காயத்ரி மந்திரத்தின் மகிமை!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,099 
 

மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிமையைச் சொல்லும் ஒரு கதை:

முற்காலத்தில் நெல்லையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஒருவன், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். வைத்தியர்கள் பலர் முயன்றும் குணப் படுத்த முடியவில்லை. இதனால் பெரிதும் வருந்தினான் மன்னன்.

ஒரு நாள் மன்னனைச் சந்தித்த ஜோதிடன் ஒருவன், “தங்களுக்கு மருந்து தேவையில்லை. பரிகாரம் செய்தாலே போதும்!” என்றான். உடனடியாக, ஏற்பாடு களை செய்யுமாறு உத்தரவிட்டான் மன்னன்.

விரைவில் வேள்வி துவங்கியது. உரிய மந்திர உச்சாடனங்களுடன் எமதர்மனின் உருவில் பொம்மை ஒன்றைச் செய்த ஜோதிடன், அதற்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்தான். மேலும் பொம்மையின் அருகில் தங்க நாணயங்களைக் குவித்ததுடன், அதன் கையில் கத்தி ஒன்றையும் செருகி வைத்தான்.

பிறகு, “மன்னா, பொம்மையின் கையில் உள்ள கத்தி யைக் கீழே விழ வைப்பவர்கள், இந்த நகை மற்றும் தங்க நாணயங்களைப் பரிசாக எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவியுங்கள்!” என்றான் ஜோதிடன்.

அதன்படியே அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அரண்மனைக்கு வந்தனர்.

ஆனால், ஒவ்வொருவரும் அந்த பொம்மையை நெருங்கும் வேளையில்… அது, மூன்று விரல்களை உயர்த்திக் காட்டும். வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிப்பார்கள். பிறகு, அவர்களை நோக்கி பொம்மை ஆவேசத்துடன் நகர்ந்து வர ஆரம்பிக்கும். வந்தவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

இந்த நிலையில், கன்னட தேசத்தைச் சார்ந்த அந்த ணர் ஒருவர் திருநெல்வேலிக்கு வந்தார். அவர் தினமும் மூன்று வேளை தவறாமல் காயத்ரி ஜபம் செய்பவர். மன்னனின் அறிவிப்பைக் கேள்விப்பட்டவர், தானும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று எண்ணினார்.

நேரே அரண்மனைக்குச் சென்றவர், போட்டிக்கான நிபந்தனைகளைக் கேட்டறிந்தார். பிறகு, அந்த மந்திர பொம்மையை நெருங்கினார். வழக்கம்போல மூன்று விரல்களை உயர்த்திக் காட்டியது பொம்மை. அந்தணர், எதோ புரிந்தவராக, ‘முடியாது!’ என்பது போல், தலை யாட்டி மறுத்தார். உடனே பொம்மை, ஒரு விரலை மடக்கி வைத்து கொண்டு, இரு விரல்களை மட்டும் காட்டியது. இப்போதும் ‘முடியாது’ என்றே தலையாட்டினார் அந்தணர். அதன் பின்னர் ஒற்றை விரலை மட்டும் பொம்மை உயர்த்திக் காட்ட, ‘சரி’ என்பது போல தலை அசைத்தார் அந்தணர். அத்துடன், அருகில் பாத்திரத்தில் இருந்த நீரைக் கையில் ஏந்தி, தாரை வார்த்தும் கொடுத்தார். மறுகணம், கையில் இருந்த கத்தியைக் கீழே போட்டது பொம்மை. அப்போதே மன்னனின் வயிற்று வலியும் குணமானது. மன்னன் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.

பிறகு, மந்திர பொம்மையின் மூன்று விரல் ரகசியத்தையும், அந்தணர் தலையசைத்து பதில் கூறியதன் விளக்கத்தையும் அவரிடமே கேட்டான் மன்னன். அந்தணர் விளக்கினார்:

“மன்னா… மந்திர பொம்மை மூன்று விரலை உயர்த்திக் காட்டியதும், தினமும் மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஜபிப்பதால் கிடைக்கும் பலனைத் தானமாகக் கேட்பதாகக் கருதி, ‘முடியாது’ என்று மறுத்தேன். பிறகு இரு விரல்களை மட்டும் காட்டியது பொம்மை. அப்போது, ‘இரு வேளைகள் காயத்ரி மந்திரம் ஜபித்த பலனை கொடு!’ என்று பொம்மை கேட்பதாக எண்ணினேன். அதற்கும் மறுத்து விட்டேன். இறுதியில், ஒற்றை விரலை சுட்டிக் காட்டியது பொம்மை. உடனே, ‘ஒரு வேளை ஜபித்த பலனைத்தானே கேட்கிறது… கொடுக்கலாம்!’ என்ற முடிவுடன், ‘சரி’ என்று சம்மதித்து, பலனை தாரை வார்த்தேன். பொம்மையும் கத்தியை கீழே போட்டு விட்டது!” என்றார். இதைக் கேட்ட மன்னன், காயத்ரி மந்திரத்தின் மகிமையை தானும் உணர்ந்து கொண்டான். நெடுஞ்சாண்கிடையாக அந்தணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன், அவருக்கு மேலும் பல பரிசுகளை வழங்கி கௌரவித்தான்.

– செ.ரோ.ஏ.இளவரசி (ஏப்ரல் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *