரல்லர். அவருக்குப் பிரமாஸ்திரமும் வேதங்களும் தெரி யும்; வேதங்களைக் கற்றுணர்ந்தவர்களுக்குள் அவர் மிகவும் உத்தமர். தமது அம்புகளால் ஆகாசத்தையும் கிழித்துவிடுவார்: மலைகளையும் பிளந்துவிடுவார் : அவரது கோபமோ யமனுடைய கோபத்துக்கொப்பானது; அவ ருடைய பராக்கிரமம் இந்திரனுடைய பராக்கிரமத்துக்கு ஒப்பானது. அவருடைய மனைவியாகிய சீதையென் பவளைத்தான் ஜனஸ்தாநத்திலிருந்து தாங்கள் கவர்ந்து வந்தீர்கள். அரசே! அவ்விராமர் தங்களுடன் போர்புரிய அதோ வந்திருக்கிறார்.
“அவருடைய வலப்பக்கத்தில் பத்தரைமாற்றுத்தங் கத்துக்கு ஒப்பான நிறமமைந்தவராய் விசாலமான மார் பைப் பொருந்தியவராய்க் கண்கள் சிவந்தவராய் கறுத் தும் சுருண்டுமுள்ள மயிர்முடி யமைந்தவராய் விளங்கு கின்றாரே அவர்தான் இராமபிரானுடைய தம்பி இல மணர் ; அவருடைய உயிர்க்கு ஒப்பானவர்; அவரிடம் எப்பொழுதும் அன்புவைத்தவர்: நியாயசாஸ்திரத்திலும் யுத்தத்திலும் சாமர்த்தியமுள்ளவர்; எல்லாச்சாஸ்திரங் களையும் நன்றாகக் கற்றுத்தேர்ந்தவர். பொறுக்காத தன்மையுள்ளவர்; அவரை வெல்ல ஒருவராலும் முடியாது. தாம் வெற்றியடைபவர்; பராக்கிரமசாலி ; புத்தி யமைந்த பலசாலி. அவரை இராமருடைய வலக்கை யென்றும் வெளியில் நடக்கும் அவருடைய உயிரென்றும் சொல்லவேண்டும்; அவர் இராமருடையகாரியம் நிறை வேறுவதானால் தமது உயிரின்மேலும் அபிமானங் கொள் ளார். அவர் தாமாகவே அரக்கர்களையெல்லாம் போரிற் கொல்ல எண்ணங்கொண்டிருக்கின்றார்.
“ஒரு கோடிமகௌகமென்று சொல்லும்படியாய் சமுத்திரம்போன்ற வானர சேனையாற் சூழப்பட்டும், ராக்ஷச மந்திரியுடன் கூடிய விபீஷணரால் உதவிசெய்யப் பெற்றும், மகா பலபராக்கிரமசாலியாய் வானரராஜரான சுக்கிரீவர் தங்களுடன் போர்புரிய வந்து நிற்கிறார். மகா ராஜாவே! கொடியகிரகத்துக்கு ஒப்பாக வந்து நிற்கும் இப்பெருஞ்சைனியத்தைப் பார்த்து பிறகு இந்தப் பகை வர்கள் நம்மைத் தோற்கடியாமல் நாம்வெற்றியடையும் படி உத்தமமான முயற்சியைச் செய்யுங்கள்” என்றான்.
சுகன் குறிப்பிட்டுச் சொன்ன அந்த வானர சேனைத் தலைவர்களையும் இராமருக்கு அருகில் நிற்கும் தனது தம்பி விபீஷணரையும் இராமருடைய வலக்கைபோன்ற மகா வீரராகிய இலக்ஷ்மணரையும் பயங்கரமான பராக்கிரம முள்ள எல்லாவானரர்களுக்கும் வேந்தரான சுக்கிரீவரை யும் பார்த்து இராவணன் கொஞ்சம் மனங்கலங்கிக்கோபங் கொண்டவனாய் அவ்வாறு சொல்லி வாய்மூடின அந்தச் சுகஸாரணரென்ற வீரர்களைக் கண்டித்து கோபத்தால் தழுதழுத்த கொடியவாக்கால் பின் வருமாறு மொழிய லுற்றான்:”ஓர் அரசன் கீழ் அடங்கி நடக்கும் மந்திரி கள் தங்களைத் தண்டிக்கவும் அருள் செய்யவும் வல்லமை பெற்ற அரசன் முன்பாக நின்றுகொண்டு, அவனுக்குக் கேட்கப்பிடிக்காத சொற்களைச் சொல்லுதல் அடியோடு தகாது. உங்களைக் கேட்காமலிருக்கும்பொழுதே, நமக்குப் பகைவர்களாய்ப் போர் செய்ய வந்தவர்களாயிருக்குஞ் சத்துருக்களைப்பற்றிக் காலமல்லாத காலத்தில் இவ்வாறு நீங்களிருவரும் புகழ்ந்துபேசுவது தகுதியோ? இதுவரை யில் நீங்கள் ஆசிரியர் பெரியவர் இவர்களிடத்திற் பழகியது வீணேயாம்; ஏனெனில் ராஜநீதிநூலின் ஸார மாக ஒருவன்கீழடங்கி நடக்கவேண்டியவன் தொழிலைத் தெரிந்துகொள்ளவில்லையே. கற்றறிந்ததை மறந்து விட்டீர்களோ? அன்றி நடவடிக்கைக்குக்கொண்டு வராமல் அறிவின் சுமையை மாத்திரம் தாங்குகின்றீர் களோ? இவ்வண்ணம் மூடர்களான மந்திரிமார்களை வைத்துக்கொண்டு நான் இராச்சியத்தை வகித்துவருவதும் பேராச்சரியந்தான். என்னைப்பார்த்து இவ்விதமான சொற்களைச் சொல்லி வந்தீர்களே ! நமது அரசன் நம் மைக் கொன்றுவிடுவானென்ற பயமும் உண்டாக வில்லையா என்ன? என்முன்னிலையில் நில்லாதேயுங்கள்; நீங்கள் எனக்குச் செய்திருக்கின்ற உபகாரங்களை நினைப் பதனால் நான் உங்களைக்கொல்ல விரும்பவில்லை.” என்றான்.
பின்னர் சீதாதேவியின் தோழியாகிய ஸரமையென்ற ராக்ஷசி பின்வருமாறு கூறத் தொடங்கினாள்: “சீதே ! உமது துயரத்தை அகற்றுங்கள். இன்றுமுதல் உமது எல்லாவகைத்துக்கங்களும் நீங்கின ; நற்காலம் தங்களை நாடிவந்துவிட்டது; பாக்கியலட்சுமி உங்களை நிச்சயமாக அடைந்துவிட்டாள். நான் சொல்லப்போகின்ற இனிய தான சமாசாரமொன்றைக் கேளுங்கள் ; வானர சேனை யுடன் இராமர் சமுத்திரத்தைத்தாண்டி சமுத்திரத்தின் தென்கரையில்வந்து இறங்கிவிட்டார். அவ்விடத்தி லுள்ள சேனைகளாற் பாதுகாக்கப்பட்டவராய் தமது மனோரதம் நிறைவேறிய இராமர் இலக்ஷ்மணருடன் வீற்றிருப்பதை நான் பார்த்தேன்.” என்றாள்.
இவ்விதமாக அவ்வரக்கி சீதையினிடஞ்சொல்லிக் கொண்டிருந்தபொழுதே சைனியங்கள் செய்யும் போரைப்பற்றிய பூர்ணமான முயற்சியால் வெகு பயங்கர மாகச் செய்த சத்தம் கேட்கலாயிற்று. குறுந்தடியால் எரியப்படும் முரசத்தினது பேரொலி கேட்டது. அது கேட்டு, வெகுமதுரமாகப்பேசும் ஸரமை சீதாதேவியைப் பார்த்து மேலும் சொல்லலானாள்:- “தங்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தி மன்னவனைத் தொடர்ந்து செல்கின்றவர்களான அரக்கர்களின் சன்னாநம். மயிர்ச் நம்மயிர்ச் சிலிர்ப்படையும்படி இங்கு நெருக்கமாக இருக்கின்றது. தங்களது சோகத்தைப் போக்குஞ் சம்பத்து வந்து விட்டது: அரக்கர்களுக்கு அச்சமுண்டாய்விட்டது. தாமரையிதழுக்கு ஒப்பான கண்களையுடையராய் கோபத்தை வென்றுள்ளவராய் எண்ணுதற்கு ஒண்ணாத பராக்கிரமமுள்ளவராய் தங்கள் கணவரான இராமர் அசுரர்களை இந்திரன் வென்றதுபோல அரக்கர்களை யெல் லாம்வென்று யுத்தத்தில் இராவணனை மாய்த்து உம்மை அழைக்க வருவர். சத்துரு கொல்லப்பட்டவுடன் இராமர் உம்மைத்தேடிவர பதிவிரதையாகிய தாங்கள் அவர்மடி யில் உட்கார்ந்திருப்பதை நான் என்கண்களாரக் காணப் போகின்றேன்” என்று சொல்லி இராவணன் சொன்ன சொற்களால் தாபங் கொண்டு மோகமடைந்திருந்த சீதா தேவியை, ஸரமை, பூமியை மழையானது நீராற் குளிரச் செய்வதுபோல தனது வார்தைகளாற் சந்தோஷப்படுத்தினாள்.
பின்னும் ஸரமை புன்னகையுடன் பேசலானாள் “கறுத்த கண்ணையுடையவரே! நான் இங்குநின்றும் போய் இராமரிடம் நீர் வினவுவதாக அவர் க்ஷேமத்தை விசாரித்து ஒருவர் கண்ணிலும் படாமல் திரும்பிவர எனக்கு வல்லமையுண்டு. பிடிப்பற்ற ஆகாயத்தில் நான் செல்லும்பொழுது வாயுபகவானும் கருடனுங்கூட என்னைத் தொடரவல்லவரல்லர் என்றாள். இவ்வாறு ஸரமை சொன்னதும் சீதை சிறிது சோகத்துடன் கூடின தாயும் அழகானதாயுமுள்ள வார்த்தையினால் இனிதாக மீண்டுஞ் சொல்லலுற்றாள் :-“எனக்கு ஏதாவது இஷ்ட மான காரியம் செய்யவேண்டுமென்று உங்கள் மனத்தில் தோன்றியிருந்தால் அங்குப் போய் இராவணன் இப் பொழுது என்ன செய்துகொண்டிருக்கின்றானென்று அறிந்துவருமாறு நான் விரும்புகின்றேன்’ என்றாள்.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையிலேயே, பேரிகை சங்கம் முதலியவைகள் ஒலிக்க உண்டாகும் பேரொலி இவ்வுலகத்தை நடுங்கச்செய்துகொண்டு வானரசேனையி லிருந்து கிளம்பலாயிற்று. பிறகு, இராவணன் தனது மந்திரிகளுடன் சேர்ந்து செய்யவேண்டிய விஷயங்களைப் பற்றி நன்றாக ஆலோசித்து இலங்கையை நன்றாகப்பாது காக்கும் ஏற்பாடுகளைச் செய்யலானான். அவன் கிழக்கு வாயிலில் பிரஹஸ்தனென்ற அரக்கனையும், தெற்குவாயி லில் மகாவீரர்களான மகாபார்சுவ மகோதரர்களையும். பிறகு மேற்குவாயிலில் அதிக மாயாவியும் தனது குமார னுமான வலிய பல அரக்கர்களாற் சூழப்பெற்ற இந்திர ஜித்தையும் காத்திருக்குமாறு கட்டளையிட்டான் ; வடக்கு வாயிலில் சுகஸாரணர்களையேவி, தனது மந்திரிகளை நோக்கி “நா’னும் இங்கு இருப்பேன்” என்று கூறினான். அதிகவீர்யமும் பராக்கிரமும் பொருந்திய விரூபாக்ஷ னென்ற அரக்கனை பல அரக்கர்களுடைய சகாயத் தோடும் அணிவகுத்த சேனையின் நடுவி லிருக்கவைத்தான். இவ்வாறு இராவணன் இலங்கையைப் பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு யமனது கட்டளைக்கு உட்பட்டவனாகி தன்னால் எல்லாக்காரியங் களும் சரிவரச் செய்து முடிக்கப்பட்டதாகக் கருதினான்.
43. இராமர் போருக்குச் செய்த ஏற்பாடுகள்
விபீஷணர் கிராமியவழக்கச் சொற்க ளில்லாமல் வெகுநாகரிகமாகப் பொருள்நிரம்பிய சொற்களாற் சொல்லலானார்:-“அனலன் சரபன் சம்பாதி பிரகஸன் என்ற எனது மந்திரிமார் இப்பொழுதுதான் இலங்கைக் குச் சென்று திரும்பிவந்தார்கள். இவர்களெல்லாரும் பறவைகளுருவங் கொண்டு நமதுபகைவர்கள் சேனைகளிற் புகுந்தார்கள்: அங்குள்ள ஏற்பாட்டைப் பார்த்து திரும்பிவந்திருக்கின்றார்கள். இராமரே ! துராத்துமா வாகிய இராவணன் செய்திருக்கின்ற ஏற்பாடுகளை அவர் கள் என்னிடம் சொன்னார்கள். அவைகளை யெல்லாம் நான் உள்ளபடி சொல்லுகிறேன் கேளுங்கள்.” என்றார்.
இவ்வாறு இராவணனது தம்பியாகிய விபீஷணர் சொல்லிமுடித்ததும் இராமர் தமது பகைவர்களை வெற்றி கொள்ளுதற் பொருட்டு பின்வருமாறு கட்டளையிட லானார் – “நீலனென்ற வானரசேனாதிபதி, பலவானரர் களாற் சூழப்பட்டவனாய், இலங்கையின் கீழைவாயிலில் நின்று கொண்டு, பிரஹஸ்தனுடன் போர்புரியச் சித்த மாக இருக்கட்டும். வாலியினது குமாரனாகிய அங்கதன், மிகப்பெருஞ்சேனையுடனே தெற்குவாயிலில் மகாபார்சுவ மகோதரரை எதிர்த்து நிற்கட்டும். ஒருவராலும் அறிய வொண்ணாத தன்மையமைந்த வாயுபகவானது மைந்தனான அநுமான், பல வானரர்களுடன் கூடி, மேலைவாயிலைத் தாக்கி நுழையட்டும். தேவர்களின் கூட்டத்துக்கும் மகாத்துமாக்களான முனிவர்களுக்கும் கெடுதிசெய்வதில் ஆசையுள்ளவனும், அற்பனும், வரங்களினால் வல்லமை பெற்றவனும், எல்லா உலகங்களிலும் உள்ள பிராணி களைத்தவிக்கச் செய்துகொண்டு திரிகின்றவனும், ராக்ஷச ராஜனுமாகிய இராவணனை வதைக்குமாறு உறுதி கொண்டு நானே நேராக இலக்ஷ்மணனுடன் அவ்வி ராவணன் நிற்கின்ற நகரத்து வடக்குவாயிலைத் தாக்கிப் புகுகின்றேன்; அங்கு சேனைகளுடன் பலசாலியாக சுக்கிரீவரும், வீரியவானான ருக்ஷராஜனும், அரக்க மன்னவன் தம்பியாகிய விபீஷணரும், பலவான்களான இராவண இந்திரஜித்துக்களுடன் போர்புரிகின்றவர்கட்கு நடுவிலே மத்திமசேனையாக இருக்கட்டும். போர்நடக்கும் பொழுது வானரர்கள் மானிடவடிவங் கொள்ளவேண் டாம். இந்தப்போரில் வானரசைனியத்தில் இவ்வாறு சங்கேதமிருக்கட்டும். வானரர்கள் அவ்வுருவத்துடனே யிருப்பதுதான் அவர்களை எளிதிலறிந்துகொள்ள ஸாதன மாகவிருக்கும். நாங்கள் ஏழுபேர் மனித வடிவத்துடன் போர்புரிகின்றவர்கள்; அவராவார் – அதிகபலமமைந்த தம்பியான இலட்சுமணனுடன் கூடிய நானும் மந்திரிமார் களுடன் கூடி ஐந்தாமவராக இருக்கின்ற எனது நண்ப ரான விபீஷணரும்” என்றார்.
பின்னர் இராமர், இலக்ஷ்மணரால் பின்தொடரப் பட்டவராய் சுக்கிரீவனையும், விபீஷணரையும் பார்த்து பலவகைத் தாதுப்பொருள்கள் நிரம்பிவிளங்கும் அழ கான இச்சுவேலமலையில் நாம் எல்லோரும் ஏறி இன்றிர வைக் கழிப்போம்; அவ்வரக்கன் வாழுமிடமாகிய இலங் கையையும் பார்ப்போம். எக்கொடியவன் தனது நாசத் துக்கென்றே எனது மனைவியைக் கவர்ந்தானோ அவ்வரக் கப்பதரின் பேரை யெடுத்தாலும் எனக்குக் கோபம் பொங்குகின்றது. அவ்வரக்கனொருவன் செய்த குற்றத்துக் காக எல்லா அரக்கர்களும் மாளப்போகின்றார்கள். கால பாசத்திற்சிக்கிக்கொண்ட ஒருவன் தீங்கு செய்தால் அவ் வற்பன் செய்த குற்றத்தால் அவன் குலமே நாசமாகின்றது” என்று இழிகுணமுடைய இவ்விராவணனை பற்றி வெகு கோபத்துடன் சொல்லிக்கொண்டே அழகான தாழ்வரையமைந்த சுவேலமலையில் வசிக்கும் பொருட்டு ஏறலானார். அவர்கள் சடிதியில் அம்மலையின் மேலேறி ஆகாயத்திற் கட்டப்பட்டதுபோல திரிகூட மலையினுச்சியில் விளங்கும் இலங்கையைப் பார்த்தார்கள்.
அன்றிரவு சுவேலமலையில் தங்கி வானர வீரர்கள் இலங்கையிலிருந்த வனங்களையும் தோட்டங்களையும் கண்டார்கள். அவர்கள் ஒன்றைப்போலவே மற்றொன்று அழகாகவும், நேர்த்தியாகவும், விசாலமாகவும், பார்ப்ப தற்கு இனிமையாகவும் இருக்கக் கண்டு, அவர்கள் ஆச்ச ரியமடைந்தார்கள். இராமர்,சுக்கிரீவனுடன் வானர சேனைத் தலைவர் சூழ, உச்சியில் இரண்டு யோசனை விசால மாக இருந்த சுவேல மலையின் மேல் ஒரு முகூர்த்த காலம் நின்று, பத்துத் திசைகளையும் நோக்கின சமயத்தில் அழகான திரிகூடமலைச் சிகரத்தின்மேல் நல்லமைப் புடனும் பல. சிங்கார வனங்களுடனும் விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்ட இலங்கைமாநகரம் விளங்குவதைக் கண் ணுற்றார். கோபுர நிலையிலே தனது இரு பக்கத்திலும் வெண்சாமரங்கள் வீச தனது தலையின் மீது வெண்கொற் றக்குடை பிடிக்க, இரத்தினாபரணங்களை யணிந்து சாயங் கால வெயிலின் காந்தியால் ஆகாயத்தில் மேகங்கள் விளங்குவதுபோல விளங்கி எவராலும் அணுக முடியாத அரக்க மன்னவனை இராமர் கண்டார்.
இராவணனைக் கண்டதும் சுக்கிரீவன் வெகு கோபங் கொண்டவனாய் இராமரும் மற்ற வானர வீரர்களும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தனது தேக பலத்தினாலும் மனோ பலத்தாலும் ஆகாயத்தில் திடீ ரென்று தானிருந்த மலையினுச்சியை விட்டுக் கிளம்பி கோபுரத் தலத்தை நோக்கிப் பாய்ந்தான். அங்குக் கொஞ்ச நேரம் நின்று சிறிதும் பயமே யில்லாமல் உற்றுப் பார்த்து அவ்விராவணனை ஒரு துரும்பாக வெண்ணி அவனை நோக்கி பின் வருமாறு சொல்லலானான்:- “அரக்கா!நான் உலகங்கட்கெல்லாந் தலைவராகவிருக்கும் இராமபிரானுடைய நண்பனும் அடிமையுமாவேன். அம்மகானுடைய ஒளியால் நான் உன்னை உயிருடன் விடேன்” என்று சொல்லி விட்டு சுக்கிரீவன், அவ்விரா வணனது தலையின்மேல் வந்து இறங்கி, அவனுடைய அழகான கிரீடத்தைத் தள்ளி, தானும் பூமியிற் குதித் தான். அவ்வாறு விரைவாகச் செல்லுகின்ற சுக்கிரீவனை நோக்கி “நீ என் கண்ணெதிரிலில்லாவிட்டால் சுக்கிரீவன் [அழகிய கழுத்துடையவன்) தான் ; என் கண் முன் பாகவே கழுத்து அற்றவனாவாய்” என்று இராவணன் சொல்லி, சடிதியில் எழுந்து, அவனைத் தனது கைகளினால் இழுத்துப் பூமியில் தள்ளினான்; அடிக்கடி பூமியிலிருந்து எழுந்து நின்று ஒருவரையொருவர் தூக்கி யெறிந்து பொரலானார்கள். அவ்விருவரும் தேகப்பயிற்சியில் தேர்ந்த வர்களும் தேக வலிமையிற் சிறந்தவர்களுமாக இருந்தமை யால் இளைப்பென்பதை விரைவாக அடையவில்லை. இவ்வண்ணம் இவ்விருவரும் சண்டையிடுகையில் இராவணன் பல இராவணர் இருப்பதுபோலத் தனது மாயையின் பலத்தாற் காட்டலானான். சிறிதும் சிரம மின்றி வெற்றியடைந்திருந்த சுக்கிரீவன் அதைக் கண்ட தும் ஆகாயத்திற் கிளம்பி வானர சேனையின் நடுவில் இராமர் பக்கத்தில் வந்து சேர்ந்தான்.
பிறகு இராமர் சுக்கிரீவனைத் தழுவிக் கொண்டு சொல்லலானார்:-“என்னைக் கேட்காமலே நீர் இவ்வாறு செய்தது சாஹசமான காரியம்; இவ்வாறு சாகசமான காரியத்தை அரசர்கள் செய்யவே கூடாது. சாகசச் செயல் புரிவதில் ஆசையுள்ளவரே! என்னையும் இந்தச் சேனையையும் விபீஷணரையும் சந்தேகத்தில் விட்டு கஷ்ட மான இந்த சாஹசச் செயலை தாங்கள் செய்தீர்கள். இனிமேல் வீரரே! தாங்கள் இவ்வண்ணம் எதிர்பாராத தொழிலைச் செய்யக்கூடாது; ஏனெனில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் வந்து விட்டால் எனக்குச் சீதையால் என்ன பயன்” என்றார். இப்படிச் சொன்ன இராமரைப் பார்த்துச் சுக்கிரீவன் ‘இராகவரே! தங்கள் தேவியைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கண்ட பிறகு வீரரே! என் தேகத்தின் பலத்தை நான் அறிந்திருக்கையில் எவ்வாறு சகித்து நிற்பேன்” என்று மறுமொழி கூறினான்.
இப்படி சுக்கிரீவன் சொன்னதைக் கேட்டு இராமர் வெகு சந்தோஷமடைந்து இராம கைங்கரிய லட்சுமியைப் பெற்றிருக்கின்ற இலக்ஷ்மணரைப் பார்த்து பின்வரு மாறு சொல்லலானார்:-“இலக்ஷ்மணா! குளிர்ந்த நீர்வள முள்ளதும் கனிகள் நிரம்பிய காடுகளுள்ளதுமான ஓரிடத் தில் நமது படைகளைச் சேனாபதிகளின் வசத்தில் வைத்து அணிவகுத்து யுத்தத்துக்குத் தகுந்த முயற்சியுடன் இருப் போம். உலகத்தையே நாசம் பண்ணிவிடக்கூடிய கொடிய பல தீ நிமித்தங்களைக் காண்கின்றேன். சூரிய மண்டலத் தின் நடுவில் நீலவருணமான களங்கமொன்று காணப்படு கின்றது.நட்சத்திரங்கள் எப்பொழுதும்போலக் காண்ப் படவில்லை. ஆராய்ந்து பார்த்தால் இவைகளெல்லாம் இவ்வுலகத்தின் முடிவு காலத்தைக் குறிப்பனபோல விளங்குகின்றன. ஆகையால் நாம் இன்றையதினமே சடிதியில் இது வரையில் ஒருவராலும் தகையப்படாத தாயும் இராவணனாற் பாதுகாக்கப்பட்டதாயும் விளங்கு கின்ற இலங்கையை வானர சைனியங்களால் சூழப்பட்ட வர்களாய்க் கொண்டு எதிர்த்துச் செல்வோம்” என்றார்.
இவ்வண்ணம் இராமர் இலக்ஷ்மண்னை நோக்கிச் சொல்லிக் கொண்டே அம்மலையினுச்சியிலிருந்து சடிதியிற் கீழிறங்கினார். வெகு நேரஞ் சென்ற பிறகு பகைவரை நாசஞ்செய்ய வல்ல இராம லக்ஷ்மணர்களாகிய இருவரும் இலங்கையை யடைந்தார்கள். இராமருடைய கட்டளைப் படி விபீஷணரும் இலக்ஷமணரும் இடைவெளிகளிலெல் லாம் ஒவ்வொரு கோடி வானர சேனையை நிறுத்தினார்கள்.
அவ்வானர வீரர்கள் அவ்விடம் நிரம்பி நின்ற காட்சி யானது வெகு ஆச்சரியமாயும் அழகாயும் விட்டிற்கூட்டங் கள் கிளம்பியதுபோலவும் காணப்பட்டது. மேகங்கள் போன்ற உடம்புகளுடனும் இந்திரனுக்கு ஒப்பான பராக் கிரமத்துடனுங் கூடிய வானரர்கள் இலங்கையைச் சூழ்ந்து கொண்டதைக் கண்டு அரக்கர்கள் ஆச்சரிய மடைந்தார்கள். கரை கடந்து பொங்குஞ் சமுத்திரத்தி லிருந்து சத்தம் உண்டாவதுபோல அங்கே முற்றுகை செய்கிற வானர சேனையிலிருந்து பேரொலி யெழுந்தது.
சாம் பேத்தான தண்டங்களென்னுஞ் சதுர் வித உபா யங்களின் பயனை யுணர்ந்த இராமர் அரக்கர்களை வதை செய்யும் பொருட்டு அவ்வாறு தமது சேனையை அணி வகுத்து இறக்கிய பின்பு தாம் அரச நீதியைத் தவறா திருக்குமாறு நினைத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தமது மந்திரிமார்களுடன் கலந்து பல தடவை நன்றாக ஆலோசித்து நிச்சயித்து தாம் இனி நடத்த வேண்டிய காரியங்களை நடத்த விரும்பி விபீஷணருடைய அநுமதியின்மேல் வர்லியின் குமாரனாகிய அங்கதனை தம்மிடங் கூப்பிட்டு இவ்வாறு சொல்லத் தொடங்கினார்:- “நண்ப! வானரா! நீ இராவணனிடஞ் சென்று நான் சொன்னதாகச் சொல்லி வரவேண்டும். ‘அரக்கா! முனிவர் தேவர் கந்தர்வர் அப்ஸரஸ்ஸுக்கள் நாகர் யக்ஷர் மநுஷ்யர் இவர்களவ்வளவு பெயர்களுக்கும் இறுமாப்பால் இது வரையில் தீமை செய்து வந்தாயன்றோ! அச்செருக்கு இன்றோடே தொலைந்தது; எவ்வித பலத்தின்மேல் நம்பிக்கைவைத்து நாமில்லாத வேளைபார்த்துச் சீதையைக் கவர்ந்து சென்றாயோ அப்பலத்தை நம் முன் நின் இப்பொழுது கொஞ்சம் காட்டிவிடு. சீதையைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து நமது பாதங்களிற் சரண மென்று நீ வந்து விழாத பட்சத்தில், நமது கூரான அம்பு களால் இவ்வுலகத்தில் அரக்கப்பூண்டேயில்லாதவண்ணம் நாம் செய்து விடுகின்றோம். அரக்கருள் உத்தமரான தருமாத்துமாவாகிய விபீஷணர் நம்மிடம் வந்து சேர்ந் திருக்கிறார்: சீமானாகிய இவர் ஒருவித இடையூறுமின்றி. இனி இவ்விலங்கையை யாளும் பாக்கியத்தை அடையப் போகின்றார்.நீ தைரியத்தைக் கைப்பற்றி உனது வல்ல மையைக்கொண்டு நம் முன்னே போர் புரி; நமது பாணத் தாற் போரில் மாண்டவனாய் பிறகு பரிசுத்தனாகிவிடுவாய்” என்றார்.
இவ்விதமாக ஸ்ரீராமர் அங்கதனிடஞ் சொன்னதும் அவ்வானர வீரன் உருவமெடுத்துச் செல்லுகின்ற அக்கினி பகவான் போல ஆகாயத்திலெழுந்து சென்றான். ஒரு நொடியில் இராவணன் மாளிகை சேர்ந்து அவ்விராக்ஷச ராஜன் தனது மந்திரிமார்களின் நடுவில் ஒரு கவலையு மின்றி உட்கார்ந்திருந்ததைக் கண்டான். அவனுக்குச் சமீபத்தில் தோள் வளைகளை யணிந்து கொழுந்து விட் டெரியுந் தீப்போன்ற அங்கதனென்னும் அவ்வானர வீரன் இறங்கி தான் இன்னானென்று தெரிவித்து அவ் வரக்கனிடம் இராமபிரான் சொன்ன சமாசாரத்தை ஒன்றும் விடாமல் ஒன்றும் அதிகமில்லாமற் சொன்னான்.
இவ்வாறு இராமர் சொன்னதாக அங்கதன் கடுமை யாகச் சொல்லியபொழுது அது கேட்ட இராவணன் கோபத்திற்கு அதீனனாய், கோபத்தாற் கண்கள் சிவக்க, மந்திரிமார்களை நோக்கி, “புத்தியற்ற இவனைப் பற்றிக் கொள்ளுங்கள்; உடனே இவனை வதை செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான்.பற்றி யெரியுந் தீப்போல விளங்கிய அவ்விராவணனுடைய கட்டளையைக் கேட்ட தும், பயங்கரமான தோற்றமுள்ள நான்கு அரக்கர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே அவர்கள் தனது இரு கைகளைப் பற்றிக் கொண்டதும் அவர்களை யிடுக்கிக் கொண்டு, அங்கதன் பருவதம்போலோங்கி நின்ற ராவணன் மாளிகையின்மேல் பறவைபோலக் கிளம்பினான். அவ்வாறு கிளம்பி ஆகாயத்திலிருந்தபடியே அங்கதன் அவ்வரக்கர்களை உதறிக் கீழே தள்ளியதனால் அவர்கள் எல்லாரும் இராவணன் கண்கள் முன்பாகவே பூமியில் விரைவாகப் பொத்தென்று விழுந்தார்கள். அதன் பிறகு அங்கதன் மிகவும் உயரமான இராவணனது மாளிகைச் சிகரத்தைப் பார்த்தான். அவன் ஓர் உதை உதைக்கவே முன்பு இமயமலையின் சிகரம் இந்திரனாற் பிளக்கப்பட்டு விழுந்ததுபோல இராவணனது மாளிகைச் சிகரம் இடிந்து விழுந்தது. அவ்வாறு அம்மாளிகையின் சிகரத்தை இடித்து தனது பெயரைக் கூறி அட்டகாசஞ் செய்து வானர சேனையின் நடுவில் இராமருடைய சமீபத் தில் வந்து சேர்ந்தான்.
தனது மாளிகைச் சிகரம் அவ்வாறு அங்கதனால் இடிக்கப்பட்டதைக் கண்டு இராவணன் அதிக கோபங் கொண்டான்; அன்றியும் தனக்கு நாச காலம் நெருங்கி விட்டதென்பதாகவும் நினைத்துப் பெரு மூச்செறிந்தான். இராமரோ சந்தோஷத்தால் அட்டகாசம் பண்ணும் பல வானர வீரர்களாற் சூழப்பட்டவராய் தமது சத்துருவை வதைக்கத் தீர்மானித்து போர் புரிய மிக்க ஆவலுடன் எதிர் பார்த்து நின்றார்.
44. நாகபாசத்தால் இராம லட்சுமணர்களைக் கட்டுதல்
அதன்பிறகு கோட்டை வாயில்காப்பாளரா யிருந்த அரக்கர்கள் இராவணனுடைய மாளிகைக்குச் சென்று வானரர்களுடன் இராமர் இலங்கைமாநகரை முற்றுகை செய்ததாக தெரிவித்தார்கள். நகரம் தகையப்பட்டதைக் கேட்டு அவ்வரக்கன் கோபங்கொண்டு நகரத்தைக் காப் பாற்றுமாறு முன்னமே செய்திருந்த ஏற்பாடுகளை இரட் டிப்பாகச்செய்து மாளிகையின்மேலேறினான். அவன் தனது நகரமானது எல்லாப் பக்கங்களிலும் போர் புரிய உற்சாகத்துடனிருக்கின்ற எண்ணிக்கையிலடங்காத வானரர்களாற் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். பூமியின்பாகம் ஒரு சாண்கூட வெற்றிடமாகக் காணப் படாமல் வானரர்கள் நின்றதை இராவணன் உற்றுப் பார்த்து எவ்விதமாய் இவர்களை நாம் ஜயிக்கப்போகின் றோம் என்று ஏக்கங்கொண்டான்.
இராமரோ மகிழ்ச்சிகொண்டு தமது சேனைகளுடன் இலங்கையின் பிராகாரத்தைச் சார்ந்து இலங்காபுரியா னது அரக்கர்களால் நன்றாகப் பாதுகாக்கப் பெறுவதை யுங் கண்டார். வானரர்களை நோக்கி பகைவர்களை விரை வில் வதைக்குமாறு கட்டளையிட்டார். தாமிரவருணமான முகங்களும் தங்கநிறமான மேனியும் அமைந்த அவ்வான ரர்கள் இராமபிரான் நிமித்தம் தங்களுயிரையுங் கொடுக்க உறுதிகொண்டவர்களாய் இலங்கையை நோக்கிச் செல்ல லானார்கள். “வெகுபலம் பொருந்திய இராமபிரான் வெற்றிபெறுக மகாபலம் படைத்த இலக்ஷ்மணரும் வெற்றிபெறுக ; இராமராற் பாதுகாக்கப்படும் மகாராஜ ராகிய சுக்கிரீவரும் வெற்றிபெறுக” என்று கோஷித்துக் கொண்டும் கர்ஜ்ஜித்துக்கொண்டும் இலங்கையின் மதில் களை நோக்கி ஓடலானார்கள்.
இப்படி இவர்கள் இங்கிருந்த காலத்தில் கோபத் தாற் கலவரப்பட்ட அரக்கர் மன்னனான இராவணன் தனது எல்லாச் சேனைகளையும் சடிதியிற் புறப்படுமாறு கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படியே அவ்வரக்க சேனைகள் உற்சாகத்துடன் சந்திரோதயகாலத்திற் சமுத் திர ஜலம் பொங்குவதுபோலப் புறப்பட்டன. தேவர் களுக்கும் அசுரர்களுக்கும் முற்காலத்திற் சண்டையுண் டானதுபோல இச்சமயத்தில் அரக்கர்களுக்கும் வானரர் களுக்கும் வெகு பயங்கரமான சண்டை தொடங்கலா யிற்று. அவ்வரக்கர்கள் மின்னுகின்ற கதாயுதங்களா லும் சக்திகளாலும் சூலங்களாலும் கோடரிகளாலும் வானரர்களைப் புடைத்தார்கள். வானரர்கள் அவ்வரக்கர் களை எதிர்த்துப் புடைத்தார்கள்.
அவ்வாறு வானரர்களும் அரக்கர்களும் போர் புரிந்து கொண்டிருக்கையில் சூரியன் அஸ்தமித்தான். அவ்விர வில் ”நீ அரக்கன்’ என்று சொல்லிக்கொண்டு வானரர் களும் “நீ வானரன்” என்று சொல்லிக்கொண்டு அரக்கர் களும் போரிலே ஒருவரை யொருவர் புடைக்கலானார்கள். மயிர்க்கூச்செறியும்படிபயங்கரமான அப்பெரும் போர் நடந்தபொழுது, அப்போர்க்களத்தில் செந்நீரானது பார்ப் பதற்குப் பயமுண்டாகும்படி ஆறாக ஓடலாயிற்று. அங் கதனோ, போரில் சத்துருவைக் கொல்லும்படி கிட்டிய வனாய் இந்திரஜித்தை அறைந்து தேர்ப்பாகனையும் குதிரை களையுங் கொன்றான். உடனே பெருஞ் சரீரமுடைய இந்திரஜித்து இரதத்தை விட்டு அவ்விடத்திலேயே மறைந்துவிட்டான்.
பாவியாகிய இந்திரஜித்து மறைந்து நின்றபடியே இடிகளை விடுவதுபோலக் கூர்மையான பாணங்களைப் பிர யோகிக்கலானான். அவ்வரக்கன் போரில் வெகு உக்கிரகங் கொண்டவனாய் பயங்கரமான நாகாஸ்திரங்களைக் கொண்டு இராமரையும் இலக்ஷ்மணரையும் தேகங்கள் முழுதும் பிளந்து தனது நாகபாசங்களால் மோகமடை யும்படி கட்டினான். உடம்பெங்கும் அம்புகள் நிறைந்து நொந்து எளிமையடைந்த அவ்விரு வீரரும் உடம்பெங்கும் குருதிசொரிய வீரர்படுக்கையில் படுத்துக்கொண்டார் கள். அவ்விருவருடைய தேகங்களிலும் ஒரு விரற்கிடை யளவாவது பாணத்தால் அடிக்கப்படாது காணப்பட வில்லை. அவ்விருவர் தேகங்களிலிருந்தும் பிரஸ்ரவண மலையினின்று நீரருவி பெருகுவதுபோல இரத்தம் பெருக லாயிற்று.
நாகபாசத்தாற் கட்டப்பட்டவர்களாய் இராம லக்ஷ் மணர் விழுந்திருப்பதைக் கண்டு வானரர்களெல்லாரும் விபீஷணருடன் கூட வருத்தமடைந்தார்கள். இந்திரஜித்து தான் புரிந்த செயலையும் அவ்விருவரும் விழுந்திருப் பதையும் பார்த்து வெகு சந்தோஷமடைந்து எல்லா அரக் கர்களையும் களிக்கச்செய்து சொல்லலானான்:-“முன்னே கரனையும் தூஷணனையும் கொன்ற மகாபலசாலிகளான இராம லக்ஷ்மணர்களென்ற சகோதரர்கள் இப்போது எனது பாணங்களால் ஒழிக்கப்பட்டார்கள். எல்லாத் தேவர்களும் அசுரர்களுடனும் முனிவர் கூட்டங்களுடனும் ஒருங்கு கூடினாலும் என் பாணக்கட்டிலிருந்து இவ்விரு வரையும் விடுவிக்கமுடியாது. நாம் வேருடன் கெடுமாறு நமக்கெல்லாம் அநர்த்தத்தை விளைக்கக்கூடியவரென்று நினைத்திருந்த அவ்விராமரை நான் ஒழித்துவிட்டேன்” என்றான்.
இவ்வாறு தன்னைச் சுற்றியிருந்த அரக்கர்களை நோக்கி இந்திரஜித்து சொல்லிவிட்டு இராமருடைய சேனாபதிகளை யெல்லாம் புடைக்கலானான்.அவ்வானரர்களை அம்புகளின் கூட்டங்களினாற் பீடித்து பயமுறுத்தி எல்லாவரக்கர்களை யும் களிக்கச் செய்துகொண்டு இலங்கைமா நகர்க்குட் புகுந்தான்.
இராம லக்ஷ்மணர்களுடைய தேகங்களும் அவற்றின் உறுப்புக்களும் பாணங்களால் நிரம்பியதைப் பார்த்ததும் சுக்கிரீவனுக்கும் பயமுண்டாயிற்று. அவ்வாறு பயத்தால் நடுங்கி கண்ணுங் கண்ணீருமாய் வெகு பரிதாபமான தோற்றத்துடன் குழம்பிநின்ற வானர ராஜனாகிய சுக்கிரீ வனை நோக்கி விபீஷணர் கூறலுற்றார்:-“சுக்கிரீவரே! பயப் படவேண்டாம். கண்ணீர்ப் பெருக்கை அடக்கிக்கொள் ளுங்கள். யுத்த மென்பது இவ்விதமாகத்தானிருக்கும்; வெற்றியென்பது நிச்சயமாக ஒருவர் பங்கன்று; வீரரே! நமக்குப் பாக்கியம் இன்னும் கொஞ்சம் மிகுந்திருக்குமா னால், மகாபலமுள்ள இவர்களை விட்டு இந்தமோகம் சடிதியில் நீங்கிவிடும். வானர வீரரே! தங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள்; அநாதனாயிருக்கும் என்னையும் தேற்றிவையுங்கள். சத்தியம் தருமம் இவைகளில் அன்பு பாராட்டுகின்றவர்களுக்கு அகால மரணத்தினாற் பயம் உண்டாகாது. ஆகையால் எல்லாக்காரியங்களையும் நாசம் பண்ணிவைக்கும் ஏக்கத்தை விட்டிடுங்கள். இதுவரை யில் இராமர் நடத்திவந்த சைனிய்ங்களுக்கு அநுகூல மானதை ஆலோசித்துப் பாருங்கள். இராமர் மூர்ச்சை தெளிகின்றவரையிலும் இந்தச் சைனியங்களை பரிபால னம் பண்ணவேண்டும். அவ்விருவர்க்கும் நல்ல நினைவு வந்தவுடன் நமது துயரத்தை அவர்களே அகற்றிவிடுவார் கள். இந்த அஸ்திரக்கட்டு இராமரை ஒன்றுஞ்செய் யாது; இராமர் மாண்டுபோக மாட்டார். ஆயுள் ஒழிந்து போனவனை விட்டுப்பிரிகின்ற முகக்களை சிறிதும் இவரை விட்டுப் பிரியவில்லையே. ஆகையால் நான் எதுவரையில் செய்யவேண்டிய தொழில்களை யெல்லாஞ் செய்கின் றேனோ அதுவரையில் நீங்கள் உங்களை தேற்றிக்கொண்டு பிறகு உங்களுடைய சேனைகளையும் தேற்றியிருங்கள்’ என்று சொல்லி விபீஷணர் சுக்கிரீவனையும் வானர சேனை களையும் தேற்றினார்.
பெருமையாயுள்ள இந்திரஜித்தோ தனது தந்தை யிருக்குமிடத்தை நாடிவந்தான். அவரை வணங்கி அஞ் சலிசெய்து நின்றுகொண்டு இராம லக்ஷ்மணர்கள் மடிந் தார்கள்’ என்று தனது தந்தைக்கு வெகு சந்தோஷகர மான சமாசாரத்தை தெரிவித்தான். அதைக் கேட்டதும் இராவணன் சரேலென்று எழுந்திருந்து தனது குமாரனை தழுவிக்கொண்டான். அவனை உச்சிமோந்து வெகு அன் பாக எல்லாச் சமாசாரங்களையும் விசாரிக்கலானான். இந் திரஜித்தும் எல்லாச் சங்கதிகளையும் நடந்தவண்ணம் தெரிவித்தான். தன்னுடைய நாகாஸ்திரக் கட்டினால் இராம் லக்ஷ்மணரிருவரும் அசைவற்று ஒளியற்றவர் களாய் விழுந்துகிடப்பதை தெரிவித்தான்.
இப்படி யிருந்தபொழுது வீரராகிய இராமர் தாம் சரங்களாற் கட்டப்பட்டவரா யிருந்தபோதிலும் தமது அதிக பலத்தாலும் தைரியத்தாலும் மூர்ச்சை தெளிந்தார். பிறகு தனது தேகமெல்லாம் உதிரமொழுக பாணங்க ளால் நன்றாகக் கட்டப்பட்டு நொந்து வெகு பரிதாபமான முகத்துடன் தமது தம்பி விழுந்துகிடப்பதைப் பார்த்து துக்கம் மேலிட்டவராய் இராமர் புலம்பலானார்:”போரில் வெல்லப்பட்டவனாய் இப்பொழுது என் தம்பி படுத்திருப் பதைப் பாக்க்கிறேனே! இனி எனக்கு சீதையால் என்ன பயன்? அல்லது என் பிராணனால்தான் யாதுபயன்? இம் மானிடவுலகத்தில் நன்றாகத் தேடிப்பார்த்தால் சீதை யைப் போன்ற ஒரு பெண்ணை யான் காணலாம். உதவி செய்கின்றவனாயும் போரில் வீரனாயுமுள்ள இந்த இலக்ஷ் மணனுக்குச் சமமான தம்பி எங்கும் கிடைக்கமாட் டானேசுமித்திரைக்கு மகிழ்ச்சி யூட்டுபவனான இலக்ஷ் மணன் இறந்திருப்பானேயாயின் நான் வானரர்கள் முன் னிலையில் தானே என் பிராணனை விட்டிடுகின்றேன். பேரொளிபொருந்திய இவ்வுத்தமன் நான் காட்டுக்குப் புறப்பட்டபொழுது எவ்வண்ணமாக என்னைத் தொடர் ந்து நின்றானோ அதுபோலவே நானும் இப்பொழுது இவ னைத் தொடர்ந்து யமனுடைய மாளிகைக்குச் செல்வேன். சுக்கிரீவரே! தாங்கள் என்னிடம் வைத்த நட்பிற்கும் தங் கள் பருவத்திற்கும் தக்கபடி எவ்விதமாக நடந்துகொள்ள வேண்டுமோ அவ்விதமாகத் தர்மத்துக்கு அஞ்சி தாங்கள் நடந்தீர்கள். வானரவீரர்களே! நீவிரெல்லீரும் உங்கள் நண்பனுக்குச் செய்யவேண்டிய காரியத்தை செய்துவிட் டீர்கள். இனி நான் உங்கட்கு விடைகொடுத்து விட் டேன். உங்களுக்கு இஷ்டமான இடங்களுக்குச் செல்ல லாம்’ என்றார். வானரர்களெல்லாரும் இராமர் அவ்வாறு புலம்பியதைக் கேட்டு தங்கள் கண்கள் சிவந்தவர்களாய் கண்ணீரை பெருக்கலானார்கள்.
45. நாகபாசத்தை நீக்குதல்
பிறகு ஒரு முகூர்த்த காலத்திற்குள் எரியும் தீப் போல விளங்குகின்ற விந்தையின் புதல்வனாகிய மகாபல முள்ள கருடபகவானை எல்லா வானரவீரர்களும் கண்டார் கள். அக்கருடபகவானது வரவைக்கண்டதும் மகா பல வான்களான இராம லக்ஷ்மணர்களைச் சர வடிவமாகக் கட்டியிருந்த நாகங்கள் பயந்தோடிவிட்டன, பிறகு கருட பகவானும் காகுத்தர்களைக் கண்டு சந்தோஷித்து சந்தி ரன்போல் விளங்கிய அவர்களது முகங்களை தனது கை தடவிக்கொடுத்தான். கருடபகவான் கைபட் டதும் இராம லக்ஷ்மணருடைய லிரணங்களெல்லாம் ஆறின; அவ்விருவருடைய திருமேனிகளும் தங்கம்போன்ற நிறமமைந்து வழுவழுப்படைந்தன. அன்றியும் அவ்விருவ ரது ஒளி வீரியம் பலம் தேககாந்தி உற்சாகம் நுண்ணறிவு விவேகம் ஞாபகசக்தி இவைகளெல்லாம் முன்னிருந்ததை விட இரட்டிப்பாக விளங்கின. இந்திரனுக்கு ஒப்பாய் மகா வீரரான அவ்விருவரையும் கருடபகவான் எழுப்பி அவர்கள் சந்தோஷமாக எழுந்து நின்றவுடன் அவர்களைத் தழுவிக்கொண்டான்.
அப்பொழுது இராமர் கருடனை நோக்கி சொல்லலானார்:-“தங்கள் கருணையால் இந்திரஜித்தினாலுண் டான பெரிய ஆபத்திலிருந்து நாங்களிருவரும் இப்போது விடுவிக்கப்பட்டோம்; அன்றியும் முன்போலவே பலமுள் ளவர்களாகவும் செய்யப்பட்டோம். இவ்வாறு நல்ல உரு வத்துடன் தேவலோகத்து மலர் மாலையையும் கலவைச் சந்தனத்தையும் அணிந்து மாசற்ற ஆடையுடுத்து திவ்விய மான ஆபரணங்களை தரித்துக்கொண்டு வந்திருக்கும் தாங்கள் யாவர்?” என்றார். விந்தையின் குமாரனும் பட்சி ராஜனுமாகிய மகா பலம்பொருந்திய கருடபகவான் வெகு சந்தோஷத்துடன் கண்களில் ஆனந்த பாஷ்பம் ததும்ப இராமரைநோக்கி மறுமொழி சொல்லலானான்:- காகுத் தரே! நான் தங்களுடைய தோழன்; வெளியிற் சஞ்சரிக் கின்ற தங்களுடைய பிராணன்? எனது பெயர் கருத்மான்; உங்களுக்கு உதவிசெய்தற்பொருட்டு இவ்விடம் வந்தேன். கத்துருவின் வம்சத்தைச் சேர்ந்தனவும் பற்களுள்ளனவு மான இந்த நாகங்கள் அவ்வரக்கனுடைய மாயையின் வலிமையால் சர வடிவங்கொண்டு தங்களைக் கிட்டின. இவ்விருத்தாந்தத்தை நான் கேள்விப்பட்டு நண்புரிமை யைக் காக்குமாறு உங்களிடத்துள்ள அன்பினால் இங்கு விரைந்துவந்தேன். இக்கொடிய பாணக்கட்டினின்று நான் உங்களிருவரையும் விடுவித்துவிட்டேன். இனி நீங்க ளிருவரும் எப்போதும் வெகுஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பரே! ராகவரே! தருமத்தை யறிந்த வரே! பகைவர்களும் விரும்புங் குணமுள்ளவரே! தங்களை விடையளிக்குமாறு வேண்டுகின்றேன். வந்தவழியே திரும் பிச் செல்லுகின்றேன். இவ்விலங்கையை பாணங்களின் தொகுதிகளால் குழந்தைகளும் கிழவர்களும் மிச்சமாகு மாறு செய்து ராவணனென்ற சத்துருவைக்கொன்று சீதையைத் தாங்கள் அடைவீர்கள்” என்றான். இவ்வாறு என்றான்.இவ்வாறு சொல்லிவிட்டு கருடபகவான் இராமரை வலம்வந்து மீண் டும் ஒருமுறை தழுவி ஆகாயத்திலெழுந்து வாயுவேகமா கச் சென்றான். பிறகு வானர சேனைத் தலைவர்கள் இராம லக்ஷ்மணர் தமக்கு வந்த ஆபத்தினின்று நீங்கியதைக் கண்டதும் சிங்கநாதஞ்செய்து தங்கள் வால்களை உதறலானார்கள்.
பலமுள்ள அந்த வானரர்கள் அவ்வாறு பெருஞ் சத்தமிட்டதை அரக்கர்களுடனிருந்த இராவணன் கேட் டான். அழகாயும் கம்பீரமாயு மெழுந்த அப்பெருஞ் சத்தத்தை ராக்ஷசராஜன் கேட்டதும் மந்திரிமார்களின் நடுவிலிருந்தவாறே இராவணன் பின் வருமாறு சொல்ல லானான்:- “பல வானரவீரர்கள் வெகு ஆனந்தத்தில் மூழ்கிச் செய்கின்ற இப்பெருஞ் சத்தமானது கர்ச்சிக் கின்ற மேகங்களிலிருந்து உண்டாகுஞ் சத்தம்போல கேட்கப்படுகின்றது; ஏதோ பெருங்களிப்புக்குக்காரணம் அவர்களுக்கு உண்டாயிருக்க வேண்டு மென்பதற்குச் சந்தேகமில்லை ; ஏனெனில் அவர்கள் செய்யும் பெருஞ் சத்தத்தினாற் சமுத்திரமே கலங்கிவிடுகின்றதே.உடன் பிறந்தவர்களான அந்த இராமலக்ஷ்மணர்கள் கொடிய நாகபாசங்களாற் கட்டுண்டிருக்கவும், இப்பெருஞ் சத்த முண்டானது எனக்குப் பெருஞ் சந்தேகத்தை யுண் டாக்குகின்றது. இந்த வானரர்களெல்லாரும் இப்பொ ழுது துக்கப்பட வேண்டிய காலமாக இருக்க இவர் கள் சந்தோஷப்படுமாறு என்ன காரண முண்டாயிற் றென்று சீக்கிரம் அறிந்து வாருங்கள் என்று கட்டளை யிட்டான்.
அப்படியாகத் தமது வேந்தன் சொன்னதும் வெகு வேகமாக அவ்வரக்கர்கள் கலக்கத்தோடு மதில்களின் மேல் ஏறி மகாத்துமாவாகிய சுக்கிரீவன் பாதுகாக்கின்ற வானர சேனையைப் பார்த்தார்கள். அந்த ராகவரிரு வரும் மிகக்கொடிய நாகபாசத்தைவிட்டு நீங்கி யெழுந்து வெகு காந்தியோடு விளங்கிக்கொண்டிருப்பதை கண்டு துக்கமடைந்தார்கள். அவர்களெல்லாரும் மனம் நடுங் கியவர்களாய் கீழே யிறங்கி துக்கத்தால் வாடிய முகங் களுடன் இராவணனுக்கருகில் வந்து அந்த அநிஷ்ட சங் கதி முழுவதையும் உண்மையாகத் தெரிவித்தார்கள். மகாபலம் பொருந்திய ராக்ஷசராஜன் அவர்கள் சொன் னதைக் கேட்டு தூம்ராக்ஷனென்ற அரக்கனைப் பார்த்து “பயங்கரமான பராக்கிரமமுள்ள வீரனே! நீ பெருஞ் சேனையை உடன்கொண்டு சடிதியில் வானர சேனையுடன் இராமனையும் போரில் வதைசெய்யுமாறு செல்லுக” என் றான். இவ்விதமாக இராவணன் சொன்னதும் தூம் ராக்ஷன் அப்படியே பெருஞ்சேனையை வெகு விரைவிற் செலுத்தினான். மகாவீரியம் பொருந்திய தூம்ராக்ஷன் சிரித்துக்கொண்டே அனுமானென்னுஞ் சேனாபதி யிருந்த மேலைக் கோட்டைவாயிலை நோக்கிப் புறப்பட்டான்.
யாவரும் அஞ்சத்தக்க பராக்கிரமம் பொருந்திய தூம் ராக்ஷன் வெளிப்புறப்பட்டு வருவதை வானரர்களெல்லா ரும்பார்த்து சண்டையை எதிர்பார்த்திருந்தவர்களாகை யால் வெகுசந்தோஷங்கொண்டு ஆரவாரஞ் செய்தார்கள். அப்போது வானரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பயங்கர மான யுத்தம் நடக்கலாயிற்று. தூம்ராக்ஷனும் கையில் விற்பிடித்தவனாய்ச் சிரித்துக்கொண்டே அப்போர்க்களத் தில் வானரர்களையெல்லாம் சரமாரி பொழிந்து பல திசை களில் துரத்தியடிக்கலானான். வானர சேனை தூம்ராக்ஷ னால் அவ்வாறு இம்சிக்கப்பட்டுக் கலங்கினதை, அனு மான் பார்த்து வெகு கோபங்கொண்டு தனது கையில் பெருமலையொன்றை யெடுத்துக்கொண்டு ஓடிவந்தான். தனது தந்தைக்கு ஒப்பான பராக்கிரமமுள்ள மாருதி கோபத்தால் தனது கண்கள் இரட்டிப்பாகச் சிவக்க அந் தத் தூம்ராக்ஷனது தேரைநோக்கி மலையை எறிந்தான். அம்மலையும் சக்கரம் ஏர்க்கால் குதிரை கொடி என்ற இவற்றுடனே அவனது இரதத்தை முறித்துப் பூமியில் விழுந்தது.வாயு குமாரனான அனுமான் அத்தேரை நாசம்பண்ணிப் பின்னும் மலையின் சிகரமொன்றைக் கையி லெடுத்துக்கொண்டு தூம்ராக்ஷனை நோக்கி யோடினான். அவ்வாறு தன்னை நோக்கி விரைந்து வருகின்ற அனுமா னைப்பார்த்து தூம்ராக்ஷன் தனது கதையை ஓங்கியவனாகி கர்ச்சித்துக்கொண்டே அவனுக்கு எதிர்முகமாகச் செல்ல லானான். பிறகு தூம்ராக்ஷன் பல முட்களையுடைய கதா யுதத்தை அனுமானது தலையில் விழும்படி வெகு வேகமாக எறிந்தான். பயங்கரமான அக்கதையால் அனுமான் அடிபட்டான். அனுமான் அவ்வடியை லட்சியஞ்செய் யாமலே தூம்ராக்ஷனுடைய நடுத்தலையில் விழும்படி மலைச்சிகரமொன்றை யெறிந்தான். உடனே அவ்வரக்க னும் அச்சிகரத்தால் மோதப்பட்டு எல்லாவுறுப்புக்களும் சிதற சிதறுண்ட பருவதம்போல புவியில் விழுந்தான். தூம்ராக்ஷன் மடிந்ததைக் கண்டதும் எஞ்சியிருந்த அரக் கர்கள் பயந்து இலங்கைக்குட் புகுந்துகொண்டார்கள்.
அவ்வரக்கர்கள் இலங்கைக்குள் புகுந்தபிறகு மகா பலம் பொருந்திய எல்லா வானரர்களும் ஒருங்குசேர்ந்து அனுமானைக் கொண்டாடினார்கள். சத்வகுணம் பெற்ற வனான அனுமானும் பெருமகிழ்ச்சியடைந்து அவரவர்கட் குத் தக்கவாறு எல்லர் வானரர்கட்கும் உசிதமான மறுமொழி கூறிக்களித்தான்.
இராவணன் தன் சேனாபதிகள் போரில் வதைக்கப் பட்டதைக் கேள்விப்பட்டு வெகுகோபங்கொண்டு கொஞ் சம் பரிதாபமான முகத்துடன் தன்னருகிலிருந்த மந்திரி மார்களைப் பார்த்தான். பிறகு அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு அன்றைக் காலையில் தனது சேனை அணிவகுக்கப்பட்டு நிற்பதைக் காணுமாறு இலங் கையைச் சுற்றிவந்தான். அந்நகரம் பகைவரால் முற் றுகை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு யுத்தத்திற் சமர்த் தனான பிரஹஸ்தனைப் பார்த்துச் சொல்லலானான் “போரில் வல்லவனே! நாற்புறங்களிலும் பகைவரால் முற்றுகையிடப்பட்டும் எதிர்பாராமலே உபத்திரவிக்கப் பட்டுமுள்ள இந்நகரத்துக்கு யுத்தத்தைத்தவிர வேறு தப்பும் வழியைக் காணோம். நான் அல்லது கும்பகர்ணன் அல்லது நமது சேனாபதியாகிய நீ அல்லது இந்திரஜித்து அல்லது நிகும்பன் இவர்களில் ஒருவர் தான் இந்நகரத்தை சத்துரு பயத்திலிருந்து நீக்கிப் பாதுகாக்கும் பாரத்தை வகிக்கத்தக்கவர்கள். ஆகையால் விரைவாக நீ இச்சைனி யம் எல்லாவற்றையும் உடன் அழைத்துக்கொண்டு வெற்றி பெறுதற்பொருட்டு, அவ்வானர சேனையை நோக் கிச் செல்லுவாய்.” என்றான்.
இராவணன் இவ்விதமாகக் கூறினதும் சேனாபதி யான பிரகஸ்தன் உசநஸ் என்பவர் அசுரேந்திரனை நோக் கிப் பேசுவதுபோல இராவணனை நோக்கி மறுமொழி சொல்லலானான்:-“வேந்தரே! வெகு சமர்த்தர்களான மந்திரிமார்களுடன் நாம் இதற்கு முன்னமே ஆலோசனை செய்திருக்கின்றோம். அக்காலத்தில் நாம் பலவிதமாக ஆலோசித்துப் பார்த்ததில் நமக்குள் ஒருவர்க்கொருவர்க்கு விவாதமும் உண்டாயிற்று. சீதாதேவியை திருப்பிக் கொடுப்பது நமக்கு க்ஷேமமென்றும் கொடுக்காவிட்டால் யாவரும் ஒழிதற்குக் காரணமான யுத்தம் நேருமென்றும் நாங்கள் தங்கட்குத் தெரிவித்தோம். அவ்வாறே இப் போது நேர்ந்தது. தாங்களோ பொருள் கொடுத்தும் பல வகை மரியாதைகள் செய்தும் நல்வார்த்தை சொல்லியும் என்னை எப்போதும் பெருமையாக வைத்திருக்கிறீர்கள்; ஆகையால் தங்களுடைய ஆபத்துக்காலத்தில் தங்களுக்கு இஷ்டமான எதைத்தான் நான் செய்யமாட்டேன்? என் பிராணனையாவது எனது குமாரர்கள் பெண்டுகள் பொருள்களையாவது எனக்குப் பாதுகாக்கவேண்டுமென்ற எண்ணமில்லை; தங்கள் பொருட்டுப் போர்க்களத்தில் என் உயிரை நான் இழப்பதைத் தாங்கள் பார்க்கலாம்’ என்றான். இவ்வாறு தனது தலைவனாகிய இராவணனிடஞ் சொல்லிவிட்டு. பெரிய ராக்ஷச சேனையால் சூழ்ப்பட்டவனாய் சடிதியில் இலங்கையைவிட்டுப் புறப்பட்டான்.
பெயர் பெற்ற வல்லமையும் பராக்கிரமும் அமைந்த பிரஹஸ்தன் புறப்பட்டு வந்தபொழுது போர்க்களத்தில் வானர சேனையும் பலவகை ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எதிர் வந்து நின்றது. போரிலே அரக்கர்கள் வானரர்களைக் கொன்றார்கள்; வானரர்கள் அரக்கர்களைக் கொன்றார்கள். வானரர்களின் சரீரங்களாலும் அரக்கர் களின் தேகங்களாலும் நிரம்பியிருந்த அப்போர்க்களம் சரிந்துவிழுந்த மலைகளால் நிரம்பியதுபோலவும் இரத்த வெள்ளத்தால் மூடப்பட்டு வசந்த காலத்தில் செந்நிற மான மலர்களையுடைய பலாச மரங்களால் நிரம்பிய இடம்போலவும் தென்பட்டது.
பிரஹஸ்தன் நீலன்மேற் பாணங்களைப் பிரயோகித் தான்; நீலன் வெகு கூராய் நெருப்பை நிகர்ப்பனவான அந் தப் பாணங்களால் அடியுண்டு பிரஹஸ்தனை பெரிய விருட்ச மொன்றைப் பிடுங்கி அடித்தான். பின்னும் மகாபலம் பொருந்திய அவ்வானர வீரன், பிரஹஸ்தனது வில்லைப் பிடுங்கி தனது பலத்தால் அதனை முறித்து பல முறை அட்டகாசஞ் செய்தான். பிரஷஸ்தனென்ற சேனாதிபதி தனது வில் முறிந்தவுடன், பயங்கரமான உலக்கையொன்றைக் கைப்பற்றி, தனது இரதத்தைவிட் டுக் கீழே குதித்தான். தனது வலிமை முழுமையையும் சேர்த்து உலக்கையால் ஓங்கி நீலனுடைய நெற்றியில் ஒர் அடி அடித்தான். தனது மேனி முழுதும் இரத்தம் வழியப் பெற்ற நீலன் பெரும்பாறை யொன்றைத் தனது கையில் எடுத்து பிரஹஸ்தனுடைய தலையின்மேல் விரைந்து வீசி யெறிந்தான். நீலனால் எறியப்பட்ட அப்பெரும்பாறை அப்போது பிரஹஸ்தனுடைய தலையைப் பலதுண்டமாகப் பிளந்திட்டது. வேருடன் வெட்டுண்ட மரம்போல அவ் வரக்கன் தனது உயிர் ஒழிந்து புகழ் நீங்கி வலிமை குன்றி ஐம்புலன்களும் தடுமாறி திடீரென்று பூமியில் விழுந் தான். நீலன் பிரஹஸ்தனைக் கொன்றதும் எவராலும் அசைக்க முடியாது விளங்கிய இராட்க்ஷசசேனை சந் தோஷமிழந்து இலங்கையை நாடி யோடிற்று.
46. இராம் இராவண யுத்தம்
போரில் பிரஹஸ்தன் கொல்லப்பட்டா னென்பதை இராவணன் கேட்டு கோபத்தால் மெய்மறந்தவனாய் போர் வீரர்களான தேவர்களை நோக்கி தேவேந்திரன் சொல்லுவதுபோல் ராக்ஷஸ வீரர்களைப்பார்த்து பின்வரு வாறு சொல்லலானான்:-” நமது பகைவனான இராமனை அலட்சியமாக எண்ணியிருக்கக்கூடாது; தேவேந்திரனிடம் போர்புரிந்து வெற்றிகொண்ட எனது சேனாநாயகனான பிரஹஸ்தன் போர்வீரர்களுடனும் மதயானைகளுடனும் எவர்களால் வதைக்கப்பட்டானோ அந்த வானரர்களை நாம் அலட்சியமாக எண்ணியிருக்கக் கூடாது; எனது சத்துருக்களை நாசம் பண்ணும் பொருட்டும் நாம் வெற்றி யடையும் பொருட்டும் இப்பொழுது ஆச்சரியமான அப் போர்க்களத்துக்கு சிறிதும் ஆலோசியாமல் போகின்றேன். காட்டை கொழுந்து விட்டெரியுந்தீயாற் கொளுத்துவதுபோல நான் இப்பொழுது அவ்வானர சேனைகளையும் இராமலக்ஷ்மணரையும் என்னுடைய அம் புகளால் எரிப்பேன்” என்றான். இராவணன் இவ்வாறு சொல்லி அக்கினிபோலப் பிரகாசிக்கின்றதும் உத்தம மான குதிரைகள் பூட்டப்பட்டதும் வடிவத்தினால் மிக்க காந்தியுடன் விளங்குவதுமான தனது தேரின்மேல் ஏறி னான். மலைகளுக்கும் மேகங்களுக்கும் ஒப்பான சரீரங்கள் பொருந்தியவர்களும் மாம்சங்களைப் புசிப்பவர்களும் நெருப்புப்போல் எரியுங் கண்களுள்ளவர்களுமான அரக் கர்களாற் சூழப்பட்டு இராவணன் பூதகணங்களாற் சூழப்பட்ட அமரர் தலைவனான ருத்திர மூர்த்திபோல விளங்கினான்.
ஸர்ப்பராஜனைப்போன்ற கைகளையுடையவரும் மிக்க காந்தியுடன் விளங்குபவரும் காப்புச்சேனையாற் சூழப் பெற்றவருமான இராமர் மிகவுங்கொடுமைகொண்ட அவ் வரக்க சேனையைப் பார்த்து ஆயுதப் பயிற்சியில் மிகத் தேர்ந்தவரான விபீஷணரை நோக்கி பின்வருமாறு வினவ லானார்:-“பல பெருங் கொடிகளும் சிறு கொடிகளும் விளங்கவும்; ஈட்டி கத்தி சூலம் வில் முதலிய பல ஆயுதங் கள் மின்னவும், ஐராவதம் போன்ற பல யானைகள் நிரம்பி அச்சமற்ற அரக்கவீரர்களை யுடையதாய் அதோ ஒரு சேனை வருகின்றதே, கலக்குதற்கு அரிய அது யாரு டைய சேனை ?’ என்று வினாவினர்.
அவ்விதமாக இராமர் கேட்டதும் இந்திரனுக்கு ஒப் பான வல்லமையுள்ள விபீஷணர் வெகு தைரியசாலி களான அரக்கர்களுடைய சிறந்த அச்சேனையைப் பற்றி சொல்லத் தொடங்கினார்:-“புலி ஒட்டகம் மதயானை மரன் குதிரை இவற்றின் முகம் போன்ற முகம்பெற்று கண்கள் சுழல பயங்கரமான தோற்றமுடையனவான பூதகணங்களால் தொடரப்பட்டு அதோ வருகின்றாரே, அவர்தாம் தேவர்களுடைய செருக்கை அடக்கியவர்; எங்கே நெருங்கிய கம்பிகளையுடையதாய் பூர்ணசந்திரன் போல விளங்கும் வெண்கொற்றக் குடையொன்று காண் கின்றதோ, அங்குதான் பூதகணங்களாற் சூழப்பட்டு சிவ பெருமான் விளங்குவதுபோல மிகுந்த பெருமை தங்கிய அரக்க வேந்தர் விளங்குகின்றார். இந்த ராக்ஷசாதிபதி யானவர் கிரீட மணிந்து முகத்திற் குண்டலங்களாட இமயமலைபோலவும் விந்தியமலை போலவும் பயங்கரமான தேகத்தால் விளங்குகின்றார். இவர் மஹேந்திரன் சூரி யன் இவர்களுடைய செருக்கைக் குறைத்தவர்; இவர்தாம் அரக்கர்களின் மன்னவர்; இவர் தமது ஒளியால் சூரியன் போல விளங்குகின்றார்” என்று தெரிவித்தார்.
விபீஷணரை நோக்கி ஸ்ரீராமர் மறுமொழி சொல்ல லானார்:-” என்ன ஒளி! என்ன காந்தி! ராக்ஷச ராஜனா கிய இராவணன் தனது மேலான காந்தியாற் சூரிய பக் வான்போல நேராக கண்கொண்டு பார்க்க முடியாதவனாக காணப்படுகின்றான். இவனுடைய ஒளி நிறைந்த உரு வத்தை என்னால் நன்றாக காணமுடியவில்லை. இவ்வரக்க மன்னவனுடம்பு பிரகாசிப்பதுபோல தேவாசுரவீரர். களின் உடம்பும் விளங்குவதில்லை. இக்கொடும்பாவி இன்று தெய்வாதீனமாய் என் கண்களுக்குப் புலனானான்: இவன் சீதையைக் கவர்ந்து சென்றதனால் எனக்குத் தோன்றியுள்ள கோபத்தை நான் இன்று போக்கிக் கொள்வேன்’ என்றார். வீரரான இராமர் இலக்ஷ்மணர் தம்மைத்தொடர்ந்து நிற்க இவ்வாறு சொல்லிவிட்டு பிறகு தமது வில்லை எடுத்து உயர்ந்த அம்பொன்றைத் தொடுத் தவராக நின்றார்.
அப்போது அஞ்சலிபந்தஞ் செய்துகொண்டு இலக்ஷ் மணர் “பெரியோரே தாங்கள் துராத்துமாவாகிய இவ னைக் கொல்லுதற்கு அதிகவல்லமையுள்ளவர்; என்றாலும் இவன் நீசன்; இவனை நான் வதைப்பேன் ; பிரபுவே! தாங் கள் எனக்கு அநுமதி தரவேண்டும்” என்று வெகு அர்த் தத்துடன் கூடிய சொற்களைச் சொல்லினார். உடனே வெகு பராக்கிரமம் பொருந்தியவரும் உண்மையை உறுதி யாகக் கொண்டவருமான இராமர் இலக்ஷ்மணரை நோக்கி “இலக்ஷ்மணா! நீயே போய் வா; போரில் வெகு ஜாக்கிரதையாக இரு” என்றார். பிறகு இராமர் சொன் ன தைக் கேட்டு இலக்ஷ்மணரும் அவரைக் கட்டித் தழுவி நமஸ்காரஞ் செய்துவிட்டு போரிடுமாறு சென்றார்.
இலக்ஷ்மணர் வருவதை அனுமான் பார்த்து ‘பணி யாளனாகிய யான் இருக்கையில் இவர் ஏன் போர் செய்ய வேணும்?” என்று எண்ணியவனாய் இராவணனது சரமாரி யைத் தடுத்துக்கொண்டு இராவணனை நோக்கி யோடி னான். இராவணனது இரதத்தினிடம் வந்து தன் வலக் கையை ஓங்கி இராவணனைப் பயமுறுத்திக் கொண்டே அனுமான் பின்வருமாறு சொல்லலானான்:-“தேவர் அசு ரர் கந்தர்வர் யக்ஷர் அரக்கர் இவர்களால் தான் கொல்லப் படாமலிருக்குமாறு நீ வரம்பெற்றுள்ளாய்; ஆனால் வான ரர்களிடமிருந்து உனக்கு இப்போது பயம் வந்தது. ஐந்து விரல்களமைந்த எனது வலக்கையை இதோ ஓங்கி விட்டேன்; இது உனது உடலிற் குடிகொண்டிருக்கும் ஆத்துமாவை அவ்வுடலினின்று வெளியிற் கிளப்பும்” என்றான். பயங்கரமான பராக்கிரமமுள்ள இராவணன் அனு மானது வார்த்தையைக் கேட்டு தனது கண்கள் சிவக்க கோபங்கொண்டு தனது கையால் அனுமானது மார்பில் ஒற்றை அறைந்தான். அவ்வறை விழுந்ததும் அனுமான் மெய்பதறி ஒன்றுஞ்செய்யத் தெரியாமல் சிறிதுநேரம் நின்றான்.
அப்போது இலக்ஷ்மணர் அளவிடமுடியாத மகிமை வாய்ந்த வில்லை டங்காரஞ் செய்துகொண்டு நின்ற இராவ ணனைப்பார்த்து, “அரக்கர் மன்னவனே! என்னிடமே போர் புரியுமாறு வருவாய்; வானரர்களுடன் போர்புரி தல் உனக்குத் தகுதியன்று ” என்றார். கம்பீரமான குர லுடன் இலக்ஷ்மணர் சொன்னதையும் அவருடைய பயங் கரமான வில் நாணினொலியையும். அரக்கர் மன்னவன் கேட்டு தனக்காக எதிர்பார்த்திருந்த அவரை நோக்கி வெகு கோபத்துடன் “ராகவ! விநாசமடைய விரும்பி விபரீதபுத்தியுள்ள நீ தற்செயலாய் என் பார்வையில் அகப்பட்டுக்கொண்டாய்; இந்நொடியில் நீ என் பாணக் கூட்டங்களால் அடியுண்டு யமனுடைய விடுதியை அடை யப்போகிறாய்” என்று சொல்லி இராவணன். கூரான முனைகளுள்ள ஏழுபாணங்களை அவர்மேல் விடுத்தான்; இலக்ஷ்மணரும் அப்பாணங்களை பொன்மயமாய் அழகிய கூரான முனைகளுள்ள பாணங்களால் அறுத்தொழித் தார். உடல் அறுபட்டு விழுந்த பாம்புகள்போல அப் பாணங்கள் அறுபட்டு விழுந்ததை இராவணன் கண்டு வெகு கோபங்கொண்டு பின்னும் கூரான வேறு பாணங் களை விடுத்தான். இராவணன்விட்ட அந்தப் பாணங்களால் இலக்ஷ்மணர் வருந்தி தேவர்களின் சத்துருவாகிய அவ்வரக்கனது வில்லை வெட்டியெறிந்தார்.
தனது வில்லும்முறிபட்டு தானும் பாணங்களால் அடி யுண்டு இரத்தத்தினாலும் மேதசினாலும் நனைந்த உடம்பை யுடையவனாய் இராவணன் தனக்கு பிரம்மதேவன் கொடுத்திருந்த சக்தி என்ற ஆயுதத்தைக் கைப்பற்றி இலக்ஷ் மணர் மீது விரைவாக விடுத்தான். இலக்ஷ்மணர் தம்மை நோக்கிவந்த அந்தச் சக்தியை அக்கினிக்கு ஒப்பான பல கொடிய் பாணங்களால் எய்துபார்த்தும் தடைப்பட்டு நிற்காமல் அந்தச் சக்தியானது இலக்ஷ்மணருடைய விசால மான மார்பில் விரைவாகத் தைத்தது. லக்ஷ்மணரும் அந்தச் சக்தியை பொறுக்கமுடியாமல் மயங்கி விழுந்தார். அவ்வாறு மயங்கிவிழுந்த இலக்ஷ்மணரைக் கிட்டி, ராக்ஷ சராஜனாகிய இராவணனும் தனது கைகளால் எடுத்து தூக்கிக்கொண்டுபோக முயன்று பார்த்தான். இமயமலை மந்தரகிரி மேருமலை தேவர்களுடன்கூடிய இம்மூவுலகம் என்ற இவைகளையெல்லாம் தனது கைகளால் அசைத் தெடுக்க வேணுமென்றாலும் அவ்விராவணன் அசைத் தெடுக்கலாம்; போர்க்களத்தில் இலக்ஷ்மணரை தூக்கி கொண்டுபோய்விடவேணுமென்று நினைத்தலோ முடி யாது. பிரமதேவனுடைய சக்தியினால் இலக்ஷ்மணர் தமது மார்பில் அடியுண்டா ரென்றாலும் அப்போது அவர் இவ்வாறுள்ளதென்றும் இவ்வளவுள்ளதென்றும் கருதவும் முடியாததான விஷ்ணுவின் அம்சமாகிய தமது ஸ்வரூபத் தை ஸ்மரித்துக்கொண்டிருந்தார். அந்த ஸ்வரூபம் இயற் கையாகவே பெரும்பார முடையதாதலால் தேவர்களுக்கு முட்போன்ற அவ்விராணன் அசுரர்களின் செருக்கை யடக்குவதற்காக மானுடவடிவங்கொண்டுவந்த விஷ்ணு வின் அம்சமாகிய இவ்விலக்ஷ்மணரை தனது கைகளால் அசைத்தற்கும் வல்லமை யற்றவனாயினான்.
பிறகு, அநுமான் வெகு கோபத்துடன் இராவண் னிடம் ஓடிவந்து வச்சிராயுதத்திற்கு ஒப்பான முஷ்டியி னால் அவன் மார்பில் ஒரு குத்து குத்தினான். அக்குத்து விழுந்ததும் இராவணன் முழந்தாளை மடித்துக்கொண்டு விழுந்து மூர்ச்சையடைந்தவனானான். இராவணன் மெய்ம் மறந்ததைக்கண்டு முனிவர்களும் வானரர்களும் இந்திரன் முதலிய தேவர்களும் களிப்பினால் ஆரவாரஞ்செய்தார்கள். வெகு பராக்கிரமசாலியாகிய அநுமான் இராவணனால் ஹிம்ஸிக்கப்பட்ட இலக்ஷ்மணரை தனது கைகளால் தூக்கி இராமரிடம் கொண்டுபோய்ச் சேர்ந்தான். தமது சத்துருவினால் அசைக்கமுடியா தவராயிருந்த இலக்ஷ் மணர் நல்லெண்ணமுடைமையாலும் சிறந்த பக்தியாலும் அனுமானுக்கு எளிதில் தூக்கிக்கொண்டுபோம்படியாயி னார். இராவணன் எறிந்த சக்தியே போரில் வெல்ல முடி யாத இலக்ஷ்மணரை விட்டிட்டு மறுபடியும் இராவண னுடைய இரதத்தை யடைந்து தானிருக்கவேண்டிய இடத் தில் இருந்தது. பகைவரை யழிக்கவல்ல இலக்ஷ்மணர் நினைப்பதற்கு அரிய. விஷ்ணுவின் அமிசமாகிய தமது ஸ்ரூபத்தை ஸ்மரித்ததன்றி வேறொன்றுஞ் செய்யவில்லை. அப்போதே மூர்ச்சை தெளிந்து புண்ணாறியவரானார்.
மகாபராக்கிரமசாலியாகிய இராவணனும் அப் பெரும்போரில் பிரஜ்ஞை வரப்பெற்று பெரியதொரு வில்லை யெடுத்து கூரான பாணங்களைத் தொடுக்கலானான். போர்க்களத்தில் அப்போது பலவானர் வீரர் கீழ்விழுந்து கிடப்பதையும் வானரசேனை நிலைகலங்கி யோடுவதையுங் கண்டு இராமர் இராவணனை எதிர்த்து வேகமாகச் சென் றார். அப்பொழுது அநுமான் இராமரிடம் வந்து, “தாங் கள் என் பிடரியில் ஏறிக்கொண்டு அரக்கனை அடக்குதல் தக்கது’ என்றான். அவ்வண்ணம் அநுமான் சொன்ன தைக் கேட்டு இராமர் விஷ்ணுவானவர் எவ்வாறு பில சாலியான கருடபகவான் மீது ஏறினாரோ அதுபோலவே அநுமானது பிடரியின்மேல் ஏறினார். இரதத்தின் மேலேறி யிருந்த இராவணனை அவ்விராமர் பார்த்து வெகு கம் பீரமான வாக்கால் பின்வருமாறு சொல்லலானார்:- “நில், நில் ; எனக்கு இவ்விதமான அப்பிரியத்தைச் செய்து அரக்கரேறே ! நீ எங்கு சென்று உயிருடன் தப்பு வாய்? இந்திரன யமன் சூரியன் பிரமதேவன் அக்கினி சங்கரன் என்ற இவர்களிடமே நீ ஓடினபோதிலும் பத் துத் திசைகளிலேயும் ஓடிப்பதுங்கிய போதிலும் இன்று நான் உன்னை உயிருடன் தப்பவிடமாட்டேன்.
இராமர் அவ்வாறு சொன்னதைக் கேட்டு இரா வணன் கோபங் கொண்டு அநுமானை பிரளய காலத்து அனலுக்கு ஒப்பான கூரான பாணங்களால் அடித்தான். பிறகு வெகு பராக்கிரமசாலியாகிய இராமர் வானர சிங்கமாகிய அனுமான் இராவணனாற் புண்பட்டதைப் பார்த்து கோபத்திற்குப் பரவசமாய் இராவணனுடைய அழகான மார்பில் வச்சிராயுதத்தையும் இடியையும் போன்ற பாணத்தால் அடித்தார். இராமருடைய பாணத்தால் அடிபட்டவனாக, இராவணன் மிகவும் வருந்தி நடுநடுங்கி தனது வில்லையும் நழுவ விட்டான். அவன் அவ்வாறு தடுமாறியதை தயாளுவான இராமர் பார்த்து ஜ்வலிக்கின்ற அர்த்த சந்திர பாணத்தைத் தொடுத்து அவ்வரக்க வேந்தனது சூரியன்போல விளங் குங் கிரீடத்தை விரைவாக வீழ்த்தினார். விஷமில்லாப் பாம்புபோலவும் கிரணங்களொடுங்கி ஒளியற்றிருக்குஞ் சூரியன் போலவும் கிரீடங்கள் தள்ளப்பட்டுக் காந்தி யற்று நின்ற இராவணனை பார்த்து, இராமர் பின் வருமாறு சொல்லலானார்:-“அரக்க வீரா! நீ இன்று கொடிய பெரும்போர் புரிந்து எனது வீரர்களையும் வலி யடக்கினாய்; ஆகையால் நீ அதிகம் சிரமப்பட்டிருக்கின்றா யென்று நிச்சயித்து நான் எனது பாணங்களால் உன்னை யமனுடைய வசத்தில் ஒப்பிக்கவில்லை. அரக்கர்கட்கு அரசனே! நீ இப்போது போரிற் சிரமப்பட்டிருக்கின்ற படியால் திரும்பிப் போக நான் விடை கொடுக்கின்றேன். நீ இலங்கைக்குச் சென்று உனது களைப்பை ஆற்றிக் கொண்டு நாளை இரதமேறி வில் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரும்பி வருவாய். அப்பொழுது இரதத்திலிருந்தபடியே நீ என் வல்லமையைப் பார்க்கலாம்” என்று இராமர் சொன்னதும் தனது செருக்கும் சந்தோஷமும் ஒழிந்து வில் அறுக்கப்பட்டும் தேர்ப் பாகனும் குதிரையும் கொல்லப்பட்டும், பாணங்களாற் பீடிக்கப்பட்டும், தனது கிரீடங்கள் உடைக்கப்பட்டும் வெகு பரிதாபமான நிலைமையிலிருந்து அவ்வரக்க வேந்தன் சடிதியில் இலங்கைக்குள் நுழைந்தான்.
இராவணன் இலங்கையினுட்புகுந்து ஸ்ரீராமருடைய பாணத்தை நினைந்து அஞ்சினவனாய் தனது செருக்குக் குலைந்து மனங்குழம்பியவனானான். பிறகு இராவணன் திவ்வியமான பொன்னாசனத்தின் மீது வீற்றிருந்து அரக் கர்களைப் பார்த்துப் பின் வருமாறு சொல்லலானான்:- நான் இதுவரையில் செய்திருந்த தவங்கள் யாவும் வீணாயின; மகேந்திரனுக்கு ஒப்பான என்னை மானிட னொருவன் வென்றானே! பிரமதேவர் ‘மானிடரிடமிருந்து உனக்குப் பயமுண்டாகுமென்று அறிவாய்’ என்று கடுமை யாகச் சொன்ன வாக்கியம் இப்போது பலித்துவிட்டது; அவரது வாக்குத் தவறாதன்றோ! நான் தேவர் அசுரர் கந்தர்வர் யக்ஷர் ராக்ஷசர் பன்னகர் என்ற இவர்களொரு வராலும் என்னைக் கொல்ல முடியாதென்று வரம் பெற் றேனே யன்றி மானிடராற் கொல்லப்படாம லிருக்கும்படி வ்ரம்பெறவில்லையே. இக்ஷ்வாகு குலத்தவனான அநரணிய னென்பவன் ” அரக்கப்பதரே! தாழ்ந்த குலத்தானே! துர்ப்புத்தியே! உன்னை உமது குமாரர் மந்திரிமார் சேனைகள் குதிரைப்பாகர்கள் என்ற இவர்களுடன் போரில் வதைசெய்யப்போகின்ற புருஷன் என் குலத்திற் பிறக்கப்போகின்றான்; இது திண்ணம் என்று முற் காலத்தில் சபித்தானே ; அவ்வாறே அக்குலத்திற் பிறந்த தசரத குமாரனாகிய இராமன் மானுடனாகப் பிறந்தா னென்று எனக்குத் தோன்றுகின்றது. நான் முன்னொரு காலத்தில் வேதவதி யென்பவளை பலாத்கரித்தபொழுது அவள் என்னைச் சபித்தாள்; அவ்வுத்தமிதான் இப் பொழுது சீதையென்ற பெயருடன் ஜனகனுடைய வமிசத் தில் வந்திருக்கின்றாளென்றும் எண்ணுகிறேன். ஆகை யால் இவைகளையெல்லாம் அறிந்து சத்துருவை ஜயிக்க வேண்டிய தொழிலில் அவதானமாக இருங்கள்.
“அரக்கர்கள் இப்பொழுது கோபுரங்களின் மேலும் போர்வீரர்கள் உலாவு கோபுரங்களின் பக்கங்களிலே வதற்காக ஏற்பட்டுள்ள இடங்களிலும் இருந்துகொண்டு இந்நகரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஒப்பற்ற கம்பீர முள்ளவனாய் தேவதானவர்களின் செருக்கை யடக்குகின்ற வனாய் பிரமதேவருடைய சாபத்தால் தூங்குகின்றவனான கும்பகர்ணனை எழுப்புங்கள். இவனோ காலத்தின் கொடு மையால் மெய்மறந்து இனிதாகத் தூங்குகின்றான். அறி வின்மையால் நாட்டுச் சுகத்தில் விருப்பங்கொண்டு எப் பொழுதும் தூங்குகின்றான். கும்பகர்ணன் எழுந்தானா யின் இக்கொடிய போரில் இராமனால் நான் தோல்வி யடைந்த துக்கம் நீங்கிவிடும்” என்றான்.
அரக்கர்களும் இராவணன் சொன்னதைக் கேட்டு, ‘காலமல்லாத காலத்தில் எப்படி எழுப்புகின்றது’ என்று மிகவும் மனங்குழம்பியவர்களாய் கும்பகர்ணனுடைய இருப்பிடத்துக்கு சென்றார்கள். கும்பகர்ணன் தூங்கு கின்ற பொன்மயமான அழகிய இனிய குகைக்குள் அவர் கள் நுழைந்ததும் சந்திரன்போல் வெண்ணிரமாக விளங் கும் சங்கங்களை யூதினார்கள்; ஒருங்கு சேர்ந்து கத்தினார் கள். எப்போது தங்களால் கும்பகர்ணனை எழுப்பமுடிய வில்லையோ, ஆயிரம்பேரிகளை ஆணிப்பொன்னாற்செய்த குணில்களைக் கொண்டு ஏககாலத்தில் நாற்புறத்திலுமாக அடித்தார்கள். தூக்கத்தால் மலராமலும் கலங்கியு மிருந்த கண்களுடன் காணப்பட்ட அவ்வரக்கன் தன்னைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் அரக்கர்களைக் கண்டு தான் எழுப்பப்பட்டதில் ஆச்சரியமடைந்தவனாய் அவர்களைப் பார்த்து பின்வருமாறு வினவலானான்:-” ஏன் என்னை நீங்கள் இவ்வளவு விரும்பி எழுப்பினீர்கள்? அரக்கமன்ன வர் சௌக்கியமாக இருக்கின்றாரா? அவருக்கு ஒரு வகைப் பயமும் இல்லையா?இப்பொழுது நீங்கள் விரைந்து எழுப் பினதனால் பிறரிடத்திலிருந்து அவருக்குப் பயம் திண்ண மாக உண்டாய்த்தான் இருக்கவேண்டும். என்னை எழுப்பிய காரணத்தை உண்மையாகச் சொல்லுங்கள்” என்றான்.
இவ்விதமாகக் கோபத்துடன் மகாபலவானாகிய கும்ப கர்ணன் கேட்டதும் இராவணனுடைய மந்திரியாகிய யூபாக்ஷன் அஞ்சலி பண்ணிக்கொண்டு மறுமொழிசொல்ல லுற்றான் :-“நமக்கு ஒருகாலும் தேவர்களிடமிருந்து ஒரு வித பயமும் வாராது. இப்பொழுது மனிதர்களிடமிருந்து பெரும்பயம் நம்மை அணுகிவருத்துகின்றது. மலைபோன்ற உடம்புகளுடன் விளங்கும் வானரர்கள் இவ்விலங்கையைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சீதையைத் தூக்கிவந்த காரணத்தால் மனம் பதைத்து நம்மை எதிர்த்து வந்திருக் கும் இராமனிடமிருந்துதான் நமக்கு பயம் இப்பொழுது வந்திருக்கின்றது; ஒரு வானரன் முன்பு இந்நகரத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டான். தேவர்களுக்கெல்லாம் கண்டகரான இராவணரும் சூரியன் போன்ற பராக்கிரம முள்ள இராமனால் போரில் உயிர்துறந்தவர்போல செய் யப்பட்டு விடப்பட்டார்” என்றான். யூபாக்ஷன் அவ்வண் ணம் தனது உடன்பிறந்தவனது தோல்வியைச் சொல்ல கும்பகர்ணன் கேட்டு தனது முகத்தைக் கழுவிக்கொண்டு சந்தோஷத்துடன் ஸ்நானஞ்செய்து உயர்ந்த வஸ்திராபர ணங்களால் அலங்கரித்துக் கொண்டான்.
– தொடரும்…
– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953.