ரோபோ செய்த வெண் பொங்கல்

2
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 5,404 
 
 

நாங்கள் வினோத்தின் வீட்டை விட்டு வெளியேறும் போது இரவு 11 மணி ஆகி விட்டது. நான் காரை ஸ்டார்ட் செய்தவுடன், என் மனைவி சிரித்துக்கொண்டே, “யாரோ ஒரு நபர் பார்ட்டியை ரசிக்கவில்லை போலிருக்கிறதே?” என்றாள். நான் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தேன். “அட, ஏன் இப்பிடி உம்மென்று இருக்கிறீர்கள்? வினோத் உங்கள் அண்ணா. அவர் பிறந்த நாள் பார்ட்டியிலாவது நீங்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கலாமே!” என்று என் வாயைக் கிண்டினாள்.

நான் கடுகடுப்புடன் முணுமுணுத்தேன், “பிறந்த நாள்… மண்ணாங்கட்டி! வினோத்திற்கு தனது புதிய ரோபோ சமையல்காரனைக் காட்ட பிறந்த நாள் ஒரு சாக்கு. வினோத் எப்போதும் இப்படித் தான். தான் ஏதாவது புதிதாக வாங்கி விட்டால், அதை எல்லோருக்கும் காட்டி பீற்றிக் கொள்ள வேண்டும். பார்ட்டி முழுக்க வினோத் இடைவிடாமல் ரோபோ சமையல்காரனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாயா?… அந்த முட்டாள் ரோபோவின் பெயர் என்ன?”

“அதன் பெயர் ராஜ். அது ஒன்றும் முட்டாள் அல்ல. சமையல் திறன் வாய்ந்த ரோபோ அது. அது செய்த நெய் மீன் வறுவலை ட்ரை பண்ணீர்களா? அடடா, என்ன ருசி, என்ன ருசி!”

அவள் சொன்னது சரிதான். உணவு மிக அருமையாகவே இருந்தது. வினோத் ஒரு ஐந்து நட்சத்திர சமையல்காரரையே வீட்டிற்கு கொண்டு வந்தது போல் இருந்தது. வீடு வந்து சேர்ந்தவுடன் வினோத் வாங்கியிருந்த சமையல்கார ரோபோவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன். அந்த ரோபோவை விற்கும் நிறுவனத்தின் வலைத்தளத்தைப் பார்த்தேன். பத்து நிமிடம் அதில் மேய்ந்த பிறகு, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் உள்நுழைவதற்கான ஒரு பக்கத்தில் இறங்கினேன். ஒரு திடீர் ஆர்வத்தில், வினோத்தின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தேன். வலைத்தளம் பாஸ்வேர்ட் கேட்டது. குருட்டாம் போக்காக வினோத்தின் முதல் காதலியின் பெயரை அடிக்க… என்னை உள்ளே அனுமதித்தது. டேய் வினோத், நீ எவ்வளவு பெரிய கம்ப்யூட்டர் கல்லுளி மங்கனாக இருக்கிறாய்! உனக்கெல்லாம் சமையல்கார ரோபோ கேட்கிறதா?

ராஜ் என்னும் சமையல்கார ரோபோவை எப்படி எல்லாம் நம் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம் என்பது பற்றி விலா வாரியாக விளக்கங்கள் அந்த பக்கத்தில் இருந்தன. மேலும் ராஜ்க்கு தெரிந்த நூற்றுக்கணக்கான சமையல் ரெசிபி செய்முறைகளும், அவற்றை மாற்றுவது எப்படி என்றும்… அதையெல்லாம் பார்த்த பிறகு அமைதியாக நான் வலைத்தளத்திலிருந்து வெளியேறியிருக்க வேண்டும், ஆனால்…

மறுநாள், காலை சிற்றுண்டியின் நறுமணம் வினோத்தை எழுப்பியது. அவன் பல் விளக்கிக் கொண்டு வந்தான். தட்டில் ஆவி பறக்கும் உணவுடன் ராஜ் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

“உங்களுக்குப் பிடித்தது சார். சூடாக வெண் பொங்கலும் மெது வடையும்.”

பொன்னிற நெய் மிதக்கும் வெண் பொங்கலின் மேல் ஜோடி ஜோடியாக முந்திரியும் மிளகும் வலம் வந்தன. வினோத் ஆவலுடன் ஒரு கரண்டி பொங்கலை எடுத்து நாக்கில் வைத்து… இரண்டே நொடிகள் தான், வாயிலிருந்த பொங்கலை “தூ” என்று படுக்கை முழுவதும் துப்பினான்.

என்றும் இல்லாமல் இன்று ஏன் பொங்கல் இப்படி உப்பு கரிக்கிறது?

Print Friendly, PDF & Email

2 thoughts on “ரோபோ செய்த வெண் பொங்கல்

 1. உண்மையின் தான். இம்மாதிரி ரோபோக்கள் வந்தால் நிறைய மாற்றம் ஏற்படும். திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலையிலுருந்து பலருக்கு விடுதலை.

  உங்கள் கருத்துக்கு நன்றி விஜய்.

 2. இன்று ஒரு ரோபோவைச் சமையல்காரராகக் கற்பனை செய்வது மிகவும் கடினமாக இருக்கலாம். இந்தக் கதை அப்படியான ஒரு கற்பனையை முன் வைக்கிறது.

  ஒரு ரோபோவுக்கு ஏற்ற விதத்தில் அடுப்பறை எப்படி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்? முழுக்க முழுக்க ஒரு மனிதரின் உதவி இல்லாமலேயே ரோபோவால் உணவு தயாரிக்க முடியுமா? என்றெல்லாம் கேள்வி எழலாம்.

  ஆனால் கற்பனைகளும் கேள்விகளும் விஞ்ஞானம் மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அஸ்திவாரமாகின்றன.

  இந்தக் கதையின் ரோபோ கதாபாத்திம் போன்ற இயந்திரங்கள் பல ஆண்டுகளாக வியாபார உலகில் ஒரு புதிய தேடலாக இருந்து வருகிறது. துபாய் என்று நினைக்கிறேன், சரியாகச் சொல்கிறேனா தெரியவில்லை, ஒரு உணவகத்தில் முழுக்க முழுக்க ரோபோக்களையே உணவு பரிமாற பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ஆனால் இத்தகைய ரோபோ சமையல்காரர்கள் வந்தால், சமூக மற்றும் குடும்ப உறவுகளில் நிறைய மாற்றம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *