யார் உண்மையான சீடன்?

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 7,450 
 
 

புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர் அணுக்கத் தொண்டராக (எந்த நேரமும் குருவுடன் இருந்து, குறிப்பறிந்து அவருக்குத் தொண்டு புரிபவர்) வைத்துக் கொண்டதில்லை.

யார் உண்மையான சீடன்ஒரு நாள் புத்த பகவான் தன் சீடர்களைப் பார்த்து, ‘‘இது வரை எனக்கு அணுக்கத் தொண்டர் எவரும் இல்லை. இப்போது முதுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்படி ஒருவர் தேவை. அப்படி என்னுடன் இருக்க விரும்புகிறவர் உங்களில் யார்?’’ என்று கேட்டார்.

பெரும்பாலான சீடர்கள் ஆர்வத்துடன் எழுந்து நின்றனர். புத்தர் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரே ஒரு சீடர் மட்டும் ஒரு மூலையில் அமர்ந்து நிலம் நோக்கித் தலை தாழ்த்தியிருந்தார். புத்த பகவானின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. அவர் பெயர் ஆனந்த தேவர். உடனே மற்ற சீடர்கள் அதிர்ஷ்டசாலியான ஆனந்த தேவரைச் சூழ்ந்து கொண்டனர். ‘‘ஆனந்த தேவரே… புத்த பகவான் தங்களை அணுக்கத் தொண்டராக ஏற்க விரும்புவதாகத் தெரிகிறது. இது ஒரு பெரும் பேறு. உடனே பகவானிடம் தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்!’’ என்று கூறினர்.

ஆனந்த தேவர் தயக்கத்துடன் புத்த பகவானை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தலை குனிந்தார். இதை கவனித்த புத்த பகவான் புன்னகைத்தபடி, ‘‘ஆனந்தர், அவர் விருப்பப்படி நடந்து கொள்ளட்டும். யாரும் அவரைக் கட்டாயப்படுத்த வேண்டாம்!’’ என்றார்.

சட்டென்று பதறியெழுந்த ஆனந்த தேவர் தயக்கத்துடன் பேசினார்: ‘‘பகவானே… நான்கு விஷயங்களைத் தாங்கள் எனக்கு மறுக்க வேண்டும். மட்டுமின்றி, வேறு நான்கு விஷயங்களை எனக்கு அருள வேண்டும். அப்படிச் செய்தால் அடியேன் என்றென்றும் தங்கள் அணுக்கத் தொண்டனாக இருப்பேன்!’’ என்றார்.

‘‘சொல்லுங்கள் ஆனந்தரே… நான் எதை எல்லாம் மறுக்க வேண்டும்?’’ என்று கேட்டார் புத்த பகவான்.

‘‘புத்த பகவானே… ஒன்று: பகவானுக்குக் கிடைக்கும் நல்லுணவு. இரண்டு: அதேபோல் நல்ல துணிமணிகள். மூன்று: பகவானுக்கு அளிக்கப்படும் ஆசனத்தில் அடியேனுக்கு இடம். நான்கு: பகவானை பூஜை செய்ய யாரேனும் அழைத்தால் தங்களுடன் என்னையும் உடன் அழைத்தல்!’’ என்று ஆனந்த தேவர் கூறியதைக் கேட்ட புத்த பகவான், ‘‘நல்லது. தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறேன். நான்கு விஷயங்களை அருள வேண்டும் என்கிறீர்களே… அவற்றையும் சொல்லுங்கள்…’’ என்றார்.

பகவானைப் பணிவுடன் வணங்கிவிட்டு, ‘‘முதலாவது: பூஜை செய்ய எவரேனும் என்னை அழைக்கும் பட்சத்தில் அது எனக்கானதல்ல; தங்களுடையது. அதைத் தாங்களே ஏற்க வேண்டும். இரண்டாவது: பகவானை தரிசிக்க நான் எவரையேனும் அழைத்து வந்தால், தாங்கள் அவர்களுக்கு தரிசனம் தந்தருள வேண்டும். மூன்றாவது: நான் மனம் தடுமாறும் வேளையில் திசை மாறிப் போய்விடாமல் எளியேனைத் தேற்றித் தாங்கள் நல்வழிப்படுத்த வேண்டும். நான்காவது: அடியேன், தங்கள் அருகில் இல்லாதபோது மற்றவர்களுக்கு அருளும் உபதேசங்களை மீண்டும் அடியேனுக்கும் உபதேசித்தருள வேண்டும்!’’ என்று வேண்டினார்.

ஆனந்த தேவரின் குருபக்தி நிறைந்த வேண்டு கோள்களுக்கு இணங்கிய புத்தர்பிரான், அவரைத் தன் அணுக்கத் தொண்டராக ஏற்றுக் கொண்டார். அந்த விநாடியிலிருந்து புத்த பகவான் நிர்வாணம் அடையும் வரை அவரின் மனதுக்கு உகந்த, சிறந்த அணுக்கத் தொண்டராக விளங்கினார் ஆனந்த தேவர்.

_ என். மணிமேகலை நெடுஞ்செழியன், சிதம்பரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *