காளைகளை அடக்கி கன்னியின் கரம் பற்றிய கண்ணபிரான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,548 
 

தர்மத்தின்படி நடந்ததுடன், தன் குடி மக்களையும் அந்த வழியைப் பின்பற்றச் செய்தவர் நக்னஜித். கோசல தேசத்து அரசரான அவருக்கு சத்யா என்று ஒரு மகள். அவளது அழகுக்கு ஈடு இணை கிடையாது. அத்துடன் நல்ல குணமும் நிறைந்தவள்.

பற்பல தேசத்தைச் சேர்ந்தவர்களும் சத்யாவை திருமணம் செய்யப் போட்டியிட்டனர். அப்படிப் பட்டவர்கள் கோசல தேசத்துக்கு வந்தார்கள். அங்கு அவர்களுக்கு ஓர் அறிவிப்பு காத்திருந்தது.

‘‘என்னிடம் உள்ள வலிமை மிக்க ஏழு காளைகளை யார் அடக்குகிறாரோ, அவருக்கு என் மகள் சத்யா வைத் திருமணம் செய்து கொடுப்பேன்!’’ என நக்னஜித் அறிவித்திருந்தார்.

அப்படியும் அரசர்கள் பின்வாங்கவில்லை. ‘காளைகளை நான் அடக்குகிறேன்!’ என்று ஒவ்வொருவரும் முன்வந்தனர். அவர்கள் காளைகளை நெருங்கினர்.

காளைகளை அடக்கிகாளைகளை அடக்குவதற்காக மாலைகள் கழுத்தில் ஆட வந்த மன்னர்கள் பலர், மார்பும் தோளும், குடலும் கிழிந்து கீழே விழுந்தனர். இந்தச் செய்தி கண்ணனை எட்டியது. ‘‘அந்தக் காளைகளை அடக்கி, கன்னியை நான் கைப்பிடிப்பேன்!’’ என்று கூறிய கண்ணன், அர்ஜுனன் மற்றும் படைகள் பின்தொடர, கோசல நாட்டை அடைந்தார்.

தனது இருப்பிடம் தேடி வந்த கண்ணனை, நக்னஜித் நல்ல முறையில் வரவேற்று பூஜித் தார். கண்ணனும் அவருடன் இனிமையாகப் பேசி அவரை சந்தோஷப் படுத்தினார்.

சத்யா, கண்ண னைக் கண்டாள். அதே விநாடியில் அவள் உள்ளம், ‘தெய்வமே! இவரே என் கண வராக வர வேண்டும். நான் முறையாக பூஜித்தது உண்மை என்றால், எனது வேண்டுதல் பலிக்க வேண்டும்!’ என பிரார்த்தித்தது.

நக்னஜித், ‘‘கண்ணா எல்லோரையும் மகிழச் செய்து, முழுமையான ஆனந்தத்தின் வடிவமாக இருக்கும் உனக்கு, அற்பனான நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்றார்.

கண்ணன், ‘‘மன்னா! உன் மகள் சத்யாவை திருமணம் செய்ய விரும்பு கிறேன்’’ என்றார்.

‘‘கண்ணா! மகாலட்சுமி நெஞ்சில் வாசம் செய்யும் உன்னைத் தவிர வேறு யாரை என் மகளுக்குத் தகுந்த கணவனாகத் தீர்மானிக்க முடியும்? ஆனாலும்…’’ என்று தயங்கினார் நக்னஜித்.

கண்ணன் அவரை ஊக்கப்படுத்தி, ‘‘மன்னா, தயங்காமல் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்! நான் செய்து முடிப்பேன்’’ என்றார்.

‘‘கண்ணா! என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே! என்னிடம் உள்ள ஏழு காளைகள் யாருக்கும் அடங்காதவை. அவற்றை அடக்குபவருக்கே என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பது என்று தீர்மானித்திருக்கிறேன். இதுவரை வந்த ராஜ குமாரர்கள் எல்லோரும் காளைகளால் காயமும் அவமானமும் அடைந்தார்கள். அந்தக் காளைகளை அடக்கி, நீ என் மகளைத் திருமணம் செய்து கொண் டால், என்னைவிட பாக்கியசாலி வேறு யாரும் இருக்க முடியாது!’’ என்றார் நக்னஜித்.

‘‘கவலையை விடுங்கள்! காளைகளை நான் அடக்குகிறேன்’’ என்று சொல்லிய கண்ணன், வீர அரங்கத்தினுள் நுழைந்தார்.

காளைகள் கண்ணனை நோக்கி மிகுந்த சீற்றத்துடன் பாய்ந்தன. காளிங்கன் மேல் நடனமாடி, கம்சனையும் அவன் வீரர்களையும் வதம் செய்த கண்ணன், இந்தக் காளைகளுக்கா பயப்படுவார்? அவர் ஏழு வித வடிவம் கொண்டு காளைகளை அடக்கி, அவற்றைக் கட்டி இழுத்து வந்தார்& சிறு குழந்தைகள் மர யானை பொம்மையைக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வருவது போல்.

மன்னர் மகிழ்ந்தார். சத்யா, ‘என் பூஜை பலனளித்தது!’ என்று குதூகலித் தாள். கண்ணனுக்கும் சத்யாவுக்கும் திருமணம் நடந்தது. வேத கோஷங்களும், மங்கலவாத்திய ஒலிகளும் முழங்கின.

கோசல அரசன் நக்னஜித், கண்ண னையும், சத்யாவையும் அலங்காரத் தேர் ஒன்றில் வழி அனுப்பி வைத்தார். மட்டுமின்றி, பெரும்படை ஒன்றும் அவர்களைத் தொடர்ந்து போனது.

ஏற்கெனவே, காளைகளை அடக்குவதில் தோல்வி அடைந்த அரசர்கள், ‘‘சத்யாவை, கண்ணன் திருமணம் செய்து விட்டானா? விடக் கூடாது அவனை!’’ என்று அவர்கள் எல்லோரும் கண்ணனுடன் போர் தொடுத் தனர்.

நல்லதுக்கு ஒன்று சேராத மனித குலம், கெட்டதுக்காக ஒன்று சேரும் கூத்தைப் பாருங்கள்! அவர்கள் ஏவிய அம்புகளை எல்லாம், அர்ஜுனன் சுலபமாகத் தடுத்து, அவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். அதன் பின் தம்பதி சமேதராக சத்யாவும் கண்ணனும் துவாரகையை அடைந்தனர்.

இதே தகவலை நமது பழந்தமிழ் நூல்களும் விவரிக்கின்றன. காளைகளை அடக்கிக் கண்ணன் கைப்பிடித்த பெண்ணின் பெயர் ‘நப்பின்னை’ என்கின்றன அவை. (பின்னை, பிஞ்ஞை, நீளை எனவும் அவளைக் குறிப் பிடுகின்றன அவை.)

கும்பகனின் மகள் நப்பின்னையை, ஏழு காளைகளை அடக்கி மணந்தார் கண்ணன். காலநேமி என்னும் அரக்கனின் பிள்ளைகள் ஏழு பேர், கும்பகனின் வீட்டில் காளைகளாக வந்திருந்தனர். இவர்களை அடக்கிக் கும்பகன் மகள் நீளையைக் கண்ணன் திருமணம் செய்து கொண்டார் என்கிறது சிறப்புப் பெயர் அகராதி எனும் நூல்.

நிலமகட்குக் கேள்வனும் நீணிரை நப்பின்னை,
இலவலர் வாய் இன்னமிர்தம் எய்தினானன்றே &
என்கிறது சிந்தாமணி.
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
என்கிறது திருக்கோவையார்.
பின்னை நம்பும் புயத்தான் என்கிறது தேவாரம்.
விடைக்குலங்கள் ஏழடர்த்து
வென்றி வேற்கண் மாதரார்
கடிக் கலந்த தோள் புணர்ந்த (கண்ணன்)

_ என்கிறது திவ்யப் பிரபந்தம்.

காளையை அடக்க வேண்டும் என்றால் மிகுந்த உடல் வலிமை வேண்டும். மட்டுமின்றி, தெளிந்த அறிவும் வேண்டும். அப்போதுதான் காளைகளின் போக்கை அறிந்து, அவற்றை அடக்க முடியும். அதே போல் பெண் ஒருத்தியைக் கைப்பிடித்து, இல்லற தர்மத்தில் ஈடுபட நினைக்கும் ஆணுக்கு; உடல் பலமும் தெளிவான அறிவும் வேண்டும். அப்படிப்பட்டவன்தான் இல்லறத்தில் உயர்வை அடைகிறான்.

– ஜூன் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *