சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை நாடகம்
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 5,405 
 
 

(இந்நூல் அ.கீ.சு.நூலக ஓலைச்சுவடியிலிருந்து (எண்.ஆர். 2721) பதிப்பிக்கப்படுவதாகும், கி.பி. 1848 ஐ ஒட்டிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3

புத்தூர்ப் பெரியவர்கள், கிழவேடச் சிவனை வரவேற்றல்! 

விருத்தம்

20. நாதரே பெரியோர் வந்தீர் நமஸ்கார மய்யா நாங்கள் மாதவஞ் செய்த தெல்லாம் வந்தின்று பலித மாச்சு மேதக திருவா ரூரான் விவாகமுஞ் சுலப மாச்சு தேதய்யா நீர்நிற் கின்றீர்? இருமையா வருமை யாவே! 

(நாங்கள் பட்ட பாட்டுக்கெல்லாம் இன்று பலன் கிடைத்தது; ஆருரன் விவாகத்திற்கு வந்துள்ள நீங்கள் உட்காருங்கள் என்று வரவேற்கிறார்கள் புத்தூர் நகரப் பெரியவர்கள்.) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே விருத்தப் பிராமணர் சொல்லுகிற வசனம் எப்படி யென்றால்” 

‘அடிமை முறி உள்ளது!’ எனல் 

தரு

திரிபுடை 

21. சைவ வேதியரே நீங்கள் 
சுந்தரனது மருமானவ ரிங்ஙனே செய்வதேது?
கலியாண நாமினி செப்பக் கேளும்! 

22. தந்தை தந்தை யாரூ ரானே – முதல் 
தரந்த ரத்தினில் பிறந்த பிள்ளைகள் 
முந்தவே யெமக்கடுமை யாகிய முறியைக் கண்டீர்!
அந்த நாளிலேயே முதுசாதன மனைத்துமென் 
வசமா யிருக்கவே 
இந்தவோர் பையன் பாருன் 
மணத்தைக் கொண்டிருக்க லானான்! 

(ஆரூரானாகிய சுந்தரமூர்த்தி நாயனார் சிவனுக்கு அடிமை என்ற செய்தி கூறப்படுகிறது. அதற்கான ஓலை ஆதாரம் தன்னிடம்இருப்ப தாக திருமணத்தைத் தடுக்க வந்த கிழவர் இங்கு கூறுகிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட்டனார் எழுதிக் கொடுத்த ஓலையாம் அது!.) 

‘ஆரூரா எழுந்திருடா’ என்று கூப்பிடல்! 

தரு

சம்பை 

23. சிவனாவ தேது மனையேறுவ தேது? 
அவமாகி யென்னை யறியாமல் வந்தேது?
வாழைமரங் கமுகு மரம் வாசல்நட்ட தேது?
ஆழியென்மேல் மேளவகை யார்பிறப்ப தேது?
பந்தலினில் முளைதெளித்த பாலிகைகள் யேது?
சந்தடிக ளேதோமத் தழல்வளர்ப்ப தேது?
கால்கரக மேது அரசாணி அம்மி யேது? 
மேல்வருவ தறியாத விப்பிரரெல் லாமேது? 
சடங்கவியார் பெத்தபெண்ணைத் தருவதுதா னேது? 
அடங்கலுமே யிவரடிமை ஆருமறி யாரோ!
ஆருரா எழுந்திருடா அமையுமினி வாடா!
நேராகச் சற்றுமினி நில்லாமல் தானே! 

(“இதெல்லாம் என்ன? இங்கே எப்படி இத்திருமணம் நடக்கலாம்? ஆருரர் எனக்கு அடிமையாக இருக்கும் போது, என்னை அறியாமல் மணம் நடக்கலாமோ? சடங்கவியார் எப்படி தனது பெண்ணைத் தரலாம்? டேய் ஆருரா, எழுந்திருடா! ” என்று கிழவர் வேடத்தில் வந்த சிவன் அங்குள்ளோரைப் பார்த்துக் கூறுகிறார்.) 

வசனம் 

“இப்படியாக விருத்தர் சொல்லப்பட்ட வசனத்தைக் கேட்டு சுந் தரர் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” 

கனவு கண்டீரோ?’ என்று சுந்தரர் கேட்டல்! 

சம்பைத் தரு 

24. அய்யனே! மெத்த மெத்த ஆகாத்தியமாக 
பையமேல் வழங்காத வசனமென் சொன்னாய்? 
நித்திரையிற் கனவுகண்டு நினைவுகொண்டு வந்ததோ?
பித்தனோ பொல்லாத பேய் பிடித்ததுவோ? 
விகடமாய்ப் பேசும்விப் பிரவேசமாய் வந்ததோ? 
அகடுபல பேசும்கூத் தாடியோ சொல்லாய்? 
அல்லவெனி லந்தணர்க ளாருமொரு வருக்கொருவர் 
நல்லபடி அடிமைகொள்ள நாட்டிலே யுண்டோ? 
ஆனாலு மென்பாட்ட னாரூரன் தானுமக்கு 
மேனாளி வெதுக்காய் விலைப்பட்டான் சொல்லாய்? 
விலைப்படினு மிதுவரைக்கு மேவியென்னைத் தொடராமல்
தலைப்பட்ட நீசும்ம்மா தானிருந்த தென்னமோ? 
என்னநீ சொல்லுகினு மெவருக்குஞ் சம்மதமோ 
கன்னக்காரத் தினமுமுந்தன் களவுமிங்கே செல்லுமோ? 
செல்லாது விட்டோடுஞ் சிலதுபண்ணி னாலும் இம்மை
பொல்லாத நானினி பொறுப்பதில்லை கண்டாய் 
இந்நேரங் கிழவ னென்னவே தெரிந்துகொண்டு
உன்னுரைத் தேடி ஓடிடுவாய் நீயே! 

(சுந்தரமூர்த்தி நாயனார் இங்கே கிழவர் வேடத்தில் வந்த சிவனாரை மடக்குகின்றார்! ‘நான் உனக்கு அடிமையா? என் பாட்டனார்ஓலை எழுதித் தந்தாரா? பிராமணர் இன்னொரு பிராமணருக்கு அடிமை கொள்வது உண்டா? அப்படியே நான் அடிமை என்று வைத்துக் கொண்டாலும், ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்தீர்? உமக்கு என்ன பித்துப் பிடித்துவிட்டதா? கனவு கண்டீரா? நீர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது! உன்னுடைய ஊரைப் பா ர்த்து ஓடும்! என்று கிழவரை மடக்குகின்றார் சுந்தரர்.)

சிவனும் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஏசிக்கொள்ளுதல்! 

ஏசல்தரு 

(சிவன் 🙂 

25. நீ யென்னடா சுந்தரா! – உந்தன் 
பாட்டன் இசவெழு திருக்கையிலே! 
இந்தக் காய்ப்பேச் சென்னமோ? 
கையிற் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோடா? 

சுந்தரமூர்த்தி நாயனார் : 
வேண்டின தெல்லாஞ் சொல்லுறாய்! உந்தன்
வார்த்தை மெய்படுமோ கிழவா? 

சிவன் : 
சில்லித் தொண்டிக்குள் ளாயிரஞ் சாலோடு
தண்ணி சொரிந்தாலும் நிற்குமோமா? 
நில்லாத மொழியல்லடா – சொல்வதெல்லாம் 
நிசவார்த்தை காண் சுந்தரா. 

சுந்தரமூர்த்தி நாயனார் : 
என்றுங் கல்லாத மூடனைப் போலவே 
கோணக்கழி வெட்டுறா யென்னமா? 
என்னடா நீ கிழவா அடிக்கடி 
எனக்குநீ அடிமை யென்றே எந்தன் 
முன்னிலே சொல்லுறாய் சொன்ன வாய்க்கினி 
முத்திரை போடுவேண்டா! 

சிவன் : 
முத்திரை போடுவையோ சுந்தரா? – இந்த 
மொழி பதனம் பண்றடா! 
இந்தப் பந்த மேதுலகில்? வளர்த்தகடா 
வந்து பாயலாச்சுதடா! 

சுந்தரமூர்த்தி நாயனார் : 
அல்லடா போகிழவா! இதினாலே ஆவதுண்டோ?
சொல்லடா இனி நில்லடா வெளியே! 
பிடித்துக் காளியாட்டம் நீசெய்ய வந்தாயோமா? 

சிவன் : 
வந்தது மெய்யடா! அல்லவென்று 
வந்தாக்கால் விடுவேனாடா? – இனி 
சுந்தரா பேச்சினால் 
பந்தவிட வேண்டாம்! 
சும்மாயென் பிறகே வாடா! 

சுந்தரமூர்த்தி நாயனார் : 
வாடா போடா யென்குறாய்! – இந்த 
வார்த்தை மன்னித்தேன் காண்கிழவா! 
இனிக் கூடாது கொக்குப்பிடிக்கிற மந்திரம்!
கூறினாலே தரமோடா? 

(சிவனும் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளும் ஏசல் பகுதி இது. தமிழில் உள்ள பள்ளு இலக்கியங்களில் இப்பகுதி மிகச் சுவையாக வரும். முக்கூடற்பள்ளு போன்ற கலைமிகு பள்ளு இலக்கியங்கள் தமிழில் அச்சாகியுள்ளன. 

கடவுளாகிய சிவன், ‘வாடா, போடா’ என்று மனிதனுக்குச் சமமா கப் பேசப்படும் இந் நாடகக் காட்சி பார்ப்போரை மகிழ்விக்கும் இப்பகுதியில் சில பழமொழிகள் வந்துள்ளன. ‘கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமோ? ‘என்று இருக்க வேண்டிய பழமொழி. திரிந்து ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? ‘ என்று தற்போது வழங்குகிறது. இவ்வாறு பிழையாக வழங்கும் நூற்றுக் மேற்பட்ட பழமொழிகளுக்குச் செம்மை வடிவம் ஆராயப்பட்டுள்ளது! (தமிழில் பழமொழி இலக்கியம், டாக்டர் எஸ்.சௌந்திரபாண்டியன், 72 பெரிய தொரு திருவல்லிக்கேணி, சென்னை 5) ‘கோணக்கழி வெட்டுறாய், என்பதும் ஒரு பழமொழி’; கூடாது கொக்குப் பிடிக்கிற மந்திரம் ‘என்பதும் ஒரு பழமொழி. 

சில்லித்தொண்டி – சிறுதுளை. சிறு துளைக்குள் ஆயிரம் கால் தண்ணீர், விட்டாலும் அவ்வளவும் அதில் தங்குமோ? அதுபோல் நீ என்னதான் சொன்னாலும், நில்லாது; நான் ஆதாரத்தோடு பேசுவதுதான் நிற்கும் என்றார் சிவனார்.) 

என் பின்னால்வா’ எனச் சிவன் கூறல் 

விருத்தம் 

26. மந்திர மல்ல வஞ்ச மாயம தல்ல வேரே 
தந்திர மல்ல வந்த சாதனம் பார்த்துக் கொண்டால்
புந்தியில் லிகித சாக்ஷி புத்தியும் பார்த்துக் கோடா
சுந்தரா மணத்தை விட்டு தொடர்ந்துநீ வருகு வாயே! 

(‘நான் மந்திரம் எதுவும் செய்யவில்லை! மாயமும் செய்யவில்லை! தந்திரம் செய்ய இங்கே வரவில்லை! உன்புத்தியால் பார்த்துக் கொள்! என்னிடம் இலிகித சாட்சி உள்ளது! ஆகவே, திருமணம் செய்வதை விட்டுவிட்டு என்பின்னால் வந்துவிடு! என்று சிவன் கேட்பதாக உள்ளது மேற்பாட்டு. 

லிகித சாக்ஷி எழுத்துக் கொண்டது.) 

வருகுவாய் என்று சொன்ன வசனம் 

“மன்னித்தேன் கண்டாய், பெரியதோர் கிழவா! பித்துப் பிடித்துக் கொண்டுதானிங்கே அருகில் நின்றாயானால் அப்புற மென்னமோ? ஒரு கணமினி நில்லாமமோடா நீ ஓடுவாயே!” (10) 

(சுந்தரமூர்த்தி நாயனார், அக்கிழவரை மன்னித்து, ‘இனி நீ இங்கிருந்து ஓடிடு என்று கூறும் பகுதி இது.) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே கிழ விப்பிரனார் மனதிலே வஞ்சமில்லாமல் முகத்திலே கோபாவேசம் வர, குடுமியை உதறி முடித்துக் கொண்டு, கண்கள் சிவக்க, வாய் நீர் தெறிக்க, உடம்பெல்லாம்துடிதுடிக்க, கை கால் நடுங்க, புரோகிதன் மேல் விழுந்து ஓமாக்கினியை மெரிச்சுக்கொண்டு ஒரு கையினாலே சுந்தரரை மடியைப் பிடித்திழுக்கிறபோது, சுந்தரருங் கோபாவேசத்தாலும், ஒரு கையினாலே சாதன முறியைப் பிடுங்கி கிழித்துப் போடுகிறபோது கிழ விப்பிரனார் மடி பிடித்த கை விடாமல் கூச்சலிடுகிற வித மெப்படியென்றால்” 

தரு 

27. அய்யகோ வெந்தன் அருமைப் பயல்தானே 
அடித்தென்னைத் தள்ளிநான் கூகூ இந்த 
வையத்தில் கேள்விமுறை கேட்டு 
தெண்டிக்க மன்னரில்லையோ கூகூ 

பிடித்திழுத்தான் முறியைப் பிடுங்கிக் 
கிழித்தான் அடித்தான்காண் கூகூ 
அடித்தாலு மாகட்டும் முறியைக் 
கிழித்ததே அநியாயம் கூகூ 

பித்தனு மென்றென்னைப் பேசாதும் பேசினான் 
பின்னைடி மப்படி செய்தான் கூகூ – இனி 
எத்தனை யானாலு மிவனுடன் போராட 
எந்தர மாடுமோ கூகூ 

அதிர வடித்திட்டேன் முறியைக் கிழித்திட்டான் 
காட்டு மாகட்டுங் கூகூ 
அதுஎதிர் நடைபோனா லெனக்கென்ன 
முதல்முறி யிருக்குது காணின்னங் கூகூ 

பித்தனோ னாலுமினி தானிழுத்து மடியைப் 
பிடித்தகை விடுவேனா கூகூ இனி
இத்தல மீதினி லெவந்தான் வரட்டும் 
இவனை விடுவேனாகூகூ! 

(கிழஉருவில் இருந்த சிவன் கூற்றே மேல் இசைப் பாடல். அழுது கெ ண்டே பாடுவது போல இசைக்கப்பட்டுள்ளது.; கூகூ என்பது அழும் ஓசையாகும். சுந்தரமூர்த்தி நாயனார், சிவன் ஆதாரமாகக் காட்டிய ஒலைத் துண்டைக் கிழித்துப் போட்டதற்கு இது போனால் என்ன, இது நகல் தான்! இதனுடைய மூலச் சுவடி என்னிடத்தில் இருக்கிறது என்கிறார் சிவன்!) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே அங்கே இருக்கிற பேரெல்லாரும் கூடி வந்து இவர்கள் சண்டையை விலக்கித் திருவெண்ணெய் நல்லூருக்கு வழக்குக்குப் போக அனுப்புகிற வித மெப்படி யென்றால்” 

ஓடத்தரு 

28. ஏது நீங்கள் பெரியவர்க ளிப்படியும் செய்வார்களோ?
போதுமினி முறிவுகொண்டு போர்புரிதல்! விடுங்கோளய்யா!
அடிமையென்ன இவர் வந்தார் அல்லவென்று 
நீங்கள் சொன்னீர் 
நடுவிலையோ இதையறிந்து நடுவில்நீதிப் பாரில்லையே? 

வார்த்தைசொல் லாயிருக்க மறித்தறிய மனமிருக்க
துர்த்தகுண மாகியிந்த துஷ்டதனங் செய்வார்களோ? 
இடையிலொரு மனிதன்வந்து இல்லாத பொய்கள்பேசி
உடைதுகிலை தன்னுதென்றால் உத்தரிக்க வேண்டாமோ? 

ஆகயினா லடிச்சுப்பட லறமில்லவே 
வாது செய்து பேசுவதும் வழக்கல்லா! 
பொருதுவது வழக்கல்லா இனிநாங்கள் சொன்னபடி 
இருவருங் கேளுங்கோள்! மனுநீதிப் படியிதனை 

வழக்குரைக்க வல்லவர்கேள் வெண்ணை 
நல்லூர் அந்தணர்கள் 
வேதசாஸ்திர சம்பன்னர்கள் நிண்ணயமாய் தீத்திடுவார்
நீங்களங்கே போகுவீரே! 

(சுந்தரமூர்த்தி நாயனாரும், சிவனும் மணப்பந்தலில் ஒருவர்க்கொருவர் ஏசிப்பேசிச் சண்டை இடவே, அங்கே அமர்ந்திருந்த பெரியவர்கள், என்ன இது? இப்படியெல்லாம்நடத்து கொள்ளலாமோ? ஒருவரையொருவர் அடிக்கலாமோ? நாங்கள் செய்வது போலச் செய்யுங்கள்! திருவெண்ணைய்நல்லூரில் நீதி சொல்லும் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சென்று உங்கள் வழக்கைக் கூறுங்கள்! என்று சமாதானம் செய்தார்கள். 

உத்தரித்தல் – நிரூபித்தல், நீதிப்பார் நீதிபுகல்வார்.) 

வசனம் 

“அந்தப்படிக்கி யிருவருஞ் சம்மதியுடனே திருவெண்ணெய் நல்லூர் ஊர் போறவிதமெப்படி யென்றால்” (12) 

சிவனும்சுந்தரமூர்த்தி நாயனாரும்வெண்ணெய்நல்லூர் 

ஏகுதல்

விருத்தம் 

29. சுந்தரர் நடந்து முன்னே சுரீலெனப் போகப் பின்னே 
வந்ததோர் கிழவ னாரும் வளைந்து கொண்டே யோட
சைவரந் தணர்ப லரும் செல்வதிக வேகத் தோடே
நந்திடா வெண்ணெய் நல்லூர் நகரத்தினி லேகி னாரே! 

(புத்தூர் வாழ் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப,சுந்தரரும், முதியவரும் திருவெண்ணெய்நல்லூர் புறப்பட்டனர். சுந்தரமூர்த்தி நாயனார் முன்னேயும் சிவனார் பின்னேயும் நடந்து சென்றனராம்! அவ்விருவரோடு சைவ அந்தணர் பலரும்கூடவே சென்றார்களாம்! ஏகுதல் செல்லுதல்) 

வசனம் 

“அந்த வேளையிலே யிவர்கள் வழக்குக்கு வந்த விசேஷம் கேட்டு திருவெண்ணெய் நல்லூர் வித்துவ மகாசனங்கள் பேர் பேராய் வருகிற விதமெப்படியென்றால்” (13) 

திருவெண்ணெய் நல்லூரில் நியாயம் கூறிய அந்தணர்கள் 

திபதை 

30. அப்பய்ய அனந்தய்ய ரானந்த தீக்ஷிதர் 
குப்பய்யர் குருநாதர் குமரய்யர் சாஸ்திரி
கந்தர்வர் கீர்வாணர் கிருஷ்ணாவ தானி
சந்திரசேகர சைவ சாம வேதப் பய்யர்
திரிவேதி விசுவேச செகன்னாத சாஸ்திரி 
அறிவா கரப்பிரம்ம னோர்க ளிவர்கள்
கமலமா வதனமுங் காஷாய வேஷ்டியும்
விமலமாய் முந்நூலும் மேனிப்ர காசமும்
மகரகுண்டல மின்ன மணியாழி யொளிர
சகலரு மகிழ்வுடன் சபைக்குவந் தனரே! 

(அப்பய்யர், அனந்தய்யர், ஆனந்த தீட்சிதர், குப்பய்யர், குமரப்ப ய்யர், செகன்னாத சாஸ்திரி என்றாங்கு அந்தணர் பலர் திருவெண்ணெய் நல்லூரில் கூடினார்களாம் ஆழி மோதிரம்) 

வழக்குத் தீர்க்க வந்த அந்தணர்கள்! 

தரு

பதம் 

31. வந்தனர் சிங்காரமாக வந்தனர் 
வந்தனர் பாரீர்! 
அந்தணர்கள் வெண்ணெய்நல்லூர் 
சேஷவித்து மகாசனமும்! 

முப்புரி நூல்தன்னைக் கையால் 
முடிச்சிருந்தால் திருத்திக்கொள்வர் 
அப்படியே பூஞ்சிகையை 
அவிழ்த்துதறி முடித்து… 

ஒருவர் சுலோகஞ் சொல்ல 
ஒருவரதற் குறைசொல்ல 
ஒருவரதற் கல்லவென்ன
ஒருவரதற் காமென்ன! (வந்தனர்) 

திருவெண்ணெய் நல்லூரில் கூடிய அந்தணர்கள் முப்புரிநூலுடனும், உதறிக்கட்டிய குடுமியுடனும் கூடினார்களாம்; ஒருவர் சுலோகம் படிப்பாராம்; மற்றவர் அது பொருத்தமில்லை என்று மறுப்பாராம்; இன்னொருவர் அது சரிதான் என்று கூறுவாராம்! இப்படியாக இருந்ததாம் நீதி கூறவந்த பிராமணர் நிலை! 

வசனம் 

“அந்தச் சமயத்திலே கிழ விப்பிரானருஞ் சுந்தரனாரும் மகாசனங் களைப் பார்த்துச் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (14)

‘எங்கள் வழக்கைத் தீருங்கள்’! 

தரு 

32. அய்யங் கார்கள் வெண்ணெய்நல்லூர் புங்கனூர் 
சேஷ வித்துவ மகாசனங்கள் 
வெய்ய தாயோர் சண்டை வந்து 
வியாச்சியமாய் இருவர் வந்தோம் 
பாலை நீரை வேறே பிரிக்கும் 
அன்னம் போல நீங்கள் 
ஐயமார் நாங்கள் சொல்லும் 
வழக்கதனைத் தீர்க்கு வீரே! 

(திருவெண்ணெய் நல்லூரில் பிராமணர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் முன்பு சிவனும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வழக்குதீர்க்க நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது, ” பாலையும் தண்ணீரையும் வேறுவேறாகப் பிரித்து எடுக்கத்தக்க வழக்கைத் தீர்த்துவையுங்கள்! என்று இருவரும் திருவெண்ணெய் நல்லூர்ப் பிராமணர்களிடம் முறையிடுகின்றனர்.) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே மகாசனங்கள் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (15) 

விருத்தம் 

33. அங்கனா ரூரன் தன்னை யங்கவன் கையிற் கட்டுங் 
கங்கண மிருக்கத் தானே கங்கணம் கட்டி வந்து
துங்கவிப் பிரனைனயும் பார்த்து 
துவக்க்ஷி யாக்ஷி களுஞ்சொல்லி 
யிங்ஙனே வாக்கு மூலம் மெமக்குநீர் சொல்லு வீரே! 

(துவக்ஷி யாக்ஷி – வாதி, பிரதிவாதி) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே கிழ விப்பிரனார் வாக்குமூலஞ் சொல்லுகிற வசன மெப்படி யென்றால்,” (16) 

‘ஆய்ந்து நீதி சொல்லுங்கள்!’ 

தரு 

34. அசேஷ வித்துவா மகாசனங்களே! 
இருவர்தம்மி லாக்ஷினுந் துவக்ஷி நானுங்காண்
விசேஷ மாதவா லெழுந்துனான் வாக்குமூலம் 
விபரமாய்ச் சொல்ல நீங்கள் கேளுங்கோள்! 

இவர்கள்பாட்ட னாரூரன் முன்னமே அடிமையாக 
யெமக்கு முறிவு யெழுதித் கொடுத்தனன்! 
அவனுமவன் தன்புதல்வன் சடையனு 
அன்றுமுதலா யனுதினமு மென்னேவல் செய்வன்காண்! 

இப்புரம் இந்தப்பயல் தன்னையே சிறியனெனை 
யேவலுக்குநான் துடர்ந்த தில்லைகாண்
அப்படியே நானன்பா யிருக்கச் சேயென்னை 
இவனறியா மலேயே மணஞ்செய்ய வந்தனன்! 

இந்த மணமுனக்கு வேண்டா மெனச்சொல்லி
எந்தன் பின்னுடனே யெழுந்து வாவென்று 
எத்தனை பரிவாய் அழைத்தும் … போலென 

இந்தப் பயல தும்பி யேயெனைப் 
பித்தனென்ன பிள்ளைநான் வெகுகோப மாகிய
இவன்தன் மடியைப் பிடித்தி ழுத்தன்! 
இழுத்த போதிலே இழுத்தலாமோ வென்றவனைத் 

தானுமே வைது திட்டியு மெழுந்துமேல் 
இழுத்த போதிலே இழுக்க லாமோ
என்றவனைத் தானுமே வைது திட்டியு 
எழுந்துமேல் விழுந்த திர்ந்து போகவே 
வழுக்கி மெத்தவும் பிடித்துத் தள்ளியே 
கூகூ வென்று நான் வாய்தி றந்தழத்
துடுக்கு செய்தனன் செய்த தன்றியும் 
கையிலி ருந்த தோரெதிரிடை முறிசீட்டுத் 

தன்னையும் கிழித்து வீசினன்! 
இவன்செய்த கொடுமையைக் கிழவ நானினி
யாருடன் சொல்லி யாறப் போறேன்காண்!! 
மூல பத்திரம் தன்னைப் பாருங்களேன்! 

இவர்கள் பாட்டனார் முதலெ ழுத்தைச் 
சோதித்துப் பாருங்கோள் சால வேஇது
ஆய்ந்து பாருங்கோள் பார்த்து நீரினித் 
தர்ம மாம்படிச் சொல்லு வீரே! 

(திருவெண்ணை நல்லூர்ப் பிராமணர்களிடம் வழக்கை விரிவாகக் கூறுகிறார். கிழவன் உருவில் வந்த சிவன்! சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட்டன் (அவர் பெயரும் ஆரூரன் என்பதே) இவனுக்கு அடிமையென்று ஓலை உள்ளதாம்; அந்த ஓலையில், பாட்டனும் அவரின் பிள்ளை வமிசமும் அடிமைகள் என்று உள்ளதாம்! எனவே. சுந்தரமூர்த்தி நாயனாரும் அடிமைதான் என்பது சிவன் வாதம்!) 

வசனம் 

“அந்தச் சமயத்திலே சுந்தரர் சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (17) 

‘குடியைக் கெடுத்துவிட்டாரே!’ 

தரு 

35. யேதொன்றும் நானறியேன் என்னவென்று 
சொல்வேனய்யா? 
நீதிநெறி யில்லா நிந்தைவந்து வாய்த்ததய்யாரி!
வருநாவ லூர்ப்புகழும் வளமை பெருமெங்கள் 
திருநாவ லூரிங்குச் சேர வந்துதித் தாரென்றே 
தந்தை தந்தை ஆரூரர் சடைய ரெந்தை நாள்முதலாய்
எந்தநாள் வரையும் நாங்க ளிருந்த தெல்லாம்
புத்தூர் சடங்கவியார் தையல் தன்னை 
வரையவன்றே இப்பொழுது மண்மீதிலிருந் தாகாதே! 
வந்தனர்காண் இவராரோ மத்திவரை நானறியேன் 
அந்தணனா ரிவாரென்னை 
அடிமை யெனச்சொன்னார்! 
இந்தமணம் வேண்டாம்காண் 
இனிமனைவிட் டெழுந்துரு என்றார்! 
சொந்தமெனக் கேவல்செய்ய 
தொடர்ந்துபின்னே வாவென்றார்! 
யொன்றைத் தன் கையில் பிடித்துக் கொண்டு
வாதுகள் செய்தே என்னை வந்து மடிபிடித் 
திழுத்தார்காண்! 
அடித்தே னென்றார் பிடித்தே னென்றார் என்றார் 
குடித்தன மாயிருந்த எங்கள் குடிவாழ்க்கை 
குலைக்க வந்தார்! 
காலம் வந்தால் கறுப்பு வந்தால் காவலர்கள் 
தெண்டங் கொண்டால் 
ஏலங்கூறி எனது பாட்ட ஏதுக்காய் விலைப்பட்டான்?
அந்தணர்கள் அடிமைப்பட ஆராலுங் கேட்டதுண்டோ?
எந்தடவோ இனியிதனை ஈர்ந்தறுத்துத் திறப்பீர்; நீரே! 

(முன்னே சிவனார் கூறிய வாதுரைக்குப் பதில் இறுக்கிறார், சுந்தரமூர்த்தியார், அந்தணருக்கு அடிமை பூணுதல் என்பது எங்கும் நடவாததாயிற்று! அப்படி இருக்க, இக்கிழவர் இவ்வாறு கூறுவது நியாயமா? எங்கள் குடி வாழ்க்கையையே கெடுத்து விட்டாரே! நீங்கள் கேட்டு நியாயம் கூறுங்கள் என்று முறையிடுகிறார் சுந்தரர் சடங்கவியார் சுந்தரரின் மாமனார்.) 

‘மூலச் சான்றைக் கொடுங்கள்!’

வசனம் 

“அதோ நல்லது யிவர் வாக்குமூலம் கேட்டோ மோகோ. கிழவனாரே! உம்மிட கையிலே யிருக்கிற சாதனத்தை வரக்காட்டுமையா!” (18) 

‘மூலப் பத்திரமும் கிழிக்கப்பட்டால் என்னசெய்வீர்?’

திரிபுடை 

36. எந்தன்கை முறிகொண்டு வாவென 
இசைக்கிறீர் மறையந்த ணீர்இனி 
அந்த வோலையைக் கொணர 
இப்பொழுது அஞ்சுவேன் காண்! 

ஏதுக் காயெனி ல்முன்னமென் கையில் 
எதிரிடை தனைக்கிழித்து வீசிய 
சூதப்பய லங்கிருந்து பேசிய 
துடர்ச்சி யாலே 

முன்னமே செய்த செய்கை போலவே 
மூலபத்திரந் தன்னைச் செய்திடில்
பின்னையுங் செய்திடில் பிள்ளையென் 
செய்போறீர்? நானென்ன பேசுவேனே? 

(மூல ஓலை ஆவணத்தைத் திருவெண்ணெய் நல்லூர்ப் பிராமணர்கள் கேட்டதற்கு, சிவன், “மூல ஓலைச்சான்றைக் காட்ட எனக்குப் பயமாக இருக்கிறது! ஏற்கனவே என்ஓலையைக் கிழித்துப்போட்டவனாயிற்றே இவன்? மூலத்தையும் கிழித்துப் போட்டால் நான்பிறகு என்ன செய்வேன்?” என்றுகேட்கிறார்.) 

வசனம் 

“ஆ! ஆ! விருத்தரே அதுக்கெல்லாம் நாமிருக்கிறோம்! எங்கள் கையிலே தாருங்கோளய்யா! ஆனால் இந்தாருங்கோளென்று கொடுக்க அது வாசிக்கக் கணக்கப்பிள்ளை வருகிற விதமெப்படி யென்றால்” (19) 

(மூல ஆவணத்தைச் சிவனார்,திருவெண்ணெய் நல்லூர்ப் பிராமணர்கள் கையில் ஒப்படைக்கிறார். அதை வாசிக்கக் கணக்குப்பிள்ளை வருவது கூறப்படுகிறது. மூல ஆவணத்தை நாங்கள் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று திருவெண்ணெய் நல்லூர்ப் பிராமணர்கள் உறுதி தந்ததன் பின்பே சிவன் அந்த ஆவணத்தை அவர்களிடம் ஒப்புவிக்கிறார்.) 

கணக்குப் பிள்ளை வரவு!

விருத்தம் 

37. வேதனமா மரபு தன்னில் 
விளங்குசீர் கருணர் கோமான் 
ஆதியின் முக்கட் தேவன் 
வள்ளல் 
போதனா புரிக்கு வேந்தன் 
சாதனை தனைவா சிக்கச் 
சபைதனில் வருகின் றானே! 

(கணக்குப் பிள்ளை, மூல ஆவணம் படிப்பதற்காகச் சபைக்கு வருகிறார்.) 

எழுத்தாணியுடன் கணக்குப்பிள்ளை தோன்றுதல்! 

தரு

பதம் 

38. கரணிக்காந்தனன் வந்தனன் இந்தக் 
களரிக் குகந்து யர்ந்தணன்! 
நயந்து மேலு யர்ந்தனன் கோலோச்சி 
அந்தணன் காலவி யந்தணரே (கரணிக்) 

அரையி யெழுத்தாணிக் கூட்டினன் – மலர் 
அங்கையில் பிடித்ததோர் ஏட்டினன்!
இங்கித னாட்டிய நல்லரு ணாட்டிய
மிஞ்சிய தாட்டிக மானோன்! (கரணிக்) 

சுங்குதொங்கு சோமனுடுத்தனன் 
பட்டுத் துப்பட்டி சுக்கத் தொடுத்தனன் 
தடுத்தனன் விடுத்தனன் 
நன்மை படுத்தன னாவோன்! (கரணிக்) 

(கரணம் கணக்கு; கரண என்பது. கரணி என வந்தது. கணக்குப்பிள்ளை இடுப்பில் எழுத்தாணி போட்டு வைக்கும் உறை சொருகியிருந்ததாம்; கையில் ஓலைச் சுவடியும் வைத்திருந்தானாம் காந்தனன் சிறந்தவன்.) 

‘வாசியும் பிள்ளாய்!’ 

“ஆ ஆ மகா சனங்களே! அனைவருக்கும் தெண்டம், தெண்டமய்யா,’ ‘ஆசிர்வாதம்! ஆசிர்வாதம்! இந்தச் சாசனத்தை வாசியும் பிள்ளாய்!” “அப்படியே வாசிக்கிறேன் கேளுங்கோளய்யா!” (20) 

விருத்தம் 

39. மதுவெண்ணெய் நல்லூர் திருநகர்ப் பித்த னார்க்கு 
நாமவா ரூரன் சைவ நல்கிய அடிமை ஓலை 
தாமினி பிள்ளை பிள்ளை தரந்தர மடிமை கொண்டோம்
இதற்கைய மில்லை ஆரூரன் எழுத்து மீதே! 

(பித்தனார் சிவனார்; சிவனுக்குச் சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட்டனார் எழுதிக் கொடுத்த மூல ஆவண வாசகம் மேலே கண்டது அதன்படி, அப் பாட்டனும், அவரின் வழி வழி வரும் பிள்ளைகளும் திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு அடிமை என்று ஆகிறது. இந்த வாசகத்தைக் கணக்குப் பிள்ளை மற்றவர்களுக்குப் வாசித்துக் காட்டினார்.) 

லிபி சோதனை கோருதல்! 

வசனம் 

“ஆனால் சுந்தரா, உங்கள் பாட்டனாரூரன் உன் கையெழுத்து வேறே யிருந்தால், யிதுக் குமதுக்கும் லிபி சோதிக்கச் சீக்கிரமா யழைப்பாயும்,பிள்ளாய்” 

“அப்படியே அழைப்பிச்சேனய்யா” 

ஆனால் சுந்தரர், “சேராது’ கணக்குப் பிள்ளையும் பிள்ளைமிருக்கிற பிராமணரும் லிபி சோதினை பார்த்து, உண்டான படிக்குச் சொல்லுங்கோளென்ன அவர்கள் சொல்லுகிற வயனமெப்படி யென்றால் (21) 

(லிபி சோதனை – எழுத்துச் சோதனை; அஃதாவது சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட்டனாரின் கையெழுத்தும், வாதிடும் கிழவர் காட்டும் ஆவணத்தில் உள்ள கையெழுத்தும் ஒன்றாக உள்ளதா என்று பார்க்கும் சோதனை. தடயவியல் அறிவியல் அந்தக் காலத்திலேயே தமிழிரிடம் இருந்தமைக்கு இது சான்று!). 

விருத்தம் 

40. எச்சமொன் றில்லை ஐயா 
உடலுயி ரெழுத்து மெல்லா 
மிச்சை யிசையதாய் நாங்கள் 
யெழுத்தெழுத் தினையா ராய்ந்தோம் 
அச்சம்கொண் டுறைந்த பொன்னின் 
மாத்தெனப் பார்த்தோ மையா 
அச்சிலே போட்ட தென்னல் 
ஆகிய எழுத்துத் தானே! 

(திருவெண்ணெய் நல்லூர் பிராமணர்கள் சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட்டன் கையெழுத்தையும் பாட்டன் எழுதி தந்ததாகக் கிழவர் தந்த ஓலை எழுத்தையும் சோதித்தனர்; இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டறிந்தனர். 

எச்சம் குறை; பொன்னின் மாத்தென தங்கத்திற்கு மாற்று உறைத்துப்பார்ப்பது போலப் பார்க்கப்பட்டதாம். அச்சுவார்ப்பு இங்கே ‘பிரிண்ட்’ என்ற பொருள் ஏலாது.) 

வசனம் 

“அந்த விசேஷத்தைக் கேட்டு அந்தச் சாசனத்தைக் கிழவனார் கையிலே கொடுத்து மகாசனங்கள் சுந்தரருடனே சொல்லுகிற வசன மெப்படி யென்றால்”  (22) 

‘கிழவர் பின்னே போகவேண்டியது தான்!’

சந்த விருத்தம் 

41. பழுதுபிழை யேதுமில்லை 
பார்க்கிலிச் சுந்தரனே! 
யெழுதி வழக்கில்லை யென்றே 
யியம்புவது மறியாயோ? 

முழுதுமத னாவிந்த 
முதியவர்வழக்கே செல்லுங்காண்! 
அழுதபிள்ளை பால்பெறுமென் 
றவர்பின்னே நடவாயே!

‘ஓலை எழுத்து. கிழவனார் பக்கமே நிற்கிறது; எனவே, உன் பக்கம் நியாயம் இல்லை!நீ பேசாமல் இக்கிழவர் பின்னே நடப்பது தான் நியாயம்!” என்று தீர்ப்புக் கூறினார்கள் திருவெண்ணெய் நல்லூர்ப் பிராமணர்கள்.) 

வசனம் 

“அப்போ கிழ விப்ரரை அழைத்துச் சொல்லுகிற வசன மெப்படியென்றால்.” (23) 

‘கிழவனாரே உம்வீடு எது?’

திபதை 

42. முதிய வந்தணரே மொழிவது கேளும் 
பதியுமும் மடிமைப் பத்திர மதனிற் 

காக்ஷியும் புத்தியும் தானில்லை யெனினும்
ஆக்ஷியாய் எழுத்தொன்று மாத்திரம் இருந்ததால் 

செயமும் தெனவே செப்பினோம் இனியே!
சுயமதாய் அவனைத் தொண்டுகொண் டருளும் 

இப்படி யாக யிருந்துதே யினிநீர் 
மெய்ப்படி யாக விளம்புதல் வேண்டும் 

வித்தக மான வெண்ணெய்நல் லூரிற்
பித்தனா ரெனவே பேருஞ்சொன் னதனால் 

உம்மிட முகத்தை யொருக்காலும் காணேம்
உம்மிட பேரை யொருக்காலும் 

இந்தநாள் வரைக்கும் எமையறி யாமல்
இந்தவூர் தன்னிலே யெங்கனே வீடு? 

கையிலே நெல்லியைப் போற்காண நாங்கள்
ஐயமே யில்லாமல் அறைந்திடு வீரே! 

(“ஐயா கிழவனாரே! பார்வையும் புத்தியும் உமக்கு இல்லை. என்றாலும்,நீர் காட்டிய ஓலை எழுத்து உமக்குச் சாதகமாக இருப்பதால் உம் பக்கம் தீர்ப்பளித்தோம்! இனிமேல் சுந்தரரை நீர் அடிமையாக நடத்தலாம்! அது சரி!பித்தனார் என்று உம் பேரு உள்ளதே தவிர, இந்தப் பேரை நாங்கள் திருவெண்ணெய் நல்லூரில் கேட்டதில்லையே! உம் முகத்தையும் இதற்குமுன் நாங்கள் பார்த்ததில்லையே! உம்மவீடு எங்கு உள்ளது?” என்று கிழவர் வேடத்தில் வந்த சிவனாரைப் பார்த்துக் கேட்டனர் திருவெண்ணெய் நல்லூர்ப் பிராமணர்கள்.) 

‘என் பின்னால் வந்தால் காட்டுகிறேன்!’ 

விருத்தம் 

43. அந்தணீ ரும்மை யெல்லாம் 
அறியோம் நாமே நீங்கள் 
எந்தமை யறியோ மெனநீர் 
இப்பொழுது எந்தன் பின்னே 
வந்திடு வீரே யாகில் 
வாழ்வு தன்னைச் 
சந்ததி தன்னைப்பெண்டிர் 
தன்னடிப் காண்பிப் பேனே! 

(“அந்தணர்களே! என்னை உங்களுக்குத் தெரியாது; ஆனால் உங்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்! இதோ இப்போதே என் பின்னால் வாருங்கள்,என்வீடு, வாசல்,மனைவி, மக்கள் அனைவரையும் உங்களுக்குக் காட்டுகிறேன்!என்றார் கிழவர்.) 

வசனம் 

“இப்படியாகக் கிழவனார் சொல்ல யெல்லாரும் எழுந்து போறபோது வீதியிலே கிழ விப்ரரைக் கண்டபேர் சொல்லுகிற விதமெப்படி என்றால்,” (24) 

சம்பை 

44. ஆருரர் குடிவாழ்க்கை யழிக்க வந்தார் 
பாரீரிந்த ஊரூராமிவன் மாய்மைக்குள் ளானார்; 

பாரீர் தாலிகட்டும் வேளைவந்து தடுத்து 
போரிட்டந்த நீலியிட்ட நிந்தையெனப் பாரீர்! 

அடிமையெனச் சொன்னதுவும் 
அதுக்கோலை கொணர்ந்ததுவும் 
கொடுமையிவன் கூத்தனுக்குக் கூத்தனி வன்கண்டீர்! 

அந்தோலை கிழித்திடினும் அதுசவா தெனச்சொல்லி
முந்தோலை யெனவேறு முறிகொணர் தல்பாரீர்! 

முறிகொணர்ந் தாலுவேறு மெய்யாக வம்முறியில்
மாறுபடா வெழுத்திருக்க வகைசெய் தான்பாரீர்! 

தள்ளினால் விழுங்கிழவன் தன்வலிமை பாருமெத்த
துள்ளுவதும் பேசுவதும் துடருவது தும்பாரீர்! 

யிந்தஆரூர் தனையிழுத் தடிமை யெனச்சொல்லு
மந்தவாய் விஷமாகா மரப்பொம்மை 

மெத்தத் துள்ளி யிவன்வீண் சண்டை யிட்டிழுத்த
கைத்தலத்துக் கெந்நாளும் கப்பரை வாராதோ? 

காயமிரு கூறாகிக் கண்கள்நெருப் பாயெரிந்து
மாயனிவன் இருகாலும் வாதமா காதோ? 

துடித்து வருமிவன் வீடுசுட்ட காடாகி
அடுத்தபொழு தாகாச மாகிப் போகானோ? 

ஊரார் புலம்பல் காட்சி இது! ஊர் மக்கள் தங்களுக்குள் வயிறெரிந்து பேசிக் கொள்ளும் சுவைமிகு நாடகக் காட்சி.

சவாது – பிரதி, நகல் 

(ஊர் மக்கள், “ஆருரரின் குடியைக் கெடுக்க ஒரு கிழவனார் வந்தாரே! ஊராரும் அவர் பக்கம் நியாயம் உள்ளது என்றனரே! இவன்சரியான கூத்தனுக்குக் கூத்தனாக அல்லவா இருக்கிறான்? ஓர் ஓலை காட்டினான்; அதைக் கிழித்துவிட, அதற்கும் மூல ஓலை உள்ளது என்று காட்டுகிறானே! ஒரு தள்ளு தள்ளினால் கீழே விழுந்துவிடுவான்! அப்படிப்பட்ட கிழவன் இப்படியெல்லாம் துள்ளுவதைப் பாருங்களேன்! இவனுடைய இரு கால்களும் விளங்காமல் போகட்டும்! கண்கள் நெருப்பாக எரிந்து சாம்பலாகட்டும்! இவன் வீடு சுடுகாடு ஆகட்டும்!” என்று ஏசினர்) 

– தொடரும்…

– கீழ்த்திசைச் சுவடிகள் வெளியீடு எண் : 81

– பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்), பி.எட்., டிப்.வ.மொ. பி.எச்.டி., காப்பாட்சியர், அ.கீ.சு. நூலகம், சென்னை-600 005.

– பொதுப் பதிப்பாசிரியர்: நடன காசிநாதன் எம்.ஏ., இயக்குநர், தொ. பொ.ஆ.துறை, சென்னை-600 113.

– அ.கீ.சு.நூ. 1995

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *