ஏகபத்தினி விரதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 5,571 
 

இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன் ராவணன்.

ராவணனுக்கு தசக்ரீவன், இலங்கேஸ்வரன், ராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடைமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.

பத்து பிரஜாதிபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்பகர்ணன், வீபீடணன் மற்றும் சகோதரி சூர்ப்பனகை ஆவார்கள்.

மேலும் ராவணன் சிவனுடைய தீவிர பக்தர். நெற்றியில் எப்போதும் திருநீர் அணிந்து கம்பீரமாக காட்சியளிப்பவர். அவருடைய போதாத நேரம் சீதையைக் கவர்ந்து சென்றதனால் ராமனுடன் போரிட்டு மரணமடைந்தார்.

சிவத் தலங்களில் சிவபெருமான் கயிலை மலை வாகனத்தில் வீதி உலா வருகையில், பத்துத் தலைகள் கொண்ட ராவணன் கயிலை மலையை தாங்கும் வகையில் கயிலை மலை வாகனம் அமைந்திருக்கும் என்பதிலிருந்தே ராவணனின் தீவிர சிவ பக்தியைப் புரிந்து கொள்ளலாம்.

ஒருமுறை பஞ்சவடிக்கு விஜயம் செய்த ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் கம்பீரத்தையும், திரண்ட தோள்களையும் பார்த்து ராமன் மீது தீராத மையல் கொண்டாள். இதை அறிந்த ராமனின் சகோதரன் லக்ஷ்மணன் சூர்ப்பனைகையின் மூக்கை அறுத்து அவளுக்கு சரியான பாடம் கற்பித்தான்.

கேவலப்பட்ட சூர்ப்பனகை இலங்கைக்குத் திரும்பியதும் தன் அண்ணன் ராவணனிடம் சீதையின் சொக்கும் அழகை வர்ணித்து, எப்படியாவது சீதையைக் கவர்ந்து அவளை அடையத் தூண்டினாள். இங்குதான் ஆரம்பித்தது ராவணனின் அழிவுகாலம்.

சகோதரி சூர்ப்பனகை உசுப்பேத்தியதால் ராவணன் பஞ்சவடிக்குச் சென்று, மாரீசனை தங்க மாயமான் வடிவத்தில் அனுப்பி, சகோதரர்களான ராமர், லக்ஷ்மனரை சீதையிடமிருந்து பிரித்தார். கபட நாடகத்தை அறியாத சீதா, லக்ஷ்மணன் கிழித்த கோட்டினைத் தாண்டி வெளியே வந்து, துறவி வேடத்தில் இருந்த ராவணனுக்கு தாய்மைப் பரிவுடன் உணவு வழங்க வந்தபோது, ராவணன் சீதையை வானத்தில் கடத்திச் சென்றான்.

இதைக் கண்ட ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் எதிர்த்து சண்டையிட்டு போராடினார். சண்டையின் இறுதியில் ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினார். ஜடாயு பரிதாபமாகத் தோல்வியுற்றார்.

தன் விருப்பத்திற்கு இணங்காத சீதையை, ராவணன் இலங்கையின் அசோக வனத்தில் சிறை வைத்தார். அந்த இடம் இன்றைக்கும் ஸ்ரீலங்காவில் சரித்திரப் புகழுடன் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ராவணன் அரசவையில் ராமனை எதிர்த்துப் போர் புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு ராவணனின் சகோதரர் விபீடணன் கடும் எதிர்ப்பு தெரவித்தார்.

சீதையை ராமரிடம் மரியாதையாக திருப்பி அனுப்பி வைத்து பகையின்றி வாழ்வது நல்லது என்றார். தவிர, இன்னொருத்தர் மனைவியை கடத்திக்கொண்டு வருவது எவ்வளவு கேவலமானது என்று எடுத்துக் கூற முற்பட்டார்.

சகோதரன் விபீடணின் அறிவுரையை ஏற்காத ராவணன் சீதையின் அழகில் உன்மத்தம் பிடித்து, சொந்த சகோதரனை அவையிலிருந்து வெளியேற்றினார்.. அதனால் விபீடணன் தன் படைகளுடன் ராமருடன் சேர்ந்தார்.

சீதையை மீட்க ராவணனை எதிர்த்துப் போரிட்டு அவனை எளிதில் வெல்லும் வகைகளை ராமனுக்கு எடுத்துக் கூறினார். .

அதன் பிறகு மிகக் கடுமையான போர் நடந்தது. வானரப்படைத் தலைவர் ஹனுமன் ராமருக்கு பல உதவிகள் செய்தார். எனினும் ராவணன் சிறந்த சிவ பக்தன் என்பதால், ராமருக்கு ராவணனை போரில் வெல்வது அத்தனை எளிதாக அமையவில்லை.

நெடிய நீண்ட கடும் போருக்குப் பின், ராமன் ராவணனை முற்றிலுமாக விழ்த்திக் கொன்றார்.

ராவணனை முற்றிலுமாக அழித்த பிறகு, போர்க்களத்தில் களைப்புடன் ராமபிரான் தனிமையில் ஓய்வாகத் தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.

அப்போது அவரருகே ஒரு பெண்மணியின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்மணி, அவரது திருப் பாதங்களை தொட முயற்சிப்பதை நிழலின் அசைவின் மூலமாக ராமபிரான் புரிந்து கொண்டார். உடனே தனது கால்களை மரியாதை நிமித்தம் உள்ளே இழுத்துக் கொண்டார். அவளின் நிழல்கூட அவர் மேல் படவில்லை.

குரலில் கனிவுடன் “நீ யாரம்மா, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“நான்தான் ராவணின் மனைவி மண்டோதரி… என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என்று எண்ணி இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவர் வதம் செய்து போரில் கொன்று விட்டார் என்றால், அவரிடம் ஏதோவொரு மிகப்பெரிய உயர்ந்த குணம் இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.”

“………… “

“மேலும் சத்திரிய குல தர்மப்படி, போரில் கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தாங்கள் என்னிடம் முறைதவறி நடக்க எண்ணவில்லை… நான் மிகுந்த ஆச்சரியப் பட்டேன்….”

“அப்படியா?”

“ஆமாம்… என்னுடைய நிழல் தாங்கள் மீது படுவதைக்கூட விரும்பவில்லை என்னும் போது, தாங்களின் சிறந்த குணத்தை என்னவென்று போற்றுவேன்?

உண்மையச் சொன்னால், மறைந்த என் கணவரிடம் கூட, ரகு குலத்தில் அவதரித்த ராமர் வெறும் மனிதர் அல்ல, உலகைக் காக்கும் பரம்பொருள்! விஸ்வரூபன்!! அவரது திருநாமம் எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது, அவர் வேதத்தின் சாரம், அவர் சாட்சாத் தெய்வ வடிவம், அவரிடம் பகைமை பாராட்டாமல் தயவுசெய்து சீதையை விட்டு விடுங்கள் என்று மன்றாடினேன்… ஆனால் அவர் நான் சொன்னதைக் கேட்கவில்லை.

போரில் தாங்களின் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் தாங்களிடத்தில் இருந்தது மட்டும்தான்… அதுதான் தாங்களின் ஏகபத்தினி விரதத் தன்மை. அதனால்தான் தாங்கள் அவரை வெல்ல முடிந்தது…”

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பகவான் ராமர் ஒரு மென்மையான புன்னகை மட்டுமே புரிந்தார்.

உடனே தன் சுய வடிவான ‘நாராயணனாக’ மண்டோதரிக்கு விஸ்வரூப தரிசனம் வழங்கினார். இவ்விதமாக ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி!!

போரின்போது ஹனுமன் இலங்கை சென்று ராவணின் அந்தப்புரம் சென்றபோது, மண்டோதரியின் ஒழுக்கமான உடை அலங்காரத்தைக் கண்டு, ‘இவள் சீதையாக இருப்பாளோ?’ என்று ஒரு கணம் சந்தேகம் கொண்டான் ஹனுமன்.

அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாகத் திகழ்ந்ததால்தான், ஒரு கெட்டவனுக்கு வாழ்க்கைப் பட்டும், மண்டோதரிக்கு நாராயணனின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது!!

உயர்ந்த சாதியில் பிறந்தவன்; வசதியில் உயர்ந்தவன்; அரச பதவியில் இருப்பவன்; என இறைவன் ஒருபோதும் நம்மைப் பார்ப்பதில்லை.

நம்முடைய பயபக்தி, அன்பு, ஒழுக்கம், இறைச்சேவை, அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவைகளே இறைவனின் அருள் தரிசனம் பெறும் வழி முறைகளாகும்.

ஆகவேதான் அசுர குலத்தில் பிறந்தாலும், தன்னுடைய ஒழுக்க குணத்தால், ராவணனின் மனைவி மண்டோதரிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது.

ஸ்ரீராமஜெயம் !!

வாழ்க பகவான் ஸ்ரீராமரின் புகழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *