சிசுபால வதம் (மஹாபாரதம்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 13,665 
 

பாகம் நான்கு | பாகம் ஐந்து

யுதிஷ்டிரர், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் உள்ள அனைவரும் சபா பவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர். ராஜசூயயாகம் ஆரம்பிக்கப்பட்டது. வேடுவ தலைவர்கள், மலை வாழ் மன்னர்கள், குறுநில மன்னர்கள், ராஜாக்கள், ராஜாதி ராஜர்கள் என்று அகண்ட பாரதத்தின் எல்லா பிரதேசங்களில் இருந்தும் அனைத்து தரப்பு மக்களும் வந்திருந்தனர்.

யுதிஷ்டிரருக்கு கப்பம் செலுத்தியவர்களும், அன்பு பரிசுகள் கொடுப்பவர்களுமாக இருந்தார்கள். பலவகை ரத்தினங்களும் தங்கத்தால் பின்னப்பட்ட ஆடைகளும்,அணிமணிகளும் காணிக்கையாக வந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பலநூறு யானைகள், பல்லாயிரக் கணக்கான உயர் ரக குதிரைகள் என்று வந்த பரிசுகள் ஏராளம், ஏராளம்.

சோழ, பாண்டிய அரசர்களும் யாகத்தில் கலந்து கொண்டு மணம் வீசும் உயர்தர சந்தனக்குழம்பு நிறைந்த தங்க பாத்திரங்கள், யானைகள்,குதிரைகள், தங்க ஆபரணங்கள், விலை மிக்க ரத்தினங்கள், ஆணிமுத்து மாலைகள் என்று பலபல பரிசுகளைக் காணிக்கையாக அளித்தனர். இலங்கை அரசரும் பரிசுகள் பல அளித்து ஆயிரக்கணக்கான சேவகர்களையும் அளித்தார்.

யுதிஷ்டிரரும் வந்திருக்கும் விருந்தினர் அனைவருக்கும் தங்குமிடம் விதவிதமான உணவு அளித்து உபசரித்தார். திரௌபதியும், தான் உணவு உண்ணவில்லை என்றாலும் வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவரும் உணவு உண்டார்களா ? என்று சிரத்தையாக கவனித்துக் கொண்டு மனம் குளிர உபசரித்தாள்.

இவ்வாறு மிகவும் மதிப்பு மிக்க காணிக்கைகளும் உயர்ந்த, சிறந்த பொருட்களையும் பரிசாக வந்த யானைகள், குதிரைகள் போன்ற வகையறாக்களைக் கண்ட துரியோதனன் மிகுந்த மாச்சர்யம் உடையவனானான். மிகுந்த பொறாமை கொண்டவனாக துக்கத்தினால் தான் மரணம் அடைந்தால் கூட நல்லது என்று விரும்புகிறான். ஸ்ரீகிருஷ்ணனுடைய ஆன்மாவாக அரஜுனனும், அர்ஜுனனுடைய ஆன்மாவாக ஸ்ரீகிருஷ்ணனும் இருப்பது கண்டு துரியோதனன் மேன்மேலும் பொறாமை கொண்டான். இவ்வாறாக ராஜ சூய யாகம் நன்றாக நடந்தது.

யாகம் முடிந்த பின்னர் அனைத்து மன்னர்களும் தன் யதாஸ்தானம் செல்வதற்கு முன்னால் அவர்களுக்கு தாம்பூலம் அளித்து எதிர் மரியாதை செய்ய வேண்டும் அதனால் முதன்முறையாக யாருக்கு தாம்பூலம் கொடுத்து முதல் மரியாதை செய்வது ?என்று யுதிஷ்டிரருக்கு சந்தேகம் எழுந்தது. எனவே பிதாமகர் பீஷ்மரிடம் அதுகுறித்து வினவுகிறார். அதற்கு பீஷ்மர் முதல் மரியாதை பெறும் தகுதி ஸ்ரீகிருஷ்ணருக்கே உள்ளது “. என்கிறார்.

புருஷோத்தமனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கே முதல் மரியாதை செய்விக்கலாம் என்று அறிவுறுத்துகிறார் மேலும் ஸ்ரீகிருஷ்ணருடைய பிரபாவம், அவரது பராக்கிரமங்கள் பற்றி எடுத்துச் சொல்கிறார். இந்த இடத்தில் ஸ்ரீ வியாச பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரங்களையும் சிறப்பித்துக் கூறுகிறார்.

பிதாமஹர் பீஷ்மர் முதல் மரியாதை ஸ்ரீகிருஷ்ணருக்கே செய்தல் வேண்டும் என்று எடுத்துக் கூறுகிறார். அதனால் யாக முடிவில் செய்யக்கூடிய சதஸ்ய பூஜையை ஸ்ரீகிருஷ்ணருக்கே செய்ய முடிவெடுக்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு முதல் மரியாதை கொடுப்பதற்கு ஸ்ரீகிருஷ்ணருடைய சத்ரு சேதிநாட்டரசன் சிசுபாலனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மிகவும் கோபம் கொண்டு அதிக வார்த்தைகளால் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கிறான்.

“ எதற்காக கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை ? கிருஷ்ணன் ஒரு ஆயோக்கியன். அவன் ஒரு திருடன். நீசனாகிய அவன் மாட்டு இடையன். அவன் மன்னனுமல்ல. துரியோதனன் போன்ற மன்னர்களுக்குகொடுக்காத மரியாதை கிரஷ்ணனுக்கா ?

கிருபர் துரோணர் போன்ற ஆச்சாரியர்கள் இச்சபா மண்டபத்தில் இருக்கும் போது கிருஷ்ணனுக்கா முதல்மரியாதை ? என்று பலவாறாக நூற்றியெட்டு முறைகளைக்கும் மேலாக ஸ்ரீகிருஷ்ணரைப் பழிக்கிறான்.

மற்றும் பிதாமஹர் பீஷ்மரையும் இகழ்ந்து கூறுகிறான். “ எதையும் சாதிக்காமலேயே வயது முதிர்ந்து விட்டது. கீழான புத்தியை உடையவர் ( ஏனென்றால் பீஷ்மரின் தாய் கங்கை எப்போதும் மேட்டில் இருந்து பள்ளத்துக்கு பாய்கிறவள் ) வேசிமகன் பீஷ்மர் ( ஏனென்றாஸ் கங்கையில் எப்போதும் பலதரப் பட்ட மனிதர்களும் ஸ்நானம் செய்கிறார்கள் ) என்று மிகவும் வெகுண்டு பேசுகிறான் தர்மராஜர் எல்லோரைமும் தன் வார்த்தைகளினால் இகழ்கிறான். சிசுபாலன்.

சபையில் வாதவிவாதங்கள் ஏற்பட்டன. சபையை அமைதிப்படுத்துவதற்காக பீஷ்மர் பொறுமை காத்து மீண்டும் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணருடைய பெருமைகளை க் கூறி ஸ்தோத்திரங்கள் செய்கிறார். சிசுபாலனோ கடும் கோபத்தினால் உன்மத்தனாகிறான். அதனால் சபாமண்டபத்தை விட்டு வெளியேறுகிறான். சிசுபாலனுக்கு ஆதரவாகச் செயல்படும் மன்னர்களும் அவனுடனே வெளியேறுகிறார்கள்.

சிசுபாலன் ஸ்ரீகிருஷ்ணருடன் யுத்தம் செய்ய தீர்மானிக்கிறான். சேனைகளைத் தயார் செய்கிறான் அவனது சேவகர்கள் வரக்கூடிய விளைவை நினைத்து துக்கப்படுகிறார்கள்.

இதன் நடுவே சிசுபாலனின் தூதுவர்கள் யுதிஷ்டிரரிடம் அனுப்பப் படுகிறார்கள்.

அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சிசுபாலனிடம் சரணடைந்து விடு. அவன் தோள்வலிமையுடையவன். வீராதி வீரன். சூராதி சூரன். சிசுபாலனிடம் சரணடைந்து விட்டால் யுத்தத்தை தவிர்த்து விடலாம். என்று பலவாறாக உபதேசம் செய்கிறார்கள்.

இதனைக் கேட்ட சாத்யகி மிகுந்த கோபம் கொண்டு பதிலடி கொடுக்கிறான். திரும்பவும் தூதுவர்கள் சிசுபாலனைப் புகழ்ந்து ஸ்ரீகிருஷ்ணரை நிந்தனை செய்து பல வசனங்களைக் கூறுகின்றனர்.இதனைக் கண்ணுற்ற அரசர்களும் கோபம் கொண்டனர். தூதுவர்களூம் திரும்பிச் சென்றனர்.

யுத்தம் செய்வது என்று தீர்மானம் உருவாகி விட்டது. கோரமான யுத்தம் ஆரம்பித்தது. சிசுபாலன் ஸ்ரீகிருஷ்ணர் இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடை பெற்றது. இறுதியில் ஸ்ரீகிருஷ்ணர் தன் சக்கராயுதத்தை எடுத்தார். சக்கராயுதம் சிசுபாலன் தலையைக் கொய்து கொன்று மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரிடமே திரும்பி வந்தது.சிசுபாலன் மரணமடைந்து அவன் உயிர் ஒரு ஒளிப்பந்து போல மாறி ஸ்ரீகிருஷ்ணரிடமே போய் சேர்ந்தது. இவ்வாறு சிசுபாலன் வதம் ஸ்ரீகிருஷ்ணரால் நிகழ்ந்தது. சத்ஜனங்கள் மகிழ்ந்தனர். தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே.

இத்துடன் சிசுபால வதம் முடிவுற்றது.

+++சுபம்+++

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *