கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 2,469 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – கேள்விப் படலம் 

உத்தராயண புண்யகாலம் ஆரம்பமானதிலிருந்து சூரிய பகவானுடைய கிரகணங்களுக்கு அதிக முறுக்கு ஏறிக் கொண்டு வந்தது. அழுகிக் கிடந்த நோய்க் கிருமிகளை வாட்டி வதக்கி வற்றலாக்கி அழித்து அக்கிரணங்கள் சகல ஜீவர்களுக்கும் உத்சாகத்தை உண்டாக்கத் தொடங்கின. பகலோனது ஒளி, உலகத்தை அதிக நேரம் தழுவி விளங்கியது; அகஸ் நீண்டது. 

பகல் நேரம் அதிகமாவதால் சூரியனுடைய ஆட்சி ஒரு நாளில் அதிகமாகின்றது; ஆதித்தனது தேர் அதிக நேரம் ஓடுகிறது; அதை இழுக்கும் ஏழு பச்சைப் புரவிகளின் கால்கள் அதிக நேரம் சிரமப் படுகின்றன. ஒரு நாளைப் போல ஓய்வொழிவின்றி சதா வான மண்டலத்திலே கிழக்கிலிருந்து மேற்கே நூறு வருஷங்கள், ஆயிர வருஷங் கள், லக்ஷக்கணக்கான வருஷங்களாக ஓடிக் கொண்டிருக் கின்றன அப்பச்சைப் பரிகள். செஞ்சுடர் மூர்த்தியைப் பசுங்கதிர்ப் புரவிகள் இழுத்துச் செல்லுகையில் அச்சுடரோன் ஒளியில் அக் குரகதங்களின் அழகு, பசுஞ்சோதி, எவ்வளவு விதமாகத் தெரிகின்றன! ஆனால் அந்த அழகை அனுபவிப் பவர்கள் யார்? அவைகளுக்கு விடுதலை அளிப்பவர் யார்? 

உத்தராயணத்தின் இறுதிக் காலம் அது. காலையில் புறப்பட்டால் வேறொன்றிலும் தம் திருஷ்டியைச் செலுத். தாமல் மேற்கே நோக்கி விரையும் அக்குதிரைகளில் வலக்கை ஓரத்திலுள்ள கு திரை பூவுலகத்தில் எதையோ ஒன்றைக் குனிந்து பார்த்தது. அந்தக் கணத்திலே அது. மற்றக் குதிரைகள் ஓடும் லயத்தினின்றும் சிறிது பிசகியது. என்றைக்கும் இல்லாத அந்தப் பிசகை அருணன் கவனித்தான். சுளீரென்று சவுக்கால் ஓர் அடி கொடுத்தான். அது பேரிடியைப் போல உலகமெல்லாம் கிடுகிடுக் கும்படி கேட்டது, மறுபடியும் பழைய லயம் ஒழுங்கு பட்டது. அன்று இரவு அந்தக் குதிரைகளை அவிழ்த்து விட்டவுடன் என்றும் இல்லாதபடி அன்று அடி வாங்கிய குதிரையினிடம் மற்ற ஆறும் சென்று அதனை நாவால் வருடிக் கொடுத்தன. “ என்றும் இல்லாத அதிசயம் இன்று நடக்கக் காரணம் என்ன? என்று மிகவும் துக்கத்தோடு மெல்ல விசரரித்தன. அந்தக் குதிரை பெருமூச்சு விட்டது. “நான் பட்ட அடி பிரமாதமன்று; உண்மையிலேயே இன்று நான் ஓர் ஆச்சரியம் கண்டேன். அதை நான் எப்படிச் சொல்வேன்! என் கண்களும் உள்ளமும் குளிர நான் கண்ட காட்சியை எப்படி வருணித்துச் சொல்ல முடியும்? என்ன அழகு! என்ன தேஜஸ்!” என்று பாதிக் கண் மூடிய வடியே அது பேசத் தொடங்கியது. 

“விஷயத்தை நறுக்கென்று சொல்லேன். இந்தக் கவிதைகளெல்லாம் எதற்கு?” 

“சொல்லுகிறேன் கேளுங்கள் ; நம்முடைய சூரியபகவான் நீலக் கடலுக்கிடையே தோன்றும் போது அதன் அழகை நாம் பார்க்க முடிவதில்லை. தூரத்தில் இருந்து பார்த்தவர்கள் அந்தக் காட்சியை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்!” 

“அதற்கும் நீ சொல்ல வந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?” 

”அவர்கள் கொண்டாடுவது எவ்வளவு பொருத்தமான தென்பதை இன்று நான் அனுபவத்திலே கண்டேன்; இந்தக் கண்களாலே கண்டேன்; இது காறும் கண்டறியாததைக் கண்டேன்; இன்னும் காண்பேன்!”

“இது என்ன, மறுபடியும் பித்தம் தலைக்கேறி விட்டால் போல் இருக்கிறதே. விஷயம் இன்னதென்று சொல்லாமலே மூடு மந்திரம் போடுகிறாயே!”

“சொல்லி விடுகிறேன், கேளுங்கள். ஹே அபாக்கிய வான்களே! பூலோகத்தில் வடக்குப் பாரிசத்தில் பெருங் கடலுக்கு நடுவில் தேஜோ மயமான பெண் குதிரை ஒன்று இருக்கிறது. அதை இன்று கண்டேன். கண்டது முதல் என் அறிவை இழந்து நிற்கிறேன். நாளைக்கு நீங்கள் எல்லாம் பாருங்கள். பார்த்தால் நிச்சயமாக அருணனுடைய சவுக்கின் ஸபரிசம் கிடைக்கும். அந்தக் காட்சியைக் காண்பதற்கு எவ்வளவு சவுக்கடியானாலும் வாங்கிக் கொள்ளலாம்.” 


அடுத்த நாள் எல்லாக் குதிரைகளும் வடவையின் அழகைக் கண்டு சொக்கிப் போயின. அதைப் பற்றியே ரகசியமாகப் பேசிக் கொண்டன. அது முதல் தினந்தோறும் வடவையின் வாயைத்தைப் பற்றியே அவை இரவெல்லாம் கதை பேசின. பகலில் கண்ணாரப் பார்த்து அப்பெண் குதிரை உருவத்தின் அழகைப் பருகிக் களித்து ராத்திரியில் அந்த எழில்மேனியை வருணிப்பதிலே ஊக்கமும் இன்பமும் பெற்றன. 

இப்படிக் கழிந்துகொண்டு வந்த காலத்திலே ஒரு நாள் விடிய ஐந்து நாழிகைக்கு முன் அருணன் வழக்கம் போல் இந்திர திக்காகிய கிழக்குத் திசையிலே ஏழு பசுங் குதிரை களையும் கொண்டு வந்து நிறுத்தினான் நிறுத்திவிட்டுத் தான் செய்ய வேண்டிய பூஜை புரஸ்காரங்களை செய்வதற்காக ஆகாச கங்கையை அடைந்தான். அவன் வந்து ஆதித்தனது ரதத்தைப் பூட்டும் வரையில் பச்சைக்குதிரைகள் கொண்ணாரம் போட்டுக் கொண்டிருப்பது வழக்கம். அன்று எதிர்பாராதபடி இந்திரனது குதிரையாகிய உச்சைசிரவம் அந்த வழியே வந்தது. அப்பொழுது சூரிய பகவானுடைய குதிரைகள் வடகடலில் தனியரசாளும் தேஜோமய அசுவ மானினியைப்பற்றித் தங்களை மறந்து பேசிக் கொண்டி ருந்தன. அவைகள் பேசிய பேச்சில் இங்கொன்றும் அங்கு ஒன்றுமாகக் காதில் விழ, வந்து கொண்டிருந்த உச்சை சிரவம் அந்த வருணனையை ரசித்தபடி சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டது. 

“தூரத்திலிருந்து பார்க்கும் போதே கண்கொள்ளா அழகோடு விளங்கும் அந்தக் குதிரை நல்லாளின் திவ்ய ரூப சௌந்தரியம் அருகிலே சென்று கண்ணாரப் பார்த்தால் எப்படி இருக்கும்!” என்று பெருமூச்சு விட்டது ஒரு குதிரை. 

“வடகடலினிடையே வீற்றிருக்கும் அந்த அசுவ மோகினி என்றைக்காவது வானுலகத்துக்கு உலாவ வரக் கூடாதோ !” என்றது வேறொரு புரவி. 

“பிரம்ம சிருஷ்டியிலே இவ்வளவு அழகு பொருந்தி யிருப்பது அத்யாச்சரியம்!” என்றது மூன்றாவது பரிமா. 

“பிரம்ம சிருஷ்டி என்று சொல்லாதே; பிரம்ம தேவனுக்கு அவ்வளவு கைவன்மை இருக்க நியாயமே இல்லை. இது பரமேசுவர சிருஷ்டி. ஊர்வசி பெண் குதிரை வடிவம் எடுத்தபோது நம்முடைய சூரிய பகவான் அவளைக் கண்டு மோகித்துத் தாமும் ஆண் குதிரை வடிவம் எடுத்து அளவளாவினாரே. அவரை மயக்கிய ஊர்வசியின் வடிவம் இப்படித்தான் இருந்திருக்குமோ!” 

“இருந்திருக்குமோ என்ற சந்தேகம் என்ன? ஊர் வசிக்குத் தன்னுடைய தெய்வத் திருமேனியின் அழகிலே சலிப்பு வந்திருக்கும். இன்னும் வனப்பு மிக்க ரூபத்தை எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பாள். இந்த வடவையின் எழிலைக் கண்டு இம்மாதிரியே ரூபம் எடுத்து இருப்பாள். அவளுக்கு இத்தனை ரூபம் அப்போது கிடைத்திருக்குமோ என்பது சந்தேகந்தான்.” 

உச்சைசிரவத்தின் காதில் இந்தச் சம்பாஷணை விழவே, விஷயத்தை விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தூண்டத் திடீரென்று அந்தக் குதிரைகளின் முன்னே போய் நின்றது. அதைக் கண்டவுடன் பச்சை மாக்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு, பரிக் குலத்தின் சுடர்க்கொழுந்தே, இந்திரனின் பவனியைச் சிறப்பிக்கும் அசுவ அரசனே, பாற்கடலில் அவதரித்த பஞ்ச கல்யாணக் குதிரைப் பிரானே, வருக, வருக’ என்று வாகதம் கூறின. 

“உங்கள் வருணனைப் பேச்சை நீங்கள் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? எனக்கும் அது தெரிவதால் தோஷம் ஒன்றும் இல்லையே” என்று நேரே விஷயத்துக்கு வந்து விட்டது வாசவன் வாகனம். 

பச்சைப் பாய்மாக்கள் ஒன்றை யொன்று திகைப்புடன் பார்த்துக் கொண்டன. விஷயத்தைச் சொல்லலாமா. வேண்டாமா என்ற கேள்வி அந்தப் பார்வையிலே தோற்றியது. 

“என்ன யோசிக்கிறீர்கள்? நான் அருகிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். எங்கள் தேவ ராஜாவின் நடன ராணியாகிய ஊர்வசியே கண்டு மயங்கிய அந்த வடவாங்கனாமணி யார்?” என்று உச்சைசிரவமே கேட்டு விட்டது. அப்புறம் ஒளிமறைவாக வைப்பதில் என்ன லாபம்? இந்தச் சாக்கில் வடவையின் ரூபலாவண்ய வருணனையில் அக்குதிரைகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டன. 

அவ்வளவையும் கேட்டு வந்த அந்தத் துரகேந்திரனுக்கு உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி உண்டாகி விட்டது. மயல் மீறியது. கண் சுழன்றது. பலமெல்லாம் போய் விட்டது போன்ற சோர்வு உண்டாயிற்று. ‘இந்தக் கண் களால் ஒரு முறை அந்த அசுவசுந்தரியைப் பாராவிட்டால் ஓரடியும் எடுத்து வைக்க யோக்கியதையில்லை’ என்ற எண்ணத்தோடு அது விடை பெற்றுக் கொண்டது. 

2 – கடிமணப் படலம் 

வடதிசைப் பெருங்கடலில் கொலு வீற்றிருக்கும் குதிரைப் பெருமாட்டி தாளஜதி போட்டு ஆடுவது போலவும், அந்த நர்த்தனத்தின் முடிவிலே இனிய கர்ஜனையினால் முத்தாய்ப்புக் கொடுப்பது போலவும், கழுத்தை மேலும் -கீழும் ஒய்யாரமாக அசைத்துக் கண்டோர் கருத்தை வளைத்துப் பிடிப்பது போலவும் இன்னும் என்ன என்னவோ விதமாக உச்சைசிரவம் கற்பனை செய்து பொழுதைப் போக்கியது. 

இந்திரன் என்றைக்கு வடதிசைக்கு எழுந்தருளுவான் என்று தவம் பண்ணிக்கொண்டு காத்திருந்த உச்சை சிரவத்துக்கு அத்தகைய சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அது வடதிசைப் பவனியை எதிர்பார்க்கப் பார்க்க அந்த நாள் வராமல் தூரத்தில் போய்க் கொண்டே இருந்தது. பொறுமை இழந்து மயல்மீறிப் புழுங்கிய நெஞ்சுடன் தேவ நீலாகக் குதிரை நாட்களைக் கழித்தது. 

கடைசியில் அந்த நாள் வந்தது. இந்திரன் மேரு மலைக்குப் பிரயாணமானான். வடதிசையில் இருக்கும் பொன் மலையை நாடி அசுவாரூடனாய்ச் சென்ற இந்திரன் அங்குள்ள வித்தியாதர நகரத்துக்குச் சென்று வித்தியாதர மகளிருடைய ஸல்லாபத்திலே ஒன்றியிருந்தான். இதுதான் சமயமென்று தெரிந்த உச்சைசிரவம் மெல்ல அங்கிருந்து. உச்ச சிகரத்தை அடைந்து வட கடலைப் பார்க்கும்போது அதன் கண்ணிலே வடவையின் உருவம் பட்டது. “ஆஹா! என்ன அழகு! என்ன லலித குஸுமாங்கம் ! அந்தப் பைத்தியக்காரக் குதிரைகளுக்குச் சரியாக வருணிக்கத் தெரியவில்லையே. ஸ்ரீ வாக்தேவியின் திருவருளால் நாம் கவியானால் சிறிது வருணித்துப் பார்க்கலாம். என்ன ஒய்யாரம்! என்ன உ உல்லாசம் ! மந்த மாருதத்திலே அசையும் கற்பக விருக்ஷத்தின் பல்லவங்களுக்கு இந்த நெளிவு வருமா? சூரியனுக்குத்தான் இந்தக் காந்தி வருமா? என்ன ஜோதி மயமான தேகம்!… 

‘ஹே அசுவ சுந்தரி’ ஹே சமுத்திர வாஸினீ, உனக்கு இந்த வடிவழகைத் தந்த பரமேசுவரன் உன் மனத்தை மாத்திரம் கல்லாகப் படைத்தானோ. சர்வ லோகங்களும் உன்னுடைய மோகன நடனத்திலே மயங்கி விடுமென்று எண்ணியோ இந்த வடபுறப்பெருங் கடலிலே யார் கண்ணுக்கும் படாத இடத்திலே கொந்தளிக்கும் அலைக் கூட்டத்தினிடையே உனக்கு ராஜதானி ஏற்பட்டது? நீ இங்கே இருக்க வேண்டுமென யாரேனும் சாபமிட்டார் களோ!…ஆஹா, உன்னுடைய லாவண்ய அம்புராசி நீ வீற்றிருக்கும் பெருங்கடலைக் காட்டிலும் விரிவாக இருக்கிறது. நீ தலை நிமிர்ந்து நிற்கும் கோலத்தைக் கண்டு அந்த அலைகள் தாம் தாம் அந்த மாதிரி நிமிர்வ தாகச் சண்டையிட்டு மோதி உருக்குலைந்து சிதறித் துளித் துளியாகின்றனவே! இது என்ன பரிதாபம் ! வெறும் அலைகளுக்கே இவ்வளவு மோகம் உண்டானால் நீ வேறு இடத்தில் இருந்தால் சர்வ ஜீவர்களுடைய மனங்களும் உன்னை விரும்பி வந்து மோதி மோதி மாண்டொழியும் அல்லவோ? 

“உன்னைக் காணக் கிடைத்தது என் பாக்கியம். கண் பெற்ற பயனைஇன்றே அடைந்தேன். ஆம். இந்தக் காட்சியிலேயே இவ்வளவு ஆனந்தம் இருக்குமானால், உன்னுடைய அருகிலே இருந்து உன்னுடைய மெல்லிய நாவால் வருடப் பெற்றால் அதைக் காட்டிலும் ஸ்வர்க்க போகம் ஒன்று உண்டா?….. 

”நீ கார்க்கடலிலே உதித்தாய்; நான் பாற்கடலிலே உதித்தேன். ஆதலால் இருவரும் இசைந்து இன்புறுவதற்கு பொருத்தம் இருக்கிறது. 

“நீ சொல்லலாம்: நான் தேவலோகவாசி என்றும், நீ பூலோகவாசி என்றும் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கலாம். அப்படி எதையாவது சொல்லி எனக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து விடாதே. நீ பூவுலகத் துக்குப் புறம்பானவள். அப்படியே பூவுலகவாசி யானாலும் பாதகம் இல்லை. தேவலோகத்தவர்கள் பூவுலகத்து பெண்களை மணந்து இன்புறும் சம்பிரதாயம் நெடுங் காலமாக உண்டு. ஆகையால் நம்மிடைய ஏற்படப் போகும் காதல் தேவலோக சம்பிரதாயத்துக்கு விரோதம் அன்று – 

“உன்னுடைய கடாக்ஷவீக்ஷண்யம் பெறா விட்டால் நான் உய்யேன். ஹே ஸர்வாங்க சுந்தரி, துரகத மஹா ராணி, கிருபை செய்து என் உயிரைக் காப்பாற்று”

தேவலோக சிருஷ்டிகளே அலாதியான இயல் புடையவை. எதிலும் அதியுச்சஸ்தாயியிலே போய் நிற்கும். உச்சைசிரவம் காமாக்கினியால் தகிக்கப்பட்டு ஒரே நோக்கமாக வடவையை அணுகியது. அன்பொழுகப் பேசி அதனுடன் அளவளாவி இன்புற்று மீண்டது. 

3 – சாபப் படலம் 

என்ன ஆச்சரியம்! உச்சைசிரவத்துக்குக் கால் எழ வில்லை. செய்யத் தகாத பாபத்தைச் செய்து சாபத்திற்கு ஆளானது போலப் பொலிவிழந்து தோன்றியது. தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. இந்திரன், காமத்தால் பல சந்தர்ப்பங்களில் தன்னுடைய கௌரவத்துக்கு ஹானி தேடிக் கொண்ட சரித்திரமெல்லாம் அப்போது அதன் ஞாபகத்திற்கு வந்தன. ‘மிகப் பழங்கால முதல் கடலின் இடையே கன்னிமை அழியாதிருந்த வடவையின் புனிதத் தைக் கெடுத்து விட்டோமே!’ என்ற எண்ணம் வந்தபோது அதற்குப் ப கீரென்றது. ஐயோ, தேவலோகத்தில் அமரேந்திரனுடைய வாகனமாக இருக்கும் எனக்கு இந்தத் துர்புத்தி எங்கிருந்து வந்தது? பரமசாத்விகத்தின் அடையாளமாகிய பாற் கடலிலிருந்து பிறந்த எனக்கு இந்த இழி செயல் செய்யத் தோன்றுவதற்குக் காரணம் என்ன? ஐயோ! சர்வ ஜீவதயாபரியாகிய மகா லக்ஷ்மிக்குப் பின்னவனாக இருக்கும் எனக்கு இந்த அறிவு மயக்கம் வருவானேன்? அந்தப் பாழும் பச்சைக் குதிரைகள் செய்த போதனையிலே மதிமயங்கிப் படுகுழியில் விழுந்தேனே! என்னுடைய அமரலோக வாழ்விற்கேமோகம் வந்து விட்டால் நான் என்ன செய்வேன்!* இப்படி அதன் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது; படக்குப் படக்கென்று அடித்துக் கொண்டது. 

வித்தியாதர லோகத்தில் உள்ளவர்கள் அதன் தோற் றத்தில் ஏதோ குறை இருப்பதை உணர்ந்தும் பேசாமல் இருந்து விட்டார்கள். இந்திரன் மீட்டும் அமராவதி சென்றான். அவனுக்கு ஆயிர ஞாபகங்கள். அவன் கண்ணில் உச்சைசிரவத்தின் தளர்ச்சி படவில்லை. 

அமராவதி வாசிகளின் கூரிய கண்களை மறைக்க முடியுமா? “என்ன? அசுவ ராஜா ஒருமாதிரியாக இருக்கிற மாதிரி காண்கிறதே” என்று நாரத மஹரிஷி தம் தாடியை உருவிக் கொண்டு கேட்டார். அதோடு அவர் நின்றாரா “ஏன் ஸ்வாமி, உம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த உச்சை சிரவம் என்ன இப்படித் தேஜஸ் குறைந்து ஏதோ சிந்தையில் ஆழ்ந்து கிடக்கிறதே; தேற்ற வேண்டாமா?’> என்று குதிரை முகம் படைத்தவரும் தம்முடைய சகாவுமான தும்புறுவைக் கேட்டார். 

நாரதர் இந்த மாதிரியான சமயங்களில் சும்மா இருந்து விட்டால் சர்வ லோகங்களும் வேலையில்லாமல் ஓய்ந்து ஸ்தம்பித்துதான் நிற்க வேண்டும். அவர் தம்முடைய மகதி யாழின் இன்னிசைக்கு இடையிடையே உச்சைசிரவத் தின் வசையையும் பரப்பிக் கொண்டே சென்றார். அமர லோகம் முழுவதும் இரகசியம் பரவி விட்டது. ‘இந்திரன் அகலிகையைக் கெடுத்தான்; இந்திர வாகனம் வடவையைக் கெடுத்தது என்ற பேச்சுப் பிரம்மலோகம் முதலிய வேறு லோகங்களிலே பரவலாயிற்று. எங்கும் இதே பேச்சு. 

வாயு பகவான் இதைக் கேட்டார். வடவைத் தீயின் பக்கத்திலே போகும்போது, “சர்வ லோகங்களையும் தகிக்கும் அச்கினி ஸ்வரூபமாக நிற்கும் நீயே காமாக்கினி யால் தாக்கப்பட்டாயென்பது ஆச்சரியமல்லவா?” என்று இரங்கினார். 

”ஐயோ! நான் தெரியாமல் இந்தத் தீச்செயலில் இறங்கினேன். இனி என் செய்வேன்! இந்தப் பழி என்னை இதோடு விடுவதாகத் தெரியவில்லையே! இந்த அசந்தர்ப்ப சம்பந்தத்துக்கு ஓர் அடையாளங் கூட ஏற்படும் போல இருக்கிறதே” என்று வடவை அழுது புலம்பியது. அது கர்ப்பமாக இருக்கிறதென்ற செய்தியை அக்கினிசகாயர் தெரிந்து கொண்டு தம்கைகளால்மெல்லத் தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்து விட்டுச் சென்றார். 

பிறகு நாரதர் வந்தார்; குசலப் பிரச்னம் செய்தார்; ‘ஆஹா! உன்னுடைய தவமே தவம்! தேவலோகத்தில் உள்ள அசுவராஜாவின் உள்ளம் கவர்ந்த உன் பெருமையே பெருமை! வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கியமல்லவா உனக்குக் கிடைத்திருக்கிறது?’ என்று மெல்ல ஆரம்பித்தார். 

வடவைக்கு ஆத்திரம் வந்தது; கோபம் பொங்கியது; நாரதராக இல்லாதிருந்தால் அப்போதே பொசுக்கிச் சாம்பலாக்கி இருக்கும். திரிலோக சஞ்சாரியும் தவ ராஜருமாகிய அவருக்கு முன் அதன் சினம் என் செய்யும்? ஒன்றும் செய்ய முடியாமல் ஹோவென்று புலம்பியது. 

“மஹரிஷே! என்னைக் குத்திக் காட்ட வேண்டாம். நான் புண்பட்டு நிற்கிறேன். அந்தப் புண்ணிலே கோலை இடுவது போல் நீங்கள் பேசுவது தருமமா?!’ என்று அழுது கொண்டே கேட்டது 

குதிரைக் கன்னியே, இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? அப்படி இருந்தாலும் அந்தத் தவறு உன்னு டையதல்லவே? உச்சைசிரவம் வந்து பேசத தொடங்கினால் பேசாமல் மெளனமாக இருக்க யாருக்குத்தான் முடியும்? இந்திர லோக வாசிகளுக்கு இந்த மாதிரியான செயல்கள் இயல்பே. நீ அதைரியப் படாதே. உன்னை ஒருவரும் குறை கூற மாட்டார்கள். 

வடவைக்கு சிறிது ஆறுதல் உண்டாயிற்று. தன் மன திலுள்ள கவலையை ஆற்றிக் கொள்ள எண்ணி, ‘அப்படி யானால் என்னுடைய கௌரவத்திற்குப் பங்கம் நேராது என்றா சொல்கிறீர்கள்?” என்று, கேட்டது. 

“அதிலென்ன சந்தேகம்? மேற்கொண்டு ஒரு விசேஷமும் இல்லாதிருந்தால் உலகம் இதை மறந்து விடும். மீண்டும் நீ கன்னித் தன்மையை அடைவாய். 

வடவை ஏதோ சொல்ல பேச வர வில்லை ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லியே தீர வேண்டுமென்று தோன்றவேமிகவும் நாணத்தோடு. “மஹரிஷே, மேற்கொண்டு ஒரு விசேஷமும் இல்லாமல். இருக்க முடியாதுபோல் இருக்கிறதே! நான் இப்போது…” 

“அப்படியா ! தெரிந்து கொண்டேன். தேவலோகத் துக்கு மற்றோர் உச்சைசிரவம் கிடை க்கப் போகிறது. அதை இந்திர குமாரனுக்குக் கொடுத்து விடலாம்” 

“தபோ நிதி, என்னை இப்படித் தங்கள் வார்த்தை களால் சித்திரவதை செய்யக் கூடாது பூலோகத்திலுள்ள மனிதர்களுக்குக்கூடக் கர்ப்பிணியென்றால் இரக்கம் உண்டாகும். தாங்கள் என்னுடைய துக்கத்துக்குச் சமனம் கிடைக்கும் மார்க்கத்தைச் சொல்ல வேண்டும்.” 

“சரி! உனக்குப் பிறக்கும் குழந்தை தெய்வ வாகனமாக விளங்கட்டுமென்று ஆசீர்வதிக்கிறேன். போய் வருகிறேன்” என்று மகதி யாழை மீட்டிக் கொண்டு புறப்பட்டார் நாரத மகாமுனிவர். 

கலக கோலாகல முனிவர் நேரே தம்முடைய இசைத் துணைவராகிய தும்புருவினிடம் வந்து, “தும்புரு ஸ்வாமி, கேட்டீரா அதிசயத்தை ! உச்சை சிரவத்துக்கும் வடவாக் கினிக்கும் நேர்ந்த சிநேகத்தினால் ஓர் அசுவம் உதிக்கப் போகிறது உங்கள் துரகதப் பிரபஞ்சத்துக்கே பால சூரியனாக அக்குழந்தை திகழலாம். அந்தக் குழந்தை யாதொரு விக்கினமும் இன்றி உதயமாக வேண்டுமென்று ஆசிர்வாதம் செய்யும்” என்று பரிகாசத் தொனியோடு சொன்னார். 

“இந்த விஷமப் பேச்சை விட்டுவிடுமென்று எவ்வளவு நாள் சொல்லியிருக்கிறேன்! உம்முடைய அபூர்வ ணா கானம் இல்லாவிட்டால் உம்முடைய ஸஹவாஸத் தையே விட்டிருப்பேன். நீர் அன்று உச்சை சிரவத்தின் துச்சரிதத்தைச் சொன்னது முதல் என்னுடைய முகத்தை வளியிலே காட்டுவதற்கும் வெட்கமாக இருக்கிறது. இந்திர ஸதஸில் வீணைக்குப் பின்னாலே முகத்தை மறைத்துக் கொண்டு பாடுகிறேன். இந்த அவமானம் பொறுக்க முடியவில்லை.” 

“அவமானமா? தேவலோக வாசிகளுக்கு இது சம் பிரதாயமாய்ப் போன விஷயந்தானே? இப்போது அசுவ ஜாதிக்கு மற்றோர் இளங்குமரன் பெருஞ் செல்வமாக வரப் போகிறான்; அவனை உம்மிடம் கொண்டு வந்து விடச் சொல்கிறேன். உம்முடைய இனிமையான சங்கீதத்தை அப்பியாசம் செய்வித்து உமக்குச் சிஷ்யனாக வைத்துக் கொள்ளும். 

”நாரதரே.இந்த வெட்கக் கேட்டைப் பீடிகை. அத்தியாயங்கள், வருணனை இவைகளுடன் வளர்க்கிறீரே, போதும்.
உபஸம்ஹாரம் பண்ணி விடுங்கள். என் கோபக் கனலில் நெய்யை விடாதீர்கள். இளங் குமரனாவது, விசாசாவது! அப்படி ஒரு பழிபிறந்தால் அதன் குரல் சர்வ விகாரமாய்க் கேட்பதற்கு சகிக்காததாய்ம் போகட்டும்; இதுதான் என் ஆசீர்வாதம்.” 

“அட்டா! என்ன காரியம் பண்ணி விட்டீர்? கோபம் பாபம் சண்டாளம். இதென்ன? அநியாயமாய் ஒரு குழந் தையை, அது ஒரு பாபமும் செய்யாமல் இருக்கும் போது சபித்து விட்டீரே! விகாரத் தொனியுடன் அந்தக் குழந்தை முழங்கினால் அது உம்முடைய அசுவ ஜாதிக்கே இழுக்கு. ஆகாதா? நீர் போகாவேசத்திலே இருக்கும் இந்த அவசரத்தில் பேசுவதனால் ஒரு நன்மையும் விளையாது; நான் போய் வருகிறேன்.”

நாரதர் உடனே சூரிய லோகத்தை அடைந்தார். அப்போதுதான் அஸ்தமித்து நான்கு நாழிகை ஆகி இருந்தன. சூரியனுடைய குதிரைகளை அருணன் அவிழ்த்து விட்டிருந்தான். அவை ஓய்ந்துபோய் ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தன. உச்சை சிரவம் செய்த காரியத்தை அவை முன்பே உணர்ந்து அதை ஏசிக்கொண்டு இருந்தன. தாமே அதற்குக் காரணமென்ற எண்ணமும், வேறு பல எண்ணங்களும் அவற்றின் மனத்தில் ஊடாடின. நாரத முனிவரைக் கண்டவுடன் பணிந்து க்ஷேமலாபம் விசாரித்துவிட்டு, “என்ன விசேஷம் ? அடியேங்களை நாடித் தேவரீர் எழுந்தருளிய காரியம் யாதோ?” என்று. விநயமாகக் கேட்டன. 

“விசேஷம் இல்லாமலா வருவேன்? அசுவப் பிரபஞ்சத்திலே ஒரு புதுமை நிகழப் போகிறதே; உங்களுக்குத் தெரியாதோ?” 

“பொழுது விடிந்தால் பொழுது போகுமட்டும் எங்கள் வேலையுண்டு; நாங்களுண்டு; மற்ற அக்கப் போர்களைக் கவனிக்க எங்களுக்கு அவகாசம் ஏது?” என்றது ஒரு குதிரை. 

“பூலோகத்தில் உத்தர மகாசமுத்திரத்தின் மத்தியில் வடவாமுகாக்கினி என்ற பெண் குதிரை இருக்கிறதே நீங்கள் கண்டதுண்டோ?” 

“ஓரிரண்டு முறை எங்கள் கண்ணிலே பட்டதுண்டு. ஆனால் கூர்ந்து கவனிக்கவில்லை. சில நாட்களாக அந்தப் பக்கத்திலிருந்து ஒரு தொனி, அழுகை போன்ற தொனி உண்டாகிறது; அதையெல்லாம் கவனிக்க எங்களுக்கு.. நேரம் ஏது?” 

“அந்த வடவைக்கும் இந்திர லோகத்துக்கும் சம்பந்தம் உண்டாகி யிருக்கிறது.” 

“ஏதோ சொல்லிக் கொண்டார்கள்;. உச்சை சிரவத் திற்கும் வடவைத்தீக்கும் பிரேமை உண்டாயிற்றாம். உச்சை சிரவம் தன்னுடைய அநுக்கிரகத்துக்குப் பாத்திரமாக வடவையை வரித்ததாம். இதையெல்லாம் கவனிக்க எங்களுக்கு ஓய்வு ஏது, மகரிஷே !” 

”அவர்களுடைய அநுராகம் முற்றி விளைந்து..” 

“ஆமாம், முனிபுங்கவ ; காற்றுவாக்கில் எங்கள் காதில் விழுந்தது. வடவை கூட இப்போது பூர்ண கர்ப்பிணியாக இருக்கிறதாம். இந்த வி ஷயம் பரம ரகசியமாம். உங்களுக்கு மாத்திரம் தெரியுமாம். இதையெல்லாம் தூண்டிக் துருவி ஆராய்வதற்கு எங்களுக்குப் போது ஏது ஸவாமி?” 

“இவ்வளவுக்குள் அதற்குக் குழந்தை பிறந்திருக்க வேண்டும்.” 

“நேற்றுச் சாயங்காலம் வரையில் பிறக்கவில்லை என்று யாரோ சொன்னார்கள். அதிசீக்கிரத்தில் உதய மாகுமென்றுதான் தெரிகிறது. இந்த விஷயத்திலே எங்களுக்கு என்ன அக்கறை? இதைப்பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள ஓய்வு எங்கே கிடைக்கிறது?” 

“அசுவமுக சங்கீத விநோதராகிய தும்புருவுக்கு ” 

“மகதியாழ் முனிவரே, அதுவும் கேள்விப்பட்டோம். அவருக்கு உச்சை சிரவத்தின்மேல் மிகுந்த கோபபரம். பிறக்கப் போகும சிசுவின்மேல் கட்டுக்கடங்காத கோபமாம். ஏதோ காலும் அரையுமாக விஷயம் தெரிந்தது. எங்கள் வேலையே எங்களுக்குச் சரியாக இருக்கிறபோது பரிபூர்ணமாகத் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் எங்கே?” 

நாரத முனிவருக்கே சிரிப்பு வந்து விட்டது. ஆதிமுதல் அந்தம் வரையில் அந்தக் குதிரைகள் தெரிந்து கொண்டு இருப்பதை அவர் உணர்ந்தார். 

“அது கிடக்கட்டும்; தேவராஜாவுக்கு வாகனம் ச்சை சிரவம்; தேவராஜாவின் குமாரனுக்கு அதனுடைய குமாரன் வாகனமாக வந்தாலும் வரலாம். ஆகையால் அந்த உச்சை சிரவ சிசுவுக்கு நீங்கள் கதி பழக்கி வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !” 

அந்த ஏழு குதிரைகளில் இதுவரைக்கும் பேசாமல் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு வந்த பெரிய குதிரைக்கு இந்த வார்த்தை எரிச்சலை உண்டாக் கியது. ஏழு குதிரைகளில் நடுநாயகமாக விளங்குவது அது. ‘மகரிஷே, பழியின் ஸ்வரூபமாகத் தோன்றப் போகிற அந்தப் பிராணிக்குச் சாரியும் கதியுமா பழக்கித் தர வேண்டும்? போதும் போதும். அதன் முன்கால்கள் முன்னே சென்றால் பின்கால்கள் பின்னே செல்லவேண்டும். பழியினால் குன்றிப்போய் நிற்க வேண்டும்” என்று அது வரையில் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டியது. 

”அடடா! என்ன வார்த்தை சொல்லுகிறாய்! சாபம் அல்லவோ கொடுத்து விட்டாய்! இங்கே நிற்பதில் பிரயோசனம் இல்லை; நான் போய் வருகிறேன்” என்று நாரதர் திரும்பிப் பாராமல் புறப்பட்டு விட்டார். பஜனை பண்ணிக் கொண்டே சென்றவர், அமராவதியில் இந்திரன் அரண்மனையில் உச்சை சிரவம் இருக்கும் இடத்திற்குப் போனார். அப்போதுதான் உதயமாகி இருந்தது. உச்சை திரவம் இரவெல்லாம் உறக்கமின்றி மனம் கலங்கி நின்று கொண்டிருந்தது. நாரதர் அதைக் கண்டவுடனே, “ஹே அசுவ ராஜாவே, அழுஉடனே அழு; வைகுண்டத்துக்கு ஓடிப் போய் அழு; அப்பொழுதுதான் உன் மானம் நிற்கும். இப்பொழுதே போய் உன் உடன் பிறந்த ஸ்ரீதேவியின் காலில் விழுந்து ஏதாவது வழி கேள். உன் குழந்தை, வடவை வயிற்றிலே பிறக்கப் போகிறகுட்டி, நன்றாக இருக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வா. இல்லா விட்டால் குதிரை முகம் படைத்த தேவர்களுடைய சாபத்துக்கு ஆளாகி உன் சந்ததி எழில் குறைந்து பலமிழந்து உலகம் உள்ளளவும் நரக வாசத்தைப் போன்ற துக்கமய வாழ்க்கையிலே கிடந்து புழுங்கும்படி நேர்ந்து விடும். ‘அழு, உடனே அழு’ என்று மூச்சு விடாமல் தடபுடல் படுத்தவே அந்தப் பேதைப் பரிமா ஒன்றும் தெரியாத மயக்கத்தில் ஆழ்ந்தது. 

“என்ன மயங்குகிறாய்! அப்புறம் காலம் மீறி விட்ட தென்று வருத்தப்படும்படி நேரிடும். வடவைப் பெண்ணுக் காவது இரங்கு. தான் கருவுயிர்க்கப் போகும் புத்திரன் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கும்படி நேர்ந்தால் மானங் குலைந்து மாய்வாள். அந்தப் பழிவேறு உன்னை வந்து அடையும். ஆகையால் இப்பொழுதே போ. பாற்கடலில் அவதாரம் செய்த ஸ்ரீதேவியை அணுகி அழு; வாய் விட்டுக் கேள். அந்த தேவி மனமிரங்கி ஏதாவது வழி செய்வாள் போ. தாமஸம் செய்யாதே!” 

“நான் என்ன செய்ய வேண்டும் மஹரிஷே?” 

“என்னடா இது! தீப்பற்றி எரியும் போது நிதானமாக. என்று கேட்கிற கதையாக இருக்கிறதே. உன் குழந்தைக்கு குரல் கர்ண கொடூரமாக இருக்க வேண்டுமென்ற சாபம் பிறந்திருக்கிறது. அதை மாற்றச் சொல். நான் வடவைக்கு. அபயம் கொடுத்திருக்கிறேன்; பிறக்கும் குழந்தை தெய்வ வாகனமாவான் என்று ஆசீர்வாதம் செய்திருக்கிறேன். என் வாக்குப் பொய்க்கக் கூடாது. போ இப்பொழுதே. விசரரிக்க நேரமில்லை; பேசப் பொழுதில்லை; பிடர் பிடித்து தள்ளாத குறை ஒன்றுதான் பாக்கி. அப்படி அடித்தார் நாரதர். பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புறப்பட்டது உச்சைசிரவம். 

4 – வரம் பெறு படலம் 

ஒருவர் கண்ணிலும் படாமலும் மூலையைப் பார்த்து ஒதுங்கி ஒதுங்கி இந்திரனது குதிரை பூனைபோலம். பதுங்கி வைகுண்டத்தில் நுழைந்தது. அங்கே உள்ள விஷ்வக்ஸேனர், ஆதிசேஷன், நித்யஸூரிகள் முதலிய வர்களுடைய கூட்டத்தைத் தாண்டி அந்தப்புறத்திற்குச் சென்று அங்கும் இங்கும் பார்வையைச் செலுத்தி உருட்டி விழித்து ஆராய்ந்தது. அப்பொழுதுதான் திருமகள் ஸ்நானம் செய்து அலங்கரித்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளினாள். அவள் திருவடியில் விழுந்து எழுந்து, ‘என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று கதறியது. 

”அட! உனக்கு என்ன வந்தது? இந்திரனுக்குப் பிரியமான உனக்கு என்ன துன்பம் வந்து விட்டது ?”. என்று லட்சுமிதேவி கேட்டாள். 

”தேவி, உன்னிடம் ஒளிப்பதிலே ஒன்றும் பயன் இல்லை. யாரிட்ட சாபமோ, என் பொல்லாத வினைப் பயனோ, நான் வடவையைக் காமுற்றேன். அதன் பலனாக அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. தேவலோகத்தினர் யாவரும் அது பிறப்பதற்கு முன்பே அதன் தலையில் ஏற்றுவதற்குப் பல சாபங்களைச் சுமையாக வைத்திருக்கிறார்களாம். என்னுடைய சந்ததி இவ்வளவு ஆதரவற்றுப் பழி சுமந்து நிற்பது எனக்கு இழிவல்லவா? என் சகோதரியாகிய உனக்கும் எனக்கு இழிவு வந்தால் பங்கு இல்லையா?” 

“கேடு கெட்ட மிருகமே, தேவலோகத்துக்கு அடுக்காத செய்கையைச் செய்துவிட்டு வெட்கமும் மானமும் இல்லாமல் அதைச் சொல்லிக் கொள்ள இங்கே வந்து விட்டாயா? எல்லோரும் சாபம் கொடுக்காமல் என்ன செய்வார்கள்? நீ தான் பிறந்த இடத்தின் பெருமையையும் வாழும் இடத்தின் மதிப்பையும் சிறிதும் யோசியாமல் பெரிய தவறு செய்து விட்டாய். மற்றவர்களுக்கு அவை நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் உன்னைச் சபிக்காமல் உன் பழிப்பிண்டத்தைச் சபித்தார்கள். போ நாயே வெளியே! இங்கே வந்ததற்கு இந்தா, நானும் ஒரு சாபம் கொடுக்கிறேன். உன் அருமைக் குழந்தைக்குக் கொண்டு போய்ச் சேர். பாழாய்ப்போன வீட்டில் குட்டிச்சுவரின் கீழ் உன் குழந்தை நிற்கட்டும். மனிதர் வாழும் இடம் அதற்குத் தக்கதல்ல. போ, என் கண்முன் நில்லாதே.”

உச்சைசிரவம் இடி விழுந்து நின்றது. அதன் உடம் பெல்லாம் நடுங்கியது. ‘பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டால் பிறந்தகத்து உறவு மறந்து விடும்’ என்பதை நிதரிசனமாகக் கண்டு அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக புறப்பட்டது. வாயில் வழியே போவதை விடப் புறக்கடை வழியே போவதுதான் மேல் என்று எண்ணிப் பின்வாசலைக் கடந்து சென்றது. தலை குனிந்தபடியே போய்க் கொண்டு இருந்த அதன் காதில், “தம்பீ” என்ற குரல் விழவே தலை நிமிர்ந்து பார்த்தது. அங்கே ஒரு குப்பை மேட்டில் ஒய்யாரமாக வீற்றிருந்த ஜேஷ்டா தேவியைத் தரிசித்தது அதற்கும் திருமகளுக்கும் மூத்த தமக்கை அவள். விம்மி அழுதபடியே அவள் காலில் விழுந்து, “அக்கா, என் அக்கா, என் அக்கா” என்று கதறிப் புலம்பியது. அந்த மூ(த்த) தேவியின் கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் நெடு நேரம் புலம்பித் தன் மனத்தில் உள்ள துக்கந்தை ஓரளவு கரைத்துக் கொண்ட உச்சைசிரவம் மெல்லத் தன் விருத்தாந்தத்தை எல்லாம் அக்காவுக்கு எடுத்துச் சொல்லியது. 

”சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்க வேண்டு மென்று ஸ்ரீதேவியை அணுகினேன். அவள் பின்னும் ஒரு சாபம் கொடுத்து அனுப்பி]விட்டாள். ஐயோ! ஒரு பாவத் தையும் அறியாத அக்குழந்தைக்கு எத்தனை சாமம்! நாரதர் கொடுத்த வாக்கும் வீணாகப் போகும் போல் இருக்கிறதே’ இனி இந்த தேவலோகத்தில் க ணை யென்னும் சரக்கே இல்லாமல் போய்விடும்.”

எல்லாவற்றையும் ஆற அமரக் கேட்ட ஜேஷ்டா தேவி அன்னகை பூத்த திருமுகத்தோடு திருவாய் மலரலானாள்.

“என் அருமைத் தம்பி, இன்றே உன் விசனத்தை ஒழித்து விடு. இந்த தேவர்களெல்லாம் பொறாமைக் காரர்கள். கருணை என்பது இவர்களுக்கு ஒரு வியாபாரப் பண்டம். நான் பார்த்துக் கொள்கிறேன். தேவ லோகமே எதிர்த்து நின்றாலும் நான் கொடுக்கும் அபய வார்த்தை பலன் தராமல் போகாது. தம்பி, மயங்காதே, உன்னுடைய செல்வக் குமாரன் நாரதர் திருவாக்கின் படியே ஒரு தெய்வத்தின் வாகனமாக விளங்குவான். நானே அத் தெய்வம். என் தம்பி மகன் எனக்கு வாகன மாக வாழ்வதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது? இந்தப் பொல்லாத தேவலோகம் என்னை என்ன சொல்லக் கிடக்கிறது? யாரோ ஒருவன் அவன் குரல் கர்ண கடோர மாக வேண்டும் என்று சபித்தான் என்கிறாய். இதோ நான் சொல்வதைக் கேள்; உலகத்தில் ஜனங்கள் அந்தத் தொனியைக் கேட்டு நல்ல நிமித்தமாக எண்ணி சந்தோஷ மடைவார்கள். பரிசுத்தமான வஸ்திரங்கள் அந்தக் குமரன் திருமேனியில் இடம் பெறும். தீர்த்தக் கரையிலே அவன் உலவுவான். போதுமா வரங்கள்? 

“அக்கா, உன் கருணையை என்னவென்று சொல்வது!” என்று ஆனந்தக் கண்ணீர் துளிக்கக் கூத்தாடியது இந்திர வாகனம். 


இவ்வாறு பிறப்பதற்கு முன்னே கட்டிக் கொண்ட சாபங்களோடும் வரங்களோடும் வடவைத் தீமகளின் திரு வயிற்றை அலங்கரித்த கர்த்தப ராஜகுமாரன் ஒரு நல்ல நாளில் அவதாரம் செய்தான். அவனுடைய சந்ததியே. இன்று நாம் காணும் வெள்ளி மூக்குக் குதிரை. 

– 1932-42, ஆனந்த விகடன் தீபாவளி மலர்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *