சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு, விலைமாது ஒருத்தியின் வீட்டுக்குப் போனான். அதிகமான போதையால் பாதி வழியிலேயே தள்ளாடி விழுந்தான். நினைவு திரும்பியதும், ‘தான் செய்தது… செய்ய இருந்தது எல்லாமே பாதகங்கள்’ என்று உணர்ந்தான். பிறகு தன் கையிலிருந்த பணத்தில் கொஞ்சம் பூமாலை& சந்தனம் ஆகியவற்றை வாங்கி… அருகிலிருந்த சிவன் கோயில் வாசலில் வைத்துவிட்டுத் தனது வீட்டுக்கு சென்றான்.
காலம் கடந்தது. சூதாடியின் பூலோக வாழ்க்கை முடிவடைந்ததும் அவன் எமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
‘‘வாழ்நாள் பூராவும் இழிசெயல்களைச் செய்த உனக்கு நரகம்தான். சிறிதளவு சந்தனத்தையும், மலரையும் சிவபெருமானுக்கு அர்ப்பணித்ததால் மூன்று நாழிகை நேரம் சொர்க்கத்தில் இருப்பாய்!’’ என்றான் எமன்.
‘‘பிரபு! எனக்கு நரக வாசம் சரிதான். ஆனால், சொர்க்கத்தின் மூன்று நாழிகை நேரத்தை எனக்கு முதலில் கொடுத்து, இந்திரனின் இருக்கையில் அமர்ந்து ஆட்சி புரிய அனுமதிக்க வேண்டும்!’’ என்று மன்றாடினான்.
எமதர்மன் நீண்ட நேரம் இந்திரனிடம் வாதாடி, சூதாடி கேட்ட இந்திர பதவியை பெற்றுத் தந்தான்.
தேவலோகத்துக்கு அதிபதியான சூதாடி, முதலில் தேவேந்திரனின் ஐராவதம் என்ற யானையை அகத்தியருக்கு தானமளித்தான். உச்சைச்ரவா என்கிற குதிரையை விசுவாமித்திர முனிவருக்குக் கொடுத்தான். காமதேனு என்னும் பசுவை வசிஷ்ட மகரிஷிக்கு வழங்கினான். சிந்தாமணி எனும் ரத்தினமாலையை காலவ மகரிஷிக்கு தாரை வார்த்தான். இப்படி, சொர்க்கத்தில் இருந்த விலை மதிப்பற்ற பொருட்கள் மொத்தத்தையும் மூன்று நாழிகைகளில் தானம் அளித்துவிட்டு அரியணையிலிருந்து வெளியேறினான்.
மூன்று நாழிகைக்குப் பிறகு தேவேந்திரன் வந்தபோது அமராவதி நகரமே சூனியமாக இருந்தது. அவன் எமதர்மனைப் பார்த்து, ‘‘நீங்கள் ஒரு சூதாடிக்கு எனது பதவியை அளித்து, சொர்க்க லோகத்தையே நாசமாக்கி விட்டீர்கள்!’’என்று கர்ஜித்தான்.
‘‘தேவேந்திரா, நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பூலோகச் சூதாடி இந்தக் குறுகிய நேரத்தில், எண்ணற்ற தானங்கள் அளித்து, நீங்கள் செய்துள்ள நூற்றுக் கணக்கான வேள்விகளைவிட அதிகப் புண்ணியம் பெற்று விட்டான்!’’ என்று எமதர்மன், விளக்கினான். இப்படிப்பட்ட தான மகிமையால் சூதாடி மறுபிறவியில், மகா புண்ணியசாலியும், கொடையாளியுமான விரோசனனுக்கு மகனாகப் பிறந்தான். எவ்வளவு பெரிய பதவியும் அதிகாரமும் பெற்றிருந்தாலும், எவன் ஒருவன் கர்வமின்றி, நல்ல காரியங்களைச் செய்கிறானோ அவனே மேலானவன்!
– ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (பெப்ரவரி 2007)