(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மனிதராகப் பிறந்தவர்கள் பேச்சு என்னும் பெரு வரத்தைப் பெற்றிருக்கிறார்கள். பெற்ற அதைத் தக்க வண்ணம் பயன்படுத்த வேண்டும். அறிவுடையவன் என்று பெருமை கொள்ளும் மனிதன் தனக்கு அகப்பட்ட எல்லா வற்றையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதுதான் முறை. வேறு பிராணிகளுக்குக் கிடைக்காத வாக்கை நன் முறையிலே பயன்படுத்தினால் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். காலுடையவன் நடந்தால்தான் காலுடையவன் என்பதற்கு உரியவன் ஆவான். அப்படியே வாயுடையவன் பேசினால் தான் அவன் வாயுடைய மனிதன் என்று சொல்வதற்குத் தகுதி உடையவன் ஆவான். வாயுடையவன் மனிதன்; மற்றப் பிராணிகள் எல்லாவற்றையும் வாய் இல்லாத பிராணிகள் என்று சொல்கிறோம்.
பேசுகிறவன்தான் மனிதன்; நல்லதைப் பேசுவது தான் பேச்சு; ஆகையால் நல்லதைப் பேசுபவன்தான் மனிதன் என்று சொல்லவேண்டும்.
“சொல்லுக சொல்லிற் பயனுடைய”
என்று குறள் கூறுகிறது.
நல்லதைப் பேசுகிற நாளை, மனிதப் பிறவியை நன்கு பயன்படுத்திய நாள் என்று சொல்லலாம். அப்படிப் பேசாத நாளைப் பயன் பெறாத நாள் என்னலாம். அதையே இன்னும் அழுத்தமாகச் சொன்னால் பிறவா நாள் என்று சொல்லி விடலாம். அப்பர் சுவாமிகள் அப்படித்தான் சொல்கிறார்.
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே
என்கிறார்.
முன்னால் ஒன்றும் சொல்லாமல், பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று சொல்லி யிருந்தால், எப்போதும் வழ வழவென்று பயனில்லாத வார்த்தைகளைப் பேசுகிறவர்களை யெல்லாம் உயர்ந்த மனிதர்களாகக் கொள்ள வேண்டி வரும். திருநாவுக்கரசர் அப்படிச் சொல்லுவாரா? இன்ன வாறு பேசவேண்டும் என்று தெரிந்து கொண்டவர் அவர்.
எதை எதையோ பற்றிப் பேசுகிறாமே, அந்தப் பேச்சி னால் பெரிய பயன் ஒன்றும் இல்லை ஆனால் இறைவனைப் பற்றிப் பேசும் பேச்சு நல்ல பயனைத் தரும். அதைச் சொல்ல வருகிறார்.
சிதம்பரமாகிய பெரும்பற்றப் புலியூருக்குப் போய் நடராசப் பெருமானைத் தரிசித்து இன்புற்றார் நாவுக்கரசர் அப்போது அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது. ‘என்ன என்னவோ பேசிப் பொழுது போக்குகிறார்களே மனிதர்கள். பேசப் பெரிதும் இனிய பெருமானாகிய இறைவனுடைய புகழைப் பற்றிப் பேசத் தெரியவில்லையே! பேசப் பேசக் குறைவு படாமல் எல்லை யின்றிப் பெருகும் புகழ் அல்லவா அவன் புகழ்? அவனைப் பேசாத பேச்சும் ஒரு பேச்சா? அவனைப் பேசாத நாளும் ஒரு நாளா?’ என்று எண்ணினார். இறைவனுடைய இயல்புகளைச் சற்றே சிந்திக்கப் புகுந்தார். அவன் அறிவதற்கரிய நுண்ணிய பொருளாக இருப்பதை எண்ணிப் பார்த்தார்; அவ்வாறு இருந்தாலும், அன்புடை யாருக்கு இன்பம் தரும் அநுபவப் பொருளாக இருப்பது நினைவுக்கு வந்தது; பலவகைத் தேவர்களாக இருக்கும்
இயல்பையும் நினைவுக்குக் கொண்டு வந்தார்; உலகில் உள்ள ஐம்பெரும் பூதங்களாக இருப்பதைச் சிந்தனை செய்தார். இன்னும் எண்ண எண்ண விரியும் இயல்புகளை யெல்லாம் அவர் உள்ளம் முகந்து உணர்ந்து மகிழ்ந்தது; அவற்றைப் பாடத் தொடங்கினார்.
இறைவன் அரிய பொருள்; நுட்பமான பொருள். இந்த இயல்பை ஐந்து வகையாகச் சொன்னார். அவன் புலன் களால் அறிவதற்கு அரியவன்; அந்தணருடைய சிந்தையிலே கருத்துப் பொருளாக நிற்பவன்; பொருள் அறிவதற்கரிய வேதத்தினுள்ளே இரகசியப் பொருளாக இருப்பவன்; நுட்பப் பொருளாகிய அணுவாக இருப்பவன்; யாருக்கும் தெரியாத இயல்பை உடையவன். இவ்வாறு பாடினார்.
அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனை.
இறைவன் அரிய பொருளாக இருந்தால் நமக்குப் பயன் என்ன? அவன் அரிய பொருளே யன்றி இல்லாத பொருள் அன்று. தன்னைத் தொழுது அன்பு செய்வார் நுகரும் இன்பப் பொருளாகவும் அவன் இருக்கிறான். எல் லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் பொருள் ஒருவனுக்குக் கிடைத்ததானால் அது பெரிது அன்று. மிக மிக அரிய பொருள் சிலருக்குக் கிடைக்கும் பொருளாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதைப் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டாகும். யார்க்கும் தெரியாத தத்துவனாகிய அவன் அன்புடையாருக்குத் தேனாக இனிக்கிறான்; பாலாக இனிக் கிறான். அவனுடைய அருள் பெற்ற பின் உலகத்துப் பொருள் களின் உண்மை புலனாகிறது. சூரியனது ஒளியினால் இருளில் சிறிதும் தெரியாமல் இருந்த பொருள்க ளெல்லாம் தெளி வாகத் தெரிவதைப் போல. இறைவனுடைய திருவருள் பெற்ற பிறகு காணும் காட்சியே வேறாக இருக்கிறது. இறைவன் அந்தக் காட்சிக் குரிய ஒளியாக விளங்குகிறான்.
தேனைப் பாலைத் திகழ் ஒளியை.
கடவுள் அரியவனாகவும் இனியவனாகவும் இருப்ப தோடு பல மூர்த்திகளாகவும் இருந்து உலகைக் காப்பாற்று கிறான். தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனாகவும் கரிய திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கிறான்.
தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனை.
தெரிவதற்கு அரிய பொருளாக இருத்தல், அன்புடை யாருக்குத் தேனும் பாலுமாக ஒளியாக இருத்தல். மூர்த்தி களாக இருத்தல் என்ற மூன்று நிலையும் யாவராலும் எளிதிலே காணமுடியாதவை. அவ்வாறின்றி எல்லோருமே கடவுளின் இருப்பை உணர வகை உண்டு. உலக வாழ்க்கை யில் மனிதனுக்கு இன்றியமையாத கனலாகவும் காற்றாகவும் இருப்பவன் அவனே; கடலாகவும் மலையாகவும் இருப்பவன் அவனே; ஐம்பெரும் பூதங்களாக நிற்பவன் அவன், கனல் தேயு: காற்று வாயு; கடல் அப்பு; மலை பிருதிவி; பெரும் பற்றப் புலியூராகிய சிதம்பரமோ இறைவன் வெளியாகி விளங்குவதைக் காட்டும் தலம். இந்த ஐந்து பூதங்களும் இயற்கையின் மூலப்பொருள்களாகும்.
கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானை.
அரிய பொருளாகவும் அநுபவப் பொருளாகவும் மூர்த்திகளாகவும் இயற்கையாகவும் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பேசும் பேச்சே பேச்சு. அந்தப் பேச்சைப் பேசும் நாளே வாழும் நாள். அல்லாத நாள்; நாள் வாழாத நாள். பிறவாத நாள்.
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழ்ஒளியைத் தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனை கடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.
[உணர்வதற்கு அருமையானவனை, அந்தணருடைய சிந்தனையில் தியானப் பொருளாய் இருப்பவனை, அரிய வேதத்தின் உட்பொருளாய் உள்ளவனை. எத்தகைய வன்மை உடையவருக்கும் தெரியாத இயல்புடையவனை, தன்னை அடைந்தவர்களுக்குத் தேனைப் போலவும் பாலைப் போலவும் இனிய பொருளாய் இருப்பவனை, விளங்குகின்ற சோதியை, தேவர்களுக்கு அரசனாக உள்ளவனை, கரிய நிற முள்ள திருமாலாக இருப்பவனை, நான்முகனாக விளங்குபவனை, கனலாகவும் காற்றாகவும் ஒலிக்கின்ற கடலாகவும் பெருமையையுடைய மலையாகவும் எங்கும் கலந்து நிற்கும் பெரிய பெருமானை, பெரும்பற்றப் புலியூராகிய தில்லையில் உள்ளவனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே ஆகும்.
மற்றை – மேலே சொன்ன பொருளன்றி வேறாகிய. கரியான் – திருமால். கனை – ஒலிக்கும்].
கனல் முதலிய நான்காலும் நான்கு பூதங்களை உணர்த் திப் பெரும்பற்றப் புலியூரான் என்பதனால் ஆகாசத்தையும் பெற வைத்தார்.
இப்பாடல் ஆறாம் திருமுறையின் முதல் பதிகத்தில் உள்ள முதல் திருத்தாண்டகம்.
– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.