முனிவருக்கு ஏன் தண்டனை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,484 
 
 

யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர்.

அவர்களின் தலைவன், ”முனிவரே… கொள்ளைக்காரர்கள் சிலர், இந்த வழியாக வந்தார்களா?” என்று கேட்டான்.

முனிவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எரிச்சலுற்ற படைத் தலைவன், ”முனிவரே, நான் கேட்பது உங்கள் செவிகளில் விழுகிறதா… இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டான்.

முனிவருக்கு ஏன் தண்டனைஅப்போதும் அவரிடம் இருந்து பதிலேதும் இல்லை. படைத் தலைவனின் கோபத்தைப் புரிந்து கொண்ட வீரன் ஒருவன், ”தலைவரே… முனிவர் ஆழ்ந்த நிஷ்டை யில் இருக்கிறார் போலும்! அவரிடம் பேசி எந்தப் பலனும் இல்லை!” என்று சமாதானம் செய்தான்.

அதை ஆமோதித்த படைத் தலைவன், நாலா திசையிலும் தன் பார்வையை ஓட விட்டான்.

‘ஆள் அரவம் அற்ற இந்த வனத்தில், முனிவரைத் தவிர வேறு எவரும் இல்லையே? கொள்ளையர்கள் பற்றி வேறு எவரிடம் விசாரிப்பது?’ என்று தனக்குள் புலம்பினான். அப்போது, வீரர்களில் ஒருவன் சற்று தூரத்தில் ஆசிரமம் ஒன்று இருப்பதைக் கண்டான்!

”கவலை வேண்டாம் தலைவரே! அதோ, அங்கு ஓர் ஆசிரமம் தெரிகிறது பாருங்கள். ஒருவேளை கொள்ளையர் அங்கு பதுங்கி இருக்கலாம் அல்லது அந்த ஆசிரமத்தில் வேறு எவரேனும் இருக்கலாம். அங்கு சென்றால் நிச்சயம் பலன் கிட்டும்!” என்றான்.

மறு கணம், வீரர்களுடன் அந்த ஆசிரமத்தை நோக்கி குதிரையை செலுத்தினான் படைத் தலைவன்.

அவர்கள் உள்ளே நுழைந்து தேடினார் கள். அந்த வீரன் கணித்தது சரிதான். அந்த ஆசிரமத்துக்குள் பொருட்களைப் பதுக்கி வைத்து விட்டு, ஆசிரமத்தின் பின்புறம் ஒளிந்திருந்தது கொள்ளையர் கூட்டம். பொருட்களைக் கைப்பற்றியதுடன் கொள்ளையரையும் கைது செய்து படைத் தலைவனின் முன் நிறுத்தினர்.

அவர்களைக் கண்டதும் படைத் தலைவனுக்கு முனிவரின் நினைவு வந்தது! அவன், முனிவரையும் கொள்ளையரையும் இணைத்து தப்புக் கணக்குப் போட்டான். ‘முனிவர் வேடத்தில் இருக்கும் அவனே இந்தக் கும்பலுக்குத் தலைவனாக இருக்கக் கூடும். அவனே கொள்ளைக்கு மூல காரணம்!’ என்று முடிவு செய்தவன் அரண்மனைக்கு விரைந்தான்.

நேராக அரசனிடம் சென்ற படைத் தலைவன், ”அரசே… கொள்ளையரையும், அவர்களின் தலைவனையும் பிடித்து விட்டோம்! இதுவரை நம் நாட்டில் நடந்து வந்த கொலை- கொள்ளைகளுக்கு மூலகாரணமான அந்தக் கயவன், முனிவர் வேடத்தில் கானகத்தில் தங்கி நம்மை ஏமாற்றி உள்ளான்!” என்றான்.

இதைக் கேட்டுப் பெரிதும் சினம் கொண்ட அரசன், ”கணமும் தாமதிக்காமல் அவனை சூலத்தில் ஏற்றுங்கள்!” என்று உத்தர விட்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்! கானகத்துக்குச் சென்ற படைத் தலைவன், அரசனின் ஆணையை நிறைவேற்றும் விதமாக, யோக நிலையில் இருந்த மாண்டவ்ய முனிவரை சூலத்தில் ஏற்றினான்.

நாட்கள் நகர்ந்தன. சூலத்தில் தொங்கிய நிலையிலும் தனது யோக சக்தியின் காரணமாக உயிருடன் இருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அங்கு வந்த முனிவர்கள் பலர், மாண்டவ்ய முனிவரின் நிலையைக் கண்டனர்.

”உமக்கா இந்த கதி?!” என்று வருந்தினர்.

”இந்த நாட்டு மன்னன் எனக்கு அளித்த வெகுமதி இது!” என்றார் மாண்டவ்ய முனிவர்.

‘மாண்டவ்யர் கொள்ளையன் அல்ல; பெரும் முனிவர். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது’ என்கிற செய்தி காட்டுத்தீ போல் நாடெங்கும் பரவியது. உண்மை அறிந்த மன்னன் ஓடோடி வந்தான். சூலத்தில் இருந்து முனிவரை விடுவிக்க ஆட்களை ஏவினான்.

அத்துடன், ”முனிவரே… உங்களது பெருமையை அறியாமல், அடியேன் செய்த பிழை யைப் பொறுத்தருள வேண்டும்” என்று கதறியபடி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான். முனிவர் அவனைத் தேற்றி, வழியனுப்பி வைத்தார்.

பிறகு, தனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள தர்மதேவதையிடம் சென்றார்.

”தர்ம தேவதையே, என்ன அநியாயம் இது? இந்த உபத்திரவத்தை அனுபவிக்கும் அளவுக்கு நான் செய்த பாவம் என்ன?” என்று ஆவேசமாக கேட்டார் மாண்டவ்யர்.

தர்மதேவதை அமைதியாகப் பதில் அளித்தாள்: ”முனிவரே, பட்சிகளையும் வண்டுகளையும் இம்சித்ததால் ஏற்பட்ட பாவத்தின் விளைவு இது!”

முனிவர் அதிர்ச்சி அடைந்தார்: ”நான் இம்சை செய்தேனா… எப்போது?” எனக் கேட்டார்.

”நீங்கள் குழந்தையாக இருந்தபோது!” என்றது தர்ம தேவதை. அவ்வளவுதான்! ஆவேசம் அடைந்தார் மாண்டவ்ய முனிவர்.

”தர்ம தேவதையே! இது அநியாயம்; அக்கிரமம். அறியா பருவத்தில் தெரியா மல் நான் செய்த தவறுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை தந்த நீ, பூலோகத் தில் மனிதப் பிறவி எடுக்கக் கடவது!” என்று சபித்தார்.

முனிவரின் சாபம் பலித்தது. அதன்படி பூமியில் விதுரனாக அவதரித்தாள் தர்மதேவதை.

மகாபாரத கதாபாத்திரங்களில் மிக முக்கியமானவர் இந்த விதுரர்; வியாசரின் புதல்வர். தர்ம சாஸ்திரத்திலும் ராஜ தந்திரத்திலும் சிறந்த ஞானியான விதுரரது உபதேச மொழிகள், ‘விதுர நீதி’ என்று புகழ் பெற்றவை!

– மார்ச் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *