ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 8,998 
 
 

பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி புரிந்த மன்னருக்கு, நீண்ட காலமாக ஒரு சந்தேகம்.

‘வனத்தில் வசிக்கும் தவ சீலர்களான மகரிஷி கள், தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்கள்!’ என்ற எண்ணத்துடன் ஒரு நாள், பரிவாரங்கள் புடைசூழ மகரிஷிகளது ஆசிரமத்துக்குச் சென்றார். மன்னரை முகம் மலர வரவேற்று, ஆசிர்வதித்தனர் மகரிஷிகள்.

ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!அவர்களிடம், ”மகரிஷிகளே… நீண்ட காலமாக என்னுள் இருக்கும் ஓர் ஐயப்பாட்டுக்கு விளக்கம் பெற வேண்டியே இங்கு வந்தேன்!” என்றார்.

”உனது சந்தேகம் என்ன? சொல்… எங்களால் இயன்ற விளக்கத்தைத் தருகிறோம்!” என்றனர் மகரிஷிகள்.

மன்னர் தன் சந்தேகத்தைக் கேட்டார்: ”ஆத்மா என்பது எது? அதன் தத்துவம் என்ன? பல்வேறு நூல்களைப் படித்தும், பண்டி தர்கள் பலரிடம் கேட்டும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. தாங்கள் உதவ வேண்டும்!”

மகரிஷிகள், இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை! எனினும், மன்னரின் சந்தேகத்தைப் போக்குவதற்கான முயற்சியில் இறங்கினர். அனைவரும் ஒன்று கூடி, தாங்கள் கற்றதையும் ஆராய்ந்ததையும் கொண்டு விவாதித்த பிறகு ‘ஆத்ம தத்துவம்’ குறித்த தங்களது கருத்துகளை மன்னருக்கு விளக்கினர். ஆனால், அதிலும் திருப்தியடையாத மன்னர், வருத்தத்துடன் அரண் மனைக்குப் புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில், திடீரென மன்னரது ரதம் நின்றது. காரணத்தைத் தெரிந்து கொள்ள திரையை விலக்கி, வெளியே பார்த்த மன்னர், அருவருப்புடன் முகம் சுளித்தார். மிகவும் குள்ளமாக, கருப்பு நிறம், கோணல்மாண லாக ஆங்காங்கே வளைந்து புடைத்திருக்கும் மேனியுடன் அவலட்சணமான ஒருவன், ரதத்தின் பாதையை மறித்த படி அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தான். ‘இறைவனின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவியா?’

மன்னரது சிந்தனையைக் கலைத்தது, தேரோட்டியின் உரத்த குரல்: ”அடேய்… இளைப்பாற உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லை? பாதையை விட்டு விலகு; அரச தண்டனைக்கு ஆளாகி விடாதே!”

தேரோட்டி சொல்வதை சற்றும் பொருட்படுத்தாது, அலட்சியமாகப் புன்னகைத்த அந்த குரூபி, ”வேண்டுமா னால், ரதத்தைத் திருப்பி உன் மன்னனை வேறு வழியில் அழைத்துச் செல்!” என்றான்.

தேரோட்டி பதில் சொல்ல வாயெடுக்கு முன் அவனைத் தடுத்த மன்னர், ரதத்தை குரூபியின் அருகே நகர்த்துமாறு பணித்தார். ரதம், அந்த குரூபியை நெருங்கி நின்றது.

”குரூபிப் பிண்டமே… என்ன தைரியம் இருந்தால், எங்களுக்கே ஆணையிடுவாய்?”

– கோபத்துடன் கர்ஜித்த மன்னரைப் பணிவாக இடைமறித்தான் அவன்: ”மன்னிக்கவும் மன்னா. நெடுந்தூரம் பயணம் செய்ததால் நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால், ரதத்தில் பயணிக்கும் தங்களுக்கு, வேறு வழியாகச் செல்வதில் சிரமம் இருக்காதே!”

இதைக் கேட்டதும் மன்னரின் கோபம் கூடியது. அவர், ”இந்த விகார பிண்டத்தைத் தூக்கி அப்பால் போடுங்கள்!” என்று காவலர்களுக்கு ஆணையிட் டார். அதன்படி அந்த குரூபியை நெருங்கிய காவலர்கள், செயலற்று நின்றனர்!

இது எதையும் பொருட்படுத்தாதவனாகப் பேசி னான் அந்த விகார உருவத்தினன். ”மன்னா… ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை. பெரும் வேந்த ரான தாங்கள், எளியோனான என்னை அப்புறப் படுத்தி விட்டு, இந்த வழியில் செல்வதால் ஆகப் போவது என்ன?”

”ஒன்றும் இல்லை. ஆனாலும் இந்த வழியில்தான் செல்லப் போகிறேன்; வழியை விடு!”- கத்தினார் மன்னர். அவரைப் பார்த்துப் புன்னகைத்த குரூபி, ”எந்த வழியில் சென்றால், ஒரு லாபமும் இல்லையோ… அந்த வழியில், தெரிந்தே செல்வது அறிவீனம் இல்லையா?” என்றார்.

இதைக் கேட்டதும், ஒரு கணம் திகைத்துப் போனார் மன்னர். யாரோ ஒருவர், ஓங்கி சம்மட்டி யால் அடிப்பது போலிருந்தது அவருக்கு! ‘எவ்வளவு கருத்துச் செறிவான வார்த்தைகள்!’ என்று வியந்த மன்னர், ”நீ என்ன கூறுகிறாய்?” என்று வியப்புடன் கேட்டார்.

அவன் தொடர்ந்தான்: ”கண்ணை மூடிக் கொண்டு செல்பவருக்கு, வழியில் எதுவும் புலப் படாது. அப்போது எப்படி, ஞானிகளும் மகரிஷி களும் சொல்வது புரியும்? அவர்கள் எப்படி வழிகாட்டுவார்கள்?”

பிரமித்தார் மன்னர். ரதத்தை விட்டுக் கீழே இறங்கி பணிவுடன் கேட்டார்: ”சுவாமி! தாங்கள் யார்?”

”என்னைத் தெரிந்து கொள்வதால், உங்களுக்கு ஒரு லாபமும் இல்லை. ஆனாலும் லாபம் இல்லாத காரியத்தில்தான் உங்களுக்கு அதிக விருப்பம் ஆயிற்றே!”

கேலி தொனிக்கும் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னர் குற்ற உணர்ச்சியுடன், ”சுவாமி, அறியாமல் பேசி விட்டேன்… மன்னியுங்கள். தாங்கள் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன்!” என்றார்.

அந்த குரூபியிடம் இருந்து பதில் வந்தது: ”எனது பெயர் அஷ்டாவக்ரர்!”

ஒரு கணம் ஆடிப்போனார் மன்னர்! ‘கல்விக் கடலான உத்தாலகரின் பெண் வயிற்றுப் பேரனும், மகா ஞானியான கஹோளரின் தவப் புதல்வருமான அஷ்டாவக்ரரா இவர்!’- நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

”தங்களது அபார மேதாவிலாசத்தைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுவரை தங்களை தரிசிக்காததால் தவறு நேர்ந்து விட்டது; மன்னியுங்கள்!” என்று வேண்டி நின்ற மன்னரின் கண்களில் நீர்!

அவரை, ஆதரவுடன் ஆரத் தழுவிக் கொண்ட அஷ்டாவக்ரர் கூறினார்: ”மன்னா, இதுதான் ஆத்ம ஞானம். உங்கள் மனதில் இருந்த குழப்பம் நீங்கி இப்போது தெளிவு ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு கணமும் ஜீவனுக்குள் சுய அறிவு ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலர், கண்களால் காண்பதை, ஆத்மாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறார்கள்.

மன்னா! நீங்கள் காண்பதே உங்களுக்கு அறிவூட்டு கிறது. அந்த அறிவே அனுபவம் மூலமாக… ஆத்மாவை, தன்னுள் இருக்கும் நித்திய தத்துவத்தை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே, கண்களால் அறிவு பெறுங்கள்; அறிவால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!”

இந்த போதனை, மன்னருக்கு உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ச்சினாற் போல் இருந்தது. அவர், குழப்பம் நீங்கி, ஞானம் பெற்றவராக அஷ்டாவக்ரரை வணங்கி விடைபெற்றார்.

– பெப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *