மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர். மூலே சாஸ்திரியின் நண்பர் புட்டி சாகேப். நாக்பூரில் வசித்து வந்த இவர், ஷீர்டி சாயிபாபாவின் பக்தர்.
ஒரு முறை புட்டி சாகேப்பை சந்திக்க விரும்பினார் மூலே சாஸ்திரி. அவர் ஷீர்டிக்குச் சென்றிருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்றார்.
அங்கு, சாயிபாபாவை தரிசிக்க துவாரகா மாயீயிக்குக் (பாபா தங்கியிருந்த மசூதியையே துவாரகாமாயீ என்பர்) கிளம்பிக் கொண்டிருந்தார் புட்டி சாகேப். அவருடன் சேர்ந்து துவாரகா மாயீயிக்குச் சென்றார் மூலே சாஸ்திரி. அங்கு சாயிபாபா, தன்னை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பழங்களை விநியோகித்துக் கொண்டி ருந்தார். அவரின் கைரேகையைப் பார்த்துப் பலன் அறிய விரும்பினார் மூலே சாஸ்திரி. ஆனால், பாபா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வெளியே ஓரிடத் தில் அமர்ந்தார் சாஸ்திரி. புட்டி சாகேப் மட்டும் துவாரகாமாயீயின் உள்ளே சென்று பாபாவை தரிசித்து வந்தார். பிறகு, நண்பர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர்.
மறு நாள் காலை. வழக்கப்படி லெண்டித் தோட்டத்துக்கு உலாவப் புறப்பட்ட ஸ்ரீசாயிபாபா, மசூதி அன்பர்களிடம், ‘‘கொஞ்சம் ‘ஜெரு’ எடுத்து வையுங்கள். நான் இன்று குங்குமப்பூ நிற ஆடையை அணிய நினைத்துள்ளேன்!’’ என்றார். ‘ஜெரு’ என்பது, வெள்ளைத் துணியை செந்நிறமாக்கும் சிவப்பு மண்.
‘பாபா, ஏன் செந்நிற ஆடை அணிய வேண்டும்?’ என்று அன்பர்களுக்குக் குழப்பம். எனினும் அவரது உத்தரவை அப்படியே நிறைவேற்றினர்.
மதிய ஆரத்தி நேரம். புட்டி சாகேப்பை அழைத்த சாயி பாபா, ‘‘அந்த நாசிக் பிராமணனிடம் இருந்து தட்சணை வாங்கி வா!’’ என்று பணித்தார்.
உடனே விடுதிக்கு விரைந்த புட்டி சாகேப், தன் நண்பர் மூலே சாஸ்திரியிடம் சாயிபாபாவின் விருப்பத்தைக் கூறினார்.
‘சாயிபாபா போன்ற ஞானி, அக்னி ஹோத்ரி பிராமணனான என்னிடம் தட்சணை வாங்கி வரச் சொல்வது ஏன்?’ என்று குழம்பினார் மூலே சாஸ்திரி. எனினும், நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க அவருடன் துவாரகாமாயீயிக்குச் சென்றார்.
அதன் வாயிலை அடைந்ததும், ‘அக்னி ஹோத்ரத்தைச் சார்ந்த& புனிதமான கர்மானுஷ்டானங்களைச் செய்யும் நான், இந்த மசூதிக்குள் சென்று பாபாவை எப்படிச் சந்திப்பது?’ என்று யோசித்த மூலே சாஸ்திரி, நண்பர் புட்டி சாகேப்பின் ஆலோசனைப்படி அங்கிருந்தபடியே தான் வைத்திருந்த மலர்களை பாபாவை நோக்கி வீசினார்.
மறுகணம் அவர் ஓர் அற்புதத்தை உணர்ந்தார். உள்ளே வீற்றிருந்த ஸ்ரீசாயிபாபா, மூலே சாஸ்திரியின் குருவான ‘கோலப் ஸ்வாமி’யாக செந்நிற ஆடையுடன் காட்சி தந்தார் (கோலப் ஸ்வாமிகள் எப்போதும் காவி உடையே அணிந்திருப்பார்).
‘இறந்து போன ஸ்ரீகோலப் ஸ்வாமி, இங்கு எப்படி..?’ என வியந்த மூலே சாஸ்திரி, ஓடோடிச் சென்று குருவின் பாதக் கமலங்களில் விழுந்து நமஸ்கரித்தார். ஆரத் திப் பாடல் துவங்கியது. மூலே சாஸ்திரி தன் குருநாதரின் நாமப் போற்றிப் பாடல்களைப் பெருங்குரலெடுத்துப் பாடினார். ஆனந்தக் கூத்தாடினார். ஆரத்தி முடிந்தது. மீண்டும் குருவின் கால்களில் விழுந்து வணங்கிய மூலே சாஸ்திரி நிமிர்ந்து பார்த்தார்.
இப்போது குருநாதர் இருந்த இடத்தில், ஸ்ரீசாயிபாபா தம் இரு கரங்களையும் நீட்டி தட்சணை கேட்பதைக் கண்டார். பாபாவின் பேரானந்தமான ரூபத்தையும் ‘எல்லாம் நானே!’ என்ற சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரது சக்தியையும் உணர்ந்த மூலே சாஸ்திரி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். தான் கொண்டு வந்த தட்சணையை கோலப் ஸ்வாமிகளின் கைகளில்… இல்லை இல்லை… ஸ்ரீசாயிபாபாவின் கரங்களில் சமர்ப்பித்தார் மூலே சாஸ்திரி.
இதைக் கண்ட துவாரகாமாயீ அன்பர்கள் மெய்சிலிர்த்தனர். காலையில், ‘ஜெரு எடுத்து வையுங்கள்!’ என்று ஸ்ரீசாயிபாபா கூறியதற் கான பொருள், இப்போது அவர்களுக்குப் புரிந்தது.
– நந்தி அடிகள், சென்னை-4 (டிசம்பர் 2007)