சிவ பரிவாரம் கூறும் தலைவனின் இலக்கணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 9,258 
 
 

சிவ​பெருமா​னுடைய குடும்பத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பூரணமான ஒற்றுமையைக் காண முடிகிறது.​ ​

அனைத்து தேவதைகளிலும் குடும்பமுள்ள தெய்வம் சிவன் மட்டும் தான் போலும். கைலாச குடும்பத்தில் ஒரு பரிவார பாவனை தெளிவாக தெரிகிறது.

பரம சிவன் ஒரு நல்ல யோகி. ஆதி​ ​சக்தியான அன்ன பூரணி தேவி அவர் மனைவி. வயிறு நிறைய அன்னமிடும் அன்பு நிறைந்தவள். அதோடு மகா சக்தி நிரம்பியவள். அன்பான கணவன் மனைவி​.​

அதோடு அவரவர் சுதந்திரம் அவரவருக்கு. ஆனாலும் ஒருவரையொருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் சமதத்துவம் அவர்களுடைய தாம்பத்தியத்தில் உள்ளது. இருவரும் சமமான கெளரவம் உடையவர்கள். ஐயாவுக்கு எத்தனை மரியாதை உள்ளதோ அதே அளவு அம்மாவுக்கும் கீர்த்தி உண்டு.

இந்த தம்பதிகளுள் யார் உயர்வு என்ற கேள்விக்கே இடமில்லை. இருவருக்கும் சம பாகம். எனவே தான் இருவருக்கும் சேர்ந்து ஒரே சரீரம். அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் உள்ள தாம்பத்திய மாதுர்யம் எத்தனை மனோகரமானது!

அதையடுத்து, திறமைசாலிகளான குமாரர்கள். அது கூட அளவோடு. ஒருவர் விக்னங்களை விளையாட்டாக விலக்குபவர். இன்னொரு புதல்வர் தேவர்களின் சேனையை நல்ல நெறியுடன் ஒருமுனைப் பாட்டோடு நடத்தி வெற்றிகளை சாதிப்பவர்.

இந்த கைலாசத்தில் பார்த்தால் இன்னொரு விந்தை. காளைக்கும் சிங்கத்திற்கும் பிறவிப் பகை இருந்தாலும், கைலாசத்தில் நந்தீஸ்வரரும், அம்பாளின் வாகனமான சிம்மமும் நட்போடு மிளிரும். அதே போல் சுவாமியின் திருமேனி மேல் நெளியும் பாம்புகள், பெரிய மகனின் மூஞ்சூறோடு சிநேகமாக இருக்கும்.

குமார சுவாமியின் மயில், பாம்புகளுடன் தோழமை கொள்ளும். இவை பிறவிப் பகையை மறந்து சிவ சந்நிதியில் அன்போடு பழகி வீட்டை அமைதியாக வைத்துள்ளன. ‘அன்பே சிவம்’ என்ற சைவ சித்தாந்தம் ஸ்பஷ்டமாக சிவனுடைய வீட்டில் காணப் படுகிறது.

ஜகதீஸ்வரனாக, சர்வ ஜகத்தின் ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியாக, விஸ்வநாதனாக இருப்பினும் அவருடைய ஆடம்பரமற்ற வைராக்கியம் அவருக்கே உரிய தனி குணம். உலக நாயகனுக்கு இருக்க வேண்டிய தியாக புத்தி விஸ்வேஸ்வரனின் உருவில் விளங்குகிறது.

பிறவிப் பகையை விலக்கக்கூடிய நிர்வாக சாமர்த்தியம் ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய முதல் குணம் என்பதை கைலாச குடும்பம் எடுத்துரைக்கிறது. வீட்டிற்குள் வேறுபட்ட எண்ணங்கள் கொண்ட உறுப்பினர்கள் இருந்தாலும், அன்புடன் ஒற்றுமையை சாதிக்க முடியும் என்று சிவ பரிவாரம் போதிக்கிறது.

இன்னொரு புறம்,

பாற்கடலைக் கடைந்த போது விஷம் வெளிவரக் கண்டவுடன் அனைவரும், ‘சிவா சிவா! காப்பாற்று!’ என்று பிரார்த்தித்தபடி அரண்டு ஓடினார்கள். அப்போது அபயமளித்து, முன்வந்து ஆதரவு காட்டியது ஹரன் ஒருவரே! அதற்குப் பின் பாற்கடலில் இருந்து எவ்வளவோ செல்வங்கள் வெளி வந்தன. அப்போதெல்லாம் யாருக்குமே சங்கரனின் நினைவு வரவில்லை. கஷ்டம் வரும்போது தேவைபட்டவர் கால காலன். சம்பத்துகள் வந்த போது தெய்வம் நினைவுக்கு வருவதென்பது கஷ்டம் தானே! ​ ​

எப்படி அவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்ற பதட்டமே தவிர தேவர்களுக்கோ அசுரர்களுக்கோ ஈஸ்வரனின் ஞாகபகம் வர வில்லை. செல்வத்திற்கோ, சுகத்திற்கோ ஆசைப்படவுமில்லை பரமசிவன்.

இதுவும் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய லட்சணத்தையே எடுத்துக் காட்டுகிறது. போகங்களுக்கின்றி தியாகத்திற்கு முன்னால் நிற்பவனே உண்மையான தலைவன். பிறர் நலனுக்காக எத்தனை சிரமங்கள் வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் உறுதி படைத்த ​உலகாளுபவனின்
வைபவம் மிகச் சிறந்த தலைவருக்கான இலக்கணமாக நாமறிய முடிகிறது.

ஞானம், வைராக்கியம், தவம், உள்நோக்குப் பார்வை, கருணை, தியாகம்… இவையனைத்தும் சிவ மூர்த்தியில், சிவ லீலையில் உள்ள சிறப்பான குணங்கள்.

“பெரியவர், சிறியவர் என்ற பேதம் பாராமல் அனைவரையும் அரவணைக்கும் பரம தயாளு சங்கரன்’ என்று சிஸ்டர் நிவேதிதா பரவசத்துடன் விவரித்துள்ளார்.

“Oh! India! Forget not that the God, thou worshippest is the Great, Ascetic of ascetics, the all renouncing Sankara” என்று சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஆடம்பரமற்ற தியாக உணர்வுக்கு சங்கரனை உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

சிவனை ஆராதிப்பதென்றால், அமைதியை, சமத்துவத்தை, யோகத்தை, ​​​எளிமையை​, தியாகத்தை, தவத்தை – ஆதர்சமாக உணர்வதே!

‘ஆத்மாவின் உயர்வே முக்தி. ஆடம்பரமான பௌதீக உலகம் அல்ல’ என்று அடித்துக் கூறும் சிவ தத்துவமே இந்திய தர்ம சாத்திரங்கள் எடுத்துக் கூறும் சரம சித்தாந்தம்.

“Siva embodies eternal India” சாஸ்வதமான இந்திய இதயத்தின் வெளிப்படையான உருவமே பரமசிவன்-​என்றார் விவேகானந்தர்.​
​​

உலகில் வேறுபட்ட உணர்வுகள் இருப்பது சகஜம். நீரில் நெருப்புமிருக்கும், விஷத்தோடு கூடவே அமுதமும் இருக்கும். வேறுபாடுகளை, பல வகைபாடுகளாக ஏற்று தகுந்த கட்டுப்பாட்டுடன் நடப்பதன் மூலமே வேற்றுமையில் ஒற்றுமையை சாதிக்க இயலும்​.​

அதுவே சிவ ரூபத்தில் காணக் கிடைக்கிறது.

சிரசின் மேல் நீர். நெற்றியில் நெருப்பு, தலை முடிமேல் அமிர்த கிரணம் கொண்ட சந்திரன். தொண்டை குழியில் விஷம்.

இவ்விதம் சகல விஸ்வ உணர்சிகளின் தொகுப்பானவர், ஒற்றுமைக்கு எடுத்துகாட்டானவர், ​​​கருணைக்கு ​விளக்கானவர் விஸ்வேஸ்வர மூர்த்தி.

அவரே ஆதி குருவாக ஒளிரும் மகாதேவர்!

தெலுங்கு மூலம் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா .​
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், மார்ச், 2013ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *