ஞாயிற்றுக்கிழமை காலை அலாரம் மூன்றாவது முறை அலறிய பின் எழுந்து மணி பார்த்தால், 7:16. ஐயய்யோ! போட்டி தொடங்கியிருக்கும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான டி20 அரையிறுதி.
நான் காலை கடமைகளை கிடு கிடுவென்று முடித்து விட்டு டிவியின் முன் உட்கார்ந்தேன். பாகிஸ்தான் பேட்டிங் துவங்கி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள். ரிஸ்வானும் பாபரும் இந்திய பந்து வீச்சை தூள் தூள் ஆக்கிக் கொண்டிருந்தனர். பெரும் பும்ராவை கூட விட்டுவைக்கவில்லை.
ஆட்டம் நடுவழியில் மாறத் தொடங்கியது. சர சரவென்று நான்கைந்து விக்கெட்டுகள் விழுந்து பாகிஸ்தான் 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து திணறியது. இறுதி ஓவர்களில் ஆசிஃப் அலியின் அதிரடி ஆட்டம் அவர்களுக்கு மரியாதைக்குரிய மொத்தத்தைகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள்.
காலை உணவின் போது என் மனைவி காய்கறிகள் வாங்குவது பற்றி ஏதோ சொன்னாள். நான் கவனிக்காமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன் . என் மனமெல்லாம் 167 அடிக்க முடியுமா என்ற கேள்வியில் உளைந்து கொண்டிருந்தது.
போட்டி மீண்டும் தொடங்கியபோது, வழக்கமான காட்சிகள்ஆரம்பித்தன. முதல் 3 ஓவர்களுக்குள்ளே ரோஹித்தும் ராகுலும் மலிவாக ஆட்டமிழந்தனர். அடுத்த 8 ஓவர்களில் மேலும் 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 17 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து மூச்சு திணறியது. மூழ்கும் கப்பலில் கோலி மட்டும் உறுதியாக நின்று கொண்டிருந்தார்.
18-வது ஓவரில் ஜடேஜா 24 ரன்கள் அடித்து கொஞ்சம் நம்பிக்கையை அளித்தார். அந்த ஓவரின் போது கீழே இருந்து என் மனைவி ஏதோ கத்துவது போல் இருந்தது , ஆனால் டிவியில் இருந்து வந்த பலத்த சத்தம் அதை மூழ்கடித்து விட்டது.
19வது ஓவர் 12 ரன்களுக்கு சென்றது. அப்ரிடி போடப் போகும் கடைசி ஓவரில் இந்தியா 18 ரன்கள் எடுக்க வேண்டும்.
கடைசி ஓவரின் முதல் பந்து ஃபுல் டாஸ் ஆக வர, கோலி அதை பிரமாதமாக அடிக்க, பந்து…
டப்பென்று டிவி அணைக்கப்பட்டது. நான் நிமிர்ந்து பார்க்க கோபத்துடன் என் மனைவி கையில் டிவி ரிமோட் உடன்.
“நான் சமையலறையில் இருந்து கத்திக்கொண்டே இருந்தேன், நீங்கள் பதிலே சொல்லவில்லை… ஏன் இந்த முட்டாள்தனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீங்க? அதுவும் இது உண்மையான போட்டியே இல்லை… சந்தைக்குப் போய் காய்கறி வாங்கிகிட்டு வாங்க!” ஒரு பையை என் மீது எறிந்துவிட்டு ரிமோட்டை கவர்ந்து கொண்டு கிளம்பினாள்.
நான் பையையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு, வேண்டா வெறுப்பாக அறையை விட்டு வெளியேறினேன்.
நான் பெருமூச்சு விட்டேன். இந்த 2049ம் ஆண்டில் நிஜம் போலவே இருக்கும் கிரிக்கெட் போட்டிகளை கணினியில் செயற்கையாக உருவாக்க முடிகையில் , செயற்கையான காய்கறிகளை நம்மால் வீட்டில் உருவாக்க முடியவில்லையே?