இன்ஸ்பெக்டர் நான் கொடுத்த புகாரைக் கவனமாகப் படித்து விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்.
“உங்கள் மேகனாவைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறீர்கள். காணாமல் போய் விட்டாள் என்று உறுதியாகத் தெரியுமா?” என்று கேட்டார்.
“ஆமாம் இன்ஸ்பெக்டர், அவள் வழக்கமாகச் செல்லும் எல்லா இடங்களையும் நான் சோதித்துப் பார்த்து விட்டேன். எங்கும் இல்லை. மேலும் கடந்த பத்து மணிநேரத்தில் அவளிடமிருந்து எந்த டெக்ஸ்ட் மெசேஜ்ஜும் இல்லை,” என்றேன் ஆயாசமாக.
“அவளை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?”
“இன்று காலை 8:30 மணிக்கு. அவள் என்னை என் அலுவலகத்தில் இறக்கி விட்டு சென்றாள். அவள் மதியம் 3 மணிக்கு என் மகனை பள்ளியிலிருந்து கூட்டிச் செல்ல வேண்டும், ஆனால் அவள் பள்ளிக்கு போகவேயில்லை.”
இன்ஸ்பெக்டர் எங்களுடைய சந்திப்பு முடிந்து விட்டதைக் காட்டும் வகையில் தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.
“நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம். ஆனால் அதிக நம்பிக்கை கொள்ளாதீர்கள். உங்கள் காருக்குப் பெயர் என்ன சொன்னீர்கள்…ம்… மேகனா… மேகனாவைப் போன்ற தானே சுயமாக ஓட்டும் செல்ப் டிரைவிங் கார்கள் காணாமல் போகும் போது, அவற்றைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”
இந்தக் கதையின் தலைப்பு அதன் பின்புலத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. வேறு தலைப்பை யோசிக்க முடியாது என்றளவுக்குச் சரியாகப் பொருந்தி உள்ளது.
எழுத்து நடையும் வாசிப்புக்கு இலகுவாக, எளிய மொழியில் கதையோடு கொண்டு செல்கிறது. வாழ்த்துக்கள்!
இத்தகைய எதிர்கால விஞ்ஞான புனைவு கதைகள் நேரடியாக இல்லையென்றாலும் கூட, மறைமுகமாக எதிர்கால சமுதாய சூழலையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கின்றன. இந்தக் கதையும் அவ்விதமான ஒரு சூழலை கண் முன் கொண்டு வருகிறது.
உதாரணத்திற்கு எதிர்காலத்தில் ஓட்டுனர்கள் இல்லாத தானியங்கி கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என்பதையும், அவ்வாறான உயர்தொழில்நுட்ப யுகத்தில் கூட திருட வேண்டிய சமுதாய சூழ்நிலை நிலவுகிறது என்பதையும் இந்தக் கதைக் காட்டுகிறது.
ஹேக்கர்ஸ் எனப்படும் நிரல் களவாடிகளையும் இந்தக் கதை நினைவூட்டுகிறது.
இத்தகைய கார்களை வெகுஜனங்கள் பயன்படுத்த வேண்டுமானால், எத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். அதை யார் செய்வார்கள்? கார் விற்கும் நிறுவனங்கள் செய்யுமா? அல்லது மக்களின் வரிப் பணத்தில் அரசாங்கமே கார் நிறுவனங்களுக்காக அதைச் செய்து தருமா? என்ற கேள்வி எழுகிறது.
உண்மையிலேயே எதிர்காலத்தில் மக்களுக்கு இத்தகைய ஓட்டுனர்கள் இல்லாத கார்களின் தேவை இருக்குமா? அல்லது வியாபாரத்திற்கா இத்தகைய கார்கள் மக்கள் மீது திணிக்கப்படுமா? இதனால் வேலையிழக்கும் ஓட்டுனர்கள் வேறு எந்த விதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இப்படியாக இந்தக் கதை நிறைய கேள்விகளை முன் கொண்டு வருகிறது.
மிக்க நன்றி, விஜய். ஒரு சின்ன அரைப் பக்கக் கதைக்குப் பின்னே பொதிந்திருக்கும் அத்தனை கேள்விகளையும் (நான் நினைத்து எழுதியது, நினைக்காமல் எழுதியது என்று எல்லாவற்றையும்) மிக அழகாக வெளிக் கொண்டு வந்ததற்கு.
தானியங்கி கார்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். அதிலிருக்கும் அற்புதமான தொழில் நுட்பத்தை விட அதனால் நம் சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களை நுணுக்கமாக ஆராய்வது மிகவும் சுவாரஸ்யமானது. என் போன்ற அறிவியல் கதை எழுதுவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல! இன்னும் நிறைய கதைகள் இந்த சப்ஜெக்ட்டில் எளுதலாம் என்று இருக்கிறேன்.