ஏன் நிறைய கடவுள்கள்?

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 39,104 
 

பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும்.

ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ”எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், புத்த மதம் போன்றவற்றுக்கும் ஒரே கடவுள்தான் உள்ளார். ஆனால் உங்கள் இந்து மதத்தில் மட்டும் நிறையக் கடவுளர்கள் உள்ளார்களே?” என்று கேட்டார்.

அதற்கு பீர்பால், ”பேரரசர் அவர்களே! எல்லாக் கடவுளரும் ஒன்றுதான். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பல பெயரிட்டு அழைக்கிறார்கள்” என்றார்.

”நிறைய கடவுளர்கள் இருக்கிறார்களே… ஏன் என்று கேட்டேன். நீரோ, எல்லா கடவுளும் ஒன்று தான் என்று மழுப்பலாக பதில் தருகிறீர். பல கடவுளர்களும் ஒன்றுதான் என்பதை, நீர் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம்புவேன்” என்றார் அக்பர்.

”இப்போதே நிரூபித்துக் காட்டுகிறேன்” என்றார் பீர்பால். தன் தலைப்பாகையை பேரரசரிடம் காட்டி, ”இது என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டார். ”இது என்ன கேள்வி? இது தலைப்பாகை” என்றார் அக்பர்.

தனது தலைப்பாகையை அவிழ்த்த பீர்பால் அதைத் தன் தோளில் போர்த்திக் கொண்டார். பிறகு, அருகிலிருந்த வீரனை அழைத்து, ”இது என்ன?” என்று கேட்டார். ”போர்வை!” என்றான் அவன்.

பிறகு அதைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார் பீர்பால். இன்னொரு வீரனை அழைத்து ”இது என்ன?” என்று கேட்டார். ”வேட்டி” என்று பதில் வந்தது.

”பார்த்தீர்களா, பேரரசே! நீங்கள் தலைப்பாகை என்றீர்கள். அதையே இந்த வீரர்கள் போர்வை என்றும், வேஷ்டி என்றும் சொன்னார்கள். உண்மையில் இது துணிதான். இடத்துக்குத் தக்கவாறு இதன் பெயர் மாறுகிறது. தலையில் இருந்தால் தலைப்பாகை. உடலைப் போர்த்தி இருந்தால் போர்வை. இடுப்பில் இருந்தால் வேஷ்டி. அதே போலத்தான் எங்கள் கடவுளர்களும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறார்கள். படைக்கும் தொழில் செய்பவர் பிரம்மன்; காக்கும் தொழில் செய்பவர் திருமால்; அழிக்கும் தொழில் செய்பவர் சிவன். பெயர் மாறுகிறதே தவிர எல்லோரும் ஒருவர்தான்” என்று விளக்கம் தந்தார் பீர்பால். விளக்கத்தைக் கேட்டு அக்பர் சமாதானமானார்.

– ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (டிசம்பர் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *