ராவணனைக் கொன்ற மாமனார்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,694 
 
 

சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர் அபூர்வ கர்ண பரம்பரைக் கதை:

ராவணனைக் கொன்ற மாமனார்!

ராவணனின் தாயார் சோகமாக அமர்ந்திருந்தாள். அவள் தினமும் வழிபடும் ஆத்மலிங்கம், ஆதிசேஷனின் சுவாசம் வழியே பாதாள லோகத்துக்குச் சென்று விட்டது. அந்த சோகத்தில் இருந்தவள், மகன் ராவணனை அழைத்தாள். அவனிடம் நடந்ததை விவரித்து, ”உடனே கயிலாயம் சென்று, உனது சாம கானத்தால் சர்வேஸ்வரனை மகிழ்வித்து, அந்த ஆத்மலிங்கத்தைப் பெற்று வருவாயாக!” என்றாள்.

கயிலாயம் சென்ற ராவணன், உமையவளுடன் அமர்ந்திருந்த கயிலாசநாதரை வணங்கினான். காம்போதி ராகத்தில் அவரைப் போற்றிப் பாடினான். ராவணனின் இசையில் மகிழ்ந்த ஈசன், ”வேண்டும் வரத்தைக் கேள்!” என்றார். அப்போது உமையவள் சிரித்தாள். ”எதற்காக சிரிக்கிறாய்?” என்று சிவனார் கேட்க, ”ராவணனுக்கு வரம் அளித்ததும் சொல்கிறேன்” என்றாள் பார்வதி.

”என் தாயார் பூஜித்து வந்த ஆத்ம லிங்கம், பாதாள உலகத்தில் உள்ளது. இந்த லிங்கத்தை வழங்கி அருள வேண்டும்” என்றான் ராவணன்.

அதை ஏற்று ஆத்ம லிங்கத்தை வழங்கிய சிவபெருமான், ”இதை தரையில் வைத்து விட்டால், வேரூன்றி விடும். பின்னர் நகர்த்தக்கூட முடியாது!” என்று சொன்னார்.அதன் பிறகு சாகா வரம் வேண்டினான் ராவணன். அதை சிவனார் நிராகரித்தார்.

”அப்படியெனில், என் மாமனாரின் கையால் மட்டுமே நான் இறக்க வேண்டும்!” என வேண்டினான். எவர் ஒரு வரும் தன் மகள் விதவையாவதை, விரும்ப மாட்டார்கள் என்பதால், இப்படியரு வரம் கேட்டான் அவன். ஈசனும் தந்தருளினார்.

”அடுத்து, இன்னுமொரு வரம்…” என்று சற்றுத் தயங்கிய ராவணன் பிறகு, உமையவளையே வரமாகக் கேட்டான்.

திடுக்கிட்ட ஈசன், பார்வதியைப் பார்த்தார். ‘நான் சிரித்ததன் பொருள் இப்போது புரிகிறதா?’ என்பது போல் பார்த்தாள் பார்வதி. பார்வையின் பொருளை உணர்ந்த ஈசன், ”நீ கேட்டதைத் தந்தோம்” என்றார் ராவணனிடம். அப்போது ஓர் ஒளி, உமையவளிடம் தோன்றி மறைந்தது.

ஆத்மலிங்கத்தை எடுத்துக் கொண்ட ராவணன், உமையவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். வழியில் அந்தணர் வடிவில் மகா விஷ்ணு வந்தார்.

அவரை நிறுத்திய ராவணன், ”அந்தணரே, நான் யார் தெரியுமா? இலங்கேஸ்வரன்!” என்றான்.

”தெரியும். பத்துத் தலைகள் இருந்தும் பைத்தியக்காரத்தனமாக, ஈசனிடம் வரங்கள் பெற்றதும் தெரியும்” என்றார் அந்தணர்.

”என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். பெறுவதற்கரிய ஆத்ம லிங்கம், இறவாமைக்கு நிகரான வரம்… மட்டுமின்றி உமையவளையும் வரமாகப் பெற்றுள்ளேன். இது போதாதா?” என்று இறுமாப்புடன் கேட்டான் ராவணன்.

ராவணனைக் கொன்ற மாமனார்!2

”முட்டாளே, இந்தப் பெண் பார்வதி அல்ல… மாய சக்தி! உண்மையான உமையவளை பாதாள லோகத்தில் உள்ள மயனின் அரண்மனையில் ஒளித்து வைத்துவிட்டு, இவளை உன்னுடன் அனுப்பி விட்டார் மகேசன்” என்றார் அந்தணர். இதைக் கேட்டு அதிர்ந்த ராவணன், மீண்டும் கயிலைக்குச் சென்றான். தன்னுடன் வந்தவளை ஈசனிடமே ஒப்படைத்து விட்டு, பாதாள லோகத்துக்குப் புறப்பட்டான்.

அந்தணராக வந்து, தமது சாமர்த்தியத்தால் தங்கையை மீட்டு மகேசனிடம் சேர்ப்பித்த மகா விஷ்ணு, அடுத்த நாடகத்தையும் அரங்கேற்றினார். தன் உடலில் இருந்த நறுமணம் கமழும் சந்தனத்தைத் திரட்டி, அழகிய பெண் ஒருத்தியை உருவாக்கினார். பிறகு அவளுடன் பாதாள லோகம் சென்று மயனை சந்தித்தார். அவனிடம், ”இவள் என் மகள் மண்டோதரி. இனி முதல் உனது வளர்ப்பு மகள். ராவணன் வந்து இவளை மணக்க விரும்புவதாகக் கூறுவான். அவன் விருப்பப்படியே நடக்கட்டும்!” என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

பிறகு, பாதாள உலகம் நோக்கி வந்து கொண்டிருந்த ராவணனை மீண்டும் அந்தணர் வடிவில் சந்தித்தார் மகாவிஷ்ணு. அவரிடம், ”அந்தணரே! நீர் சொன்னபடி, மாயசக்தியை மகேசனிடம் ஒப்படைத்து விட்டேன். ஒரு உதவி செய்வீர்களா… இந்த ஆத்ம லிங்கத்தை ஒரு முகூர்த்த நேரம் வரை வைத்திருங்கள். நான் காலைக் கடன்களை முடித்து வருகிறேன்!” என்ற ராவணன், ஆத்ம லிங்கத்தை அந்தணரிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.

சொன்ன நேரத்துக்குள் அவன் வராததால், ஆத்ம லிங்கத்தை, மேற்குக் கடற்கரை ஓரத்தில் தரையில் வைத்துச் சென்று விட்டார் மகாவிஷ்ணு.

திரும்பி வந்த ராவணன், அந்தணரைத் தேடினான். ஆத்ம லிங்கம் தரையில் இருப்பதைக் கண்டவன், அதை எடுக்க முயற்சித்தான். அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. ‘தன் தாயாருக்கு என்ன பதில் சொல்வது!’ என்று தவித்தான். இந்த நிலையில், உமையவள் பாதாள லோகத்தில் இருப்பதாக அந்தணர் சொன்னது நினைவுக்கு வர, உடனே பாதாள லோகம் சென்றான்.

அங்கு, மயனின் அரண்மனையில் யாழ் வாசித்துக் கொண்டிருந்த மண்டோதரியைக் கண்டான். அவள் அழகில் மயங்கினான். வந்த விஷயத்தையே மறந்தான். மயன் அனுமதியுடன் மண்டோதரியை மணந்து கொண்டவன், அவளுடன் இலங்கைக்குத் திரும்பினான்.

இதற்குப் பின், மகாவிஷ்ணுவின் ராமாவதாரம் நிகழ்ந்ததும், ‘மாமனாரால் மரணம் அடைய வேண்டும்!’ என்ற வரம் பெற்ற ராவணன், விதி வசத்தால் மதியிழந்து, அவ்விதமாகவே மாண்டதும் யாவரும் அறிந்ததே!

– பெப்ரவரி 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *