வால்மிகியின் மறு அவதாரமாக துளசிதாசர் கருதப்படுகிறார்.
பவிஷ்யோத்தர புராணத்தில் பரமசிவன், “வால்மீகி முனிவர் ஹனுமனிடம் வரம் பெற்று கலியுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தைப் புனைவார்” என பார்வதியிடம் கூறினார்.
வால்மீகி ராமாயணத்தை போலவே துளசி ராமாயணமான ‘ராம சரித மானஸும்’ பக்தியுடன் பக்தர்களின் வீடுகளில் நித்திய பாராயணமாக வாசிக்கப்படுகிறது.
‘சௌபாயி ‘ எனப்படும் நான்கு பதங்கள் உள்ள இரண்டிரண்டு வரிப் பாடல்களாக மனத்தைக் கவரும் வகையில் ராமசரித மானஸ் இயற்றப்பட்டுள்ளது.
சித்ரகூடத்தில் வாழ்ந்த மக்களின் பேச்சு மொழியிலும், போஜ்புரி மொழியும் வ்ரஜ பாஷையும் கலந்த ‘அவதி’ மொழியிலும் ராமசரித மானசைப் புனைந்துள்ளார் துளசிதாசர். ராமசரித மானசில் உபயோகப் படுத்தப்பட்ட சொற்களும், உவமைகளும், ஹிந்தி மொழி மற்றும் உருது மொழி பேசும் வட இந்திய மக்களால் இன்றளவும் பழமொழிகளாகவும், உதாரணங்களாகவும் பேசப்பட்டு வருகின்றன.
துளசி தாசர் தனக்கென்று எந்த ஒரு மடத்தையோ ஆச்ரமத்தையோ உருவாக்கவில்லை என்றாலும் அவருடைய வாழ்க்கையும், எழுத்துக்களும் பலருக்கும் சமய வாழ்விலும், அன்றாட வாழ்விலும் வழி காட்டும் விதமாக அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளன.
ராமசரித மானசைத் தவிர ஐந்து பெரிய நூல்களும், பல சிறிய நூல்களும் இயற்றி உள்ளார் துளசிதாசர்.
அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது
‘ஸ்ரீ ஹனுமான் சாலிசா’ என்ற ஈரடிகள் கொண்ட நாற்பது பாடல்கள். இது இன்றும் மக்களால் பக்தியுடன் பாடப்பட்டு வருகிறது. மக்களால் நித்திய பிரார்த்தனை கீதமாக மிகவும் நம்பிக்கையுடன் பாடப்படும் ஸ்லோகம் ஸ்ரீ ஹனுமான் சாலிசா.
ராமசரித மானசின் ஆரம்பத்தில் துளசி தாசர், ‘இந்நூல் நம் சனாதன தர்மத்தின் வேத, புராண, இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டது’ என்று கூறியுள்ளார்.
’ராமரை விட ராம நாமம் உயர்ந்தது’
என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார் துளசிதாஸர். ராம நாம ஜபம் செய்வதின் அவசியத்தை மிகவும் வலியிறுத்தி உள்ளார்.
தென்னிந்தியாவில் சிவ பக்தர்களான 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பை பெரியபுராணமாக சேக்கிழார் எழுதியதைப் போலவே, வட இந்தியாவில் நபாதாஸ் என்பவர் ஹரி பக்தர்களின் கதைகளை தொகுத்து ‘பக்தமால்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த ‘பக்த மால்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தான் மகிபதி என்ற பக்தர் ‘மகா பக்த விஜயத்தை’ எழுதி உள்ளார். நபாதாஸ் என்பவர் துளசிதாசரின் சம காலத்தவர். அவரும் துளசிதாசரை வால்மிகியின் மறு அவதாரம் என்றே பக்தமாலில் போற்றுகிறார்.
நபாதாஸின் குருவான ஸ்ரீஅக்ரதாஸ், பாரத வர்ஷத்தில் உள்ள அனைத்து ஹரி பக்தர்களின் வரலாற்றையும், அவர் எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராயினும், சேகரித்து எழுதும்படி கட்டளை இட்டிருந்தார்.
“எளிமையான என்னால் அது எப்படி சாத்தியம்?” என்று நபாதாஸ் கேட்ட போது, குரு அருளினார், “அனைத்து பக்தர்களும் அவர்களாகவே உன்னிடம் வந்து தங்களின் கதையைக் கூறி விட்டுச் செல்வார்கள் ” என்று.
இவ்விதமாக சத்திய யுகத்து பிரம்மாவின் வரலாறு முதல் அனைத்து பக்தர்களின் வரலாறுகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
நபாதாசுக்குப் பிறகு அவருடைய சிஷ்யரான பக்த பிரியாதாஸ் என்பவரால் சைதன்ய மகாபிரபு போன்ற பக்தர்களின் வரலாறுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. பக்தமாலில் முஸ்லிம் மகான்களின் வரலாறுகளும் இடம் பெற்றிருப்பது சிறப்பான அம்சம்.
ஒரு முறை நபாதாஸ் பக்தமாலில் தனக்குத் தெரியாமலே, துளசிதாசரின் சரித்திரம் விரிவாக இடம் பெற்று இருப்பதை கவனித்து வியந்தார். ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை துளசிதாசர் எழுதியதற்காக மகிழ்ந்து ஸ்ரீராமரே துளசிதாசரின் சரித்திரத்தை எழுதிச் சென்றதாக உணர்ந்து, துளசிதாசரை அயோத்யா சென்று தரிசித்தார் நபாதாஸ்.
ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த துளசிதாசர் நபாதாசைக் கவனிக்க வில்லை. நபதாஸ் பிருந்தவனத்திற்கு திரும்பி விட்டார். பின், விவரம் அறிந்த துளசிதாஸ், நபாதாசைப் பார்க்க பிருந்தாவன் வந்தார்.
அங்கு ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்கையில் துளசி தாசரின் எதிரில் ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் அளித்தார். கண் திறந்து பார்த்த துளசிதாசர், கிருஷ்ணனின் அழகில் சொக்கிப் போனார்.
கண்களை மூடியபடி அவர் ”பிரபோ! உன் அழகை நான் என்ன வென்று வர்ணிப்பேன்? ஆனால் இந்த துளசிதாசரின் கண்கள் நீ வில்லும் அம்பும் பிடித்து ஸ்ரீராமனாக தரிசனம் கொடுத்தால்தான் திருப்தி அடையுமே தவிர, வேறு உருவத்தில் அல்ல. தனுஷ் பாணம் பிடித்த ஸ்ரீ ராமனுக்குத் தான் என் தலை வணங்குமே தவிர வேறு உருவில் அல்ல” என்று பிடிவாதம் பிடித்தார்.
ஸ்ரீகிருஷ்ணரும் வேறு வழி இன்றி, தன் பிரிய பக்தரை திருப்தி படுத்துவதற்க்காக புல்லாங்குழலை போட்டுவிட்டு வில்லும் அம்பும் பிடித்த ஸ்ரீராமனாக தரிசனம் அளித்தார்.
நாரதர், துளசிதாசரை பிருந்தாவனத்தில் ஒரு கிருஷ்ணர் கோவிலுக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு தான் இந்நிகழ்ச்சி நடந்ததாகவும் கூட கூறப்படுகிறது.
இந்த இடம் இன்றும் பிருந்தாவனத்தில் ‘துளசி ராம தரிசன ஸ்தலம்’ என்று போற்றப்பட்டு மக்களால் தரிசிக்கப்படுகிறது. இங்கு கர்பக்ருஹத்தின் வாயிலில் மொகலாயர் கால சிற்ப வேலைப்பாட்டுடன் ஒரு மண்டபம் கட்டப்பட்டு, பக்தர்களால் சிறந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. துளசிதாசர் தவம் செய்த குடிலும் உள்ளது.
துளசிதாசர் ஸ்ரீ ராமதரிசனம் பெற்ற புனித இடத்தை அடுத்துள்ள நிலம் தற்போது ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு ஒரு பக்தரால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. எங்கு ராமரும் கிருஷ்ணரும் காட்சி தந்தார்களோ, அங்கு ராமகிருஷ்ணருக்கு ஒரு இடம் இருப்பது ஆச்சர்யமல்லவே!
-ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், மார்ச் – 2010ல் பிரசுரமானது.