கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி கேள்விகளில் தேர்ந்த மேதை. ஞானப் பண்டிதரான இவர், தம் பிரஜைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராமல், சரிசமமாக பாவித்தவர். இருப்பினும் ஜனகர், உலக விஷயங்களில் பற்றற்று ஒரு துறவி போல் வாழ்ந்தார். எனவே, இவரை ‘ராஜரிஷி’ என்றே அழைத்தனர்.
ஜனகரின் புகழும், செல்வாக்கும் சுகதேவன் எனும் முனிவருக்குள் பகையுணர்ச்சியையும் பொறாமை யையும் ஏற்படுத்தியது. முற்றும் துறந்த முனிவரானாலும் பொறாமை அவரை ஆட்டிப் படைத்தது. ‘நாட்டின் மன்னனாக, அரண்மனையில் சுகபோக மாக வாழும் ஜனகர் எப்படி ராஜரிஷியாவார்? அவரது கபட வேடத்தைப் புலப்படுத்த வேண்டும்’ என்ற எண்ணத்துடன் ஒரு நாள் அவர் ஜனகரது அரண்மனைக்குச் சென்றார்.
சுகதேவ முனிவரை ஜனகர் வரவேற்று உபசரித்து, உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்தார். அப்போது, அங்கு ஜனகரின் மந்திரி வந்தார். அவர் பணிவுடன் அரசரிடம் ஏதோ கூற, மறு கணம் முனிவரை நோக்கி ஜனகர், ‘‘தவசீலரே! தாங்கள் இங்கு வந்தது என் பாக்கியம். தாங்கள் உணவருந்தி, சிறிது இளைப்பாறிச் செல்லுங்கள். நான் அரசுக் கடமை ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தம். தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்!’’ என்று கேட்டுக் கொண்டார். மௌனமாக விடையளித்தார் முனிவர்.
தனது அலுவல்களுக்குப் பிறகு வந்த ஜனகர், சுகதேவ முனிவரிடம் பேசத் தொடங்கினார். நடந்தவாறே இருவரும் பேசியபடி அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவரும் வெகுதூரம் வந்துவிட்டனர். அப்போது இடைவிடாத குதிரையின் குளம்படியோசை கேட்டதால் இருவரும் அப்படியே நின்று விட்டனர். அப்போது குதிரையிலிருந்து இறங்கிய வீரன் ஒருவன் மன்னனை நெருங்கி, ‘‘மன்னா! அரண்மனை தீப்பிடித்து எரிகிறது! தங்களது உடைமைகள் யாவும் தீயில் கருகி விட்டன!’’ என்று பதற்றத்துடன் கூறினான்.
‘‘எனது உடைமைகளா? அப்படி ஏதும் அங்கு இல்லையே?’’ _ மன்னர் நிதானமாகக் கூறினார்.
‘‘ஐயோ! அரண்மனை தீப்பிடித்து எரிகிறதா? இப்போது நான் என்ன செய்வது?’’ என்று அழுது அரற்றினார் சுகதேவ முனிவர்.
‘‘தவசீலரே, அமைதியாயிருங்கள்!’’ & ஜனகர் கூறினார்.
‘‘அமைதியா? எனது கமண்டலம், தண்டம் ஆகியவற்றை அரண் மனைக்குள்தானே வைத்துவிட்டு வந்தேன்?’’ என்று ஏகத்துக்கும் புலம்பினார் முனிவர்.
ஜனகர் அப்போதும் அமைதியாக இருந்தார். சுகதேவனுக்கு அப்போதுதான் உறைத்தது. ‘அரண்மனையே தீப்பிடித்து எரிந்தும், பற்றற்ற நிலையில் இருக்கும் ஜனகர் எங்கே? கமண்டலமும் தண்டமும் போய் விட்டதே என்று அரற்றிய நாம் எங்கே?’ சிந்தித்தபோது உண்மை, அவரைத் தீயாகச் சுட்டது.
தன்னையும் மீறி சுகதேவ முனிவரின் வாய் முணுமுணுத்தது: ‘‘மன்னா, உண்மையிலேயே தாங்கள் ராஜரிஷிதான். சந்தேகமே இல்லை! தவறாக எண்ணிய என்னை மன்னித்து அருளுங்கள்!’’
– ஜனவரி 2007