காரைக்கால் அம்மையாருக்கு கயிலாய வரவேற்பு!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 15,415 
 
 

இறவாத அன்பு வேண்டும்… பிறவாமை வேண்டும்… பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும்!”

_ சிரம் தாழ்த்தி கரம் கூப்பி ஈசனை வேண்டி நிற்கும் பேயுருவை வியப்புடன் நோக்கினாள் பார்வதியாள்!

வெள்ளிப் பனிச் சிகரங்களை… தரையில் தலை பதித்துக் கடந்து கயிலையை நோக்கி வரும்போதே இந்தப் பேயுருவைக் கவனித்து விட்ட உமையவள், ”யார் இது?” என்று தன் நாயகனிடம் விசாரித்தாள்.

அவளிடம், ”எம்மைப் பேணும் அம்மை இவள்!” என விளக்கமளித்த பரமனார், ”அம்மையே வருக!” என்று பேயுருவை வரவேற்கவும் செய்தார். அது மட்டுமா? தம் திருவடிகளைப் பணிந்த அந்த உருவத்திடம், ”யாது வேண்டும்?” என்று பரமன் கனிவுடன் வினவ…

இதோ… பிறவாத வரம் கேட்டுப் பணிந்து நிற்கிறது பேயுருவம்!

ஆண்டவனே ‘அம்மை’ என்றழைத்து சிறப்பித்த பேயுருவின் சிவபக்தி கண்டு மகிழ்ந்த சக்தியின் மனம், பேயுருவின் பூர்விகம் அறிய வும் ஆவல் கொண்டது.

”திருவாலங்காடு சென்று எமைப் பாடு. உன் விருப்பம் நிறைவேறும்!” என்று அருளி, பேயுருவை வழியனுப்பிய ஈசன், அதன் பூர்விகக் கதையை பார்வதி யாளிடம் விளக்கினார்.

வாருங்கள்… அந்தப் புண்ணிய கதையை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

சோழ தேசத்தின் துறைமுக நகரம் காரைக்கால். இங்கு வசித்த தனதத்தர் என்ற வணிகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘புனிதவதி’ என்று பெயர் சூட்டி, சீராட்டி வளர்த்தனர் பெற்றோர்.

சிறுவயதிலேயே சிவபக்தியில் திளைத்தாள் புனிதவதி. உரிய பருவம் எய்தியதும், நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தருக்கு அவளை மணம் முடித்து வைத்தனர்.இல்வாழ்க்கை இனிதே ஆரம்பித்தது. சிவ பூஜையையும் சிவனடியார் போற்றுதலையும் விடாது கடைப்பிடித்து வாழ்ந்தாள் புனிதவதி. ஒரு நாள்… பரமதத்தருக்கு வர்த்தகர்கள் மூலம் இரண்டு மாங்கனி கிடைத்தது. அதை வீட்டுக்குக் கொடுத்தனுப்பினார்.

நண்பகல் வேளையில், சிவனடியாராக புனிதவதியின் இல்லத்துக்கு வந்தார் இறைவன். அவரை வரவேற்று, அன்னமிட்டு உபசரித்தாள் புனிதவதி. கணவர் கொடுத்தனுப்பிய கனிகளில் ஒன்றை நறுக்கி அடியாரின் இலையில் படைத்தாள். வயிராற உண்டு வாயார வாழ்த்திச் சென்றார் அடியவர். அகமகிழ்ந்த புனிதவதி, கணவரின் வருகைக்காகக் காத்திருந்தாள். மதிய உணவுக்கு வீடு சேர்ந்த கணவருக்கு, இன்னமுது படைத்தவள், மீதமிருந்த ஒரு மாங்கனியை நறுக்கி அவரின் இலையில் இட்டாள். சுவைத்துச் சாப்பிட்ட பரமதத்தர், ”இன்னுமொன்று இருக்குமே; அதையும் எடுத்து வா!” என்றார்.

அதைத்தான் அடியவருக்குப் படைத்து விட்டாளே! பதைபதைத்தவள், இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுமாறு இறைவனை வேண்டினாள். என்ன அதிசயம்… அவளின் கரத்தில் ஒரு மாங்கனி! அதை நறுக்கி எடுத்துச் சென்று கணவனி டம் தந்தாள். அந்தக் கனி, முன்னதை விட சுவையாக இருப்பதை உணர்ந்தார் பரமதத்தர். இந்தப் பழம், தான் கொடுத் தனுப்பியது அல்ல என்று கருதினார். ”இந்தப் பழம் எவ்வாறு கிடைத்தது?” என்று மனைவி யிடம் கேட்டார்.

புனிதவதி உண்மையை உரைத்தாள். ஆனால், பரமதத்தர் நம்பவில்லை. ”எங்கே… இறைவனிடம் இன்னொரு மாம்பழம் பெற்றுக் கொடு!” என்றார். அக்கணமே, கண்ணீர் மல்க கயிலைநாதனை வேண்டினாள் புனிதவதி. பக்தையின் பரிதவிப்பை பரமன் பொறுப்பாரா? மீண்டும் ஒரு மாம்பழத்தை புனிதவதிக்குத் தந்தருளினார். அதைக் கணவனிடம் தந்தாள். பரமதத்தர் அந்த மாங்கனியைத் தொட்டதும் மாயமாக மறைந்தது. வியப்புற்றார் பரமதத்தர். தன் மனைவி ஒரு தெய்வப் பிறவி என்று கருதினார். அச்சம் கொண்டவர்,
அவளை விட்டு விலக எண்ணம் கொண்டார்.

ஒருமுறை, வணிகத்தின் பொருட்டு நெடும்பயணம் செல்வதாகக் கூறிச் சென்றவர் திரும்பவே இல்லை! பாண்டிய நாட்டுக்குச் சென்றவர், அங்கு வேறொரு பெண்ணை மணம் புரிந்தார். அவள் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கும் ‘புனிதவதி’ என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

இந்த நிலையில்… பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் தகவல் அறிந்த புனிதவதியின் உறவினர்கள், அவளை அழைத்துக் கொண்டு அவரிடம் சென்றனர். அவர்களை எதிர்கொண்டு அழைக்க ஓடோடி வந்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர். அவர்களிடம், ”புனிதவதி மனிதப் பிறவி அல்ல; தெய்வம். நீங்களும் வீழ்ந்து வணங்குங்கள்!” என்றார்.

அவரின் கருத்தறிந்த புனிதவதியார் கலங்கவில்லை. ”என் அழகுத் திரு மேனியை அழித்து பேயுருவம் தாருங்கள்!” என்று ஈசனை வேண்டினாள். மறுகணம்… புனிதவதியின் அழகு அழிந்து, பேயுருவம் கொண்டாள்!

பேய்க்கோலம் தாங்கிய அம்மையார், சித்தமெல்லாம் சிவமயமாக திகழந்தார். அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார்.

கயிலைக்குச் செல்ல விரும்பினார். நெடும்பயணம் மேற்கொண்டு கயிலையை அடைந்தார். ‘ஆதிசிவன் உறையும் அற்புத மலையல்லவா திருக்கயிலை?! அதன்மேல் தன் பாதங்கள் படலாமா?’ என்று கருதியவர், தலையைத்தரையில் பதித்து மலையில் ஏறினார்.

பிறகு நடந்ததுதான் நமக்குத் தெரியுமே?

பேயுருவாய் வந்த காரைக்கால் அம்மையாரிடம், ‘திருவாலங்காடு சென்று பாடுக’ என்று சிவனார் பணித்தார் அல்லவா?

அதன்படி திருவாலங்காடு வந்து கொங்கை திரங்கி, என்றும் எட்டி இலம் ஈகை என்றும் துவங்கும் மூத்த திருப் பதிகங்களைப் பாடினார். தொடர்ந்து, ஈசனின் பொற்பாத நிழலில் என்றென்றும் வீற்றிருக்கும் பேறு பெற்றார்.

இவரின் சிவபக்தியையும், மாங்கனி கள் மூலம் இறைவன் நிகழ்த்திய அருளாடலையும் சிறப்பிக்கும் விதமாக, காரைக்காலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது மாங்கனித் திருவிழா!

– எஸ். முருகானந்தம், சென்னை-83 (ஜூலை 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *