கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து தனக்காகக் காத்திருந்த, தான் பதில் சொல்லியாக வேண்டிய நான்கு டைரக்டர்களையும் பணிவுடன் வரவேற்றார். பிறகு அங்கிருந்த காலி நாற்காலியில் அமர்ந்தார்.
மூத்த டைரக்டர் ஒருவர் கடவுளைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் கொஞ்சம் கடுமை இருந்தது. “நீங்கள் ஒரு ரகசிய ப்ராஜெக்ட்டில் வேலை செய்கிறீர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம், அது உண்மையா?”
கடவுள் அமைதியான குரலில் கூறினார். “ஆம், உண்மை தான். உங்களுக்கு தெரியாமல் நான் வேலை செய்ததற்க்கு மன்னிப்பு கோருகிறேன்.” இரண்டு வினாடிகள் மேஜையைப் பார்த்து விட்டு நிமிர்ந்தார். “அந்த ப்ராஜெக்ட்டில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நான் விளக்கிச் சொல்லட்டுமா?”
நான்கு டைரக்டர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு ஒரு டைரக்டர் கடவுளைப் பார்த்து, “சரி, சொல்லுங்கள். கொஞ்சம் தாமதமானாலும், இப்போதாவது நாங்களும் அதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்.” என்றார்.
கடவுள் சுவரிலிருந்த டிவியை ஆன் செய்துவிட்டு, பேச ஆரம்பித்தார். “இது வரை கோடிக்கணக்கான கிரகங்களையும் நட்சத்திரங்களையும் நாங்கள் வெற்றிகரமாக உருவாக்கி விட்டோம். ஆனால் நான் அதையெல்லாம் தாண்டி, இதுவரை யாரும் முயற்சி செய்யாத, தனித்துவமான ஒன்றை உருவாக்க விரும்பினேன். எனவே, நான் ஒரு சிறிய குழுவைக் கூட்டி இதை உருவாக்கினேன்.” டிவியை நோக்கி சைகை செய்து PLAY பட்டனை அழுத்தினார் கடவுள்.
டிவி உயிர் பெற்று நீல நிறக் கடலின் மேற்பரப்பில் சூரிய ஒளி நடனமாடுவதைக் காட்டியது. கேமரா கிளோஸ் அப்பில் நீரில் மிதக்கும் ஒரு செல் உயிரினத்தைக் காட்டியது.
டிவியின் பிம்பத்தை திகைப்புடனும், அதிர்ச்சியுடனும் டைரக்டர்கள் பார்த்துக் கொண்டிருக்க, கடவுள் தொடர்ந்தார், “இதுவே பிரபஞ்சத்தின் முதல் உயிர் வடிவம். இது ஒரு ஆரம்பமே. இதிலிருந்து இன்னும் வியக்கத்தக்க வகையில் பல் வேறு உயிரினங்கள் உருவாகும்.”
டைரக்டர்களில் ஒருவர் மெதுவாக சுதாரித்துக் கொண்டு, “உம்… இந்த முதல் உயிர் வடிவத்திற்கு ஏதாவது பெயர் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
கடவுள் ஒரு வினாடி யோசித்து விட்டு, “Hello World!” என்று பதிலளித்தார்.
பின் குறிப்பு: பொறியாளர்கள் முதன் முதலாக ஒரு மென்பொருள் மொழியைக் கற்றுக் கொள்ளும் போது எழுதும் எளிய மென்பொருளுக்கு பெயர் “Hello World!”