கவிதா சமாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 1,288 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிதையைப் பாடுவதற்குப் பிறவியிலேயே அமைந்த ஆற்றல் வேண்டும் என்று அறிஞர்கள் சொல்வார்கள்; புலமை உடையவர்கள் யாவருமே கவித்துவம் உடையவர் களாக இருக்க முடியாது. பழங்காலத்தில் கவித்துவம் உடையவர்களையே புலவர் என்று சொல்வது வழக்கம்.

கவியை நுகர்வதற்கும் தனிப்பண்பு வேண்டும். கவிதை வாழ்வதற்கு இன்றியமையாதவர்கள் அதை நுகர்பவர்களே. கவிஞர்கள் ஊக்கம் கொள்வதும், மேன்மேலும் கவிமழை பொழிவதும் கவிதையை நுகர்பவர்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே அமையும்.

சொல் இல்லாமல் கவிதை இல்லை. ஆனாலும் கவிதை வெறும் சொற்குவியல் ஆகாது. கல்லைக் குவித்திருக்கிற இடத்தை நாம் பார்க்கிறோம். அந்தக் குவியலில் உள்ள கற் கள் கோயில் ஆகின்றன. ஆனால் அவற்றை வெறும் குவிய லாகக் கொட்டின அளவில் கோயில் உண்டாகிவிடாது. அந்தக் கற்களையே சிற்பி ஒருவன் தன்னுடைய கற்பனையினால் அமைக்கும் முறையில் அமைத்துக் கட்டினால் கோயில் உருவா கிறது. கற்குவியலைப் பார்க்கும் கண் ணாடு கோயிலைப் பார்த்தால் அதன் அருமை தெரியாது. இத்தனை கற்களை அடுக்கியிருக்கிறான் என்றா அந்தக் கோயிலுக்குப் பெருமை கூறுவது? வெறும் கல்லை மாத்திரம் பார்க்கிறவர்களுக்குச் சிற்பியின் உண்மைத் திறமை தெரியவே தெரியாது.

இவ்வாறே கவிதையில் உள்ள சொற்களை மாத்திரம் பார்த்து மகிழ்பவன் கவிதையை நுகர்ந்தவன் ஆகமாட் டான். சொற்களின் குவியலைக் கண்டு மகிழ்வதுதான் கவிதை நுகர்ச்சியாகும் என்றால் வேறு வேறு காவியங்களைப் படிக்கவேண்டாம். ஓர் அகராதியை வாங்கி வைத்துக் கொண்டு புரட்டலாம். எல்லாக் காவியத்திலும் உள்ள சொற்கள் யாவும் அகராதியில் இருக்கின்றன. அதனால் எல்லாக் காவியங்களையும் படிப்பதனால் உண்டாகும் இன்பம் அகராதி ஒன்றைப் படிப்பதனால் உண்டாகிவிடும் என் று சொல்லலாமா? அகராதியில் சொற்கள் இருக்கின்றன. ஆனால் கவிதை இல்லை.

சொற்களின் கட்டுக்கோப்பைக் கவிதையிலே காண்கிறோம். கல்லையெல்லாம் சேர்த்து ஒரு கட்டிட உருவ மாக்கிக் கோயிலை அமைக்கிறான் சிற்பி. அது போலச் சொற் களைக் கூட்டி இணைக்கும் வகையில் இணைத்துக் கவிதையைத் தருகிறான் கவிஞன். ஆகவே சொற்கள் சேர்ந்து ஓர் உருவத் தைப் பெற்று நின்றால் கவிதையாகி விடும் என்று சொல்ல லாமா? அதுவும் அன்று.

கற்களையெல்லாம் இணைத்துக் கட்டிடமாகக் கட்டி விட்டால் கோயில் ஆகிவிடாது. அதற்குள் கடவுளின் திருவுரு வத்தைப் பிரதிஷ்டை செய்யவேண்டும். அப்போதுதான் அது கோயில் ஆகும். தனித் தனியே உடம்பின் அவயவங் களைத் துண்டாகப்போட்டிருந்தால் அந்தக் குவியல் மனிதனா காது, உறுப்புக்கள் அந்த அந்த இடத்தில் அமைந்து எல்லாம் இணைந்து நிற்க வேண்டும். அப்படி இணைந்து நின்றாலும் அந்த இணைப்பை உடம்பு என்று சொல்லலாமே ஒழிய மனிதன் என்று சொல்ல இயலாது, பிணத்தில் அங்கங்கள் அந்த அந்த இடத்தில் இருக்கின்றன; எல்லாம் இணைந்து இருக்கின்றன. ஆனாலும் பிணம் மனிதன் ஆவதில்லை; அதற்கு உயிர் இல்லை.

அப்படியே வெறும் சொற்கூட்டம் கவிதை ஆகாது; உருவத்தோடு இணைந்த சொற்களும் கவிதையாகா. முன்னை யது வெறும் சொற்குவியல்; பின்னையது செய்யுள்; அதாவது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சொற்களின் கோவை. அந்தச் சொற்கோவைக்குப் பொருள் உண்டு. உரைநடையில் சொற்கள் தொடர்ந்து ஒரு பொருளைத் தருவதுபோல அந்தச் சொற்கோவையும் ஒரு பொருளைத் தரலாம். ‘நான் பாட்டுக் கட்டினேன்’ என்று சிலர் சொல்வதைக்கேட்டிருக்க லாம். அப்படிக் கட்டின சொற்கோவை அது. அதைக் கட்டிய செய்யுள் என்று சொல்லலாம்; பாடிய பாட்டு என்றோ கவிதை என்றோ சொல்ல ஒண்ணாது.

பின்னே கவிதை என்பது என்ன? கவிதையின் உயிர் எங்கே இருக்கிறது? கவிதைக்குச் சொற்கள் வேண்டும்; சொல் இல்லாமல் கவிதை இல்லை. ஆனால் சொல்லளவிலே கவிதை நிற்பதில்லை. சொற்களின் கட்டுக்கோப்பாகிய உருவம் கவிதைக்கு இன்றியமையாதது; ஆனால் அந்த உருவத்தளவிலே கவிதை நின்று விடுவதில்லை. அதற்கு மேலே கவிஞன் தன் உள்ளத்தே தோன்றிய உணர்ச்சியைக் கவிதையிற் புலப்படுத்துகிறான். அதுதான் கவிதைக்கு உயிர். சொல்லும், சொல்லை இணைக்கும் திறமையும் படிப்பினாலே ஒருவனுக்குக் கிடைக்கலாம். ஆனால் உணர்ச்சிக்கு உருவம் கொடுத்துச் சொல்லில் வடிக்கும் ஆற்றல் கவிஞன் ஒருவ னுக்குத்தான் கிடைக்கும். அது வெறும் புலமையினாலே வருவதன்று. கருவிலே அருள் உடையாருக்குத்தான் வரும்.

கோயிலுக்குச் செல்பவன் அதில் உள்ள கற்களையும் கட்டிட விசேஷத்தையும் கண்டு மகிழ்ந்து வந்தால் அவனைக் கோயிலுக்குப் போய்வந்தவன் என்று நாம் எண்ணமாட் டோம். கட்டிடத்தை மேற்பார்வை யிடுபவன் என்றுதான் சொல்வோம். கட்டிடக் கலையின் இலக்கணம் தெரிந்தவனாக இருந்தாலுங்கூடக் கோயிலை வெறும் கட்டிடமாகப் பார்த்த வன கோயிலைப் பார்த்தவன் ஆகமாட்டான். கோயிலை நன்றாகப் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் உள்ளே புகுந்து அங்கே எழுந்தருளியிருக்கும் மூர்த்தியைத் தரிசித்தவனே கோயிலுக்குப் போனவன் என்று சொல்லும் தகுதியுடை யவன். அவன் கூடப் பக்தன் ஆக மாட்டான். கோயிலுக்குப் போவதனால் உண்டாகும் பயனை நன்கு பெற்றவனே பக்தன். கடவுளைத தரிசனம் செய்து அந்த மூர்த்தியின் தத்துவத்தை உணர்ந்து விஞ்சிக் கண்ணீர் ஆறாகப் பொழியத் தன்னை மறக்கிறவனே கோயிலுக்குச் சென்றதன் முழுப் பயனையும் பெற்றவன ஆவான்.

சுந்தரமூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானைத் தரிசித்த போது அவருக்கு உண்டான அநுபவத்தைச் சேக்கிழார் சொல்கிறார்.

“ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்து சாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆ னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.”

கோயிலுக்குச் சென்று வருபவர்களில் இந்த நிலையில் இருந்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்பவர் எவ்வளவு பேர்? கோயிலுக்கு சென்று தரிசிக்கும் முறையில் தரிசித்தால் இந்த மகிழ்ச்சியை யாவரும் அடையலாம் என்பதில் சந்தேகமே இல்லை. சென்று தரிசிப்பவனுடைய உள்ளத்தில் ஒரு வகைப் பசி வேண்டும், அப்போது அவனுக்கு இறைவனுடைய மூர்த்தி தரிசனம் முழுப் பயனையும் கொடுக்கும்.

கவிதையை நுகர்வதிலும் இப்படி உச்சமான நிலை ஒன்று உண்டு. சொல்லை மாத்திரம் பார்த்து நிற்பதில் பயனில்லை; சொல்லுக்கு அப்பால் அதன் பொருளை உணர வேண்டும். பொருளைத் தெரிந்து கொள்ளும் அளவோடு நின்றால் போதாது; அதற்கும் அப்பாலே உள்ளகருத்தையும் உணர்ச்சி யையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால்கூடக் கவிதையின் முழு இன்பத்தையும் அடைந்தவர்கள் ஆகமாட்டார்கள். அறியும் நிலை என்பது ஒன்று; உணரும் நிலை என்பது ஒன்று; நுகரும் நிலை என்பது ஒன்று. சொல்லிலே பரவிய பொருளைச் சிக்கறத் தெரிந்து கொள்வது அறியும் நிலை; சொல்லிலே பரவும் பொருளைத் தெரிந்து கொண்டு அதற்கு அப்பால் உள்ள தூய உணர்ச்சியை உணர் வது உணரும் நிலை; அந்த உணர்ச்சியைத் தெரிந்து கொண்ட தன் விளைவாகத் தானும் அந்த உணர்ச்சியைச் சொந்த அநு பவத்திலே தேக்கும் நிலையே நுகரும் நிலை. அப்போது கவிதை யை நுகர்பவன் அந்தக் கவிதையைப் பாடிய கவிஞன் எந்த அநுபவத்தில் நின்று பாடினானோ அந்த அநுபவத்தில் நிற் பான். பாடுவதற்கு முன் கவிஞன்பால் இருந்த அந்த அநுபவ நிறைவு அந்தப் பாட்டை உணர்ந்ததற்குப் பின் அவனிடம் உண்டாகிறது. அநுபவ நிறைவில் எழுந்தது பாட்டு; அந்தப் பாட்டே அநுபவ நிறைவை உண்டாக்குகிறது. மரத்தில் விளைந்தது வித்து; அந்த வித்தே மரத்தை உண்டாக்குகிறது.

இந்தக் கவிதையநுபவம் உள்ளப் பண்புடையவர்களிடந் தான் உண்டாகும்; ஒருமைப்பாடும். உணர வேண்டும் என்ற பசியும். பரிவும் உடையவர்களிடந்தான் உண்டாகும். கவிதையை நுகர்ந்த இன்பத்தைப் பொறுத்த வரையில் கவிஞனே ஆகி விடுகிறான் ரசிகன்; அநுபவத்தில் இருவரும் ஒத்து நிற்கிறார்கள். கவிதையிலுள்ள சொல்லும் பொருளும் எங்கோ அடித் தளத்தில் நின்று விடுகின்றன. அவற்றைத் தாண்டிய உச்சி மாடியிலே அவற்றையெல்லாம் அஸ்திவார மாகப் போட்டு மறைத்த உப்பரிகையிலே இன்பத் தென்றலை நுகர்கிறான் ரசிகன்.

அந்த நிலையில் சொல்லை மறக்கிறான்; பொருளை மறக் கிறான்; பாடிய கவிகளை மறக்கிறான்; தன்னையே மறந்து விடு கிறான். தன்னை மறந்து போகும் நிலைக்குத்தான் தூக்கம் என்று பெயர். தியான சமாதியிலே ஆழ்ந்தவரைப் போல, அஷ்டாங்க யோகம் செய்து ஒருமுகப்பட்டவரைப் போல இந்தக் கவிதாநுபவ சமாதியிலே அவன் ஒன்றி விடுகிறான்.

அவன் உள்ளத்திலே அப்போது அமுது கொப்புளிக்கிறது. ஒளி பொங்குகிறது. இறைவனே நடனமிடுகிறான். இயற்கை யாக உள்ள இருள், இருக்குமிடம் தெரியாமல் ஓடி ஒளிந்து விடுகிறது.

இறைவன். கவிதா சமாதியில் ஆழ்கிறவனுடைய உள்ளத் திலே இருளே இல்லாமல் வாங்கி விடுகிறான். நல்ல கவிதை களையே தனக்குக் கோயிலாகக் கொண்டவன் இறைவன். அழகிய பொருள்களெல்லாம் தானாக நிற்பவன் அவன். தம்மை மறப்பவரிடம் நான் என்று வந்து விளையாடுபவன் அவன். ஆகையால் கவிதையாகிய கலைப்படைப்பில் ஆழ்ந்து தம்மை மறப்பவரிடம் அவன் விளையாடுகிறான்; அவர்கள் உள் ளத்தை ஒளி நிலையமாக்கி விடுகிறான்.

இதை எதிர்மறை முகத்தால் அப்பர் சுவாமிகள் சொல்கிறார்.

சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை.

[சொல்லிலே பரவியிருக்கும் பொருளை அறிந்து அத னூடே உள்ள தூயஉணர்ச்சியை உணர்ந்து அதனால் விளையும் அநுபவத்திலே நின்று தம்மை மறந்து தூங்காதவர்களின் மனத்தில் உள்ள அறியாமையாகிய இருளை வாங்காதவனை. பாவும் – பரவியிருக்கும். தூய்மை என்றது இங்கே உணர்ச்சியை, இருள் – அறியாமை. வாங்குதல் – நீக்குதல்.) சொல்லிலே பரவிய பொருளைத் தெரிவது அறிவு நிலை; உணர்ச்சியாகிய தூய்மையை நோக்குவது உணர்ச்சி நிலை; தூங்குவது நுகரும் நிலை;

இப்படி எதிர்மறையாகச் சொன்னாலும். ‘சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்குவார் மனத் திருளை வாங்குவானை’ என்றகருத்தும் இதற்குள்ளே புதைந்து நிற்கின்றது. இருளை வாங்குவான் என்றாலும், ஒளியை நிறைப்பான் என்றாலும் ஒன்றுதான். நல்ல கவிதையிலே ஒன்றுபட்டு இன்பம் துய்க்கும் உள்ளம் இறைவன் திருவருளை ஏற்றுக் கொள்ளும் தூய்மையை உடையது என்ற கருத்தும் இதனால் பெறப்படும்.

சோழ நாட்டில் கீழ்வேளூர் என்னும் தலத்துப் பெரு மானைப் பாடப் புகுந்த அப்பர் உள்ளத்தில் கவிதா சமாதி யைப் பற்றிய சிந்தனைகள் தோன்றின. அந்தச் சமாதியிலே ஒன்றினவர் அப்பர். முந்தையோர் கவிகளையும் அவற்றில் இறைவன் திறம் பேசும் மணியனைய கவிகளையும் கற்றுத் தேர்ந்து அவற்றில் தம் உள்ளத்தை பறி கொடுத்துத் தம்மை மறந்து நின்றவர். அதனால் அந்த இன்பத்தை அவர் சொல்லலானார்.

இளமையிலிருந்தே சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்கும் நிலை அவருக்கு வாய்க்கவில்லை. அதனால் இறைவனும் அவருடைய மனத்தில் இருந்த இருளை வாங்கவில்லை. அறிவு மிடுக்கினால் சொல்லும் பொருளுமாகிய எல்லைக்குள்ளே நின்று வாதமிட்டு வெல்லும் பேராற்றல் இருந்தது. ஆனால் பல கற்றும் தூய்மை நோக்கித் தூங்கா மலே இருந்தார் அவர். நல்ல பான்மை இது, தீய பான்மை இது என்று அறியாதபடி வாழ்ந்தார். இறைவன் அவரை ஆட்கொண்டான். நல்ல பான்மையை அறிந்து நல்ல நெறி யிலே செல்லும் வண்ணம் அருள் பாலித்தான். அதனால் கவிதா சமாதி அவருக்குக் கைக்கூடியது. இதை நன்றியறி வோடு நினைக்கிறார் அப்பர்.

நற்பான்மை அறியாத நாயினேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானை.

[நல்ல பகுதிகளை அறியாத நாய் போன்ற என்னை நல்ல நெறியிலே போகும்படி அருள் வழங்கியவனை.

பான்மை – குணமும் ஆம். பிறர் தீயது என்று கழித்த வற்றில் உள்ளம் செல்லுவதால் நாயினேன் என்று கூறினார். தான் வாந்தி பண்ணியதை மீட்டும் உண்ணும் இழித்த இயல்பு உடையது நாய். உயிர்களும் தாம் பல பிறவிகளில் துன்பமென்று அநுபவத்தில் உணர்ந்து வெறுத்தவற்றை மீட்டும் நாடிச் செல்வதால் நாயோடு ஒத்தனவாயின. நல்கினானை – கொடுத்தவனை; அருள் வழங்கினவனை.]

இறைவனுடைய புகழைப் பேசும் பாடல்களை நன்கு அறிந்து இன்புறுவது ஒரு வகை. அவற்றை வாயாரப் பாடி ஆடி இன்புறுவது ஒரு வகை. அன்பர்கள் இந்த இரண்டு வகைகளிலும் ஈடுபடுவார்கள். தனித்திருந்து பாடற் பொரு ளில் உள்ளத்தைச் செலுத்தித் தூங்குவார்கள், தொண்டர் கூட்டத்தில் இருந்தால் எல்லாரோடும் சேர்ந்து, பிறர் ஏசு வார்களே என்ற நாணத்தை விட்டு, வாயாரப் பாடி ஆடுவது அவர்கள் இயல்பு. பாரத நாட்டில் இல்வாறு பாடும் பஜனைக் கோஷ்டிகள் இன்றும் உள்ளன. திருஞான சம்பந்தரும் வாகீசப் பெருமானும் எப்போதும் தொண்டர் கூட்டம் சூழத் தலந்தோறும் சென்று சென்று எங்கும் சிவமணம் கமழ செய்தார்கள். திருக்கூட்டத்தில் உள்ள பக்தர்கள் இறைவன் புகழைப் பாடி ஆடிக் கண்ணீர் மல்கத் தம்வசம்இழந்து இன் புற்றார்கள்.

இறைவனுடைய புகழாக அன்பர்கள் பாடிய பாடல்கள் பல உண்டு. ஆதலின் பாடுவாருக்குப் பாடடுப் பஞ்சம் இல்லை.

அன்பர்கள் பல வகையாக பாடல்களையும் பாடி மெய்ம் மறந்து ஆடிக் கீழே விழுந்து எழுவார்கள். தாயைப் பிரிந்த கன்று போலப் புலம்புவார்கள். தம் குறைகளையெல்லாம் இறைவன்முன் எடுத்துச் சொல்லிப் புலம்புவார்கள். மனம் பாகாய் உருகத் தம்மை எளியராகவும் பாவியராகவும் சொல்லி நைந்து அரற்றுவது பக்தி நிலைகளில் ஒன்று. அழும் குழந்தையின் பசியைப் போக்கும் தாயைப் போல இறைவன் அவர்களுடைய பாவங்களை யெல்லாம் போக்கி அருள் வழங் குவான்.

மேலும் மேலும் பாவத்தைச் செய்து சுமையாகச் சுமக் கும் இயல்பு உடையவை உயிர்கள். இறைவன் ஒருவனே அந்தப் பாவத்தைப் போக்கும் ஆற்றல் உடையவன்.

பாவத்தைச் செய்தவர்கள் அவற்றை உதறிவிட முயன்றாலும் போகா, உள்ளம் கரைந்து பாடியாடும் பக்குவத்தையுடைய அடியார்களிடம் உள்ள பாவங்கள் கரைந்து போகும் வண் ணம் தன் அருளாணையினாலே செய்யும் சக்திமான் இறைவன் ஒருவன்தான்.

பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானை.

[பலவகைப் பாக்களையும் வாய் நிரம்பப் பாடிக்கூத்தாடிக் கீழே விழுந்து பணிந்து எழுந்து. தம் குறைகளை எடுத்துச் சொல்லித் தன்னை அணுகினவர்களுடைய பாவத்தைப் போக்கும் ஆற்றலுடையவனை.

பற்பா என்றது இறைவனைப் பற்றிய பாக்களை; தூய்மை யான நினைவை உண்டாக்கும் தெய்வமணம் கமழும் பாக் களை. பணிந்து-கீழே விழுந்து வணங்கி. குறைந்து – தம் குற்றங்களை எடுத்துச் சொல்லி; தம்மை மிக்க இழிந்தவர் களாகக் குறைத்துக் கூறி என்றும் சொல்லலாம், போக்ககிற் பான்-போக்கும் ஆற்றலை உடையவன்;கில் என்பது ஆற்றலைக் குறிக்கும் இடைச்சொல்,]

பல பாக்களையும் தெரிந்து கொண்டிருந்தாலும் அவற்றை வெளிப்படையாகச் சொல்வதற்கு நாணம் தடையாகநிற்கும். இறைவனுடைய பெருமையையும், தம்முடைய சிறுமையை யும் நன்கு உணர்ந்தவர்களுக்கு அந்த நாணம் தடையாக நில்லாது. அதிர்ந்து பேசாமல் இருக்கும் ஒரு பெண் வீட்டில் தீப்பற்றினால் தன் நொண்டை கிழியத் தீத்தீத்தீ என்று நாணத்தை விட்டுக் கதறுவது போல, தமக்கு அமைந்த பிறப்பு இறப்பு என்னும் கடுந் துன்பங்களை உணர்ந்தவர் களுக்கு இறைவன்முன் வாயாரப் பாடுவதற்கு நாணம் உண்டாகாது. இந்த நிலை பக்தி முறுக முறுக உண்டாவது.

லாயாரப் பாடும் நிலைக்கு அடுத்தது ஆடும் நிலை.உடல் மறந்து கூத்தாடுவது அன்பர்களுக்கு இயல்பு. ஏதேனும் ஓர் உணர்ச்சி விஞ்சி விட்டால் அது உடம்பிலே மெய்ப்பாடாகத் தோற்றும். பக்தி உணர்ச்சி விஞ்சினபோது ஆடுவார்கள். ஆடியவர்கள் அவசமாகி விழுவார்கள். விழுந்து எழுந்து புலம்புவார்கள். இந்த நிலைகளை முறையாக அப்பர் சுவாமி கள் எடுத்துச் சொல்கிறார்.

கவிதா சமாதியிலே தூங்குகிறவர்களின் உள்ளிருளை வாங்கி ஒளியை நிரப்புபவனும், அப்பர் சுவாமிகளை ஆண்டு கொண்டவனும், வாயாரப் பாடி ஆடும் பக்தர்களின் பாவத்தைப் போக்குபவனும் ஆகிய சிவபெருமான் கீழ் வேளுர் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கிறான். மேல் திசை யிலே வேறு சில வேளுர்கள் உண்டு. இது கீழ்த் திசையில் இருப்பதால் கீழ் வேளுர் எல்ற பெயரை உடையதாயிற்று. அங்கே இருந்து தன் அருளாட்சியை நடத்தும் பெரு மானுக்கு, கேடிலியப்பன் என்பது திரு நாமம்; அக்ஷயலிங்கம் என்பது வடமொழிப் பெயர். அவன் எக்காலத்தும் அழிவே இல்லாதவன்; கேடு இலி. அவன் தனக்கு ஒரு கேடும் இல்லா மல் இருப்பது பெரிதன்று. அவனை நாடி அடைகின்ற அன்பர் களும் கேடு இல்லாத நிலையை அடைவார்கள். காந்தத்திலே தேய்த்த இரும்பும் காந்தமாகிறது. மின்சாரக் கம்பியோடு இணைந்த வெறும் கம்பியும் மின்சாரக் கம்பி ஆகிவிடுகிறது. சிவனோடு இணைந்த சீவனும் அழியாத நிரதிசய இன்ப நிலையை அடைகிறது. கேடிலியை நாடிச் செல்லும் அவர் களும் கேடு இல்லாதவர் ஆகிறார்கள்.

கீழ்வேளுர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடிலாரே.

[கீழ்வேளூரில் இருந்து அருளாட்சி புரியும் தலைவனை, கேடிலியப்பனை, மனத்தாலே நாடிச் சென்று அடைகின்ற அவ்வன்பர்கள் கேடு இல்லாதவராவர்.

கோ – தலைவன். கேடு என்றது,பிறப்பும் இறப்பும் உடைய வராகி நிற்கும் நிலையை கேடு இலார் என்றது. என்றும் அழி யாத இன்ப வீட்டைப் பெற்று நிற்பர் என்றபடி.]

கவிதையிலே ஊறி நின்று அதன் வழியே இறைவன் பெருமையை உணர்வதும், கவிதையை வாயாரப் பாடி ஆடி இன்புறுவதும் இறைவன் அருளை நமது காணிக்கையாக்கும் காரியங்களாம். அதனால்தான் சைவசமய ஆசார்யர்களும் ஆழ்வார்களும் இறைவனைப் புகழ்ந்து கவிதை வெள்ளத்தைப் பொழிந்தார்கள். அவற்றிலே ஊறின உள்ளம் உள்ளம் அடையும் இன்பம் இறைவனுடைய அருளின் தொடர்பு உடையது; இறைவனோடு ஒன்று படும் பேரின்பத்துக்கு வாயிலாக உதவுவது.

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்துஇருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப்
பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடும் அவர் சேடி லாரே.-

இந்தப் பாசுரம் ஆறாம் திருமுறையில் 67-ஆம் திசூழ்பதி கத்தின் உள்ள இரண்டாம் பாடல்.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *