வராஹ அவதாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 9,277 
 
 

புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல.

விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம் பக்தியின் மேன்மையை வலியுறுத்துகிறது.

மற்றப் புராணங்களைப் போலவே இதிலும், உலக சிருஷ்டி போன்ற பல விஷயங்கள் வர்ணிக்கப் படுகின்றன.

துருவன், பிரஹலாதன், ஜடபரதர் போன்றவர்களின் சரித்திரங்கள்; ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விவரங்கள்; கலியுகத்தில் தர்மங்களின் வீழ்ச்சி; ஸ்ரீ ராமரைப் பற்றிய ஒரு சிறு விவரத் தொகுப்பு முதலான விஷயங்களும் இப்புராணத்தில் அடங்குகின்றன. இது தவிர, யுக தர்மங்களும், வர்ணாச்ரம தர்மமும் விவரிக்கப் படுகின்றன.

பராசர முனிவர், மைத்ரேயருக்கு கூறுவதாக அமைந்துள்ளது விஷ்ணு புராணம்.

விஷ்ணுவின் மேன்மையை விளக்கிய பராசரர், வராஹ அவதாரத்தை விளக்கினார். மஹாவிஷ்ணு வராஹ உருவம் எடுத்து, பூமியை நீரின் ஆழத்திலிருந்து மேலே தூக்கி வந்து, இந்த உலகைப் படைத்தார்.

சமுத்திரம் தேவர்களாலும், அசுரர்களாலும் கடையப்பட்டு, அதிலிருந்து அமிர்தம் கிட்டியது என்பது எல்லோரும் அறிந்த ஒரு புராணச் சம்பவம். இதை வர்ணிக்கிற விஷ்ணு புராணம், இது ஏன் அவசியமாகியது என்பதைக் காட்ட, ஒரு சம்பவத்தைக் கூறுகிறது.

துர்வாச மஹரிஷியிடம் ஒரு அருமையான பூமாலை இருந்தது. தனது யானையாகிய ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்த இந்திரனுக்கு அவர் அதை அளித்தார். அவனோ, அதைத் தான் வைத்துக் கொள்ளாமல் யானையின் தலை மீது வைத்தான்.

அது மாலையைக் கீழே தள்ளி மிதித்து விட்டது. துர்வாசர் கோபமடைந்து இந்திரனைச் சபிக்க, அவன் தனது செல்வத்தை எல்லாம் இழந்தான். இந்திர லோகம் மட்டுமல்லாமல், மற்ற இடங்களும் பொலிவிழந்தன.

தேவர்களைத் தாக்குவதற்கு தகுந்த தருணத்திற்காகக் காத்திருந்த அசுரர்கள், இப்போது தேவர்களை ஹிம்சித்தினர். பொலிவிழந்த தேவர்கள், வன்மை நீங்கியவர்களாக அசுரர்களிடம் தோல்வியுற்றனர். செய்வது அறியாமல் அவர்கள் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட, அவர் அவர்களை விஷ்ணுவிடம் அனுப்பி வைத்தார்.

அமிர்தத்தைப் பெறுவதுதான் தேவர்களின் துன்பம் தீர்வதற்கான வழி என்று தீர்மானித்து, ‘சமுத்திரத்தைக் கடைய வேண்டும்’ என்று விஷ்ணு கூறினார்.

பாற்கடல் கடையப் பட்டதற்கான காரணத்தை இவ்வாறு எடுத்துச் சொல்கிறது விஷ்ணு புராணம். கடலைக் கடைந்து, அதன் மூலம் கிட்டிய அமிர்தம் தேவர்களைச் சக்தி பெறச் செய்ய, அவர்கள் அசுரர்களை வென்றார்கள்.

துருவ சரித்திரமும் விரிவாகக் கூறப் பட்டிருக்கிறது. சிறிய தாயாரால் கொடுமைப் படுத்தப்பட்டு, சிறுவனாக இருந்தபோதே தவ நிலையை மேற்கொண்டு, மிக உன்னதமான ஸ்தானத்தை அடைந்தவன் துருவன்.

ரிஷிகளின் உபதேசத்தைக் கேட்டு, த்வாதசாஷர மந்திரத்தைத்தான் அவன் தனது தவ நிலையில் ஜபித்தான். ‘த்வாதசாஷரம்’ என்றால் ‘பன்னிரண்டு எழுத்துக்கள்’ என்று அர்த்தம்.

‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்பது சமஸ்கிருதத்தில் பன்னிரண்டு எழுத்துக்களைக் கொண்டது. அதுவே த்வாதசாஷர மந்திரம். ஸ்ரீ நாராயணன் அவன் முன் தோன்றி, அவன் துருவ நட்ஷத்திரமாக விளங்க அருள் புரிந்தார் .

பிரஹலாதன் வரலாறும் விவரிக்கப் படுகிறது. கசியபரின் மனைவியாகிய ‘திதி’க்குப் பிறந்த ஹிரண்ய கசிபு, ஹிரன்யாஷன் என்ற இருவரில், விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தபோது, அவரால் ஹிரன்யாஷன் அழிக்கப்பட்டான்.

ஹிரண்யகசிபுவிற்குப் பிறந்த மகன்களில் பிரஹலாதன் ஒருவன். தன்னையே எல்லோரும் வணங்க வேண்டும் என்ற ஹிரண்யகசிபுவின் ஆணையை மீறி இவன் நாராயணனை வணங்க, அவனைப் பலவிதமான பயங்கர வழிகளில் கொன்று விடவும் ஹிரண்யகசிபு முனைந்தான்.

இறுதியில் நரசிம்மாவதாரம் எடுத்த விஷ்ணு தூணிலிருந்து வெளிப்பட, அவருடைய கையினால் அவன் அழிந்தான். பிரஹலாதர் பலகாலம் அரசனாக இருந்து பிறகு நல்லுலகம் எய்தினார்.

நரகத்தில் பலவகை உண்டு என்று கூறுகிற விஷ்ணு புராணம், அவற்றில் சிலவற்றின் பெயரைக் கூறி, எத்தகைய பாவங்களைச் செய்தவர்கள், எத்தகைய நரகங்களுக்குச் செல்வார்கள் என்பதையும் சொல்கிறது.

பொய்சாட்சியம் அளிப்பவர்கள்; கருச்சிதைவு செய்பவர்கள்; குடிகாரர்கள்; திருடர்கள்; கொலையாளிகள்; தன்னை நம்பியவர்களைக் கைவிட்டு விடுபவர்கள்; வேதத்தை பழிப்பவர்கள்; பெரியவர்களை அவமதித்து நடந்து கொள்பவர்கள்; பிறரை அவதூறு செய்பவர்கள்; ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறவர்கள்; உணவைத் தனியே உட்கொள்பவர்கள்; பறவைகளையும் மிருகங்களையும் கூண்டில் அடைத்து வளர்ப்பவர்கள்; மரங்களை வெட்டி வாழ்பவர்கள் என்று பலவிதமான பாவச் செயல்களைச் செய்பவர்களின் நீண்ட பட்டியல் இந்நூலில் தரப் பட்டிருக்கிறது.

பாதாள உலகங்கள்; மேலுலகம்; சூரியனின் தன்மைகள்; காலக்கணக்கு; சந்திரனுடைய பதினாறு கலைகள்; பூகோள விளக்கங்கள்; இமயத்திற்கு தென்புறம் உள்ள பாரத வர்ஷம் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

சில சரித்திரங்களைக் கூறுகிற விஷ்ணு புராணம், மன்வந்தரங்களை வர்ணிக்கிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திலும், ஸப்தரிஷிகள் வெவ்வேறானவர்கள் என்கிற தகவல் அளிக்கப்படுகிறது. நாம் இருப்பது ஏழாவது மன்வந்தரம். இதற்கு அதிபரானவர் வைவஸ்வத மனு.

வேத வியாஸராகப் பணி புரிகிறவர்கள் கூட, வெவ்வேறானவர்கள் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வேதத்தைப் பிரித்து அளிப்பவர் வேத வியாஸர். இனி வரப்போகிற துவாபர யுகத்தில், அச்வத்தாமா வேத வியாஸர் ஆகப் பணிபுரிவார் என்றும் இப்புராணம் கூறுகிறது.

விஷ்ணுவிடம் பக்தி செலுத்துபவர்கள் யம பயத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்பதை இப்புராணம் வலியிறுத்திக் கூறுகிறது. யமனுக்கும் ஒரு கிங்கரனுக்கும் நடந்த உரையாடலாகிய ‘யம கீதை’ என்கிற உபதேசத்தில், யமதர்மன் இந்த பக்தியின் மேன்மையை விளக்கி, விஷ்ணுவை ஆராதிப்பவனிடம் தன்னால் நெருங்க முடியாது என்று கூறுகிறான்.

‘எவன் தர்மத்தின் பாதையிலிருந்து விலகாமல், எல்லோரிடமும் சமமாக நடந்துகொண்டு, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், யாருக்கும் அச்சத்தை விளைவிக்காமல், விஷ்ணுவின் ஆணையாக எண்ணித் தன் கர்மாக்களைச் செய்துகொண்டு வாழ்கிறானோ அவனே விஷ்ணு பக்தன்.

அவன் இனிமையாகத்தான் பேசுவான்; பொறாமை அவனிடத்தில் இருக்காது; எவருடைய பொருளையும் அவன் நாடமாட்டான்; அப்படிப் பட்டவர்களை தீண்ட முயற்சி செய்யாதே!’ என்று யமன் விளக்கினான்.

இவ்வாறு விஷ்ணு பக்தர்களின் மேன்மையைக் கூறிவிட்டு, இப்புராணம் சிராத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. அரச வம்சங்கள் விளக்கப் படுகின்றன.

ராமருக்குப் பிறந்த லவ-குச சகோதரர்களைப் பற்றி மட்டுமில்லாமல், அதற்குப் பின்னரும் அந்த வம்சத்தில் தோன்றியவர்களைப் பற்றி விஷ்ணு புராணம் கூறுகிறது; இது சூரிய வம்சம்.

பாண்டவர்கள் பற்றியும் குறிப்பிடப் படுகிறது; இது சந்திர வம்சம்.

ஹிரண்யகசிபுவே இராவனணாகப் பிறந்து, பின்னர் சிசு பாலனாகவும் பிறப்பெடுத்து, இறுதியில் மோஷம் பெற்றான் என்கிற விஷயமும் இப்புராணத்தில் வருகிறது.

எதிர்கால நிகழ்ச்சிகளையும் வர்ணிக்கிற இப்புராணம், கெளடில்யரின் உதவியால் சந்திரகுப்தன், நந்தர்களை வீழ்த்தி அரசன் ஆவான் என்றும், அதன் பின்னர் வந்த அரசர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

தர்மம் எதிர்காலத்தில் மிகவும் சீரழிந்து போய், கல்கி அவதாரம் தோன்றும் என்றும் விஷ்ணு புராணம் சொல்கிறது. இப்புராணத்தில் மிக முக்கியமான விஷயம், விஷ்ணுவிடம் பக்தி செலுத்துவதன் உயர்வு என்பதைச் சொல்லலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *