சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை நாடகம்
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 1,185 
 
 

(இந்நூல் அ.கீ.சு.நூலக ஓலைச்சுவடியிலிருந்து (எண்.ஆர். 2721) பதிப்பிக்கப்படுவதாகும், கி.பி. 1848 ஐ ஒட்டிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி-4 | பகுதி-5

விருத்தம் 

109. ஆருயிர்த் தோழா நீயே 
ஆசைகொண் டலைந்து மாரன் 
போருயற் வாளி பட்டுப் 
புலம்பிட வேண்டாங் கண்மாய் 
வாருயர் முலையி னாளை 
வருந்தியே முன்பு நீக்கிச் 
சீருயர் மகிழ்வாய் நின்னைச் 
சேரநாம் செய்கு வோமே! 

(மாரன் – மன்மதன், வாளி அம்பு) 

வசனம் 

“இப்படியாகச் சுந்தரருடனே சொல்லி, பூசை பண்ணுகிற குருக்கள் போலே வடிவெடுத்துப் பரவையார் வீட்டுக்குப் போகிற விதமெப்படியென்றால்.” (79) 

தரு 

110. காயமெல்லாம் நீறு பூசிக் 
காஷாய வேஷ்டி போர்த்து 
தூயருத்தி ராட்ச மார்புந் 
துவளு முன்னாலுங் 
காதினிற் பொற்குழை மின்ன 
கவனமாகிப் பறவைவாழுங் 
கோதிலாத மனைக்குப் பூசை 
குருக்கள் போகின்றார்! 

வசனம் 

“இப்படியாகப் போய், பரவையார் வாசலிலே போய்க் கடைதிறப்புச் சொல்லுகிற வசனமெப்படியென்றால்” (80) 

குறுந்தாழிசை 

111. அரவா பரணர் திருத்தோழ ராசைத் 
துணைவ ரெனவந்து 
பரவாய் பரவாய் ஓகோ பைம்பொற் 
கபாடந் திறமினோ! 
கரவா மனத்தா ரூரர் கணவீ ரெனவந்த காதற்
பரவாய் பரவ யோகோ பைம்பொற் 
கபாடந் திறமினோ! 

வசனம் 

“இப்படியாக அழைத்தபோது, பரவையார் தாமே எதிர் கொண்டழைத்துப் போய்ப் பொற்பீடத்தின்மீது யெழுந்தருளப் பண்ணிஒழுக்கத்துடனே சொல்லுகிற வசனமெப்படி யென்றால்.” (81) 

தரு 

112. அங்கணிருந் தெழுந்தருளி 
அபூர்வமா யிரவுதன்னில் 
இங்கு வந்தகாரியத்தை 
இயம்புவீர் இயம்புவீரே! 

பாதியிர லாகியெங்கும் 
பனிமடங்க லானபின்பு 
நீதியோகா ணீர்வருக 
நிகழ்த்துவீர் நிகழ்த்துவீரே! 

வசனம் 

“அந்த வசனத்தைக் கேட்டுக் குருக்கள் சொல்லுகிற வசன மெப்படியென்றால்,” (82) 

ஓடத்தரு 

113. அனமிசைந்த நடையாரே 
ஆருரர் துணைவியாரே
மனமிசைந்து கொள்வோ 
மெனில்ஒன்று சொல்வேன் 

சொல்லாத பேச்செல்லாம் 
சுயமுனக்கா கிப்போச்சே 
நல்லாய்நீ தள்ளாமல் 
நம்மனுவைக் கேட்பாயே! 

வசனம் 

“பரவையார் சொல்லுகிற வசனம் எப்படி யென்றால்,” (83) 

ஓடத்தரு 

114. நடைநடந்து கால்கள்தேய்ந்து 
நங்கையுடன் பேசிப்பேசி 
முடியநாவும் வாயுமெல்லாம் 
முட்டைபோல் உலர்ந்துதையோ 

வேண்டிவேண்டிக் கைகள் தானும் 
மெத்தவுமே நொந்துதையோ 
ஈண்டியென்ன செய்துநின்றாலும் 
இணங்கிலைகாண் என்செய்வேனே! 

விருத்தம் 

115. என்செய்வேன் எனது தோழா 
இரந்திரந் தினிது பேசி 
பின்செய்து மருங்கு லாளை 
வேண்டியெப் படிச்சொன் னாலும் 

முன்செய்த பிழையை யெண்ணி 
முனிவது நீங்கி டாமல் 
தன்செயல் தானெண் ணாமல் 
தள்ளினாள் எனையுந் தானே! 

வசனம் 

“சுவாமியார் சொன்ன வசனங் கேட்டு தளர்ச்சியுடனே சொல்லு கிற வசனமெப்படி யென்றால்,” (84) 

பதம் 

116. ஏது செய்வேன் சிவனே? – நான் ஏது செய்குவேன்?
ஏது செய்வேனினி எவரைத் தூதேவியுங் 
காதலின் வேலைக் கரைசேர்வே னையோ? (ஏது) 

உன்னாலேஆகா தொருவரா லாகுமோ?
என்னாவி பின்னு யிருக்குமோ சொல்லையா? (ஏது) 

விருத்தம் 

117. வங்கணக் காரா கேளாய் 
வருந்திநீ இருக்க வேண்டாம் 
நங்கணம் பரவை யாரை 
நயந்திரந் தினிது பேசி 

செங்கண்ணு முனிவை நீக்கி 
சேர்ந்துன்னைக் கூடச் செய்து 
இங்கணோர் கணத்தி லெய்தி 
இருந்துனை அனுப்பு வேனே! 

வசனம் 

“இப்படியாக சுந்தரருடனே சொல்லி சுவாமியார் தூதுக்குப் போகிற விதமெப்படி யென்றால்.” (85) 

விருத்தம் 

118. அப்பொழு தரனார் தாமும் 
அதிசய வடிவு மாகி 
மைப்படி கண்டந் தோன்ற 
மான்மழு கரத்தி லேந்தி 

மெய்ப்பறை கங்கை வைத்தே 
வேணியும் நீற்றும் பூக்கம் 
ஒப்பிலா யிரவி கோடி 
ஒளிர்தர வருகின் றாரே! 

பதம் 

119. தூதுக்குவந்தனர் காண்! – சுந்தரரே 
தூதுக்கு வந்தனர்காண்! 
தூதுக்கின்றே மணிவீதி குளிரவொரு 
பாதிக்கு ளகரர்தொழு மாதிக்கச் சிவனார் (தூதுக்) 

துந்துமி வாத்திமி திந்தியம் திமியென்ன 
சந்திரா தித்தர்கள் பந்தம் பிடிக்கவே! 
சுரர்சொரி பூமழை தரையெங்கும் நிறையவே
வரமுனி வோர்தொழப் பரவையார் மனைக்கு (தூதுக்) 

வசனம் 

“இப்படியாக, சுவாமியார் வரச்சே பரவையார் எதிர்கொண்டு வந்து போற்றுகிற விதமெப்படி யென்றால்” (86) 

பதம் 

120. சங்கரா சதுர்வேத நாதா 
சதாசிவா பரமேசுவரா! 
பொங்கார வணிபூஷணா – சிவ 
ரங்கவா தெய்வ நாயகா? 

போற்றி போற்றி போற்றி! 
நிர்க்குண நீலகண்டாபோற்றி! 
பார்வதி பிராண வல்லப போற்றி 
தாண்டவ பாத பங்க போற்றி
சந்திர சடாதரா போற்றி போற்றி 

வசனம் 

“இப்படியாகப் போற்றி செய்து பின்னையுஞ் சொல்லுகிறவசன மெப்படியென்றால்,” (89) 

தரு 

121. என்னையொரு பொருளாகிச் சிவனே! – இங்கண் 
எழுந்தருளி வந்தென்ன சிவனே? 
முன்னும் வந்தது நீயோ சிவனே? முடிய 
மூடினா னறியேனே சிவனே! 

தனிமை செய்தா ராரூரர் சிவனே!அந்த
சங்கிலி சிக்கானார் சிவனே! 
இனியேது செய்யநான் சிவனே – எனக்(கு) 
இதுபுத்தி என்சொல்வாய் சிவனே! 

வசனம் 

“இப்படியாகப் பரவையார் சொன்ன வசனங்கேட்டு, சுவாமியார் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (88) 

விருத்தம் 

122. அந்தரம் அறிமுன் னீரே 
அகிலமு மறிய நின்பால் 
சுந்தரர் பரவை யாரே 
தூதுவந் தனனாங் கண்டாய் 

இந்திர போக மாக 
எமதுயிர்த் தோழ னாரை 
மந்தர முலைக ளார 
மணந்துநீ வாழ்கு வாயே! 

வசனம் 

“இப்படியாகச் சுவாமியார் சொல்லக் கேட்டு, பரவையார் சொல்லுகிறவசனம்யெப்படியென்றால்,” (90) 

விருத்தம் 

123. சுந்தரன் தொண்டன் நானே 
தொழும்பனீ யாண்ட வள்ளல் 
எந்தனிச் சையுமொன் றுண்டோ 
எப்படி திருவுள் ளத்திற் 

சிந்தித மாச்சோ வந்த 
சொற்படி செய்வே னையா 
நந்தமை யானார் தெய்வ 
நாயகி பாக னாரே! 

வசனம் 

“இப்படியாகச் சொல்லிவந்து சுந்தரேசனே சொல்லுகிற வசனமெப்படி யென்றால்,” (90) 

விருத்தம் 

124. அனநடைப் பரவை யாரை 
அனேகமா யிரந்து விஞ்சி 
மனமுனி வாற்றி நின்னை 
மணந்திடச் செய்தேன் கண்போல் 

இனமொரு குறைவில் லாமல் 
இக்கண மேகி யொன்றால் 
தனகியே யவளைத் தோளைத் 
தழுவியே வாழ்கு வாயே! 

வசனம் 

“இப்படியாக சுவாமியார் சொன்ன வசனங்கேட்டு சுந்தரர் போய்ப் பரவையுடனே கூடி கலவியின்பம் மகிழ்ந்து சொல்லுகிற வசனமெப்படி யென்றால்,” (91) 

ஏலப்பதம் 

125. மெய்ப்படிக்குப் போனாரை வியந்ததோழ னென்பதல்லால் 
இப்படி நீ தூது சென்றாயோ? ஒதியாகராயா! 
இப்படி நீ தூது சென்றாயோ? 

சந்திரனுதல் பரவையாரைத் 
தழுவியேக போகமாகி 
இந்திரபோகம் போலிருந்தேனே! 
ஓதியா சுராயா! 

வசனம் 

“இப்படியாக சரசசல்லாபத்துடனே இருக்கிற நாளிலே நடக்கிற வித மெப்படி யென்றால்” (92) 

திபதை 

126. தோகைபா லரனைத் தூதினுக் கனுப்பு 
மோகனை எனது முன்னிலை காண்கில் 

வடிசுடர் வாளால் வகிர்வகி ராகத்
தடிகுவே னென்ன சபதங்கொண் டிருந்த 

ஏயர் கோன்கலிக் காமரென் போரை
நேயமா யிணக்கும் நினைவுகொண் டரனார் 

மிக்கசூ சூலையினை விருக்கமற் றதனைத்
தொக்கவே நீக்கித் தோழமை செய்து 

அன்புடன் சிவனா ரருளினைப் புகழ்ந்து
தென்பெரு மங்கை திருநகர்க் கன்று 

நாக மானகரை நணுகியே பரவி
வாகையாய்க் கலையு மாடைபூ ஷணமும் 

மற்றுமே பொருளும் வாம்பரி முதலாய்
பெற்றுவந் திருந்து பெண்ணினுக் காகிப் 

பரவையை மருவி பரமரைப் பணிந்து
விரவுசுந் தரனார் விளங்குகின் றனரே! 

வசனம் 

“அந்த சமயத்திலே சேரமான் கழற்றெறிநாயனார் வருகிற விதமெப்படியென்றால்,” (93) 

விருத்தம் 

127. சந்திர வேணி யீசன் 
தன்திரு வருளி னாலே 
சுந்தரர் தம்மைக் கண்டு 
தோழமை செய்ய வேண்டி 
சிந்துரக் கன்று மாவும் 
சேனையும் சூழச் சேரன் 
இந்திரன் என்ன வாரூர்க் 
கினிதெழுந் தருளி னானே! 

தரு 

128. சத்திர சாமரை சூழத் 
தமனியக் கிரீடம் சூடிச் 
சித்திர மன்மத னென்ன 
சேரன் வந்தனர் பாரீர்! 

கோட்டையெனச் சேனை சூழ 
கொற்றவர் போற்றி கொள்ள 
நாட்டை விட்டுக் கழற்றெறி 
நாயனார் வந்தனர் பாரீர்! 

வசனம் 

இப்படியாகச் சேரமான் கழற்றெறி நாயனார் வருகிறபோது சுந்தரர் எதிர்கொண்டு வந்து, ஒருவர்க்கொருவர் வணங்கி ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு, சுவாமியாரைச் சேவித்துப் பரவை வீட்டுக்கு வந்து இருவருஞ் சாப்பிட்டு சரசசல்லாப மாய், பந்தாடல் ஆட்டுக்கி யடாய்ப்போர் கோழிப்போர் இந்த வேடிக்கை பார்கிற விதமெப்படி யென்றால்” (94) 

தரு-பதம் 

129. கன்னிமார் முலைகண்டு துள்ளல் போலச் சரீல் சரீலெனக் 
கையில் பந்துகள் எழும்பல் பாரையா! 

தோகைமார் கால்கண் டோடல்போல் துரீல் துரீலெனச் 
கோட்டியால் அடிபந்து பாரையா! 

மதுகைடவர்கள் பொருதல் போலவே படீல்படீலென 
வளர்கிடாய் நின்றுபாய்தல் பாரையா! 

கறங்குமோர் சுழல்காற்றுப் போலவே 
சுறீல்சுறீலென காலினால் பொருங்கோழி பாரையா! 

வசனம் 

“இப்படியாக அந்தச் சமயத்திலே மல்லர்கள் வருகிற வித மெப்படியென்றால்” (95) 

விருத்தம் 

130. சிங்கநேர் பொறாத வல்லார் 
செங்கையில் வாளுக் கெல்லாம் 
பொங்கமா இருப்புக் கோதை 
புனைந்தவர் சணாக் கத்தி 
அங்கையிற் கொண்டு செம்மண் 
அடங்கலு முடலிற் பூசி 
வெங்களி ரென்ன மல்ல 
வீரரும் வருகின்ற றானே! 

(கோதை – கையில் கணியும் தோற் கவசம், சாணா – கூர்மையான) 

தரு 

131. சல்லடமு மிட்டுப் 
பட்டுக் கச்சை பிகிச்சு கட்டி 
கையிற் சாணாக் கத்திக் கொண்டு 
மட்டிக் குல்லா தரித்து 
வல்லமையாய் மெள்ள மெள்ள 
அசைந்து நடந்துசெய 
மல்ல வீரர் ரிஷபமென்ன 
வந்தனர் பாரீர்! 

(பிகிஞ்சு – இறுக்கி)

வசனம் 

“இப்படியாக: ஒருவர்க்கொருவர் மல்லு யுத்தம் பண்ணுகிற விதமெப்படியென்றால்” (96) 

தரு 

132. கரியார் இடிமுழக்க மென்னவே முகுமுகு 
சிங்க கர்ஜனை செய்தல் பாரையா! 

அண்டபே ரண்டம் சிறகடித்தல்போல் பளீல் பளீலென
கையினால் தொடைதட்டல் பாரையா! 

புலியும் புலியும் எதிர்த்து நோக்கல்போல் கடிகடி யென
புசங்கள் கொட்டியே பாய்தல் பாரையா! 

துதிக்கை யானைகள் வளைத்து வருதல்போல் 
மௌ மௌ மௌ 
சுத்தி விடையும் வருதல் பாரையா! 

உலக தாதையைக் குமரன் புடைத்தல்போல் – நிறநிறவெனக்
கட்டிக் கையினால் நெறித்தல் பாரையா! 

வாலி சுக்கிரீவர் பொருதல் போலவே வகை வகை வகை
மல்லுப் போருகள் செய்தல் பாரையா! 

வசனம் 

“இப்படியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிற நாளிலே நடக்கிற விதமெப்படி யென்றால்,”  (97) 

திபதை 

133. இருவருஞ் சிலநாள் இவ்வித மிருந்து 
மருவியே தியாகர் மலர்ப்பதம் வணங்கி
உகந்துடன் திருவா ரூரினை விடுத்து 
மிகுந்தசீர் வளவர் விளங்கிநா டனைத்தும் 
பாண்டிநா டனைத்தும் பரமர்தம் பதிகள் 
ஈண்டியே பரவி இசைத்தமிழ் பாடி 
மற்றுமே திரும்பி வந்துதான் தியாகர்
உற்றவர் திருவா ரூரினில் எய்தி
பின்னுமே சிலநாள் பிரிவிலா திருந்து
மன்னு சேரலர்கோன் வருந்தியே யழைக்க
மின்னாள் பரவை விடைதர வகன்று
நன்னய மலைய நாட்டினை நோக்கித் 
துணையதா யனேகர் சூழ்ந்துவந் தருள
இணைவிடா திவர்க ளேகியப் போது
பண்ணு காவேரி பளிங்குமா மலைபோல்
தண்ணிலே குடபாற் றதும்பித்து நிற்க
வடகரை யிருந்து வடிந்தகீழ்த் திசையில்
தடமதாய் நடந்து தானனகள் தொடரச்
சென்றுதான் வகைமைத் திருவையா றதனை
வென்றியாய்ப் பரவி மீண்டுவந். தருளி
கொங்குநா டகன்று குடகு கேரளத்
திறங்கியே சிலநாள் தருக்கியே யிருந்து
சேரமான் கொடுக்கும் திரவிய மனைத்தும்
பாரமா யலைத்துப் பற்றியே கொணர
ஆண்டெழுந் தருளி ஆரூரர் முருகன்
பூண்டியி லடைவில் புக்கிவந் தனரே! 

வசனம் 

“இப்படியாகத் திருமுருகன் பூண்டிக்கு வடபாலிற்காட்டிலே வருகின்றபோது பரமேசுவரர் ஏவலினாலே வேடர் வருகிற விதமெப்படி யென்றால்,” (98) 

குறுந்தாழிசை 

134. திருமுருகன் பூண்டியில் வாழ் 
சிவசிவா நமக்கபயம் 
மருகிலேமற் றுடைமையெல்லாம் 
ஐயகோ பறிகொடுத்தேன்! 

சேரமான் தந்த திரவியநிட் சேபமெல்லாம் 
சேரவே யங்கங்கே திரண்டொன்றாய்ப் போச்சுதையா!
முத்தனையாள் என்பரவை முத்துமுகந் தனக்கொக்கும
முத்து மூக்குத்தியொன்று முன்னூறு பொன் பெறுமே! 
சித்திரப் பொற் செவிகளும் செம்பவள மாலைகளும்
சத்திரசா மனரவிலையுந் தனித்தனியா யிரம்பெறுமே
எத்தனையோ பொன்னாடை எத்தனையோ மின்னாரம்
எத்தனையோ வீணாகிப் பறிபோச்சே! 
இத்தனையும் போச்சென் றிரங்கிலைகாண் கோழிகிடாய்
தத்தைமுதற் போனதற்கே தத்தளிக்கு தென்மனங்காண்
ஏது செய்வேனையா? இனிப்பரவைக் கென்சொல்வேன்?
நீதயவு செய்யாதிருந்தால் நின்னைவிடுத் தேகேனே! 

வசனம் 

“இப்படியாகச் சன்னதிக் கெதிரே நின்று சிலது வசனங்கள் சொல்லித் திரும்புகிறபோது போனவுடைமையெல்லாம் மலைபோல குவிந்திருக்கிறதைக் கண்டு ஆளுகள் கையிலே எடுப்பித்துக் கொண்டு திருவாரூருக்குப் போகிற விதமெப்படி யென்றால்” (99) 

விருத்தம் 

135. பரமனா ரருளி னாலே 
பரிசனம் பலரும் சூழத் 
தரமதாய்த் திருவா ரூரில் 
தலத்துளா ரெதிர்கொண் டேத்த 

திரமதாய்த் தியாக ராயர் 
திருவடி தான்நி னைந்து 
பரவையார் தமது வீட்டிற் 
பரிவுட னெய்தி னாரே! 

வசனம் 

“இப்படியாகப் பரவையாருடனே கூடியின்பம் மகிழ்ந்திருந்து தினமுஞ் சுவாமியாரைச்சேவித்துக் கொண்டிருக்கிற நாளிலே மீண்டும் மலையாளத்துக்குப் போகிற விதமெப்படி யென்றால்” (100) 

திபதை 

136. சேரமான் பரிவுஞ் சித்தத்தி லன்பு 
மோருயி ரெனவே யுகந்ததோ ழமையுந்
தயவுமிங் கிதமும் சாத்துவீக குணமும்
நயமும்நல் லறிவும் நண்புமா தரவும்
நேசமும் நெறியும் நீதியும் சிவனார்
பூசையும் பக்தியும் போதமும் குடையும்
நெஞ்சிலெப் பொழுதும் நினைந்துள் முருகி
தஞ்சமாய் மலையஞ் சாரவே கருதி 
தங்கைவே ணியானார் கருணையைப் பரவி
நங்கையார் விடையும் நல்கியே கொண்டு
வீறியே நடந்து வினைகடந் தகன்று
தேறியே சொரூபஞ் செங்கதி ரொளியாய்
பரிவினா லுகந்து பரிசனஞ் சூழ
அரியபுக் கொளியூ ரவனாகி மேவி
முதலையை விழுங்கு மூவிரு வயது 
மதலையை மீளவரச்செய்து கொடுத்து 
கொங்குநா டகன்று குடகுகே ரளத்தி 
லெங்கள்சே ரலர்கோன் எதிர்கொள்ள எய்தி
ஒருவருக் கொருவர் உசுப்பினால் வணங்கி
ஒருவருக்கொருவர் உடலுற…தழுவி
சிறிதுநாள் மகிழ்வாய் சேரவே யிருந்து 
பிறிதுதம் பதிகள் பெயர்ந்துபோய் வணங்கி 
வஞ்சியங் களத்தில் வந்துசுந் தரனார் 
தஞ்சமாய்ச் சிவனார் சரண்பணிந் தனரே! 

வசனம் 

“இப்படியாத் திருவஞ்சைக் களத்துச் சுவாமியாரைப் பணிந்து பரவிப்பாடி, சுந்தரரிருக்கிறபோது, கயிலாயத்திலே யிருந்து வெள்ளையானை வருகிற விதமெப்படி யென்றால்” (101) 

வெள்ளை யானை அனுப்புதல்!

விருத்தம் 

137. சுந்தரர் தன்னை முன்னே 
தொண்டினுக் கிசைக்க வேண்டி 
சிந்தையிற் கருதி யாதி 
சிவபிரான் கணங்கள் தன்னை 
இந்திரன் தன்னை வானில் 
இறையவர் தம்மைக் காட்டி 
அந்திவெண் கயிலை நேர்வெள் 
ளானையை யனுப்பி னாரே! 

பதம் 

138. வெள்ளையானை வருகின்ற வேடிக்கை பாரீர்!
கள்ளுலாவு மலர்க்கொன்றை கன்னல்வேணி சூலபாணி
வள்ளலானோர் சுந்தரனார் வருவதற்கு வரவிடுத்த (வெள்ளை) 
தன்னைத்தேடிச் சுந்தரனார் தான்வந்தெய்தத் தரமல்ல
வென்னவெள்ளி மலைதானெய்தி ஏற்றிக்கொடு போதல்போல (வெள்ளை) 

வசனம் 

“அந்தச்சமயத்திலே சுந்தரருடனே சொல்லுகிற வசனமெப்படி யென்றால்” (102) 

தரு 

புவனமெல்லாம் போற்றி செய்யும் 
புனிதனார் தோழரே கேளீர் 
தவமிருந்து சிவக ணங்கள் 
தங்கட்கெல்லாம் தலைமை செய்ய 
அவனிவிடுத். தம்புயச்சே 
வடிக்கீழ் வருக வென்றே 
சிவபெருமான் அருளிப் பாடு 
செய்தனர்நீர் வருகு வீரே! 

வசனம் 

“இப்படியாகச் சிவகணங்கள் சொன்னபோது சுந்தரர் வெள்ளையானையை முக்கால் வலம் வந்து சேவித்து, வெள்ளையானை மீதிலேறிக்கொண்டு கேசரமார்க்கமாய்ப் போகிறபோது சேரமான் கழற்றெறி நாயனாரை நினைந்து சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (103) 

விருத்தம்

140. ஓருயி ராகி யென்று 
மொருமன தாகி யெந்த 
னாருயிர் தோழ னாகி 
அடிகளு மாகி யெங்கள் 
சீருயர் சேர மான்கைத் 
திருவிடை வாங்கி டாமற் 
சாருதற் கொடிய நெஞ்சே 
தருமதோ சாற்றி வாயே! 

வசனம் 

“இப்படியாகக் கேசமார்க்கத்திலேயே போகிறபோது, சுந்தரர் சொன்ன வசனத்தை கொடுங்கோளுரிலே யிருந்த சேரமான் கேட்டு, அறிந்து கொண்டு எண்ணெய்த் தலையுமாகக் குதிரை ஏறி வருகிற வித மெப்படி யென்றால்,” (104) 

பதம் 

141. வருகிறான் சேரமான் பாரீர்! 
வருகவே இன்பஞ் தருக கவே – சிந்தை 
உருகவே மகிழ்வு பெருகவே!  (வருகிறான்) 

வண்ணத் தலைவர்க ளெண்கணத் தலைமையின்
திண்ணைத் தலையிருஞ் தெண்ணெய்த் தலையுடன் (வருகிறான்) 

மண்டலம் யாவையும் விண்டலம் யாவையும்
கண்டுகொண் டாடவே கொண்டுகொண் டாடியே (வருகிறான்) 

வருகிறான் சேரமான் பாரீர் – குதிரைமேல் 
வருகிறான் சேரமான் பாரீர்! 

வசனம் 

“இப்படியாகக் குதிரையை வையாளி விட்டுக் கொண்டு நிமிஷத்திலே வந்து கேசர மார்க்கத்திலே போகிற வெள்ளை யானையைப் பார்த்து குதிரையின் வலச் செவியிலே பஞ்சாட்சரத்தை உபதேச ம் பண்ணி ஆகாச கமனம்பண்ணி வைத்து, வெள்ளை யானையை பிரதிட்சிணம் வந்து, முன்னே நின்று சேவித்த போது சுந்தரர் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (105) 

விருத்தம் 

142. என்னா ருயிர்போல் வருந் தோழா 
ஈசனருளை யென்ன சொல்வேன் 
நின்னாண்மையும் நின்னறி வினையும் 
நிகழ்த்த வொருவர்க் கரிதையா 
மின்னார் சடையார் வடகயிலை 
மேவக் கருதி மனமதனில் 
உள்ளா முனமே வந்துநின்றார் 
உனக்கு நிகரோ ஒருவருமே! 

(உன்னா – நினைக்கா) 

வசனம் 

“சேரமான்சொல்லுகிற வசனமெப்படி யென்றால்.” (106) 

விருத்தம் 

143. எல்லா முனது திருவருளே 
ஈசன் வேறு நீவேறோ? 
சொல்லாய் வில்லாய் மலைவளைத்த 
சுரர்நா யகனைத் தூதுவிட 
வல்லாய் பரம கதிக்கேழு 
மார்கந் தன்னில் மறவாமல் 
சல்லா பமதாய் நீநினைக்க 
தவமென் செய்தேன் தமியேனே! 

திபதை 

144. இத்திற மிவர்க ளிருவரு மொழிந்து 
மைத்திறக் களத்தார் மலரடி நினைந்து
தெக்கண மதனிற் றினகர னெழுந்து 
தொக்கவே யதின்பொற் சுடரொளி விளங்கச்
சுந்தரர் தவளத் தும்பிமேல் வருக 
சுந்தர … பின்னே தொடர்ந்து 
தேசவாம் பரிமேல் சேரமான் வருக
வீசுபூங் கயிலை வெற்பினி லெய்தி
திங்கள்வே ணியனார் திருவருள் புரிய
சங்கரி யருளாற் சங்கிலி பரவை
நங்கையு மவர்பால் நணுகினர் தாமே 

வாழி! 

145. நத்தியே நடிப்பவர் நடத்திற் காண்பவர் 
முற்றுமே படிப்பவர் முழுதும் கேட்பவர்
மற்றுமிக் கதைதனை வரைந்து கொள்பவர்
கற்றைச்செஞ் சடையார்தங் கயிலை சேர்வரே 

வாழி திங்கள்மும் மாரி பெய்திட
வாழி வையக மனைத்து மோங்கிட
வாழி சைவமும் நீறும் வீறிட 
வாழி யாகம வேதமும் வாழி வாழி! 

வாழிய திவ்விய பாலம ….னகர்
வாழி தண்டக மாலை மாநகர்
வாழி அம்பிகை வாழ வந்தவள்
வாழி சத்திய வாசகர் வாழிவாழி! 

மங்களம்! 

146. மங்களமே செய மங்களமே! 
கறையணி கண்டற்கும் கலியுக ராயற்கும்
பிறையணி சடையற்கும் பிஞ்ஞகற்கும்
தரவுவெள் விடையற்கும் சந்திர சேகரற்கும்
மாவையில்வாழ் சத்திய வாசகர்க்கும்
கன்னிய ராசிக்கும் கற்பக வல்லிக்கும்
நன்னுதல் சௌபாக்ய நாயகிக்கும் 
மங்களமே – செய – மங்களமே! 

(நூல் முற்றும்)

– கீழ்த்திசைச் சுவடிகள் வெளியீடு எண் : 81

– பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்), பி.எட்., டிப்.வ.மொ. பி.எச்.டி., காப்பாட்சியர், அ.கீ.சு. நூலகம், சென்னை-600 005.

– பொதுப் பதிப்பாசிரியர்: நடன காசிநாதன் எம்.ஏ., இயக்குநர், தொ. பொ.ஆ.துறை, சென்னை-600 113.

– அ.கீ.சு.நூ. 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *