யார் ஒரிஜினல், யார் நகல்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 1,385 
 
 

நான் அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்தபோது ராஜ் தொலைபேசியில் இருந்தார். என்னை உட்காரும்படி சைகை செய்தார். அவரது மேசை சுத்தமாக இருந்தது – ஒரு பேனா, சில பத்திரிகைகள், ஒழுங்காக அடுக்கப்பட்ட காகிதங்கள், ஒரு மெழுகு உருவம் மற்றும் CloneTech Account Executive Rajkumar என்று தங்கமுலாமில் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை .

போனை வைத்ததும், ராஜ் ஒரு பெரிய புன்னகையைப் பளிச்சிட்டார், “ஹலோ, மிஸஸ் அர்ஜுன். என்ன வேண்டும், சொல்லுங்கள்?”

நான்மெதுவாக, “இது இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் நிறுவனம் வழங்கிய என் கணவரின் நகல் (Clone) பற்றியது.” என்றேன்.

“ஓ, ஆமாம். நகலில் ஏதாவது பிரச்சனையா?”

“இல்லை, நகல் நன்றாக வேலை செய்கிறது… ரொம்பவே நன்றாக. அது தான் ஒரு பிரச்சனையாகிவிட்டது.”

“என்ன சொல்கிறீர்கள்…புரியவில்லை?”

“நகல் என் ஒரிஜினல் கணவரைப் போலவே தோற்றமளிக்கிறது, பேசுகிறது, நடந்துகொள்கிறது… இப்போது என்னால் அவர்களைப் பிரிக்க முடியவில்லை. எது நகல், எது ஒரிஜினல் என்று தெரியவில்லை!”

ராஜ் சிரித்துக்கொண்டே, “இம்மாதிரி பிரச்னை வரும் என்று எங்களுக்கு தெரியும். அதனால் தான் ஒரு நகலை உருவாக்கிய பிறகு, நாங்கள் அதன் கழுத்தின் பின்புறத்தில் ஒரு மச்சத்தையும் உருவாக்குகிறோம். இது உங்களுக்குத் தெரியுமா? இது எங்கள் ஹெல்ப் டாக்குமென்டில் இருக்கிறது.” என்றார்.

“ஆம், எனக்குத் தெரியும், ஆனால் என் கணவருக்கும் அதே இடத்தில் அதே மச்சம் இருக்கிறது. அந்த மச்சம் எனக்குப் பயனில்லை.”

“ஓ, அப்படியா?…அசலின் சரியான பிரதியான நகல்களை உருவாக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.”

“ஒரிஜினல் யார், நகல் யார் என்று தெரியாமல் இரண்டு கணவர்களுடன் வாழ்நாள் முழுவதும் என்னால் வாழ முடியாது. நீங்கள் தான் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும்.”

“உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.”

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் நான் என் குரலை உயர்த்தினேன். “அப்படியானால், நான் எனது கதையை டிவி, பத்திரிகைகளுக்கு கொண்டு செல்லப் போகிறேன். இது உங்கள் நிறுவனத்திற்கு பெரிய நெகடிவ் பப்ளிசிட்டியாக தொல்லை கொடுக்கும்.”

அது அவரை சற்று திடுக்கிட வைத்தது. சில நொடிகள் என்னையே உற்றுப் பார்த்துவிட்டு எழுந்து தன் அலுவலகக் கதவை மூடினார்.

அவர் தனது குரலைத் தாழ்த்தி, “நான் உங்களுக்கு ஒன்று சொல்லப் போகிறேன்… அதைப் பற்றி நீங்கள் யாரிடமும் மூச்சு விடக் கூடாது. புரிகிறதா?” என்றார்.

நான் பிரகாசமாகி, “ஆம், எனக்குப் புரிகிறது.” என்றேன்.

“எங்களுடைய குளோனிங் செயல்பாட்டில் ஒரு சிறிய குறைபாடு உள்ளது. ஒரிஜினலின் எல்லா குணாதிசயங்களும் நகலிடம் வந்து சேரும். அதே சமயம் நகலிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.”

“என்னது!”

“ஆம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், புத்திசாலித்தனமான, கொஞ்சம் நுட்பமான ஜோக்குகள் ஒன்றிரண்டு எடுத்து விடுங்கள். யார் புரிந்து கொண்டு சிரிக்கிறாரோ அவர் தான் நகல்.”

நான் எழுந்து நன்றி சொல்லி விட்டு கதவை நோக்கி நடந்தேன். பாதி வழியில் நிறுத்தி திரும்பினேன்.

“தயவு செய்து இந்த குறைபாட்டை சரி செய்யாதீர்கள்.” என்றேன் சிரித்துக் கொண்டே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *