இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 8,458 
 

ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த புலவர் ஒருவர் இருந்தார். பாடல்கள் இயற்றுவதில் வல்லவரான அவரை, மக்கள் போற்றிக் கொண்டாடினர். நாளடைவில் அவரது புகழ் வேற்று நாடுகளுக்கும் பரவியது.

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்இதனால் அவர் மீது பொறாமை கொண்டான் அரசன். புலவரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து, கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்துவது அரசனது வழக்கமாயிற்று. ஆனால், புலவர் அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பொறுமையுடன் இருந்தார்.

புலவரது இந்தச் செய்கை, அரசனுக்கு மேலும் எரிச்சலூட்டியது. ‘எப்படியாவது அவரை கோப மூட்ட வேண்டும்!’ என்ற எண்ணம் கொண்ட அரசன், ஒரு நாள் அவரை அரண்மனைக்கு வரவழைத்தான்.

அவரிடம், ‘‘புலவரே… எனக்கொரு சந்தேகம்!’’ என்றான். புலவரும் புன்னகை மாறாத முகத்துடன், ‘‘கேளுங்கள் மன்னா!’’ என்றார்.

‘‘புலவரே… பொதுவாக இறைவன் ஒரு மனிதனுக்கு ஏதேனும் குறைகளை வைத்தால், அதை ஈடு செய்யும் பொருட்டு வேறு ஏதேனும் சிறப்புகளை அவனுக்கு அளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால், உங்களைக் குருடனாகப் படைத்த இறைவன், வேறு எந்த சிறப்பு களையும் உங்களுக்கு அளிக்கவில்லையே! இதுதான் என் நீண்ட நாளைய சந்தேகம். அப்படியானால் கடவுள் உங்களிடம் மட்டும் அருள் காட்டவில்லை என்றுதானே அர்த்தம்?’’

அப்போதும் புலவர் ஏதும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.

அவரை மேலும் அவமானப்படுத்தும் விதமாக, மன்னன், ‘‘புலவரே! உங்களது நிலைமை குறித்து என் மனதுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது! ஹ§ம், என்ன செய்வது? ஆனாலும் கடவுளுக்கு உங்களிடம் ஓரவஞ்சனை அதிகம்தான்!’’ என்றான்.

போலியான ஆதங்கத்துடன் பேசிய மன்னனை நிதானமாகக் கையமர்த்தினார் புலவர். பிறகு, ‘‘மன்னா…. பரம கருணாமூர்த்தியான அந்த இறைவன், என்மீது அருளை வாரி வாரி வழங்கியிருக்கிறானே தவிர, துளியேனும் ஓரவஞ்சனை காட்டவில்லை!’’ என்றார் தெளிவாக.

‘‘என்ன கூறுகிறீர்கள் புலவரே?’’ _ மன்னனின் குரலில் அதிர்ச்சி.

‘‘உண்மைதான் மன்னா! என் மீது இறைவன் அருள் இருந்த தாலேதான் நான் குருடனாகப் பிறந்தேன்!’’

‘‘புலவரே… உமக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? அந்த இறை வனுக்கு உண்மையிலேயே உம்மீது அருள் இருந்திருந்தால், கண்டிப்பாக உம்மைக் குருட னாகப் படைத்திருக்க மாட்டார்!’’ _ மன்னனின் ஆணித்தரமான பேச்சுக்கு அமைதியாகப் பதிலளிக்கத் துவங்கினார் புலவர்.

‘‘மன்னா! நீங்கள் செய்யும் கொடுஞ் செயல்களைக் கண்களால் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை! ஆக, அப்படிப்பட்ட துன்பம் நேராமல் எனக்கு அருள் செய்தவன் அந்த இறைவன். நீங்கள் செய்யும் கொடுஞ் செயல்களைப் பிறர் சொல்லக் கேட்கும்போதே என் மனம் தாங்கொணா வேதனையுறுகிறது! அவற்றைக் கண்களால் வேறு காண்பதாக இருந்தால் என் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்?’’

_ புலவரின் வார்த்தைகளைக் கேட்டு அவமானத்தில் தலை குனிந்தான் மன்னன். ஆணவத்தால் பிறரை இகழ்வது எவ்வளவு பெரிய இழிசெயல் என்பதை அந்தக் கணமே உணர்ந்து தெளிந்தான்.

– ஸோனா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *