நான் காலை சிற்றுண்டி முடித்து விட்டு உணவகத்திலிருந்து வெளியே வந்து மணி பார்க்கிறேன். 8:48. அப்போது தான் நினைவிற்கு வருகிறது. ஆபீசில் நான் ஒன்பது மணிக்கு இருந்தாக வேண்டும். ஒரு முக்கியமான மீட்டிங் என் பாஸுடன். டாக்ஸி பிடித்தால் கூட இங்கிருந்து போய்ச் சேர குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஆகும். என்ன செய்வது?
வேறு வழியில்லை. என்னை டெலிபோர்ட் (Teleport) செய்யக்கூடிய இயந்திரங்களில் ஏறி நொடியில் ஆபிஸ் போவது தான் ஒரே வழி. ஒருவர் உடம்பில் உள்ள அத்தனை செல்களையும் டிஜிட்டல் தகவலாக மாற்றி ஒரு சில நொடிகளில் பல மைல் தூரம் கடத்தும் இந்த இயந்திரங்களின் சாகஸம் ஒரு மாயாஜாலம் போல் தான் இருக்கிறது. இம்மாதிரியான இயந்திரங்கள் சில நேர்மையற்றவை, மோசடி செய்பவை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது நான் கவலைப்பட முடியாது.
அதிர்ஷ்டவசமாக என் வலதுபுறத்தில் டெலிபோன் பூத் போலத் தோற்றமளிக்கும் நாலைந்து டெலிபோர்ட் இயந்திரங்களைப் பார்க்கிறேன். அதில் ஒரு இயந்திரத்தை தேர்ந்தெடுத்து கதவைத் திறந்து வேகமாக உள்ளே நுழைகிறேன். என் ஆபிஸ் விலாசத்தைக் கொடுத்து விட்டு கிரெடிட் கார்டைச் சொருகுகிறேன். இருபத்தி நாலு டாலர் எடுத்துக் கொண்டு கிரெடிட் கார்டைத் துப்பிய இயந்திரம் ஒரு உறுமல் உறுமிகறது. ஒன்பது வினாடிகள் கழித்து கதவு திறக்க வெளியே வந்தால், நான் என் ஆபீஸ் கட்டிடத்திற்கு வெளியே நிற்கிறேன். அதே சமயம் எனக்கு வந்த ஒரு ஈமெயில் என் கிரெடிட் கார்டிலிருந்தது இருபத்தி நாலு டாலர் போய் விட்டதை அறிவிக்கிறது. நல்ல வேளை, சொன்ன பணத்திற்க்கு மேலாக இயந்திரம் எடுக்கவில்லை. நேர்மையான இயந்திரம் போலிருக்கிறது.
அபீசிற்குள் நுழைவதற்கான அடையாள அட்டையை எடுக்க நான் பாண்ட் பாக்கட்டில் கை விடுகிறேன் … அட! என் பர்ஸ் எங்கே?