பகலை இரவாக்கிய பதிவிரதையின் கற்பு!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,804 
 

அத்திரி மற்றும் வசிஷ்ட முனிவர்களது காலத்தில் வாழ்ந்தவர் கௌசிக முனிவர். இவரின் மனைவி சைப்யை, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று வாழ்ந்த பதிவிரதை.

முன்வினைப் பயனால், கௌசிக முனிவரை குஷ்ட ரோகம் பீடித்திருந்தது. ஆனாலும், எந்த விதமான அருவருப்பும் வெறுப்பும் காட்டாமல், கணவருக்குத் தேவையான பணிவிடைகளை செவ் வனே செய்து வந்தாள் சைப்யை.

பகலை இரவாக்கியஇந்த நிலையில், தன் மீது சைப்யை கொண் டிருக்கும் அன்பை சோதிக்க முனைந்தார் கௌசிகர். மனைவியை அழைத்தவர், ”சைப்யை… எனக்கு, தாசி ஒருத்தியிடம் சயன சுகம் அனுபவிக்க ஆசை. எனவே, என்னை ஒரு தாசியிடம் அழைத்துச் செல்!” என்றார்.

கணவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் பெண்கள், எந்தக் காரணத்துக்காகவும் தன் கணவனை மட்டும் வேறு பெண்ணுக்கு விட்டுத் தர மாட்டார்கள்! ஆனால் சைப்யை, தன் கணவரது ஆசையை நிறைவேற்ற விரும்பினாள்.

ஆனால், எப்படி நிறைவேற்றுவது? ‘எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும், அவன் அருவருக்கத் தக்க நோயாளியாக இருந்தால், அவனுடன் உடல் ரீதியாக சேர்வதற்கு எந்தப் பெண்தான் ஒப்புக் கொள்வாள்?’ என்று யோசித்தாள் சைப்யை.

அருகில் உள்ள நகரில் வசிக்கும் தாசி ஒருத்தியிடம் கேட்டுப் பார்ப்போம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டாள். அவளிடம் தன் கணவனது நோயைப் பற்றியும் அவரது விருப்பத்தையும் கூறி னாள்.

ஆனால், தாசி சம்மதிக்க மறுத்தாள். உடனே, அவளின் கால்களில் விழுந்து கெஞ்சி, கண்ணீர் விட்டு அழுதாள் சைப்யை. ‘கணவன் மீது இவ்வளவு பக்தியுடன் இருக்கிறாளே!’ என்று மனமிரங்கிய தாசி, கௌசிகரின் விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்தாள். கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தாள்.

”ஊர் அடங்கிய நடுநிசி வேளையில், கௌசிகரை அழைத்து வர வேண்டும். மிகக் குறைந்த நேரமே அவர் இங்கு இருக்க வேண்டும்!” என்றாள்.

இதற்கு, சைப்யை ஒப்புக் கொண்டாள். நன்றி யுடன் தாசியை வணங்கி விட்டு, குடிலுக்குத் திரும்பினாள். இதையடுத்து, கௌசிகரை மூலிகை கள் கலந்த வெந்நீரில் நீராட்டிய சைப்யை, அவருக்கு வாசனைத் திரவியங்கள் பூசினாள். புத்தாடைகளை அணிவித்தாள்!

நடுநிசி வேளையில்… பெரிய பிரம்புக் கூடை ஒன்றில் துணிகளைப் பரப்பி, அதில் கௌசிகரை அமர வைத்து, அதைத் தன் தலையில் சுமந்து தாசி வீட்டுக்குப் புறப்பட்டாள். தன் கால்களை வெளியே தொங்கவிட்டபடி கூடையில் அமர்ந்திருந்தார் கௌசிகர்.

எங்கும் இருள்! கூடையைச் சுமந்தபடி நாற்சந்தி ஒன்றைக் கடந்தாள் சைப்யை. அப்போது கௌசிக முனிவருக்கு நோயின் தாக்கத்தால், கால்களில் வலி ஏற்பட்டது. அவர், தன் கால்களை உதறினார்.

அங்கே, கழுமரம் ஒன்று நடப்பட்டிருந்தது. திருட்டுக் குற்றம் சாட்டப் பட்டிருந்த மாண்டவ்ய முனிவர் அதில் கழுவேற்றப்பட்டிருந்தார். உயிர் பிரியாத நிலையில், வலியால் முனகிக்கொண் டிருந்தார் மாண்டவ்யர்.

இந்த நிலையில், கூடையில் அமர்ந்து சென்ற கௌசிகரின் கால்கள் தன் மேல் பட, துடிதுடித்துப் போனார் மாண்டவ்யர். அவரின் வலி மேலும் அதிகரித்தது! குஷ்ட நோயால் பீடிக்கப்பட்ட கௌசிகரின் கால்கள் தன் மீது பட்டதை ஞான திருஷ்டியால் அறிந்த மாண்டவ்யர், கடும் கோபம் கொண்டார்.

‘செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் நான். இதில், குஷ்டரோகத் தால் பாதிக்கப்பட்ட கால்களால், உதையும் வேறு வாங்க வேண்டுமா?’ என்று வெகுண்டார். கௌசி கரை சுமப்பது, அவரின் மனைவி சைப்யை என்பதை அறிந்ததும், மாண்டவ்யரின் கோபம் அவள் மேல் திரும்பியது. ”சூரிய உதயத்தின்போது, நீ மாங்கல்யத்தை இழப்பாய்” என்று சபித்தார்.

இதனால் மனம் கலங்கிய சைப்யை, மாண்டவ் யரைப் பணிந்து, எதிர்பாராமல் நிகழ்ந்த தவறை மன்னிக்குமாறு வேண்டினாள். ஆனால், அவளது வேண்டுகோளை மாண்டவ்யர் ஏற்கவில்லை.

பதைபதைத்துப் போன சைப்யை, ”நான் பதிவிரதை என்பது உண்மையானால், சூரியன் உதிக்காமலேயே போகட்டும்!” என்று பதில் சாபம் கொடுத்தாள்!

கற்பு எனும் நெருப்பு, கதிரவனைச் சுட்டது. அவன் உதயமாகாமல் போக… இரவு, நகர மறுத்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் நித்ய கர்மாவை செய்ய முடியாமல் தவித்தனர். யாகங்கள் நின்றன; தேவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. உலகமே துன்பத்தில் ஆழ்ந்தது.

‘பதிவிரதையான சைப்யையின் சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி?’ என்று தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்தனர். ‘பதிவிரதையின் சாபத்தை மற்றொரு பதிவிரதையால் மட்டுமே முறியடிக்க முடியும்!’ என்ற முடிவுக்கு வந்தனர்.

அதன்படி, அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயாவைச் சரணடைந்தனர் தேவர்கள். அவளிடம் அனைத்தையும் விவரித்து, சைப்யையின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றுத் தருமாறு வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்று, சைப்யையை சந்தித்தாள் அனுசூயா.

சைப்யையிடம், ”சகோதரி! உனது சாபத்தால், சகல லோகங்களுமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் நன்மையை மனதில் கொண்டு, நீ அளித்த சாபத்தைத் திரும்பப் பெற வேண்டும்!” என்றாள் அனுசூயா. அதற்கு சைப்யை, ”சூரியன் உதித்தால், என் கணவரை இழக்க நேரிடுமே!” என்றாள் வருத்தத்துடன்.

உடனே அனுசூயா, ”மாண்டவ்ய முனிவரது சாபத்தை நினைத்துதானே கவலைப்படுகிறாய். வருந்தாதே! ஒரு வேளை, உன் கணவருக்கு மரணம் நேர்ந்தால், அவரை உயிருடன் எழச் செய்வது என் பொறுப்பு” என்று உறுதி அளித்தாள். அனுசூயாவின் பெருமையை சைப்யை அறிவாள். எனவே, அவளது வாக்கில் நம்பிக்கை வைத்து தனது சாபத்தை திரும்பப் பெற்றாள். இதையடுத்து, சூரியன் உதயமானான். அனைவரும் மகிழ்ந்தனர்!

அதே நேரம், மாண்டவ்ய முனிவரின் சாபத்தின்படி கௌசிக முனிவர் மரணத்தைத் தழுவினார். சைப்யை, கதறி அழுதாள். அப்போது அனுசூயா, தன் கணவரான அத்திரி மகரிஷியை மனதில் தியானித்து, ”பகவானே! நான் பதிவிரதா தர்மத்தை மீறாதவள் என்பது உண்மையெனில், சைப்யையின் கணவர் நோய் நீங்கி, மீண்டும் உயிர்பெற்று எழ வேண்டும்!” என்று வேண்டினாள்.

மறு கணம், உயிர்பெற்று எழுந்தார் கௌசிகர். அவரின் குஷ்டரோக நோயும் நீங்கியது. தன் கணவரை வணங்கி நின்றாள் சைப்யை.

கற்பின் மகிமையை உணர்ந்த தேவர்களும் முனிவர்களும்… சைப்யை, அனுசூயை ஆகிய இருவரையும் ஆசிகள் கூறி வாழ்த்தினர்.

-கல்யாணபுரம் ஸத்யமூர்த்தி, சென்னை-90 (செப்டம்பர் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *