சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,221 
 
 

ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச விரும்பினார் எமதர்மன். ராமனும் அனுமதியளித்தார்.

இதையடுத்து, முனிவர் வேடத்தில் அயோத்திக்கு

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!வந்த எமதர்மன் அரண்மனைக்குச் சென்று ராமனை சந்தித்தார்: ”மகா பிரபு, தங்களது அவதாரம் குறித்து ரகசியமாகப் பேச விரும்புகிறேன். எனவே, தங்களைத் தவிர வேறு எவரும் இங்கு இருக்கக் கூடாது. ஒரு வேளை… நாம் பேசும்போது எவரேனும் உள்ளே நுழைந்தால், அவர்களை தாங்கள் சிரச்சேதம் செய்ய வேண்டும்!” என்றார்.

அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட ராமன், ”எவரும் உள்ளே வராதபடி சற்று நேரம் வாசலில் இரு” என்று தன் தம்பி லட்சுமணனைப் பணித்தார்.

அதன்படி, வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்தான் லட்சுமணன். சற்று நேரத்தில், அங்கு வந்து சேர்ந்தார் துர்வாச முனிவர். லட்சுமணன் அவரை வணங்கி வரவேற்றான்.

அவனிடம், ”ராமச்சந்திரனை உடனே பார்க்க வேண்டும்!”என்றார் துர்வாசர்.

லட்சுமணன் தர்ம சங்கடத்தில் நெளிந்தான்! ‘இப்போது, உள்ளே அனுமதித்தால், துர்வாசர் சிரச் சேதம் செய்யப்படுவாரே’ என்று யோசித்த லட்சுமணன், அவரை ஆசனத்தில் அமரச் சொன்னான்.

அவ்வளவுதான்! துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது. ”நான் ஓய்வு எடுப்பதற்காக இங்கு வரவில்லை. ராமனை இப்போதே பார்க்க வேண்டும். உள்ளே அனுமதிக்க முடியுமா? முடியாதா?” என்று ஆவேசத் துடன் கேட்டார்.

”ஸ்வாமி! உள்ளே… முக்கியமான ஒருவருடன் தேவ ரகசியம் பேசிக் கொண்டிருக்கிறார் ராமர். எப்போதும் அவருடனேயே இருக்கும் நானே வெளியில் நிற்கிறேன் என்றால் பாருங்களேன்!” என்று துர்வாசரின் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பேசினான் லட்சுமணன்.

ஆனாலும் துர்வாசரது கோபம் தணியவில்லை.

”என்னை விடவும் முக்கியமான வரா… யார் அவன்?! நான் இப்போதே ராமனைப் பார்த்தாக வேண்டும். உள்ளே செல்ல அனுமதிக்காவிட்டால் சபித்து விடுவேன். அயோத்தி நகரமே பற்றி எரியும்!” என்றார்.

வேறு வழியில்லாத நிலையில், துர்வாசர் வந்திருக்கும் தகவலைத் தெரிவிக்க ராமனின் அறைக்குள் நுழைந்தான் லட்சுமணன். அவனைக் கண்டதும் ராமனும், எமதர்மனும் தங்கள் உரையாடலை நிறுத்தினர்.

ராமனை ஏறிட்ட எமதர்மன், ”ஸ்வாமி, நீங்கள் வாக்கு தவறாத உத்தமர். லட்சுமணனால் நமது உரையாடல் தடைபட்டுவிட்டது… வருகிறேன்!” என்று கிளம்பிச் சென்றார்.

‘உயிருக்குயிரான தம்பியை சிரச்சேதம் செய்ய வேண்டுமா?’ என கலங்கினார் ராமன். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், துர்வாச முனிவரையும் சந்தித்துப் பேசி, அவரை வழியனுப்பி வைத்தார். அவர் சென்றதும் தம்பியை ஏறிட்ட ராமன் கண்ணீர் வடித்தார்.

”எப்போதும் என்னோடு இருக்கும் உன்னை, நானே கொல்வதா? அது என்னால் இயலாத காரியம். அதே நேரம்… வாக்குத் தவறுவதும் அதர்மம் ஆயிற்றே!” என்று புலம்பினார்.

செய்வதறியாமல் திகைத்த ராமன், குலகுருவான வசிஷ்டர் மற்றும் அமைச்சர்களை வரவழைத்து நடந்ததை விவரித்தார். தக்கதொரு தீர்வு சொல்லும்படி அவர்களிடம் வேண்டினார்.

ராமனை நன்கறிந்த வசிஷ்டர் பேச ஆரம்பித்தார்: ”ராமா, வருந்தாதே. எந்த பாதகமும் இல்லாத ஒரு வழி சொல்கிறேன் கேள்! நல்லவர்கள், நமது அன்புக்கு உரியவர்கள் மற்றும் உடன் பிறந்தோர் ஆகியோரைப் புறக்கணிப்பது, அவர்களைக் கொல்வதற்குச் சமம். எனவே, நீ உன்னிடமிருந்து லட்சுமணனை விலக்கி விடு!” என்று அறிவுறுத்தினார்.

அதை ஏற்று, லட்சுமணனை நாடு கடத்துவதாக அறிவித்தார் ராமன். சகோதரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, சரயு நதிக்கரைக்குச் சென்று அங்கே தவமிருந்த லட்சுமணன் முடிவில் அந்த நதியிலேயே மூழ்கி அமரத்துவம் பெற்றான்.

பின்னர் ராமன், தனது அவதாரம் நிறைவு பெறும் வேளை வந்ததும், அதே சரயு நதியில் தன்னைச் சார்ந்தாருடன் மூழ்கி, வைகுண்டம் திரும்பினார்

(ஓர் கர்ண பரம்பரக் கதை).

– டி.ஆர். பரிமளம், திருச்சி-21 (ஆகஸ்ட் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *