ரதியின் தோல்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 1,008 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரதி தேவி முதலில் தனக்கு அது வெற்றிதான் என்று எண்ணினாள். ஆனால், அது எவ்வளவு பேதமை என்பது சீக்கிரமே புரிந்து விட்டது .

வசந்தகாலம் தன் மோகனப் போர்வையை இழுத்துப் பரப்பிக் கொண்டு வந்தது. தென்றலின் மென்மையும், குயில் கானத்தின் இனிமையும், சந்திரிகையின் அமுத ஒளியும் இன்பலாகிரி எற்றும் காலம். பூவுலகிலே மனிதர்கள் வாழ்வுச் சுமையை மறந்து, இன்ப நிழலில் சுகம் பெற ஆர்வத்துட்டன் திரியும் பருவம்,

காலம் மனிதர்களை மட்டும் தானா பாதிக்கும்? தேவருலக வாசிகளும் உணர்ச்சியின் பிம்பங்கள் தானே. பிறருக்கு உணர்ச்சி மூட்டி வேடிக்கை பார்ப்பதில் அவர்களுக்குத் தனி இன்பம் இருக்கலாம்; என்றாலும், உணர்ச்சி ஒரு நாகப்பாம்பு. மகுடி நாதத்துக்குக் கட்டுப்பட்டு, ஆட்டுகிறவன் எண்ணம் போல் நெளித்தாலும், திடீரென வளைந்து ஆட்டுபவனையே முத்தமிடத் தவிக்கும் விஷ ஜந்து. தேவருலகத்தவர்களை அது விட்டு விடுமா!

ரதிக்கு அன்று மனதில் தனி இன்பம் பொங்கிப் பிரவகித்தது. மானிட் ஐந்துக்களை ஆட்ட, மனிதனுக்குத் துணையாகச் செல்லும் அந்த அதிரூப சக்தி மீதே காமனின் பக்க பலங்கள் தம் கைவரிசையைக் காட்ட முனைந்து விட்டது போல் தோன்றியது; தென்றலும் நிலவும், குயிலின் குரலும் அவளுக்குத் தவிப்பை உண்டாக்கின.

சோலையிலே வாவியருகில் நின்றாள். பளிங்குச் சிலை போன்ற அவள் மேனியில் பட்டு அழகின் எல்லையை அற்புதமாக எடுத்துக் காட்டிய வெண்மை நிலா அவளுக்குச் சுட்டு விட்டது! நெற்றியில் நெளிந்து கிடந்த கருங் கூந்தலை வருடிய இளங்காற்றும் அவளுக்குக் கொதிக்கும் அனலாய்ப் பட்டது! அப்பொழுது தான் தனது அன்பனின் பாணங்களுக்குப் பலியாகும் மங்கையரின் நிலை அவளுக்குப் புரிவது போல் தோன்றியது. இனிய இடத்திலே இருப்புக் கொள்ளாமல் திரும்பி வந்த ரதி, தனது சயனத்திலே சாய்ந்தாள் வாடி விமும் அழகு மலர் போல.

அவளுக்குத் தனது வெற்றியின் நினைவு எழுந்து சுழன்றது!

வசந்தத்தின் சோபை அரசு செலுத்திக் கொண்டிருந்தது. இயற்கையின் மேனி நெடுகிலும் பருவ மங்கையின் அங்கங்களில் தவளும் மோகனக் கவர்ச்சி மிளிர்ந்தது. ஆயினும், தன் தன்மையையே அறியாமல் வெளியுலகப் பிரக்ஞை சிறிது மின்றி, கண்மூடி மோன சமாதியிலே ஆழ்ந்திருந்தார் அவர். கங்கா முடியும் சர்ப்ப ஆபரணங்களும், நீறு பூசிய மேனியுமாகத் திகழ்ந்த அவரது ஏகாக்கிரக சித்தையைக் கலைக்க வேண்டுமென ஏவப்பட்ட மதனன் வில் வளைத்து மலரம்புகளைத் தொடுத்து நின்றான். பரமேஸ்வரனின் முன்னிலையிலே மோகன அவதாரமாக, பக்தி செய்து நின்றாள் இமவானின் அன்புச் செல்வி. சிவன் கண்களை விழித்தார். பிரகிருதியின் சௌந்தர்யம்…எழிலுக்கோர் எழில் ராணியாக நின்ற பார்வதி..வசந்தச் சூழல்கள் வரண்ட அவரது உதடுகளிலே கூட மென்னகை தவழ்ந்தது. அவர் கண்கள் சுழன்றன. எதிரே பணிவுடன் நின்ற மங்கையின் மீது விழிகள் பதிந்தன. அவள் பக்தியுடன் வணங்கி, பரவசமாய்த் தலை நிமிரும் வேளை. அவள் கண்கள் அவரது முக மலரிலே சாடத் தாவி விடும்…சரியான சமயத்தை எதிர் நோக்கி நின்ற மன்மதனின் புஷ்ப பாணம் பாய்ந்தது. பட்டது சிவன்மேல். பரமசிவன் ஆத்திரமடைந்தார். திறந்தது நுதல் விழி. பிறந்தது செந்தி. பட்டான் காமன்!

காதல் அனலால் உயிர்களைக் கருக வைக்கும் காமன் கருகிச் சாம்பலாய்க் கிடந்தான் தரையிலே. தேவர்களின் சூழ்ச்சியால் வெறும் கருவியாய் செயலாற்றிய மதனன் முடி வடைந்தான், தேவர்கள் கெஞ்சினர்.

தன் நாதனை இழந்த ரதி அலறினாள், அரற்றினாள். அடிபட்ட அன்ன மெனத் தவிக்கும் தன்னையும் பிடிசாம்பலாக மாற்றிவிட நுதல் விழியின் கடாட்சத்திற்காகக் கெஞ்சினாள். தான் உயிர் வாழ, தனது உயிரான காந்தனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள்.

ஏதோ மன மீரங்கி சிவன் மதனனின் சக்தியை உலகில் நிலவவிட்டார். அவன் உடல் மறைந்தது. ஆவி தன் வல்லமையை உலகில் நிலை நாட்டி, ஜீவராசிகளிடையே இன்பம் பரப்பித் தன் அரசுரிமையை ஸ்தாபிக்க அலையும் அருள் பெற்று விட்டது..

அன்று ரதி சந்தோஷத்தால் தன் பிரார்த்தனை பலித்தது என்று தான் மகிழ்ந்தாள். தன் நாதனைக் கண்ணாரக் காண முடியாது. என்றாலும், அவன் வெறும் நினைவு மாத்திரமாகி விடவில்லையே எனப் பூரித்தாள்.

அந்த சமாதானம் வெறும் ஏமாற்று – மன மயக்கு – என்பதை ஓடிய தினங்கள் நிரூபித்து விட்டன்! இன்று அவள் வெயிலில் கருகும் மலரென நைகின்றாள்.

படுக்கையிலே புரண்டாள் ரதி. மோன மூச்செரிந்தாள். உலகின் உயிர்களுக்கு இன்ப வேதனை அளிக்க மதன சக்தியை உயிர்ப்பித்த இறைவனை நொந்தாள். தன் கதியை நினைக்க நினைக்க அவளால், பொங்கி வந்த அழுகையை அடக்க முடியவில்லை. விசும்பி அழ ஆரம்பித்து விட்டாள்…

‘பிரியே!’

அந்தக் குரல், தென்றலினூடே வண்டின் ரீங்காரம் போல் வந்த அந்த தொனி, தூரத்து வேய்ங் குழலின் இனிமை யென ஒலித்த அன்பழைப்பு, அவள் மனதைத் தொட்டது. இன்னும் அதிகமாக அழுதாள்.

‘கண்மணி, ஏன் அழுகிறாய்?’

அவளால் ஒன்றும் பேச இயல வில்லை. மனத்தின் துயரை விண்டுரைக்க முடியாது. வேதனையை சோகப் பொறுமலாகச் சிந்தும் சிறு குழந்தை போல ரதி விக்கி விக்கி அழுதாள். தன்னை அழைத்தது யார் என்பது அவளுக்குத் தெரியும். முன்பு-அது பழங்கதை யல்ல. சில தினங்களுக்கு முந்திய, பிரத்யட்ச வாழ்வாக இருந்தது தான்-அதே அழைப்பு, அந்த அன்புக்குரல் அவள் மனதிலே, அதுவும் அந் நேரத்திலே. அத்தகைய சூழ்நிலையிலே, எவ்வித இன்ப உணர்ச்சிகளை எழுப்பும்! இன்று அவள் சோகத்தால் சாம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!

‘தேவி அழாதே, ஏன் எனது வன்னக்குயில் அழுகிறது?’ என்று கொஞ்சும் குரல், அத்துடன் தன் கன்னங்களிலே வருடும் விரல்களின் இன்ப ஸ்பர்சத்தை உணர்ந்தாள். ஆனால், அந்த இன்பக் கைகளைப் பற்றி முத்தமீந்து அன்புடன் அழகைப் பருக அவளால் இயல வில்லை: ‘ஸ்வாமி’ ‘ஸ்வாமி!’ எனக் கதறினாள்.

‘அன்பே, அழுது என்ன செய்ய? உன்னையே தேற்றிக் கொள், கண்மணி!’

விசித்தழுது துடிக்கும் அவள் மலர் உதடுகளிலே அன்பு முத்தம் விதைக்கும் ‘இச்’ செனும் ஓசை எழுந்தது. என்றாலும், அந்த அன்பு மலர்களை அவள் கண்டு ரசிக்க முடிய வில்லையே! |

அவள் அழுதாள். அன்பன் சாமிபயத்தை உணர்ந்தாலும் அவன் அழகைக் கண்டு மகிழ முடியாத காதலி, மனம் தவியாது என்ன செய்ய முடியும் ? அவன் தொடுவதை அவள் உணர்ந்தாள். அவன் மொழிவதை அவள் செவியுற்றாள். என்றாலும், ஸ்பரிசிக்க முடியாது! தீண்டி விளையாட இயலாது! கேலியுடன் கொஞ்சல் மொழி உகுத்து அவன் இதழ்க் கடையிலே வெடிக்கும் மலர் நகையை, கன்னத்தில் மின்னும் குழிவை, கண்களிலே மிளிரும் கவர்ச்சிமிக்க ஒளியைக் கண்டு அவன் இன்புற முடியாது! என்ன வாழ்க்கை ! அதிலும் பழங்கால இன்ப நினைவுகள் தோன்றி வாதனை செய்யும் போது, இன்ப வாழ்விலே இடியெனப் பாய்ந்த இத்துரதிர்ஷ்ட நிலையை எண்ணி அழாமல் என்ன செய்ய முடியும்?

ரதியும் அழத்தான் செய்தாள். அவள் அழகின் தேவி, காதலியின் லட்சிய நெவு, என்றாலும் அவள் பெண்! அன்பனைப் பிரிந்த ஏக்கம் அவள் இதயத்தைச் சுட்ட்து. அவளுக்கு நேர்ந்தது எவ்வித துர்ப்பாக்கிய நிலைமை! அவள் அழுதாள்.

‘பிரயே!’

‘ஊங்’ கொட்டும் எழுச்சி கூட அவளுக்கு ஏற்படவில்லை.

‘தேவி, எவ்வளவு நேரம் தான் இப்படி அழுது கொண்டிருப்பாய்?’

அவள் தன் வேதனையை அடக்க முடியாமல் விசும்பினாள். ‘அழுது அழுது துயரத் தீயால் கருகும் வரை, சோகம் என்னையே தின்றுவிடும் வரை, நானும் தங்களைப் போல் ஆவியாக அருவமாகத் தேயும் வரை..’

அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. தோல்வியின் நினைவும் சோகத்தின் பொறுமலும் கலந்து வெளியிட்ட பெருமூச்சு தான் ஒலித்தது. அத்துடன் இணைத்தது மற்றோர் பிரிவுத் துயர் மூச்சு!

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *