இரத்தப்படுக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 22,457 
 

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங் கூட மின்னித் தோன்றின, இன்று நிகழவிருக்கும் காட்சிகளை காண விரும்பாதவனாய் கதிரவன் கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்தனன் போலும், பொழுது புலராத அந்த வேளையில் தீக்ஷிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்பாய் விவாதித்து கொண்டிருந்தனர்,

அந்த அதிகாலை வேளையிலும் சீக்கிரமாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு ஈரக்கைகளுடன் மடிசார் சரசரக்க சில பெண்களும் வந்து கூடத் தொடங்கினர்,

எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெலிதாக ஒதுங்கி ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்,

அவர்களை பார்க்க பார்க்க அந்தணர்கள் பலருக்கு மனம் வெகுண்டது, காலங்காலமாக நமக்கு பாத்தியப் பட்ட கோயில் வாசலில் நாமே இன்று அகதிகள் போல நிற்க வேண்டி இருக்கிறதே!! என்று சிலர் விம்மினர்!!

அதிலொரு தீக்ஷிதர், “பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றுந் தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணித் தலை நின்று உய்த்தே அங்கணர் கோயில் உள்ளா அகம்படித் தொண்டு செய்வார்” என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், நடராஜா நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்த நாங்கள், என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா!?? என்று வாய்விட்டே அழுதார்!!

அதனை கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழி உள்செல்ல முயற்சித்த பொழுது, செஞ்சியில் இருந்து சிறப்பாக வந்து இறங்கிய தெலுங்கு வீரர்கள், “எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்!! ஸ்தானிகாலு மாத்ரம்!!” என்று தடுத்தனர்,

நாங்க மூவாயிரம் பேரும் எங்க சாமிக்கு ஸ்தானிகம்தான்டா!! எங்களை தடுக்க நீங்க யாரு!? என்றார் ஒருவர்,

அந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை மாறாக நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட அந்தணர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது,
அவர்களுக்கு அருகிலேயே பெரிய புஜங்கசயனாராக திருமால் பள்ளிகொண்ட சிற்பம் ஒன்று ஸ்ரீதேவிபூதேவிகளுடன் வடிவமைக்கப் பட்டு தயாராய் கிடந்தது

சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து கிடத்தப் பட்ட காலத்தில் இருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை இது, அன்றிலிருந்து தீக்ஷிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல் கல்லாய் தொடங்கிய பிரச்சனை இன்று மாலாய் பெருகி கிடக்கிறது

தீக்ஷிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர், என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்து சென்ற புள்ளியில் இன்று, செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்

நந்திவர்ம பல்லவர் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்ரகூடத்து கோவிந்தராசரை, “தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே” என்று குலசேகர ஆழ்வாரும், “மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே” என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை கூட இந்த நாயக்கனிடம் தீக்ஷிதர்கள் முன்பு எடுத்து கூறினர்,

நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள், உங்கள் வைணவ ஆகமப் பூசைகள் உள்ளே வரவேண்டாம்,

நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராஜரை பூசிக்கிறோம், அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ்புரியாத நாயக்கன் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்,

அதற்கு அவர், “கூடாது!!கூடாது!!, பெருமாள நம்ம முறையில நம்மவாதான் பூசிக்கனும், முன்ன இவங்க பூசப்பன்னிய பொழுதுதானே சோழராஜா பெருமாள கோயில விட்டு வெளியேத்தினார்!?” அப்ப என்ன ஆனது!! தவிர அப்ப போனப் பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க ராஜாக்கள் வந்த போதுதான் இந்த கோயிலுக்குள்ற வந்திருக்கார், இப்ப ராஜா உங்க புண்யத்துல பெருமாள் பெரிய கோயில்ல படுத்துக்கப் போறார், இப்படி பெரிய பெருமாளா பன்னி உள்ற வச்சிட்டு பூசைய இவங்கள்டயா கொடுக்குறது!?” என்று தெலுங்கில் கிசுகிசுத்தார்

கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது, அவனது சினத்தையும் தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீக்ஷிதர்கள்,

“நாயக்கரே!! அது எப்பவோ பழயகாலத்துல நடந்தது, தவிர அப்பவும் இப்படி சில வைணவர்கள் பிரச்சனை பன்னியதால்தான் அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழராஜாவுக்கு கோவத்த வரவச்சி அப்டி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதுன்னு கர்ணபரம்பரையாக செய்தி உண்டு” இப்பவும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராஜரை பெருசாக்கி எங்கள் சபாநாயகர் ஆடும் இடத்தில் முக்கால்வாசி அபகரிக்கவும் இப்படிப்பட்ட விஷமக்காரர்கள்தான் காரணம் என்று ஆத்திரத்தில் அரசன் முன்பே ஒரு தீக்ஷிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார்,

அவ்வளவுதான் நாயக்கனுக்கு கோபம் பயங்கரமாக வந்துவிட்டது, “தீக்ஷிதர்களே!! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் பன்னும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது, இல்லை என்றால் விபரீதங்களுக்கு நான் ஒன்றும் அஞ்சியவன் இல்லை!! குறித்த நாளில் சித்சபாவிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட சித்ரகூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!” என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான், அனுசரித்து பேசப் போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்ரமித்து சித்ரகூடத்தை கட்டினான் அவர்களது பழய தெற்றியம்பலத்து கோவிந்தராசத் திருமேனி சிறியதாக இருந்ததால் அவருக்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்

அதுமுதல் தீக்ஷிதர்கள் கோயிலுக்குள் சரளமாக போயவர தடைவிதித்தான், நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்கள் தவிர மற்றைய தீக்ஷிதர்கள் அவர்கள் குடும்பத்தினர் யாரும் தேவையின்றி கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்,

அந்த வருட ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது, சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான், தீக்ஷிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருளப் பன்னிவிட்டு பிறகு ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனமும் தரிசனமும் செய்து முடித்தனர், அனைவரது மனமும் மிகுந்த பாரமாக இருந்தது

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை, இதோ இன்றைக்கு கீழவாசலில் கோவிந்தராஜர் சிலை முழுதுமாக வடிக்கப் பெற்றுவிட்டது இன்னும் ஒருவாரத்தில் கும்பாபிசேகம் செய்ய இருக்கிறார்கள், இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது!!அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர்!!

இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா!? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!! என்ற ஆற்றமையில்தான் அந்த அதிகாலையில் தீக்ஷிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியாக நின்றனர்,

அவனது இரதம் பெரும் சத்தத்துடன் வந்து கீழவாசலில் நின்றது, தீக்ஷிதர்கள் பக்கம் ஏளனமாக பார்த்துவிட்டு பட்டர்கள் கொடுத்த பூர்ணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீக்ஷிதர் ஒருவர் “நாயக்கரே!!” என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்

அதனை சட்டைசெய்யாத நாயக்கன் திருமால் விக்ரகம் நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்,

அதனை கண்ட இளம்வயது தீக்ஷிதர்கள் சிலர், “நாயக்கரே!! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!” என்று உரக்கக் கத்தினர்

அதுசமயம் கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது உரத்த குரலை பதிவு செய்தனர், அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, நீங்கள் செத்தாலும் சாவுங்கள் ஆனாலும் எங்கள் பெருமாள் இன்று உள்ளே போவது நிச்சயம்!! என்று அலட்சியமாக பதிலளித்தான்

“பிரம்மஹத்தி!! பிரம்பஹத்தி!! பீடையே!!உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா” என்று கத்தியவர்களாய் சில தீக்ஷிதர் பெருமக்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர்

அவர்களை தெலுங்கு வீரர்கள் தடுக்க முயற்சித்த போது அவர்களையும் நாயக்கன் தடுத்தான், தீக்ஷிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்

அவரவர் வீட்டு பெண்களும் சிதம்பரத்து சிவனடியார்களும் கதறியழுதனர், ஆனாலும் எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீக்ஷிதர் ஒருவர்,

“நாயக்கனே!! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை!! நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது, நடராஜா!! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலப்பா!! இனி எந்த ஜென்மத்தில் உன்னை பார்ப்பேன், உன் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும் எப்போ பாப்பேன்!!, நடராஜா!!நடராஜா!! என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியில் இருந்து “தடால்!!” என்று தரையை நோக்கி பாய்ந்தார்”

கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட சூலாயுதம் போல வேகமாக கீழே விழுந்த தீக்ஷிதர் நடராஜா!! நடராஜா!! என்றபடி துடிதுடித்து பிராணத்தியாகம் செய்திருந்தார், அதனை மேலிருந்து கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர்.

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறி கதறி அழுதனர், இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பொழுது,

நாயக்கன் வாய்திறந்து, இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள் என்று ஆணையிட்டான், “படீர்!!படீர்!!” என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீக்ஷிதர்கள் பலியாகினர்

கீழவாசல் முழுக்க இரத்தமாகத் தேங்கியது, அது ஆறாகப் பெருகி அங்கு கிடக்கும் திருமாலின் பாம்பணைக்குள்ளும் சென்றது, அந்த ஆதிசேசன் கூட இந்த அநியாயத்தை பொறுக்காமல் சற்று நெளிந்தான், திருமால் வழக்கம்போல கண்மூடி கிடந்தார், எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீக்ஷிதர் வீட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் வீரத்துடன் அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்

“அடேய்!! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன், அதற்கு எனக்கு பலமில்லை!!, ஆனால் உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும், பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா பாவி!!” என்றபடி கத்தியால் தம் கழுத்தை கீறிக்கொண்டு இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த பத்தினிப்பெண்

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை, இவற்றை அப்புறப்படுத்தி சீக்கிரம் பெருமாளை உள்ளே அழைத்து செல்லுங்கள் என்றான்,

அழுகை ஒலிகளுக்கு இடையில் எதிர்த்து வந்த தீக்ஷிதர்களின் குரல் அடங்கிற்று, இரத்தபெருக்கு கழுவி விடப்பட்டது ஆயினும் ஆதிசேசனுக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர், பெரிய பெரிய உருட்டு கட்டைகளுக்கு மேலே, மெல்ல மெல்ல உருண்டு உள்ளே சென்ற கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்த கறையும் இரத்த வாடையும் படிந்து கிடந்தது!!

அத்தனையையும் பார்த்து கொண்டே நடித்து கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் இன்றும் மாறவில்லை, அதற்கான பொருளை யார்தான் விளக்கிவிட முடியும்!?

– முற்றும்

திருச்சிற்றம்பலம்

பின்குறிப்பு: “The arvidu dynasty” என்ற வரலாற்று ஆய்வு புத்தகம் மற்றும் கா.வெள்ளை வாரணரின் தில்லை பெருங்கோயில் புத்தகம் முதலியவற்றில் காட்டப்படும் உண்மை தரவுகளை தழுவி புனையப்பட்டது இப்படைப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *