ஊழ்வினை வந்தால் என்ன?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 1,584 
 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடம்பில் கடுமையான நோய் வந்து மருத்துவரிடம் காட்டுகிறார் ஒருவர். மருத்துவர் ‘ஆரேஷ ‘ செய்ய வேண்டும் என்று சொல்கிறார். கருவிகளால் கீறியும் அறுத் தும்தைத்தும் மருத்துவர்கள் • ‘ஆபரேஷன்’ செய்கிறார்கள். அந்தச் சிகிச்சையைச் செய்யும்போது நோயாளிக்குத் துன்பம் தெரியாதபடி மயக்க மருந்து கொடுத்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் எந்தப் பகுதியிலே சஸ்திர சிகிச்சை செய்ய வேண்டுமோ, அந்தப் பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாமல் மரத்துப் போகும்படி ஊசியினால் ஒரு மருந்தை முதலில் ஏற்றுகிறார்கள்.

புண்ணைக் கீறும் பொழுதும் அறுக்கும் பொழுதும் இரத்தம் வெளியில் வருகிறது. ஆனால் நோயாளிக்கு அப் போது வேதனை தெரிவதில்லை.நோயாளி உயிரோடு இருக்கும் போதே அவன் உடலில் உள்ள உறுப்புக்களை அறுக்கிறார்கள். அப்படிச் செய்யும்பொது உண்டாகும் வலி உறைக்கா தபடி மயக்க மருந்து செய்துவிடுகிறது.

உலகில் பிறந்தவர்கள் யாவரும் ஊழினால் இயக்கப்படு கிறார்கள். ஊழ்வினை எப்படியாவது தன் வலிமையைக் காட்டிவிடும். அதை மாற்றவே முடியாது. ஆனால் அதனால் உண்டாகும் துன்பங்களை உணர முடியாத நிலையைப் பெற லாம். கருவிகளால் அறுக்கும் போது நோயாளியின் உடம் பில் இரத்தம் வந்தாலும் அவன் வேதனையை உணராமல் இருப்பது போல், அந்த நிலையில் ஊழின் விளைவு நிகழ்ந்தா லும் அந்த வினை வினால் துன்பம் உறாமல் இருக்கலாம்.

நோயாளிக்கு மரக்க அடிக்கும் மருந்து உதவுவது போல, அறிவுள்ள மக்களுக்கு இறைவன் திருவருள் உதவு கிறது. “ஐயோ! தலைவிதியே!” என்று துன்பம் வருவதற்கு முன்பிருந்தே மனம் நைந்து வருந்தத் தொடங்கும் பேதை யரைப் போலன்றி. வருவது வரட்டும் என்று தைரியத்தோடு இருந்து, இறைவனுடைய திருவடி நினைவோடு வாழ்பவர் களுக்கு, ஊழினால் உண்டாகும் துன்பங்கள் உறைப்பதில்லை. மற்றவர்களெல்லாம் ஊழ்வினைக்கு அஞ்சுவார்கள். இறைவனுடைய மெய்யன்பர்கள் அஞ்சுவது இல்லை. அன்பர்களுக்கு ஊழ்வினை இல்லை என்று கொள்ளக் கூடாது. ஊழ்வினை வந்து ஊட்டுவதினின்றும் தப்புவார் யாரும் இல்லை. கத்தி மேலே பட்டுக் காயம் உண்டானால் துடித்துப் போகிற மனிதன், மருத்துவர் அறுக்கும்போது வேதனை தெரியாமல் கிடக்கிறான். அவ்வாறே, அருள் பெறாதபோது சிறிய இன்னலை யெல்லாம் கண்டு அஞ்சுபவனே இறைவன் பால் அன்புடையவனாகி அவனருளைப் பெற்றுவிட்டால். எது வந்தாலும் அஞ்சாமல், வேதனை உறாமல் வாழ்வான்.

அத்தகைய அன்பர்கள், “ஊழ்வினை வந்து அடைந்தால் என்ன? அதற்கு நான் அஞ்சேன்” என்று சொல்வார்கள்.

இத்தகைய நிலையை அடைந்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்.

“கவாமி,ஊழ்வினைக்கு நீங்கள் அஞ்சமாட்டீர்களா?”

“மாட்டேன். இந்த உலகில் யான் வாழுமளவும் ஊழ்வினை வந்தடையும் என்பதை அறிவேன். வந்தால் என்ன? எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை.”

சூழ்உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே?

“உங்களுக்கு அத்தகைய தைரியம் வரக் காரணம் என்ன?”

“எனக்குத் துன்பம் என்பதே இல்லை. இன்பமே எந் நாளும்; துன்பம் இல்லை.”

“எங்களுக்கு உள்ள துன்பங்களுக்கு அளவே இல்லையே! உங்களுக்குத் துன்பம் இல்லாமல் இருக்க என்ன செய்தீர்கள்?”

“நானும் உங்களைப்போலத் துன்பங்களால் அலைப்புண் டவன்தான். எத்தனை தான் துன்பத்தைப் போக்க வேண்டு மென்று முயன்றாலும் அவை என்னை விட்டு நீங்காமலே இருந்தன. அப்படித் துறவாமல் இருந்த துன்பங்களை நான் துறந்துவிட்டேன். இந்த நிலையில் ஊழ்வினை வந்து உற்றால் எனக்கு ஒரு துன்பமும் வராது.”

“எப்படித் துன்பத்தைத் துறந்தீர்கள்? அதனை ஓட்டு வதற்கு என்ன படை உங்களுக்குக் கிடைத்தது?”

“துன்பத்தை நோக்கி நான் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் துன்பமே இல்லாத இன்ப மயமான இறைவனை வழி பட்டேன். அவனிடம் அன்பு முறுக முறுக இந்தத் துன்பம் கழன்று போயிற்று.”

“இறைவனை வழிபடும் வழியாது?”

“நாள்தோறும் நீரில் மூழ்கி நறுமலர் கொய்து இறைவன் திருவடியைப் பூசித்து வாழ்த்தி அன்பு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம் உள்ளம் இறைவன் நினைவிலே தோய்ந்துவிடும். துன்பத்தை உணராத நிலை வரும்.”

“இறைவனை வழிபட்டால் துன்பத்தை நீங்கி நிற்கும் நிலை எங்களுக்கு வருமா? எந்தத் துன்பமானாலும் நீங்குமா?”

“தன்னிடம் யார் வந்து வேண்டினாலும் வாழ்த்தினாலும் அவர்களுடைய துன்பத்தை நீக்கும் தர்ம மூர்த்தி அவன். இறைவனுடைய பெருமையை உள்ளபடி உணராதவர்கள் வானவர்கள். ஆனாலும் அவர்கள் யாவரும் உறவாகி ஓடி வந்து வேண்டிக் கொண் டார்கள். அப்போது இறைவன் கருணை பூண்டு அந்த நஞ்சை உண்டு அவர்களை உய்யக்கொண்டான். அமரர்களுடைய துன்பத்தையே நீக்கின அறப்பெருஞ் செல்வனுக்கு நம் முடைய துன்பம் எம்மாத்திரம்? அவனை அடைந்தால் அவன் அஞ்சேல் என்ற கரத்தை உடையவன் என்பது தெரியும்.”

கடலில் நஞ்சு எழுந்தபோது

“அப்படிக் கோலம் கொண்டு இறைவன் எழுந்தருளி யிருப்பான் என்றால், நாங்களும் அவனை அடைந்து நீரில்மூழ்கி மலர் கொய்து இட்டுக் கழலை வாழ்த்தலாமே. அவன் இருக் கும் இடம் எது?”

“அவன் இல்லாத இடமே இல்லை. ஆயினும் புறக் கண்ணால் கண்டு வழிபடுவதற்கு ஏற்றபடி தேவர்களைக் காக்கும் தலைவனாகிய அவன் இந்த மண்ணுலகத்திலும் கர சரணதி அவயங்களையுடைய திவ்ய மங்கள மூர்த்தியாகி, வழிபடுவார்க்கு அருள் சுரக்கிறான்.”

“மண்ணுலகில் அவனுடைய திவ்ய மங்கள மூர்த்தத்தை எங்கே காணலாம்?”

“திருக்கோயில் தோறும் காணலாம். சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறையிலே அமரர் ஏறாகிய அவனைக் கண்டு.. தரிசித்தேன். நீங்களும் தரிசியுங்கள். அஞ்சேல் என்று அருள் வாயாக என்று வேண்டிக் கொண்டு நான் தரிசித்தேன்.

அப்பர் சுவாமிகள் இப்படியெல்லாம் வினாவுக்கு விடை கூறவில்லை. ஆனால் இத்தகைய வினாக்கள் எழுமானால் அவற் றிற்குத் தக்க விடைகளை அவர் திருவாவடுதுறையில் எழுந்த ருளியிருக்கும் பெருமானை நோக்கிப் பாடிய பாசுரம் சொல்கிறது.

நறுமா மலர்கொய்து நீரில் மூழ்கி
நாள்தோறும் நின்கழலே ஏத்தி வாழ்த்தித்
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச்
சூழுலகில் ஊழ்வினைவந்து உற்றால் என்னே?
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண்டு உய்யக் கொண்ட
அறவா! அடியேனை அஞ்சல் என்னாய்,
ஆவடுதண் டுறைஉறையும் அமரர் ஏறே!

[மணம் வீசும் பெரிய மலர்களைக் கொய்து நீரிலே மூழ்கித் தினந்தோறும் நின்னுடைய திருவடிகளையே துதி செய்து வாழ்த்தி, அதனால் அதுகாறும் நீங்காத துன்பங்களை யெல்லாம் விட்டொழித்த என்னை, இப்போது யாவரும் வினைகளைச் செய்யும் இவ்வுலகில் ஊழ்வினை வந்து அடைந் தால் எனக்கு உண்டாகும் துன்பம் என்ன? தேவர்கள் இறை வனிடத்தில் உறவுடை யவராய் அனைவரும் வந்து வேண்ட, ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் நிரம்பிய கடலில் எழுந்த நஞ்சை உண்டு, அவர்களை உயிர் பிழைக்குமாறு செய்தருளிய அறமே உருவான அண்ணலே! அடியேனை அஞ்சாதே என்று சொல்வாயாக; திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் தேவர்கள் தலைவனே!

மா – பெருமை ; அளவினாலன்றி மணத்தாலும் அழகாலும் உண்டான பெருமை. நீரில் மூழ்கி மலர் கொய்து என்று மாற்றிக்கொள்ளவேண்டும். கழல்-வீர கண்டை; இங்கே அதை அணிந்த திருவடியைக் குறித்தது; ஆகுபெயர். ஏத்துதல் -ஒன்றன் சிறப்பை எடுத்துரைத்தல். வாழ்த்துதல்- வாழ்க என்று கூறுதல். துறவாத-முன்பு என்னை விட்டு நீங்காத. துறந்தேன்-விட்டொழித்தேன். சூழ்தல்-செய்தல்; சுற்றுதல் என்றும் கொள்ளலாம். என்னே – எனக்கு வரும் துன்பம் என்ன? எனக்கு என்ன கவலை என்றும் சொல்லலாம், உறவு – நட்பு தேவர்கள் சில சமயங்களில் இறைவனுடைய பெருமையை எண்ணாமல் தக்கனுடைய யாகத்துக்குச் சென்றதுபோல் சில செயல்கள் செய்து பகையாவதும் உண்டாதலால், உறவாகி என்றார். வானவர்கள் தனித் தனியே வந்து தங்கள் தங்கள் துன்பங்கள் போகும்படி வேண்டிக்கொள்வ துண்டு. ஆனால் இப்போது அனைவரும் வந்து வேண்டினார்களாதலின், ‘முற்றும் வேண்ட’ என்றார்.

அமுதம் கடைந்தது உப்புக்கடலில் என்பது ஒரு மரபு, ஆதலின், ‘ஒலி திரை நீர்க்கடல் நஞ்சுண்டு’ என்றார். • அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை” என்று அப்பரும், ‘காரூர் கடல் விடமுண்டு” என்று சுந்தரரும், தாழி தரையாகத் தண்டயிர் நீராகத் தடவரையே, மத்தாகத் தாமரைக்கை நோவ, ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்” (சரபங்கர் பிறப்பு நீங்கு படலம். 29) என்று கம்பரும் கூறுவது காண்க.

துன்பம் துறந்தேன் என்று சொன்னாலும் அந்த நிலை யினால் செருக்கு அடையாது பின்னும் பணிவு பூண்டவராகி இறைவனை நோக்கி இரக்கின்றாராதலின், ‘அடியேனை அஞ்சேல் என்னாய்’ என்றார். ஆவடுதுறை, சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரையில் உள்ளது: அம்பிகையின் பசு உருவை இறைவன் நீக்கிய தலமாதலின் ஆ அடு துறை என்ற பெயர் பெற்றது. ஏறு – ஆண்சிங்கம்; இங்கே தலைவன் என்ப தைக் குறிக்க வந்தது:]

இந்தப் பாடல் ஆறாம் திருமுறையில் 47-ஆம் பதிகத்தில் ஐந்தாவதாக உள்ளது.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *