தொடர்ந்து நின்ற தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 4,587 
 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர் எப்போதும் சிவபெருமானையே எண்ணிப் பேசி வாழ்கிறவர்; இனிய சொற்களையே பேசுகிறவர். ‘அவருடைய வாக்கிலிருந்து மட்டும் அத்தகைய இனிய சொற்கள் வரு வதற்குக் காரணம் என்ன?’ என்று ஒருவன் யோசித்தான். அவனுக்கு நல்ல வார்த்தைகளையே பேச வேண்டுமென்று ஆசை. முயன்றும் பார்த்தான். அவனால் முடியவில்லை. ஐந்து நிமிஷம் பல்லைக் கடித்துக்கொண்டு இனிமையாகப் பேசு கிறான்; ஆனால் அடுத்த கணத்தில் கடுமையான சொல் வெடித்துக்கொண்டு புறப்பட்டு விடுகிறது.

சிவனடியாரின் இன்சொல்லைக் கேட்டபோதெல்லாம் அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று. “எப்படி ஐயா, இந்தப் பேச்சைக் கற்றுக் கொண்டாய்?” என்று அந்தப் பக்தரையே கேட்டு விட்டான். அவர் சொன்னதைக் கேட்ட போது அந்த மனிதனுக்கு வியப்பாக இருந்தது. அவர் என்ன சொன்னார் தெரியுமா? “நான் கற்றுக் சொள்வதாவது!

எல்லாம் சிவபெருமானுடைய செயல்” என்றார்.

“நீ பேசுகிறாய். சிவபெருமானுடைய செயல் என்கிறாயே!”

“நான் பேசவில்லை. அவன் பேச வைக்கிறான். இந்த வாய் பேசுகிறது- அவனருள் இல்லாவிட்டால் என் நாக்கு இயங்காதே!”

“அப்படியானால் சிவபெருமான் உன் வாயில் இருந்து கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக உனக்குச் சொல்லித் தருகிறானா?”

“அப்படியும் வைத்துக் கொள்ளலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை.”

பக்தர் சொன்னது அந்த மனிதனுக்கு விளங்கவில்லை. மேலே கேள்வி கேட்கத் தொடங்கினான்.

“அப்படியானால் நீயாக ஒன்றை நினைத்துப் பேசுவதில்லையா?” என்று கேட்டான்.

“நினைப்பதண்டு. ஆனால் அந்த நினைப்பைக் கூட அவன் தான் தோற்றுவிக்கிறான்.”

“அப்படியா? சிவபெருமான் உன்னுடைய மனத்திலும் இருந்து கொண்டு உனக்கு நினைப்பை உண்டாக்குகிறான் என்றா சொல்கிறாய்?”

“ஆம் அவன் என் மனத்தில் தோன்றும் கருத்திலும் இருக்கிறான்.”

“சரி, சரி; அவன் உன் மனத்தில் இருக்கிறான் என்கிறாய்; கருத்தில் இருக்கிறான் என்கிறாய். நீ கருதுவதே இல்லை யானால் காரியங்களைச் செய்து முடிப்பது எப்படி?”

“எவன் என் வாக்கில் இருந்து பேசச் செய்கிறானோ. எவன் என் மனத்தில் தோன்றும் கருத்தில் இருக்கிறானோ, அவனே எனக்குத் தோன்றும் கருத்தின்படி காரியங்களை யெல்லாம் நிறைவேற்றி வைக்கிறான்” என்று அடியார் விடையிறுத்தார்.

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்து அறிந்து முடிப்பான் தன்னை.

கேள்வி கேட்டவன் சற்றே சிந்தனையில் ஆழ்ந்தான். •இப்படி ஒரு பேர்வழி பேச்சிலும் நினைப்பிலும் இருந்து உதவி செய்பவனாக இருந்தால் அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள தான் வேண்டும்” என்ற விருப்பம் அவனுக்கு எழுந்தது.

“வாயில் இருப்பவன் என்றும், மனத்திலும் கருத்திலும் இருப்பவன் என்றும், கருத்தை அறிந்து காரியத்தை முடித்துக் கொடுப்பவன் என்றும் சொல்கிறாயே; அவன் உருவமே இல்லாத நுண் பொருளா? நம்முடைய கண்ணுக்குப் புலப்படுபவனா?”

அடியவருக்கு அவனுடைய உள்ளத்தே ஆராய்ச்சி பிறந் திருப்பது தெரிந்தது. இறைவன் அருள் திருமேனியை உடையவனாக இருப்பான் என்பதைச் சொன்னால் அவன் வணங்கிப் பயன்பெறக்கூடும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்கு ஏற்ற வகையில் இப்போது பேசலானார்.

“ஆம். அப் பெருமானைக் கண்ணாரக் காண இயலும். ஆர்வமும் அன்பும் உடைய அடியார்கள் தம் அகக் கண்ணா லும் புறக் கண்ணாலும் கண்டு களிப்பதற்கு ஏற்ற தூய வடிவத்தை அவன் மேற்கொள்வான். அவன் தூயவன். அவ டைய திருக்கோலத்தில் தூய்மைக்கு உருவமாகிய வெண்மை யான பொருள்களைக் காணலாம். அவனுக்கு ஒரு வாகனம் உண்டு. அது தூய வெள்ளை ஏறு. அவன் திருமுடியில் அணிந்திருப்பது வெண் திங்கள். கண்ணியை அப்பெருமான் சடையில் அணிந்தது போல அந்தச் சுடர்த் திங்கள் காட்சி அளிக்கும்.”

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானை.

“அப்பெருமானுடைய இயல்புகளை இன்னும் சொல், கேட்கிறேன்” என்றான் கேள்வி கேட்ட மனிதன். இப்போது பக்தரே கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“உனக்கு அன்னை இருக்கிறாளா?”

“இல்லை, இறந்து போய் விட்டாள்.”

“குழந்தையினிடம் எல்லா அன்னை மாரும் அன்பாக இருக்கிறார்களா?”

“குழந்தைப் பருவத்தில் பெரும்பாலோர் அன்பாக இருக்கிறார்கள். குழந்தை பெரியவனாகி விட்டால் அந்த அன்பு மாறிவிடுகிறது” என்றான் அவன்,

“குழந்தை எப்போதும் தாயுடன் இருக்கிறது, அது வளர்ந்து பெரியவனானால் தாய் அந்தக் குழந்தையுடன் இருக்க முடிகிறதா!” என்று பக்தர் கேட்டார்.

“அது எப்படி முடியும்? குழந்தைதான் தாயோடு வளரும். வளர்ந்த பிள்ளை வேலை செய்யப் போகும் இடங் களுக்கெல்லாம் தாய் போக முடியுமா?”

“ஆகவே, குழந்தையினிடம் எவ்வளவு அன்புடைய தாயானாலும் எப்போதுமே அந்தக் குழந்தையோடு இருக்க முடியாது. எல்லா இடத்துக்கும் தாய் போக முடியாது. தன் ஆயுட்காலம் முடிந்தால் அவள் நிரந்தரமாகத் தன் மகனைப் பிரிந்து விடுகிறாள். இவ்வளவும் உண்மைதானே?”

“ஆம்; உண்மை” என்றான் அந்த மனிதன். அவனுக்கு இப்போது பணிவும் உண்டாயிற்று.

“எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் தொடர்ந்து நிற்கும் தாய் யாரேனும் உண்டா?”

“எப்படி இருக்க முடியும்?”

“உலகத்துத் தாய்மாரால் அது முடியாத காரியம். ஆனால் எல்லா உயிர்களுக்கும் எப்போதும் எவ்விடத்தும் தொடர்ந்து நின்ற தாயாக இருப்பவன் இறைவன்” என்றார் பக்தர்.

“சற்றே விளக்கியருள வேண்டும்” என்றான் புதிய அன்பன்.

“ஒரு பிறவியிலேயே ஒருமகன் பெரியவனானால் அவனுடைய தாய் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து செல்ல முடியாது. கடைசியில் அவள் அவனை இவ்வுலகில் விட்டுவிட்டு இறந்து மறு பிறவியை அடைகிறாள். அங்கே அவள் யாருக்கோ மகளாகப் பிறந்து அவளைத் தாய், தாய் என்று சொல்கிறாள். அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவு அற்று விடுகிறது. இப்படி அறாமல் என்றும் எல்லா உயிர் கடகும் எவ்விடத்தும் தாய்போல் இருந்து அருள் புரிகின்ற இறைவன்தான். உண்மையான தாய் அவனே. குழந்தைக்குப் பசி உண்டானால் அழுகிறது. அவ்வழுகை கேட்டுப் பாலூட்டுகிறாள் தாய். அதனால் அவளுடைய அன்பு தெரிகிறது, தன் உடம்பில் உள்ள குருதியே பாலாக மாற அதை ஊட்டுகிறாள் அவள். அவளுடைய அவளுடைய தியாகம் பெரிது என்று சொல்கிறோம். ஆனால், ஊர் செல்பவனுக்குப் போகிற இடத்திலே உணவை முன் கூட்டியே ஆயத்தமாக வைத் திருப்பவனைப் போலக் குழந்தை கருவிலே தோன்றி முதிர முதிர அதற்குப் பால் வேண்டுமென்று கருதி இறைவனல்லவா தாயினிடம் பாலை உண்டாக்கி வைக்கிறான்? தாய் தன் முயற்சியினால் பாலை உற்பத்தி செய்வதில்லையே! அந்தத் தாயைத் தாயாக்கிப் பாலூட்டும் வகையை அமைக்கும் அருளாளன் இறைவன் அல்லவா? ஆதலால் அவனைத்தான் உண்மையான தாயாகச் சொல்ல வேண்டும். ஒரு பிறவியில் சில காலம் தாயாக இருந்து இறந்து போகும் போகும் தாய் போலன்றி எக்காலத்தும் எவ்விடத்தும் தொடர்ந்து நிற்கும் தாய் அவன்.”

பக்தர் கூறியவற்றில் உள்ளம் ஆழ்ந்துநின்றான் அன்பன். “அவன் எல்லோருக்கும் தாயானால் எல்லோருமே அவன் அருளாலே இன்பத்தை அடையலாமே!” என்று அவன் ஒரு சந்தேகத்தைத் தெரிவித்தான்.

“எனக்குத்தா யாகியாள் என்னை ஈங்கு இட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்” (நாலடியார்.)

“எல்லோருக்கும் தாயாக இருந்து காப்பாற்றினாலும் மெய்யறிவு பெறுதல் முதலிய நன்மைகளை, முயற்சி செய் பவர்களுக்கே அருள்பவன் அவன். தவம் செய்தால் நன்மை பெறலாம். எவ்வளவுக்கெவ்வளவு தவத்திலே ஈடுபடு கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை உண்டாகும். இறைவனும் பொதுவாக யாவருக்கும் தனுகரண புவன போகங்களைத் தந்தாலும், தன்னை அணுகி அன்பு செய்து முயல்பவர்களுக்கு ஏற்ற வகையில் அருள் செய்வான். அந்தத் திறத்தில் தவத்தைப் போன்ற தன்மையை உடையவன் அவன்,”

தொடர்ந்து தின்ற
தாயானைத் தவமாய தன்மை யானை.

“உலகத்தில் அவனுடைய திருவருளைப் பெற்று இன் புறும் அடியார்கள் சிலரே இருக்கிறார்கள்; ஆனால் மகாதேவ னாகிய அவனை அணுகி அவனுடைய அருளை அமரர்கள் யாவரும் பெற்று இன்புறுகிறார்கள் போலும்!” என்று தன் கருத்தை மெல்லச் சொன்னான் புதிய அன்பன்.

“அதுதான் இல்லை” என்றார் பக்தர்.

வியப்பில் ஆழ்ந்த அன்பன், “ஏன்?” என்றான்.

“தேவர்கள் தேவலோகத்தில் இருக்கிறார்கள். பூவுலகத்தைவிடத் தேவலோகம் இறைவனுக்கு அருகில் உள்ளது என்று நினைப்பதற்கு இல்லை. தேவர்கள் புண்ணியப் பயனை நுகரும் பொருட்டுச் சொர்க்க லோகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய புண்ணியக் கணக்குத் தீர்ந்து விட்டால் மறு படியும் இந்தப் பூமியில் வந்து பிறப்பார்கள். சுக வாழ்வில் இருப்பதால் தேவர்களுக்குச் செருக்கு அதிகம். ஏதேனும் தமக்குக் குறை உண்டானால் இறைவனை அணுகுவார்கள். இறைவனிடம் காரணம் இல்லாத தூய அன்பு அவர்களிடம் இல்லை. அதனால் இறைவனும் அவர்களை நெருங்குவதில்லை. அவர்களுக்கு அரியவனாகவே இருக்கிறான.

*தவமொக்கும் நலம்பயப்பில்” (கம்ப ராமாயணம்.)

“எல்லாத் தேவர்களுக்கும் அணுகுவதற்கரியவனா? அல்லது இந்திரன் முதலிய தலைவர்களுக்கு எளியவனாக இருப்பவனா?”

“தலைமைப் பதவி வகிக்கும் தேவாதி தேவர்க்கும் என் றும் சேய்மையில் இருப்பவன் அவன். ஆனால் பக்தர்களுக்கு. அணிமையில் இருப்பவன்.”

“என் போன்றவர்கள் அவனைத் தரிசிப்பது எப்படி?”

“தென்றமிழ் நாட்டில் கூடல் என்னும் பெயரை உடைய மதுரை இருக்கிறது. அங்குள்ள திருக்கோயிலாகிய திருவாலவாய்க்குச் சென்று கண்டால் இறைவனுடைய உருவத் திருமேனியைக் காணலாம். அந்த உருவைத் தியானிக்கலாம். அவனிடியைப் பற்றுக் கோடாகக் கொண்டு சிந்திக்கலாம். எனக்கு அந்தப் பாக்கியம கிட்டியது” என்று கூறினார் சிவனடியார்.

தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

இறைவன் அடியார்களின் வாக்கில் நின்று பேசச் செய் பவன்; மனத்தில் நின்று நினைக்கச் செய்பவன்; நினைப்பில் நின்று முயலச் செய்பவன்; முயற்சியில் நின்று கருதிய காரியம் கைகூடச் செய்பவன்; தன்னை வழிபடும் அன்பர்கள் அகத்திலும் புறத்திலும் காணும் வண்ணம் தூய உருவத் திருமேனி கொண்டு இடபவாகனனாகிச் சந்திரசேகரனாகி எழுந்தருள்பவன்; எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வுயிரை யும் தொடர்ந்து நின்று உதவும் தாயாக விளங்குபவன்; முயற்சி செய்பவர்களுக்கு நன்மையைத் தரும் தவத்தைப் போன்ற தன்மை உடையவன்; அடியார்க்கு எளியவனாக இருந்தாலும் தேவாதி தேவருக்கு அரியவன்; இத்தகையவன் திருவாலவாயில் எழுந்தருளி யிருக்கிறான்.

இந்தக் கருத்தை வைத்து அப்பர் சுவாமிகள் ஒரு திருத் தாண்டகத்தைப் பாடியருளினார்.

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற
தாயானைத் தவம் ஆய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

[தூயான் – தூய்மையை உடையவன். சுடர்-நிலவு. தவம் ஆய தன்மையானை – தன்மையில் தவமே ஆக இருப்பவனை. ஆய – தலைவராகிய. சேயான் – அணுகுதற்கரியவன், கூடல்-மதுரை. திருவாலவாய் என்பது மதுரையில் உள்ள திருக்கோயிலின் திருநாமம், சிந்தித்தல் – தியானித்தல்,

‘தொடர்ந்து நின்றென் தாயானை’ என்பது ஒரு பாடம். தொடர்ந்து நின்ற என் என்பதன் விகாரமாகக் கொண்டு’ தன்னைத் தொடர்ந்து நின்ற எனக்குத் தாய் போல அருள் புரிகிறவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.]

திருநாவுக்கரசர் மதுரைப் பதிக்குச் சென்றபோது பாடிய பதிகத்தில் உள்ளது இது; ஆறாந் திருமுறையில் 19- ஆம் பதிகத்தில் எட்டாம் பாசுரமாக அமைந்திருப்பது.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *