சீதையாக வந்த பார்வதிதேவி!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,112 
 
 

பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார்.

”ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் புறப்படலாமே?!” என்றாள் தேவி.

இதைக் கேட்டதும், ”தேவி… நம்மைத் துதிக்கும் அடியவர்களுக்கு அருள்வதில் தாமதம் கூடாது. இன்று மட்டும் சுலப பாராயணம் செய்து விட்டுப் புறப்படு!” என்றார் பரமனார்.

சீதையாக வந்த பார்வதிதேவி!பார்வதிதேவியின் முகத்தில் குழப்பம். ”ஸ்வாமி, இதற்கான சுலப பாராயணம் குறித்து தாங்கள் உபதேசிக்க வில்லையே?” என்றாள்.

புன்னகையுடன் ஏறிட்ட பரம்பொருள், ”ஸ்ரீராம… ராம… ராம என்று மூன்று முறை உச்சரித்தால் போதும். விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறிய பலன் கிடைக்கும்!” என்றார் பார்வதிதேவியிடம்.

அதன்படி, ஸ்ரீராம நாமத்தை மூன்று முறை உச்சரித்து வணங்கிய தேவி, சிவனாருடன் புறப்பட்டாள். இருவரும் தண்டகாரண்யத்தை அடைந்தனர். அங்கு, தன் மனைவி சீதாதேவியைப் பிரிந்ததனால் ஏற்பட்ட துயரத்தில் புலம்பியபடி, அவளைத் தேடி அலைந்து கொண்டிருந்தார் ராமபிரான். அவரது புலம்பல், பார்வதியின் செவிகளிலும் விழுந்தது. ”ஸ்வாமி… எவரோ ஒருவர், துயரத்துடன் புலம்பும் சத்தம் கேட்கிறது. அவர் யாரென்று அறிந்து, அவரது துயர் நீங்க அருள் புரியலாமே?” என்று சிவனாரிடம் கேட்டாள்.

உடனே சிவபெருமான், ”அவர் வேறு யாருமல்ல… உன் சகோதரர் ஸ்ரீமந் நாராயணன்தான்! தேவர்களது நலனுக்காக, அசுரன் ராவணனை அழிக்க ஸ்ரீராமனாக அவதரித்திருக்கிறார். மனிதனாகப் பிறந்திருக்கும் அவர், இந்த அவதாரத்தில் மனைவியைப் பிரிந்து வாட வேண்டும் என்பது விதி. இதில் நாம் தலையிட வேண்டாம்!” என்றார்.

அழுது புலம்புவது தன் சகோதரர் தான் என்பதை அறிந்த பார்வதிதேவி கவலை கொண்டாள். தன் சகோதரருக்கு ஆறுதல் கூற விரும்பினாள். ‘தான், சீதையின் உருவத்துடன் ஸ்ரீராமனிடம் சென்றால்… மனைவியைப் பிரிந்து வாடும் அவர் மனம் துயரில் இருந்து விடுபடும்!’ என்று எண்ணினாள். தனது விருப்பத்தை சிவபெருமானிடம் கூறி அவரது அனுமதியை வேண்டினாள்.

”உமா… இது ஆபத்தான செயல். ஒரே இல், ஒரே வில், ஒரே சொல்… எனும் கொள்கை கொண்ட ஸ்ரீராமனாக அவதரித்திருக்கிறார் உன் சகோதரர். எதிரிகள் எத்தனை பேராக இருந்தாலும் ஸ்ரீராமனது ஒரு பாணமே அவர்களை அழித்துவிடும். அது போல் தன் இல்லாளான சீதாவை மட்டுமே மனதில் கொண்டவர். அவர் உச்சரிக்கும் ஒரு சொல்கூட மந்திரம் போல் பலித்து விடும். தவிர, நீ எந்த உருவில் சென்றாலும் உன்னைக் கண்டுகொள்வார். ஆகவே, விஷப் பரீட்சை வேண்டாம்!” என்று அறிவுறுத்தினார் பரமேஸ்வரன்.

ஆனால், தன் நிலையில் உறுதியாக இருந்த பார்வதி தேவி, சீதையாக உருவெடுத்து, தன் சகோதரரிடம் வந்தாள்.

வந்திருப்பது தன் சகோதரியே என்பதைச் சட்டென்று உணர்ந்து கொண்டார் ஸ்ரீராமன். ”சகோதரி… ஏன் இந்த கோலம்? கயிலைநாதனுடன் ஏதேனும் ஊடலா? அதனால் அவரைப் பிரிந்து, சீதையின் உருவில் இங்கு வந்தாயா?” என்று கேட்டார்.

பார்வதிதேவி அதிர்ந்தாள். தனது எண்ணத்தைக் கூறியவள், ”தங்களைத் தேற்றுவதற்காகவே சீதையின் வடிவில் வந்தேன். தவறு இருந்தால் மன்னியுங்கள்!” என்று ஸ்ரீராமனிடம் வேண்டி நின்றாள்.

வெறுமையுடன் சிரித்த ஸ்ரீராமன், ”சகோதரி… இது, விதியின் விளையாட்டு. எனக்காக நீ வருந்தாதே!” என்று பார்வதிதேவியை வழியனுப்பி வைத்தார்.

காலங்கள் கடந்தன. பரமேஸ்வரர் கூறியது போல, ஸ்ரீராமனின் சொல் பலித்தது!

தட்சன், தான் நடத்திய யாகத்துக்கு மகள் தாட்சா யினியையும் மருமகனான ஈஸ்வரனையும் அழைக் காமல் புறக்கணித்தான். சிவனாருக்குத் தர வேண்டிய அவிர் பாகத்தையும் தர மறுத்தான்.

அவனுக்கு நியாயத்தை உணர்த்த விரும்பினாள் தாட்சாயினி. ஆனால், அவள் யாகத்துக்குச் செல்ல அனுமதிக்க மறுத்தார் சிவனார். இதனால் இருவருக் கும் இடையே ஊடல் ஏற்பட்டது. சிவனாரைப் பிரிந்த சக்தி, தட்சனின் வேள்வித் தீயில் பாய்ந்தாள்!

இதன் பிறகு பர்வத ராஜனின் மகளாகப் பிறந்தவள், பார்வதியாக வளர்ந்து, தவப் பலனால் சிவனாரை மணந்து மீண்டும் கயிலாயம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன!

– கல்யாணபுரம் ஸத்யமூர்த்தி (டிசம்பர் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *